வீட்டுக்குள் வெற்றி

என்ன படிக்கலாம் எப்படி ஜெயிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருக்கும் பத்துலட்சம் பேரும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் 8 லட்சம் பேரும் தங்கள் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கப்போகும் நேரம் இது.

‘1 ல் எந்த குரூப் எடுக்கலாம்? ‘2 விற்குப் பிறகு எந்த படிப்பில் சேரலாம்? என்ற கேள்வி எல்லா மனங்களிலும் நிறைந்திருக்கும்.

வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கும் நேரம் என்பது சரிதான். ஆனால் யார் அதை தீர்மானிக்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான் பயணத்தின் வெற்றி இருக்கிறது. இங்கே செல்ல வேண்டிய திசையை தீர்மானிக்கும் பல நேரங்களில் பயணி அல்ல. வழிகாட்டிகள்தான் தீர்மானிக்கிறார்கள். சுய விருப்பம் இல்லாமல் செல்லும் பயணங்களின் வேகம் அதாவது பயணிகள் உத்வேகம் எப்படி இருக்கும்?

பொறியாளராக வேண்டும் என்ற கனவுள்ள பையன் பெற்றோரின் விருப்பத்திற்காக மருத்துவம் படித்து வேறு வழியின்றி ஒரு நாள் மருத்துவனாகவும் ஆனான். ஆனால் ஒரு நாளும் சிறந்த மருத்துவனாக விளங்கவில்லை.

தன் விருப்பத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் பெற்றோர் விருப்பத்தையும் நிறைவேற்றாமல் கடைசியில் எதுவாகவும் விளங்காமல் போனவர்கள் கதையும் பல உண்டு.

‘குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக ஒரு துறையை தேர்ந்தெடுத்து தருவது பெற்றோர்களின் கடமை இல்லையா? இதை கூட செய்யக்கூடாது என்றால் எப்படி?’ என்று கேட்கலாம்.

தோட்டக்காரனுக்கு மரத்தை பராமரிப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும் முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால் மரம் தரும் பழம் இன்னவாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க மட்டும் முடியாது.

உங்களுக்கு மாம்பழம் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் என்ன முயற்சித்தாலும் உங்கள் வீட்டில் உள்ள வாழைமரத்தில் மாம்பழத்தை காய்க்க வைக்க முடியாது.

மரத்தின் தன்மையை கூட மாற்றக்கூடாது என்கிறபோது நாம் ஏன் மனிதர்களின் தன்மையை மாற்ற முயற்சிக்கிறோம்..?

தங்கள் கனவுகளை தங்கள் குழந்தைகள் நனவாக்க வேண்டும் என்று எதிர்பார்த்து தன் விருப்பத் துறையை பரிந்துரைக்கும் பெற்றோரும் உண்டு. கலெக்டர் ஆபீஸில் பி.ஏ.வாக வேலை பார்ப்பவர் கலெக்டரை பார்க்கும் போதெல்லாம் தனக்குள் ஏற்படுகிற கனவை தன் குழந்தையின் மூலம் நிறைவேற்ற முயல்வதுண்டு. இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையில் தனக்கே தனக்கென்று சொந்த இலக்குகளை கொண்டுள்ளார்கள்.

அப்பா மரம் வெட்டிக்கொண்டிருந்தால் மகனும் மரம்தான் வெட்ட வேண்டும் என்ற குலத்தொழில் எண்ணம் நம்மிடம் இருந்து நீங்கிவிட்டது. ஆனால் இன்னும் இந்தக் குலக்கனவு? இது மட்டும் நம்மிடம் இருந்து நீங்கவில்லை.

மருத்துவம் தேர்ந்தெடுக்கச் சொல்லி அறிவுறுத்துகிற எவரும் நோய்களை ஒழித்துவிட வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல்வதில்லை. கலெக்டரானால் இந்த தேசத்தில் ஒரு மாவட்டத்தையாவது ஒரு துறையிலாவது மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்து விடலாம் என்பதற்காக அல்ல…

பெரும்பாலும் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக ஒரு துறையை தேர்ந்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் முதலில் கவனிப்பது அத்துறையில் உள்ள வருமான வாய்ப்பு.

தங்கள் வாழ்வில் சந்தித்த பொருளாதார பிரச்சனைகளின் நினைவுகளிலிருந்து முடிவெடுக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பணக்கஷ்டம் படக்கூடாது என்று முடிவெடுப்பது சரிதான்.

மருத்துவரானால் பொறியாளனானால் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிற வருமான வாய்ப்புகள் மட்டும்தான் ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இதில் மாணவ விருப்பங்கள் அடிபட்டு போகிறது.

முதலில் சொன்ன உதாரணமே இதற்கும் பொருந்தும். மாம்பழம் நன்றாக விலை போகிறது என்பதற்காக நீங்கள் என்ன முயற்சித்தாலும் உங்கள் வீட்டில் உள்ள வாழைமரத்தில் மாம்பழத்தை காய்க்க வைக்க முடியாது.

யோசித்துப்பாருங்கள். விருப்பமில்லாத துறையில் யாராலும் விரைவாக முன்னேறவும் முடியாது. நிறைவாக சம்பாதிக்கவும் முடியாது.

பொருள் தேடல் தவறென்பது அல்ல என் கருத்து. விருப்பத்துறையிலேயே அதைச் செய்ய முடியும் என்பதுதான் நான் வலியுறுத்துவது.

ஒரு மாணவன் எம்.ஏ. ஆங்கிலம் படிக்க விரும்புகிறான் என்று வைத்தக்கொள்வோம். அதற்கெல்லாம் இப்பொழுது மதிப்பில்லை என்போம். இதற்கு அர்த்தம் வருமான வாய்ப்பில்லை என்பதுதான்.

உண்மையில் அப்படியா? உலக மொழியாகிக் கொண்டிருக்கிற ஆங்கிலத்தை சிறப்பாக கற்பிக்க இன்று ஆட்கள் போதவில்லை என்பதுதான் உண்மை.

எம்.ஏ. ஆங்கிலத்தை விருப்பமாக ஒருவன் தேர்ந்தெடுத்து படித்தால் நிச்சயம் ஆழமாக படிப்பான். அதில் தேர்ந்த புலமை பெறுவான். அவன் மற்றவர்களுக்கு ஆங்கிலத்தை கற்றுத் தருகிறபோது சுயதிருப்தி அடைவான். அதே சமயத்தில் பணமும் சம்பாதிப்பான். முக்கியமாக மனநிறைவான வாழ்க்கையை வாழ்வான்.

உண்மையில் உங்கள் குழந்தைகள் பொருள் நிறைவான வாழ்க்கையை வாழவேண்டுமா? அல்லது பொருளோடு மனநிறைவான வாழ்க்கையை வாழ வேண்டுமா? எதை விரும்புகிறீர்கள்?

ஒருவன் விருப்பமில்லாத துறையை வருமானத்திற்காக மட்டும் தேர்ந்தெடுக்கும்போது இரண்டு வகையான இழப்பு. ஒன்று தனிமனித வளர்ச்சி. இரண்டு தேச நலன்.

சுய விருப்பத்தில் மருத்துவம் படித்தவன் நோய்களை அழிப்பதற்கான வழி தேடுவான். வருமானத்திற்காக மருத்துவம் படித்தவன் நோய்கள் வளர்வதையே நாடுவான். இதில் மருத்துவம் என்பது உதாரணம் தானே தவிர எல்லா துறைகளுக்குமே இது பொருந்தும்.

பெற்றோர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த துறைதான் என்றில்லை, எந்த ஒரு துறையிலும் மிகச்சிறந்து விளங்கினால் வெற்றிகள் குவிக்கலாம். சாதனைகள் படைக்கலாம். நன்றாக வளரலாம். எனவே குழந்தைகள் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறார்களோ அதைத் தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். அதில் தொடர்ந்து தன் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுங்கள். அத்துறையின் உச்சத்தை அவன் தொடுகிறபோது அவன் கனவும் நிறைவேறும். அவன் வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்ற உங்கள் கனவும் நிறைவேறும்.

தன் விருப்பத்துறையான ஜர்னலிசத்தை தேர்ந்தெடுத்த நீயா? நானா? கோபிநாத் வெற்றி பெறவில்லையா? மனிதவள மேம்பாட்டுத் துறையை தேர்ந்தெடுத்த சோம.வள்ளியப்பன் வெற்றி பெறவில்லையா?

படிப்பை தேர்ந்தெடுப்பது இருக்கட்டும். தேர்ந்தெடுத்த படிப்பில் கூட இங்கே நாம் யாரையும் சுயமாக இயங்கவிடுவதில்லை. ப்ளஸ் டூ வந்துவிட்டால் டியூசன் போக வேண்டும் என்பது கட்டாயம். தேவையில்லை என்று யாராவது தைரியமாக முடிவெடுத்தாலும் கூட சுற்றி உள்ளவர்கள் சும்மா இருப்பதில்லை. அவர்கள் ஏற்படுத்துகிற கலவரத்தில் பையன் அடுத்த நாளே டியூசன் செல்ல ஆரம்பித்து விடுகிறான். யாரையும் நாம் சுயமாக இருக்க விடுவதில்லை.

குழந்தை நான் இந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறேன் என்று சொன்னால், ‘உன்னால் இதில் வெற்றி பெறமுடியும்” என்று சொல்ல குழந்தையை விட உங்களுக்கு அதிகமான சுயமதிப்பும் நம்பிக்கையும் வேண்டும்.

அப்போதுதான் அவர்களை உற்சாகப் படுத்தவும் வெற்றி பெறவும் உதவ முடியும்.

நம்மிடம் ஏன் இன்னும் ஒரு ராமானுஜம், இன்னும் ஒரு ஜி.டி. நாயுடு தோன்றவில்லை? யோசித்துப்பாருங்கள். காரணங்கள் உங்களுக்கே விளங்கும். விரும்புகிற துறையில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வெற்றி.

“அதெல்லாம் சரி. என் குழந்தை எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க முடியாமல் குழம்புகிறான். அப்போது நாங்கள் வழிகாட்டலாம் இல்லையா?” எனச் சில பெற்றோர்கள் கேட்கலாம்.

அடுத்து கற்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? அவற்றுள் சிறந்தவற்றை தேர்ந்தெடுப்பது எப்படி? என்பதையெல்லாம் அறிந்து கொள்ள உதவுங்கள். சரியான முடிவெடுக்க கற்றுக் கொடுங்கள். ஆனால் அவர்கள் சார்பாக நீங்கள் முடிவெடுக்காதீர்கள்.

மறந்துவிடாதீர்கள். பெற்றோர்களின் வேலை குழந்தைகளுக்காக முடிவெடுப்பதல்ல…… குழந்தைகளுக்கு முடிவெடுக்க கற்றுத்தருவது.

குழந்தையாக இருக்கிறபோது நிலவை காட்டி சோறு ஊட்டினீர்கள் தானே. நிலவை பார்க்கச் சொல்லி தொலைவில் நோக்கச் சொன்ன நீங்கள் அவர்களிடம் ஏன் தொலைநோக்கை ஏற்படுத்தவில்லை.

சரி வாருங்கள், இது நல்ல தருணம். இப்போது ஏற்படுத்தலாம்.

உங்கள் குழந்தை 6 வது படிக்கிறான் என்றால் அடுத்த 5 வருடம் கழித்து நீ என்ன செய்து கொண்டிருப்பாய்? என்று கேளுங்கள். பதினொன்றாம் வகுப்பு படிப்பேன் என்று விடை வரும். அது சரி. அப்பொழுது எப்படி படிப்பாய்? என்ன மதிப்பெண் எடுப்பாய்? எந்த திறமைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பாய்? எனக்கேட்டு மேலும் அவர்களின் தொலைநோக்கை வளருங்கள்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு என்ன சாப்பிடப் போகிறோம் என்று முடிவு செய்தால்தான் இன்று சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வர முடியும்? அதுபோல அடுத்த வருடம் அடுத்த 5 வருடம் கழித்து எப்படி இருக்கப்போகிறோம்? என்று முடிவு செய்தால்தான் இன்றைய செயல்களை சிறப்பாக செய்ய முடியும் என அவர்களுக்கேற்ற உதாரணங்களோடு விளக்குங்கள்.

டிவியில் எப்போதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்கு அதில் விருப்பம் என்று அர்த்தம். உதாரணத்திற்கு நடன நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறான் என்றால் – நீ என்றைக்கு இதுபோல டிவியில் நிகழ்ச்சி செய்யப்போகிறாய்? என்று கேளுங்கள். தான் நிகழ்ச்சி செய்கிற நாளை அவர்கள் தொலை நோக்கட்டும்.

பெற்றோர்கள் சரியாக இதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் தனித் திறமைகளை அல்லது ஆர்வத்தை கவனித்து அதற்கேற்ற துறைகளை அவர்களுக்கு வழிகாட்டுவதில் தவறில்லை. ஆனால் அதில்தான் நடக்க வேண்டும் என்ற வற்புறுத்தல் மட்டும்தான் வேண்டாம் என்கிறேன்.

“என் பையனை பற்றி எனக்கு தெரியாதா… இப்படித்தான் கம்ப்யூட்டர்ல விருப்பம் இருக்குன்னு கம்ப்யூட்டர் கிளாஸ் போனான். 20 நாள்ல நின்னுட்டான். ப்ரெண்ட்ஸெல்லாம் போறாங்கன்னு ஸ்போக்கன் இங்கிலீஷ் போனான். அதுவும் பாதியிலேயே நிக்குது. இப்படிப்பட்ட பையனை எப்படி அவன் இஷ்டத்துக்கு விடறது சொல்லுங்கள்..?” இப்படி பதில் கேள்வி வரலாம் பெற்றோர்களிடமிருந்து.

சரி. இந்த மனநிலை மாற்றம் நீங்கள் சேர்த்துவிட்ட படிப்பிலும் நிகழலாம் இல்லையா? இதற்கு நாம் செய்ய வேண்டியது அவர்கள் சுயஆர்வத்தை அதிகப்படுத்துவதுதான். கற்றல் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சுலபமாக இல்லை என்கிற போது நமக்கு வராது என்று முடிவு செய்து பாதியில் விலகிவிடுகிறார்கள். ப்ரெஷை கையிலெடுத்தவுடன் ஓவியம் வரைய முடியுமென்றால் உலகெல்லாம் ஓவியர்களாகத்தான் இருப்பார்கள். தொடர் முயற்சிதான் எதிலும் நம் திறமையை வளர்க்கும் என்று நம்பிக்கை ஊட்டினால் சேர்ந்த வகுப்பிலிருந்து பாதியில் விலகுவது குறையும்.

சரி. எதிலும் ஆர்வமே இல்லாமல் இலக்கே இல்லாமல் இருப்பவர்களை என்ன செய்வது? புரிந்து கொள்ளுங்கள். அப்படி யாருமே இருக்க முடியாது. தன் ஆர்வத்திற்கு வரவேற்பு இருக்காது என்பதனால் அதை வெளிப்படுத்தாமல் இருக்கலாமே தவிர, தனக்கென்று கனவுகள் இல்லாத மனிதன் யாருமே இருக்க முடியாது.

சரியான வயதில் தன் பயணத்தின் திசையை தீர்மானிக்காமல் கண்ணில் பட்ட அல்லது கிடைத்த வழியில் எல்லாம் இலக்கே இல்லாமல் சென்று வாழ்க்கை முழுக்க தடுமாறிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.

பர்ஸ்ட் குரூப் படித்துவிட்டு பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து மார்கெட்டிங் வேலைக்குப் போய் அது சரி வராமல் சொந்த தொழில் ஆரம்பித்து அதில் நஷ்டம் வந்து… இது போன்ற கதை நம் வீட்டைச் சுற்றி கூட சில இருக்கும். காரணம் நேரம் சரியில்லை. ஜாதகம் சரியில்லை என்று முடிந்துவிடும். உண்மையில் இலக்கே இல்லாத பயணம் என்பதால்தான் கடைசிவரை தறிகெட்ட பயணமாக ஆகி விடுகிறது.

குழந்தைகள்தான் என்றில்லை என்ன படிப்பில் சேர்க்கலாம் என்று முடிவுக்கே வரமுடியாத பெற்றோர்களும் இருக்கிறார்கள். அக்கம் பக்கம் விசாரிப்பார்கள். அவர்களும் இப்படி விசாரித்து அரைகுறையாய் அறிந்ததை இவர்களுக்கு அறிவுறுத்துவார்கள். இதற்கென்று சில கல்வி ஜோசியக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் ஜாதகத்திற்கு பதில் மார்க்ஷீட்டை கொடுத்தால் இந்த மார்க்கிற்கு என்ன படிக்கலாம்? எந்தத் துறையில் வேலை கிடைக்கும்? எவ்வளவு சம்பாதிக்கலாம்? என்றெல்லாம் அலசி ஆராய்ந்து தந்து விடுவார்கள் உங்கள் எதிர்காலத்தை.

குழந்தைக்கான துறையை அல்லது அவர்களின் விருப்பத்தை எப்படித்தான் கண்டறிவது?

அவர்கள் எதில் தன்னை மறந்து ஈடுபடுகிறார்கள் என்பதை பாருங்கள். எதைப்பற்றி லயித்துப் பேசுகிறார்கள் என்று கவனியுங்கள். அதிலேயே இலக்கை ஏற்படுத்திக் கொள்ள உதவுங்கள்.

பெற்றோர்களுக்கான ஒரு கருத்தரங்கில் நான் இது போல பேசிக்கொண்டிருந்த போது ஒரு பங்கேற்பாளர் கேட்டார்: “என் பையன் எப்பொழுது பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட் என்றிருக்கிறான். அதிலேயே விட்டுவிடலாமா?”

“ஏன் விடக்கூடாது? அவன் ஒரு நாள் சச்சின் டெண்டுல்கராக வரலாம் இல்லையா?”

விடாமல் அவரும் தொடர்ந்தார்: கோடியில் ஒருவனால்தான் சச்சின் டெண்டுல்கராக வரமுடியும். நான் சொன்னேன், ” நல்ல வேளை சச்சின் டெண்டுல்கர் உங்கள் வீட்டில் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் கோடியில் ஒருத்தனால்தான் கவாஸ்கராக வர முடியும் என்று சொல்லி சச்சினை கிரிக்கெட் விளையாடவே விட்டிருக்க மாட்டீர்கள்” என்று.

இன்னொரு பெற்றோர் கேட்டார், “என் குழந்தை பாடகராக வர வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் படிப்பில் கோட்டை விட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது”.

நான் கேட்டேன். நாளை உங்கள் குழந்தைகள் இசைத்துறையில் லட்சக்கணக்கில் சம்பாதிப்பார்கள் என்று உறுதிமொழி தந்தால் உங்களுக்கு சம்மதமா?

அப்படியென்றால் சரி என்றார்.

குழந்தைகளின் திறமை மீதான நம்பிக்கையை விட அவர்களின் எதிர்காலத்தின் மீதான பயம் நமக்கு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவர்களையும் அதைரியப் படுத்துகிறோம். நன்றாக கவனித்துப் பாருங்கள். நாம் குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்க்கிறோமா அவநம்பிக்கையை வளர்க்கிறோமா? என்று.

அதெல்லாம் சரி. இது போட்டிகள் நிறைந்த உலகம் இல்லையா? என்றார் மறுபடியும் எழுந்து.

இருக்கட்டுமே அதனால் என்ன? நீங்கள் ஏன் போட்டி போடுகிறீர்கள்? மரங்கள் யாரோடும் போட்டி போட்டு வளர்வதில்லை. ஆனால் அதன் வீரியத்திற்கு தக்க முழு உயரத்தை அது அடைந்துவிடுகிறது. நாம் மட்டும் ஏன் மற்றவர்கள் உயரத்திற்கு ஏற்றவாறு வளர வேண்டும். நாம் நம் முழு உயரத்திற்கு வளர்வோம். அது போதும்.

என் பதில் அவருக்கு இன்னும் முழு திருப்தியை தரவில்லை. உங்கள் ஊரில் ஒரு ஆறு ஓடுகிறதில்லையா?

ஆம். காவிரி ஆறு.

அதில் தண்ணீர் இப்பொழுது ஓடுகிறதா?

இல்லை.

சரி. இப்பொழுது அதற்கு என்ன பெயர்?

காவிரி ஆறுதான்.

தண்ணீர் ஓடினால்தான் ஆறு. இப்பொழுதுதான் தண்ணீர் இல்லையே? காவிரி தரை என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும்?

இன்று ஓடவில்லை என்றால் என்ன? நேற்று ஓடியிருக்கிறது. நாளை ஓடும். என்றார் உறுதியான குரலில்.

நான் கேட்டேன். “உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத காவிரி மீது கூட நீங்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், நாளை இதில் தண்ணீர் வருமென்று. ஆனால் அந்த நம்பிக்கை ஏன் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உங்கள் குழந்தைகள் மீது இல்லை? நாளை நிச்சயம் இவர்கள் ஜெயிப்பார்கள் என்று.”

பாலைவனத்தில் தீவிர தாகத்தோடு இருப்பவர்கள் தங்களையும் அறியாமல் தண்ணீர் இருக்கிற திசை நோக்கி நடக்கிறார்கள். எந்த சக்தி அவர்களை தண்ணீர் இருக்கிற திசையில் அழைத்து சென்றது? அது மனதின் சக்தி தவிர வேறு எதுவாக இருக்க முடியும்.

நீங்கள் உங்கள் குழந்தைகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் தாகத்தை தீவிரப்படுத்துங்கள்.

நிச்சயம் நம் குழந்தை வெற்றி பெறவேண்டும் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் சரிதான். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது வெற்றி பெறும் துறைகளைத் தேர்ந்தெடுத்து தருவதல்ல. தேர்ந்தெடுத்ததில் வெற்றி பெறச்செய்வதுதான்.

பலரும் இப்பொழுது செய்வது எந்தத் துறை உச்சத்தில் இருக்கிறது? எதில் அதிகம் பேர் சேர்கிறார்கள் என்று பார்த்து அதில் குழந்தைகளை சேர்த்து விடுகிறார்கள். ஆனால் நான்காண்டுகள் கழித்து அத்துறையின் நிலை மாறலாம். அல்லது அதிகம் பேர் அதில் வந்துவிட்டதால் அதன் மதிப்பிழக்கலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இல்லையா?

ஆனால் அதற்கு மாறாக அது அவர்கள் விருப்பத்துறையாக இருக்கும்போது அதில் அவர்கள் நிபுணர்களாகிவிடுவார்கள். நிபுணர்களுக்கு எத்துறையிலும் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும்.

இறுதியாகவும் உறுதியாகவும் ஒன்றைச் சொல்கிறேன். உங்கள் குழந்தைகள் எந்தப் படிப்பை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதில் அல்ல. அதை அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்பதில்தான் அவர்களின் வெற்றி இருக்கிறது.

எனவே உங்கள் குழந்தைகள் வெற்றி பெற உதவுங்கள். இதெல்லாம் நிறைவேறுகிறபோது நாம் பெறப்போவது வீட்டிற்குள் மட்டுமல்ல, நாட்டிற்குள்ளும் வெற்றி.

(வெற்றி வளரும்….)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *