உலகெங்கும், பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோகிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் இந்த நிலை பெருமளவில் இருக்கிறது. ஆட்குறைப்பு, நிறுவனத்தின் உற்பத்தியோ, தொழிலோ குறைவதால் ஏற்படுகிறது. இதற்குப் பெரிய அளவில் தீர்வுகள் எதுவும் தென் படவில்லை.
அலுவலர் அல்லது ஊழியரின் செயல்திறன் நன்றாகவே இருந்தாலும், தொழில்சூழல் சரியாக இல்லாத போது வேலையை விட்டு விலக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே ஆகிவிட்ட சூழலில், வேலையை இழக்க நேரும் தனிமனிதர்கள் இந்தச் சூழலை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம்? யாருக்காவது வேலை போனால், உடனடியாக என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கு, உலக அளவில் மனிதவள மேம்பாட்டு நிறுவனர்கள் விடையளித்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு ஆலோசகர் மார்தா ஃபின்னே இது குறித்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அவரது வழிகாட்டுதல்கள் சிலவற்றை உள்வாங்கிக் கொண்டு, இந்தியச் சூழலில் சில ஆலோசனைகள் இங்கே தரப்படுகின்றன.
ஒரு வேளை – உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்காவது இப்படியொரு சூழல் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு இந்தக் கட்டுரை பயன்படக்கூடும். இந்தக் கட்டுரைக்கான அவசியம் உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ ஏற்படக்கூடாது என்கிற பிரார்த்தனையுடன் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம்.
– ஆசிரியர்
1. வேலை நீக்கம் குறித்த அறிக்கை, முன்னறிவிப்பின்றி தரப்படுகிற சூழலில் உடனடியாக அதில் கையெழுத்திடாதீர்கள். உங்கள் வேலை இழப்பிற்கு ஓரளவேனும் நியாயமான இழப்பீடு வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்து கொண்டு, இருக்கிற சூழலில் இதைவிட நல்ல தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தால் மட்டுமே கையெழுத்திடுங்கள்.
2. பதட்டம் காரணமாக, நிர்வாகத்திடமோ, மேலதிகாரியிடமோ கடுமையாக மோதாதீர்கள். வேறு வழியின்றி நிறுவனம் இந்த முடிவை மேற்கொள்கிறது. நாளை சூழ்நிலை மாறலாம். உங்களுக்கு அவர்களும், அவர்களுக்கு நீங்களும் தேவைப்படலாம்.
3. விஷயத்தைக் கேட்டதும் கண்ணீர் வருகிறதா? மான அவமானம் பார்க்காமல் அழுதுவிடுங்கள். உங்கள் மன அழுத்தம் கண்ணீர் வழியே கரைந்தோடும். உங்கள் உடல் நலனுக்கும், அடுத்த கட்ட முடிவுகளை நோக்கித் தெளிவாக நகரவும் இது உங்களுக்குத் துணை செய்யும்.
4. வருமானத்திற்கு நல்ல வழியை நோக்கி சில ஏற்பாடுகளை செய்துகொள்ள மூன்று மாதங்களாவது ஆகும். எனவே சிக்கனமாக இருக்கப் பழகுங்கள். வேலை இருந்தாலும் இழந்தாலும் சிக்கனம் நல்லதுதான்.
5. வங்கி முதலீடுகளை ஒழுங்குபடுத்தி, வட்டித் தொகை சமச்சீராக வருகிறதா என்று பாருங்கள். வேறு வழியே இல்லாமல் போனாலே ஒழிய சொத்துகளைக் குறைந்த விலைக்கு அவசரப்பட்டு விற்காதீர்கள்.
6. உங்கள் தொழில் திறமை – அனுபவம் போன்றவற்றை, ஒரே நிறுவனத்திற்கு என்றில்லாமல் பல நிறுவனங்களுக்கும் பயன்படும் விதமாக ஆலோசகர் பொறுப்பேற்க முயலுங்கள். உங்களுக்குப் பல ஆயிரங்கள் சம்பளம் கொடுத்த நிறுவனத்திற்குக் கூட சில ஆயிரங்கள் பெற்றுக் கொண்டு பகுதிநேரப் பணிபுரியும் சூழல் அடுத்த சில மாதங்களில் உருவாகலாம்.
7. உண்மை நிலையை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்று வழிகளை அவர்களுடன் கலந்து ஆலோசியுங்கள். குழந்தைகளுக்கு என்ன வயதோ அதற்கேற்ப விஷயத்தைப் பக்குவமாகச் சொல்லுங்கள். பதறாதீர்கள். பதட்டமடையச் செய்யாதீர்கள்.
8. கோவையில் மேட்டுப்பாளையம் – சிறுமுகை பக்கங்களில் பல தொழில் முனைவோர்கள் குறுகிய காலங்களில் தோன்றி, கடின உழைப்பால் முன்னேறி இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அந்தப் பகுதிகளில் இருந்த பல நிறுவனங்கள் திடீரென்று மூடப்பட்டதால், பெரும் பின்னடைவைச் சந்தித்து, சொந்த முயற்சியில் தாங்களே நிறுவனங்கள் தொடங்கி வளர்ந்தார்கள் அவர்கள். எனவே, இருட்டிலிருந்து மீண்டு வெற்றியின் வெளிச்சத்தைத் தொடும் வாய்ப்பை வாழ்க்கையே வழங்கும் என்பதை நம்புங்கள்.
9. பதட்டத்திலும் பயத்திலும் பெருமளவு சக்தி வீணாகிறது. அதை ஆக்கபூர்வமான சக்தியாக மடைமாற்றம் செய்யுங்கள். “அடுத்தது என்ன” என்கிற கேள்வியையும் தேடலையும் உங்களுக்குள்ளேயே தீவிரமாக்குங்கள்.
10. நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது கோப்புகள் – விவரணைகளை எடுத்து வர முயலாதீர்கள். ஆனால் நிறுவனம் வழியே நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட தனிப்பட்ட தொடர்புகளை கைவிட்டுவிடாதீர்கள். உங்கள் புதிய தொழிலுக்கு அந்தத் தொடர்புகள் பெருமளவில் துணை செய்யும்.
11. உலகையே உலுக்கும் பொருளாதாரப் பின்னடைவிற்கு நீங்கள் எவ்விதத்திலும் காரணமில்லை. வேலை இழக்க நேர்ந்தது உங்கள் குறைபாட்டால் இல்லை என்பதை உணருங்கள். அதே நேரம், அடுத்தொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் வாய்ப்புக் கிடைத்தால் உங்களை அங்கே தவிர்க்க முடியாதவராக நிலைநிறுத்தும் அளவு உங்கள் செயல்திறனைக் கூர்மைப்படுத்துங்கள்.
12. எத்தனை மோசமான பின்னடைவுகளிலும் முனைப்புள்ளவர்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பின்னடைவு, உங்கள் செயல்திறனை உங்களுக்கே நினைவூட்டக் கிடைத்த நல்வாய்ப்பு என்பதை மனதில் கொண்டு முன்னைவிடவும் முனைப்போடும் நம்பிக்கையோடும், இந்தப் புதிருக்கான விடையைக் கண்டடையுங்கள்.
Nethaji
realy very nice . . intha mathiri pala karuthukal eanaku adikadi
intha mathiri advaice thevai…… THANK YOU FRIENDS