வாழ்விலும் பொருள் தேவை

திண்டுக்கல் சிகரம் தொடக்கவிழாவில்
தவத்திரு. பொன்னம்பல அடிகளார்

நேற்று உலகத்திற்கு எது துன்பமாகத் தெரிந்ததோ, அதை எது இன்பமாக மாற்றிக் காட்டுகிறதோ அதற்குப் பெயர்தான் அறிவு. அந்த சமூகத்தின் பார்வை அறிவார்ந்த பாதை.

பெரும்பாலும் நாம் விளம்பரப்படுத்தப் படுபவர்களைப் போலவே வாழ நினைக்கிறோம்.

ஒப்பனை முகங்களையே விரும்புகிறோம். அதனால் நம் உண்மை முகத்தை மறந்து போகிறோம். நம்முடைய கால்களில் நடக்கத் தவறிப் போகிறோம். அதனால் நமக்கு கால்கள் இருக்கின்றன என்பதையே பல நேரங்களில் மறந்தும் மரத்தும் போகிறோம்.

நம்மில் பலருக்கு நம்முடைய பலம் தெரிவ தில்லை. தெரியாததால்தான் அடைய வேண்டிய பல இலக்குகளை இழந்து நிற்கிறோம். நம்பிக்கை என்பது தன்னுடைய திறமைகளை, உள் உணர்வுகளை உணர்ந்து செயல்படுவது.

“தன்னம்பிக்கை என்பது கர்ப்பம். கர்வம் என்பது தொப்பை” என்பார் கவிப்பேரரசு வைரமுத்து. இதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். பொறாமை என்பது முடியாதவர்கள் பாராட்டு என்பார்.

வெற்றி பெற்றவர்களைப் பார்த்து வெற்றி பெற வாய்ப்பில்லாதவர்கள் பேசுகிற வார்த்தைகளில் நாம் சோர்ந்து போய்விடக் கூடாது. வாழ்க்கையைப் பலரும் பல திசைகளில் அளக்கிறார்கள். அறிவியல் ஊடகங்கள் வந்தாலும்கூட நம்பிக்கையை பலமாக்குகிற பாதையும் வளர்ந்து கொண்டிருக்கிறது. சிலர் வீதியோரங்களில் சிறகுகள் கத்தரிக்கப்பட்டு, பறக்க விருப்பமில்லாத, சலுகை தானியங்களுக்காக அடிமையாய் வாழும் கூண்டுக்கிளியிடம் தங்கள் வாழ்க்கை இருப்பதாகக் கருதி ஜோதிடம் பார்க்கிறார்கள். அப்படித்தான் நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆன்மீகமும், சமயமும்கூட நம்பிக்கையை ஊட்டுகிறது. இயேசு பெருமான் சொல்வார், “நீ உன் ரொட்டித் துண்டை வியர்வையில் தேடிக் கொள்” என்று. நபிகள் பெருமான், ஒருவனின் காய்த்துப் போன கரங்களைப் பற்றிக்கொண்டு, கண்ணீர்மல்க, “இவர் கைகளில் இறையருளைப் பார்க்கிறேன்” என்று சொல்வார்.

பாரதி, “கைவருந்த உழைப்பவர்தான் தெய்வம்” என்பான்.

ஐன்ஸ்டீன் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி. பல அபூர்வ சாதனைகளுக்கு காரணமானவர். ஹிட்லர் சரிந்து போனதற்கு, அமெரிக்க ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதம் ஒரு காரணம். அந்த ஐன்ஸ்டீனுக்கு, ஒருமுறைஇஸ்ரேலின் குடியரசுத் தலைவர் ஆவதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. தங்கத் தாம்பாளத்தில் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அதைத் தூர எறிந்துவிட்டுச் சொன்னார், “நான் தீவிரமாக சிந்திக்க விரும்புகிறேன்” என்று. தன்னுடைய அறிவை ஆற்றலை மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தினார்.

மாசேதுங் படையெடுத்துப் போனபோது 10 லட்சம் வீரர்கள் அவர் படையில் இருந்தனர். கடைசியில் எஞ்சியவர்கள் இருபதாயிரம் பேர் மட்டுமே. ஆனால் வெற்றியின் கோட்டை, சளைக்காமல், சோர்வடையாமல், எட்டிப்பிடித்தார். லெனின் பக்கவாத நோய் தாக்கி மரணப்படுக்கையில் கிடக்கிறார். அவரிடமிருந்து அந்த நேரத்திலும் மனிதகுலத்திற்கு கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான் அவர் மறைவை, “லெனின் சிந்திக்க மறந்து போனார்” என்று அவருடைய தேசம் அறிவித்தது.

அறிவு ஜீவிகளுக்கு மரணம் என்பது, இரைப்பை வேலை நிறுத்தம் செய்வதோ, இதயத்துடிப்பு நின்று போவதோ அல்ல.

ஒரு காலத்தில் அன்னதானம் செய்தால்தான் கோடி புண்ணியம் என்றநம்பிக்கை இருந்தது. இன்னொரு காலத்தில் சமூகத்தில் அறிவுதானம் செய்வதே கோடி புண்ணியம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்பொழுதுதான், அறிவு வழிப்பட்ட அவயதானம் செய்வதும் உண்மையான தானம் என்றநம்பிக்கை வந்திருக்கிறது.

சென்னைக்கு அருகே திருக்கழுக்குன்றத்தில் ஒரு சாலை விபத்து. அந்த விபத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிக்கிக்கொண்டான். அவன் மூளைச்சாவை சந்தித்துவிட்டான். ஆனால் அவனுடைய மருத்துவப் பெற்றோர்கள் தன்னுடைய குழந்தை மரணத்தை சந்திக்கிறநேரத்திலும் ஒரு சதவிகிதம் பிழைத்துக் கொள்கிறவாய்ப்பிருந்தும்கூட, தன்னுடைய மகனின் மறைவில் ஆறு பேருக்கு ஒளி கிடைக்கிறது. நலம் கிடைக்கிறது. வாழ்வு கிடைக்கிறது என்று அவனுடைய உடல் உறுப்புகளை தானம் தர வந்தார்கள். ஹிதேந்திரன் என்கிறமாணவனின் மறைவினால் இது நிகழ்ந்தது. அன்பு தானமும், அறிவுதானமும் நிகழ்ந்த இந்த சமூகத்தில்தான் இன்றைக்கு வழிப்பட்ட அன்பு தானமாக அவயங்களின் தானம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அன்பும் அறிவும் இணைந்தால் உலகமே அருள்
அன்பும் அறிவும் பிரிந்தால் உலகமே இருள்.

அந்த சிறுவனின் உடலிலிருந்து பிரிக்கப்பட்ட இதயம் அப்போலோ மருத்துவமனையிலிருந்து, தேனாம்பேட்டை செரியன் மருத்துவமனைக்குப் போக வேண்டும். ஆனால் அங்கு ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் செல்ல வேண்டும். இல்லையென்றால் அந்த இதயம் பயனற்றுப் போய்விடும். தமிழ்நாட்டின் காவல்துறைஆட்சி அதிகாரவர்க்கத்திற்கு மட்டுமே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வந்தது. முதன்முறையாக ஓர் இதயம் பயணம் செய்வதற்கு போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொடுத்தது.

இதுவும், சமூக மேம்பாட்டின் மனித நேயத்தின் வெளிப்பாடுதான்.

மகாத்மா காந்தியின் பொருள்களை மீட்டுவிட்டோம் என்று பெருமைப்படும் நாம், காந்தியத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து போகிறோம்.

வறுமை ஒரு திரைப்படத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது என்று வருத்தப்படுகிற நாம், அறுபதாண்டு குடியரசை கொண்டாடுகிறதினத்தில், ஏழ்மையை விரட்டத் தவறினோமே என்று வெட்கப்பட மறுக்கிறோம். என்றைக்கு அதற்கு கவலைப்படுகிறோமோ அன்றைக்குத்தான் இந்தியா உண்மையான குடியரசுப் பாதையில் நடைபோடுகிறது என்று பொருள்.

1949-ல் “பிங்கி” என்ற கறுப்பினப் பெண்ணின் காதல் கதையை வெளியிடுவதற்கு தடைவிதித்த அமெரிக்காவில்தான் இன்றைக்கு கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா அதிபராக பதவியேற்று இருக்கிறார்.

1947-ல் “எல்லாம் எல்லா மக்களுக்கும்” என்று எழுதப்பட்ட இந்திய விடுதலை சாசனம் இன்னும் முழுமை அடைந்திருக்கிறதா என்பதுதான் நியாயமான கேள்வி.

மேல்திசை நாடுகளில் வாழ்க்கை என்பது பணத்தின் தேடலாக இருந்தது. ஆனால் கீழ்திசை நாடுகளில் பொருளோடு, பொருள் நிறைந்ததாக வாழ்க்கை இருக்க வேண்டும் என்று சமூகம் ஆசைப்பட்டது. அதனால்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள், “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”.

“வாய்ப்புக் கிடைக்கும் போதே வாரிச் சுருட்டிக் கொள்வோம். பதவியிருக்கும் போதே பணம் பண்ணிக்கொள்” என்பதல்ல அந்த முதுமொழிக்குரிய விளக்கம்.

உன் உடம்பில் உயிர்காற்று உள்ளபோதே அறத்தால் ஆகிய செயல்களைச் செய்து புகழை தூற்றிக்கொள் என்பதுதான் அதற்கு உண்மையான விளக்கம். அந்த விளக்கத்தை விட்டு வாழ்க்கை எங்கோ சென்று கொண்டிருக்கிறது.

வாழ்க்கையில் வெற்றி, சிந்தனைக்கும் செயலுக்கும் உள்ள துôரத்தைப் பொறுத்து இருக்கிறது. மனித அளவில் சிந்தனையும் செயலும் வேக வேகமாய், அரங்கேறுகிறபோது வெற்றி மாலைகள் குவிகிறது. ஆனால், அந்த வெற்றி மாலைகள் என் கழுத்தை அலங்கரிப்பதற்கு மட்டுமல்ல. சமூகத்தின் மேம்பாட்டிற்கும் பயன்படவேண்டும் என்பதுதான் கீழ்த்திசையின் கலாச்சாரம்.

வாழ்க்கைக்கு பொருள் தேவை. அதைப்போல நாம் வாழ்வதிலும் பொருள்தேவை என்றநிலையில் நாம் பயணம் செய்ய வேண்டும். அதனால்தான் எங்குமில்லாமல் இந்தியாவில், குறிப்பாக தென்னகத்தில் அறநிலையங்கள், அன்ன சத்திரங்கள், அறிவு நிலையங்கள், அந்த நிலை நோக்கி மனித, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கு, அறத்தின் வழியே சாத்தியம் என்பதைத்தான் நமது தமிழ் நெறிகள் வலியுறுத்தின. அந்தத் தடத்தில் மானுடம் பயணம் செய்ய வேண்டும். அதுவே இன்றைக்கு குடும்பத்தை அன்பாக வைத்திருக்கும். வீட்டை நலமாக வைத்திருக்கும். வீட்டிற்கும், வீதிக்கும் இருக்கிறஉறவைப் பலப்படுத்தும். அந்த வழியில் மானுடம் நாளும் பயணம் செய்யட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *