சிகரம் உங்கள் உயரம் – மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் சிறப்பு பொதுக் கூட்டம் கோவை சன்மார்க்க சங்க மண்டபத்தில் 14.12.2008 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோவை சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் திரு.இ.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். சிகரம் உங்கள் உயரம் இயக்கத்தின் மாநகரத் தலைவர் திரு. ஈ.அ. சௌந்தரராஜன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். சிறப்பு விருந்தினரை திரு. சஜீத் அவர்கள்
அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் திரு. இ. ராஜேந்திரன் அவர்கள் “வள்ளுவம் கண்ட பேரரசு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சிறப்புரையிலிருந்து……
“ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுள் இருக்கின்ற தனித்தன்மையை வெளிக் கொணர்ந்தால் சிகரத்தைத் தொட்டுவிட முடியும். எடுத்துக்காட்டாக உலக வர்த்தகத்தில் இன்று சீனா 8% எடுத்துக் கொண்டது. அதற்கு முழுக்காரணம் ஒவ்வொரு சீனரும்தான். சீனத்தின் தத்துவமேதை கன்ஃப்யூசியஸை ஞான குருவாக ஏற்றுக்கொண்டுள்ளனர். திருவள்ளுவரை தமிழகம் மட்டும்தான் தெரிந்து வைத்துள்ளது. நீயா நானா என்று போட்டியிடுவதைவிட நீயும் நானும் என மாறவேண்டும். ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வள்ளுவம் நமக்கு கற்றுத் தருகிறது. இதனை அனைவரும் உணர்ந்துகொண்டு அதன்படி நடந்தால் வல்லரசு கனவு நனவாகும்.
டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் என்ற பல்பொருள் அங்காடி மனிதனின் புறத் தேவைகளை ஒரே கூரையின் கீழ் தருகிறது. மனிதனின் அகத் தேவைகளான ஊக்கம், முயற்சி, ஒழுக்கம் முதலியவற்றை திருக்குறள் ஒன்றே தருகிறது. நோய், பசி இல்லாத நாடு வெற்றியடையும் என்கிறார் வள்ளுவர். நெற்கதிர்கள் குடைசாய்ந்து நின்றால் அந்தநாடு பசுமை புரட்சி கண்டிருக்கிறது என்கிறார் வள்ளுவர். பசுமைப் புரட்சி கண்ட நாடு வல்லரசு ஆவது திண்ணம்.
வெளிநாட்டில் நடக்கின்ற அரசியல், இராணுவ மாற்றங்களை இரகசியமாய் அறிந்து வைப்பதும், விழிப்புணர்வும், நல்ல நூல்களை படித்து அறிதலும் ஒரு அரசுக்கு மிக முக்கியம். வல்லரசு என்ற கனவின் படிக்கல் ஆகும்.
வெற்றிக்கு திருவள்ளுவர் ஏழு படிகள் ஏற வேண்டும் என்கிறார். வாழ்க்கையில் வெல்வதற்கு முதலில் ஒழுக்கம் மிக முக்கியம். நல்ல ஒழுக்கம் இருக்கும்போது இன்பமான வாழ்க்கை அமையும். தீய ஒழுக்கம் எப்பொழுதும் துன்பத்தையே தரும்.
ஒழுக்கம்தான் ஒழுங்கான வாழ்க்கை வாழ கற்றுத்தருகிறது. திருவள்ளுவர் தன் குறளில்,
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.
ஒழுக்கமில்லாத மனிதர்கள்தான் இன்றைய குண்டுவெடிப்புக்கான கருவிகள். இந்த நிலை மாற வேண்டும்.
அடுத்ததாக கல்வி நிறைவாக இருந்தால் வெற்றி சர்வ நிச்சயம். படிக்க படிக்கத்தான் அறிவு வளரும். கிணற்றில் தண்ணீரை இறைக்க இறைக்கத்தான் நீர் ஊறும். அதனைப் போன்றுதான் கற்கக் கற்க அறிவும் வளரும், வெற்றியும் விரைந்துவரும். திருவள்ளுவர் தன் குறளில்,
தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’
என்கின்றார்.
மூன்றாவதாக, மறதியின்மை. ஒரு செயலை மறவாமல் சரியாக செய்து முடிக்கவேண்டும். மறதி இருக்கின்ற ஒருவரால் வெற்றி காண்பது அரிது. ஒருவருக்கு மிகுந்த சந்தோஷம் வருகின்றபோது பல விஷயங்களை மறந்துவிடுவர். அது அளவுக்கதிகமான கோபத்தைவிட தீமை தருவதாகும். இந்த கருத்தைக் கொண்டதுதான் வள்ளுவரின்,
‘இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு’
என்கிற குறள்.
நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பல அரிய கருத்துக்களை கடமைகளை மறக்காமல் செய்யவேண்டும். அவ்வாறு செய்வதற்குத் தவறும்போது ஏழு பிறப்பிலும் நன்மை கிடையாது என்கின்றார் வள்ளுவர். இந்தியா வல்லரசு என்கின்ற கனவு நனவாகவேண்டும் எனில் சான்றோர் சொன்ன கடமைகளைச் சரியாக செய்வோம். நனவாக்குவோம்.
‘புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்!
வெற்றிக்கான நான்காவது படியாக ஊக்கமுடைமையைச் சொல்கிறார். மிகப்பெரிய கடினமான செயலையும்கூட ஊக்கம் இருக்கின்ற காரணத்தால் மிக எளிதாகச் செய்ய முடியும். வெற்றியும் காணமுடியும். குளத்தில் இருக்கின்ற பூக்களின் நீளம் (உயரம்) நீரின் ஆழத்தின் அளவைப் பொறுத்து மாறுபடும். அதுபோன்றுதான் மக்களின் உயர்வு அவர்களின் ஊக்கத்தைப் பொறுத்துதான் அமையும்.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
இன்றைய இளைஞர்களின் அளவுகோல் அவர்களின் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் பொறுத்துத்தான் அமையும்.
வெற்றிக்கான ஐந்தாவது படிக்கல் விடாமுயற்சி, இடைவிடாத முயற்சி இருக்க வேண்டும். விவேகானந்தர் தன்னுடைய இடைவிடாத முயற்சியால்தான் ஆன்மீகத்திலே சாதிக்க முடிந்தது. இடைவிடாமல் முயற்சி செய்பவர்கள் விதியைக்கூட மாற்றிவிடுவர்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்.
நம் நாட்டிற்கு இன்றைய தேவை விடா முயற்சிதான்.
வெற்றிக்கு ஆறாவது தேவை துன்பம் வருகின்றபோது ஏற்றுக்கொண்டு அதனை மாற்றியமைக்கும் வித்தை. அது தெரிந்துவிட்டால், வென்றுவிடலாம். துன்பத்திற்கு துன்பம் வருகின்ற அளவு தைரியமாக துன்பத்தை எதிர்த்து செயல்பட வேண்டும். சுனாமி வந்தபோது நம் நாட்டினர் ஒவ்வொருவரும் செயல்பட்ட விதம் கண்டு அந்நிய நாடுகள் அசந்தன. அந்த தைரியம்தான் தேவை.
வெற்றிக்கு ஏழாவது படியாக சோம்பல் என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்ய வேண்டும். நம் இளைஞர்கள் சோம்பலை விட்டொழித்தால் சாதிப்பது சுலபம். 2020ல் வல்லரசு என்கின்ற கனவிற்கு அடித்தளம் சோம்பல் இல்லாது சுறுசுறுப்புடன் செயல்பட்டால் போதும். வெல்வது நிச்சயம்.
முயற்சி இருக்கின்ற ஒருவரால் தெய்வத்தால் கைவிடப்பட்ட காரியத்தையும் செய்ய முடியும். உயரமுடியும். இன்றைய இளைஞர்கள் திருக்குறளை ஆழ்ந்து படித்தார்களேயானால் இந்தியாவை வல்லரசு ஆக மாற்ற என்ன செய்யவேண்டும் எனத் தெரிந்து கொள்வர். வெற்றிக்கு ஏழு படிகள் தேவை. அந்த ஏழு படிகளை, திருக்குறள் மிக அழகாக தெளிவுபடுத்துகிறது. ஒழுக்கமுடைமை; நல்லகல்வி; மறதியின்மை; ஊக்கமுடைமை; விடாமுயற்சி; இடுக்கண் அழியாமை; சோம்பலின்மை. மீன்பிடி நகரமாக இருந்த சிங்கப்பூர் இன்று 550 விமானங்கள் வந்து போகும் சர்வதேச விமான நிலையமாக, வியாபார ஸ்தலமாக மாறியதற்கான காரணம் வெற்றிப் படிகளை தெரிந்து வைத்ததால்தான். சிங்கப்பூரில் சாக்கடையைச் சுத்தம் செய்து படகு சவாரி செய்யும் ஆறாக மாற்றியுள்ளனர். நாமோ நதிகளை கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடையாக மாற்றி வருகின்றோம். இந்த நிலை மாறவேண்டும். சாக்கடையில் இறங்குகின்ற மனிதனும் சந்திரனில் இறங்குகின்ற மனிதனும் சமமான நிலை பெறும் போதுதான் வல்லரசு என்கிற ஒன்று நிச்சயமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய வெற்றி உன்னை நீயே ஜெயிப்பதுதான் என்றார் மாவீரன் நெப்போலியன். நம்மை நாம் ஜெயிப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். உயர வேண்டும். எந்தச் செயலையும் ஆத்மார்த்தமாகச் செய்தால் அது வெற்றி அடையும். வள்ளலாரும். பாரதியாரும். வ.உ.சியும், அன்னை தெரசாவும் தங்களின் செயல்பாடுகளில் ஆத்மார்த்தமாக இறங்கியதால் வென்றார்கள்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக…
என்ற வள்ளுவரின் வாக்கினைக் கடைப்பிடிப்போம்; வெற்றி அடைவோம்; வல்லரசு காண்போம்!
Leave a Reply