கேட்கத் தெரிகிறதா உங்களுக்கு?

கேளுங்கள் கொடுக்கப்படும்” மனிதகுலம் கண்ட மகத்தான வாசகங்களில் இதுவும் ஒன்று. எல்லா சமயங்களும், எல்லா கலாச்சாரங்களும், வெவ்வேறு மொழிகளில் இதையே சொல்கின்றன.

பொதுவாக ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்து வெளிப்படும் இயல்புகளை, வயதாக வயதாக, .உரிய பக்குவத்துடன் வளர்த்து வரும்போது அது நமக்குப் பலவகைகளில் உறுதுணையாய் இருக்கிறது.

கேள்வி கேட்கிற குணம் அப்படியொரு குணம். உங்களுக்கு என்ன தேவையோ, அதை வெளிப்படையாய்க் கேட்கிற குணம் ஒவ்வொரு குழந்தையிடமும் உண்டு. சில வேளைகளில் பொறுமையில்லாத பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, ஓர் அதட்டல் போட்டு, கேள்வி கேட்கும் ஆர்வத்தை முடக்கி விடுகிறார்கள்.

தன்னுடைய தேவைகளைக் கேட்டுப் பெறுவது என்பதும், தெரியாத ஒன்றைக் கேட்டுத் தெரிந்து கொள்வது என்பதும், வெற்றிக்கான அடிப்படை தேவைகள்.

தேவை என்பது எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், தேவை இருக்கிற எல்லோருமே கண்டடைவதில்லை. தேடல் யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் கண்டடைகிறார்கள். ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்பது நம்முடைய நாட்டுப் புறங்களில் பிறந்த அனுபவ வாசகம்.

கிடைக்காது என்று முன்முடிவை தாமாக ஏற்படுத்திக் கொண்டு, எளிதில் கிடைக்க கூடியவற்றை கோட்டை விடுபவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

ஒரு குழந்தையின் இதழ்கள் ஓயாமல் உச்சரிக்கும் கேள்விகளின் வேர்களைத் தேடிப்பிடித்தால், சில சின்ன சின்ன சொற்கள்தான். யார்-என்ன-எங்கே-ஏன்-எப்படி-எப்போது. தீர யோசித்தால், உலகின் எல்லாக் கேள்விகளுமே இந்த ஆறு சொற்களுக்குள் அடங்கி விடக் கூடியதுதான்.

“இந்த மாமா யார்?” என்று கேட்கும் ஒரு குழந்தையில் தொடங்கி, ” நான் யார்” என்று கேட்கச் சொன்ன ரமண மகரிஷியின் வழிகாட்டுதல் வரை எல்லாமே கேள்விகளின் முக்கியத்துவத்தைத்தான் காட்டுகிறது நமக்கு.

நீங்கள் ஒரு தொழிலில் இருக்கிறீர்கள் என்றால், அந்தத் தொழிலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? உங்கள் தயாரிப்பைப் பற்றியோ, சேவையை பற்றியோ வாடிக்கையாளர்கள் என்ன கருதுகிறார்கள்? உங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? உங்கள் போட்டியாளர்கள் எதைத் தருவதாக இழுக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை. இதற்கான பதில்களை நீங்கள் கண்டடைவதில்தான் உங்கள் அடுத்த கட்ட வளர்ச்சி இருக்கிறது.

அடுத்ததாக, நீங்கள் கேட்டுப் பெறக்கூடிய வாய்ப்புகள். வாய்விட்டுக் கேட்பவை மட்டுமே வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழி. எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற தேடல் எப்போதும் இருப்பவர்களே ஜெயிப்பவர்கள். “பூமி பொதுச்சொத்து! உன் பங்கு தேடி உடனே எடு!” என்கிறார் கவிஞர் வைரமுத்து.

உங்களுக்காக காத்திருக்கும் உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் தேடுகிறீர்களா? உங்களை நீங்களே கேளுங்கள். அமெரிக்க நாட்டில் விற்பனையாளர்களைப் பற்றி ஒரு விசித்திரமான ஆய்வு வெளி வந்திருக்கிறது. விற்பனையாளர்களில் 60% பேர் தாங்கள் விற்பனை செய்யும் தயாரிப்புகள் பற்றி விலாவாரியாக சொல்கிறார்களே தவிர, வணிக வாய்ப்பைத் தருமாறு கேட்கத் தயங்குகிறார்கள் அல்லது தவிர்க்கிறார்கள்.

நிறுவனங்கள், விற்பனையாளர்களுக்கு சொல்லித் தரவேண்டிய அடிப்படையான அரிச்சுவடியே, “அழுதபிள்ளை பால் குடிக்கும்” என்பதுதான்.

வெற்றிகரமான விற்பனையாளர்கள், எதிர்ப்படக்கூடிய சரியான மனிதரிடம் வணிக வாய்ப்பை முதலில் கேட்கிறார்கள். அத்தோடு நின்று விடுவதில்லை. அவர்களிடம் பரிந்துரை பெற்று புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்களையும் கேட்டுப் பெறுகிறார்கள். வளர்ச்சியை நோக்கிய பயணத்தில், இது முக்கியமான அம்சம். ஏனென்றால், ஒரு வாடிக்கையாளர் உங்கள் தயாரிப்பிலோ, சேவையிலோ மனநிறைவைக் காண்கிறார் என்றால், அதைப்பற்றி அடுத்தவர்களிடம் சொல்லுவது அவரின் இயல்பான அணுகுமுறை. தனக்கு கிடைத்த ஒரு நல்ல அனுபவம், பிறருக்கும் கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணமும் இதற்கு காரணம். தான் சொல்லி தனக்கு வேண்டியவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அதன்மூலம் தானும் பாராட்டுப் பெறவேண்டும் என்கிற நியாயமான எண்ணமே இதற்கும் காரணம்.

உங்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயங்கள் யாருக்கெல்லாம் இருக்கிறது என்றொரு பட்டியலை முதலில் தயார் செய்யுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களிலேயே உங்கள் தயாரிப்பிலோ, சேவையிலோ அதிகப்படி நிறைவு கொண்டவர்கள் யார்- சராசரியான அளவு நிறைவு கொண்டவர்கள் யார்-முழுநிறைவு பெறாதவர்கள் யார் என்றபட்டியலை தயாரித்துக் கொள்ளுங்கள்.

அதிகபட்ச நிறைவு கொண்டவர்கள் தாங்களாகவே உங்களுக்கு கூடுதல் வணிக வாய்ப்பு தருவதோடு, புதிய அறிமுகங்களையும் செய்து வைப்பார்கள். சராசரி நிறைவு கொண்டவர்கள் முழுமையான மனநிறைவு கொள்ளும்படி நீங்கள் சேவை புரிந்தால், அவர்களும், உங்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் புதிய அறிமுகங்களையும் தருவார்கள்.

இந்த மூன்று பிரிவுகளில், நீங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது, முழுநிறைவு பெறாதவர்களிடம்தான். ஏன் தெரியுமா? உங்கள் தொழிலை ஒரு தோட்டமாக நீங்கள் கற்பனை செய்துக் கொண்டால், அதில் முழுநிறைவு பெற்றவர்கள், நன்கு வாழ்ந்த மரங்களைப் போல. அவர்களிடம் நீங்கள் வாய்ப்புகள் – புதிய தொடர்புகள்  என்கிற கனிகளை பெறுவது நிச்சயம். சராசரியான நிறைவு பெற்றவர்கள் ஓரளவு வளரும் மரங்கள். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் பலன் கிடைக்கப் போவது நிச்சயம். ஆனால் முழுநிறைவு பெறாதவர்கள் துளிர்விடக் கூடிய தாவரங்களைப் போன்றவர்கள். வேலி போட்டு, உரம் போட்டு, தண்ணீர் வார்த்து, தனிகவனம் வெலுத்தி அவர்களின் முழு நம்பிக்கை செழித்து வளரச் செய்ய வேண்டும்.

நீங்கள் வாய்விட்டுக் கேட்கவும் வேண்டும். நல்லெண்ண வட்டங்களைப் பெருக்குவதன் மூலம் நன்மைகள் தாமாக நிகழும் சூழலை உருவாக்கிக் கொள்ளவும்  முடியும்.

நம்முடைய வேலையை சரியாகச் செய்தாலே எல்லோரும் தேடி வருவார்கள் என்று பலரும்  எண்ணுகிறார்கள். இதற்கு ஒரு பழ மொழியைத் துணைக்கழைத்துக் கொள்கிறார்கள். “கரும்பு கரும்பாக இருந்தால் எறும்பு எங்கிருந்தாலும் வரும்” என்பதுதான் அந்தப் பழமொழி. உண்மையில் கரும்பு கரும்பாக மட்டும் இருப்பதில்லை. தன்னுடைய வாசனை மூலம் தன் இருப்பை உணர்த்துகிறது. தன்பால் எறும்பை ஈர்க்கிறது. ஒருவகையில், தன்னால் பயன்பெறக் கூடியவர்களைக் கரும்பு மட்டுமின்றி எல்லாத் தாவரங்களும் ஈர்க்கவே செய்கின்றன.

உங்களுக்கான தகுதியை நீங்கள் உருவாக்கிக் கொண்டீர்கள், சரி. ஆனால், உங்களுக்கான இடத்தை உங்களால் கேட்டுப் பெற முடிகிறதா? உங்களுக்கான வெகுமதியை உங்களால் கேட்டுப் பெற முடிகிறதா? உங்கள் வளர்ச்சிக்கான திசைகளை உங்களால் தேடிப் பிடிக்க முடிகிறதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுங்கள். அதற்கு முன்னால், இந்தக் கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேளுங்கள். உங்களுக்கு கேட்கத் தெரிகிறதா என்று கேளுங்கள்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *