வெற்றித்திசை

தகதகத்தது தஞ்சை!

தஞ்சாவூர் மஹாராஜா சில்க் ஹவுஸ் மற்றும் ரெடிமேட்ஸ் நிறுவனங்களும் நமது நம்பிக்கை மாத இதழும் இணைந்து நடத்திய ‘இருபெரும்விழா’வில் தஞ்சை நகரமே திரண்டு வந்தது.

மாண்புமிகு மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம்,  மாண்புமிகு மாநில வணிகவரித்துறை அமைச்சர் திரு எஸ்.என்.எம். உபயதுல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

விழாவிற்கு, ‘நமது நம்பிக்கை’ மாத இதழ் ஆசிரியர் ‘கலைமாமணி’ மரபின் மைந்தன் முத்தையா தலைமை வகித்தார். மஹாராஜா நிறுவனங்களின் நிறுவனர் ஷாஜி எம். எஸ். சாகுல்அமீது முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. வை. குமார், வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற செல்வி.ராதிகா, திரு.எல்.ஒப்பிலிபிரசாத்  மற்றும் திரு.விக்னேஷ், பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற திரு.ச.துளசிராஜ், செல்வி.ஜே.பவித்ரா ஆகிய மாணவர்களுக்கு மஹாராஜா வெற்றி விருதுகள் வழங்கப்பட்டன. 100 சதவீத தேர்ச்சி பெற்ற 36 அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் சிறப்புச் செய்யப்பட்டனர்.

விழாவில் சிறப்புரை நிகழ்த்திய மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம், “ஈடுபாட்டுடன் படித்த மாணவர்களும் ஈடுபாட்டுடன் பணி புரிந்த ஆசிரியர்களும் இங்கே கௌரவிக்கப்பட்டுள்ளனர். என்ன பணிபுரிந்தாலும் ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி சாத்தியமாகிறது. ஈடுபாடில்லாமல் பணிபுரிபவர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கினால் அவர்களும் திறம்பட இயங்குவார்கள்.

‘நமது நம்பிக்கை மாத இதழில்’ கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் புத்தகம் படியுங்கள்” என்று ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அரசியலில் எனக்கு வழிகாட்டியாக விளங்கிய அமரர் முரசொலி மாறன் அவர்கள், “உன் சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை புத்தகங்கள் வாங்கச் செலவிடவேண்டும் ” என்று சொல்வார்கள். அதை நான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்.

மஹாராஜா நிறுவனங்களை நிர்வகித்து வரும் திரு. முகமது ரஃபி, திரு. ஆசிஃப் அலி ஆகியோர், தொழில் நடத்திக்கொண்டே பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு நிகராகப் பொதுத் தொண்டையும் செய்து வருகிறார்கள்.

இங்கே பரிசு பெற்ற மாணவர்களை மேடைக்கு பெற்றோருடன் வரச் சொன்னோம். ஏனென்றால், இந்தப் பரிசும் புகைப்படமும் அவர்கள் வீட்டில் இருந்துகொண்டு மேலும் சாதிக்க வேண்டும் என்ற உணர்வை உந்திக்கொண்டே இருக்கும். என்னுடைய மாணவப் பருவத்தில் பல போட்டிகளில் நான் பரிசுகள் பெற்றுள்ளேன்.  முதன் முதலாக  நான் பெற்ற Law of Success என்கிற புத்தகம், இன்னும் என்னிடம் பத்திரமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து சிறப்புரை நிகழ்த்திய தமிழக அரசின் மாண்புமிகு வணிகவரித்துறை அமைச்சர் திரு. எஸ்.என்.எம். உபயதுல்லா, “தற்போது அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துவருகிறது. புதிய உற்சாகத்துடன் இந்தத் தலைமுறை மாணவர்கள் கல்வியில் ஈடுபட்டு வருகிறார்கள். மஹாராஜா நிறுவனம், கல்விக்கும் இலக்கியத்திற்கு காலங்காலமாய்த் தொண்டுகள் புரிந்து வருகிறது. நமது நம்பிக்கை மாத இதழ், சுயமுன்னேற்றத்திற்காக வெளிவருகிற சிறந்த இதழ். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து ‘வெற்றித் திசை ‘ என்கிற தொடர் சொற் பொழிவுகளை நிகழ்த்த இருப்பது தஞ்சை இளைஞர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமையும்.

‘தம்மால்  தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்தின் மன்னுயிர்க்கு எல்லாம் இசை’ என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி மஹாராஜா நிறுவனத்தின் இளைய தலைமுறை இயங்கிவருவதோடு அதே போல் தங்கள் பெற்றோர்களுக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் விருதுவழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார்கள்” என்றார்.

முதன்மைக் கல்வி அலுவலர் திரு. வை. குமார், கல்வி மாவட்டங்களின் வரிசையில் தேர்ச்சி மதிப்பில் பதினாறாவது இடத்தில் இருந்த தஞ்சைக் கல்வி மாவட்டம் ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்றார்.

மரபின் மைந்தன் முத்தையா தனது தலைமையுரையில், “எது வெற்றித்திசை என்று பலருக்கும் கேள்வி எழலாம். கிழக்கா – மேற்கா – வடக்கா – தெற்கா – தென்கிழக்கா – வடமேற்கா என்றெல்லாம் தேடவேண்டியதில்லை. முழு முயற்சியோடும் நம்பிக்கையோடும் மனிதன் எந்தத் திசையில் அடியெடுத்து வைக்கிறானோ, அந்தத் திசைதான் வெற்றித்திசை” என்று குறிப்பிட்டார்.

விழாப் பேருரையாற்றிய பேராசிரியை பர்வீன் சுல்தானா, அள்ளித் தெளித்த சிந்தனை வெளிச்சங்களின் ‘பளீர்’ வாசகங்கள், இங்கே உங்களுக்காக.

பர்வீன் 10

  • ஏசுநாதர் தன் கைகளில் ஒன்றிரண்டு ஆடுகளைக் கைகளில் அணைத்திருக்க, மற்ற ஆடுகள் மேய்வது போல் ஓர் ஓவியம் இருக்கும். ஏசுநாதர் அரவணைத்திருக்கும் ஆடுகள், ஆசீர்வதிக்கப்பட்ட ஆடுகள் அல்ல. மந்தையுடன் சேரத் தெரியாத மந்த ஆடுகள். வழிதவறிய ஆடுகள். வழி தவறிய ஆடுகளை அரவணைத்துக் கொள்வதுதான் ஒரு நல்ல மேய்ப்பனுக்கு அடையாளம். வெற்றி பெறத் தெரியாமல் திணறுகிற குழந்தைகளை அரவணைத்துக் கொள்வதுதான் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அடை யாளம்.
  • என் வெற்றிக்குக் காரணம் என்னுடைய அம்மா. நான் சின்ன வயதில் என்ன பேசினாலும் காது கொடுத்துக் கேட்டு என்னை ஊக்குவிப் பார்கள். குழந்தை முதல் வார்த்தை பேசியதும் “ஆஹா! குழந்தை பேசிருச்சு!” என்று பரவசப்படும் பெற்றோர்கள் குழந்தை வளர்ந்த பிறகு, அது பேசுவதைக் கேட்காமல் “வாயை மூடு” என்று அதட்டுகிறார்கள். குழந்தை நடக்கவும் ஓடவும் தொடங்கும்போது “ஓடிவா! ஓடிவா!” என்னும் பலரும் பிறகு “ஓடாதே” என்று அதட்டுகிறார்கள். குழந்தைகளின் இயல்பான வெளிப்பாட்டைத் தடுத்தால் அது தாழ்வு மனப்பான்மையுடன் வளரும்.
  • கோதுமைச் செடி வளர்கிறபோது அதனருகே நீண்ட காலம் காதுவைத்துக் கேட்டுவிட்டு தன்னுடைய டைரியில், “கோதுமை வளரும்போது சப்தம் செய்வதில்லை” என்று எழுதினார் ஒருவர். அவர்தான் தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரஹாம்பெல். ஒன்றின் ஓசையைக் காதுகொடுத்துக் கேட்கமுடியும் என்ற எண்ணம் அவருடைய அரும்புப் பருவத்திலேயே ஆரம்பமானது. தொலைபேசியை எடுத்ததும் “ஹலோ” என்று சொல்லவும் அவர்தான் பழக்கினார். “ஹலோ” என்பது அவருடைய காதலியின் பெயர்.
  • எல்லோரும் அற்புதமான வாய்ப்பொன்று தங்கள் வழியில் வருமென்று காத்திருக்கிறார்கள். அப்படிக் காத்திருப்பவர்களின் வாழ்வு பெரும்பாலும் காத்திருத்தலிலேயே கழிகிறது. கிடைக்கக்கூடிய சராசரி வாய்ப்புகளையே சரியாகப் பயன்படுத்தினால் அவையே பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு வழி வகுக்கின்றன.
  • நிறைய குழந்தைகள் பலூன் வாங்கின. ஒரு குழந்தையிடம் காசு போதவில்லை. பலூன் விற்றவர் ஒரே பலூன் தவிர மற்றவற்றை விற்று விட்டார். விலைபோகாத கறுப்பு பலூனுடன் அவர் புறப்படத் தயாரானார். தன்னிடமிருந்த காசைப் பெற்றுக் கொண்டு அந்த பலூனைத் தரமுடியுமா என்று கேட்டது குழந்தை. அந்த ஒரு பலூன் கறுப்பு நிறத்தில் இருந்ததால் வேறு யாரும் வாங்கவில்லை என்றார் – குழந்தை கவலையுடன், ‘கறுப்பு பலூன் பறக்காதா’ என்று கேட்டது. “நிறம் முக்கியமில்லை, உள்ளே காற்று இருப்பதுதான் முக்கியம்” என்றார் பலூன்காரர் – இந்த வார்த்தை அந்தக் குழந்தையின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் கறுப்பின விடுதலைக்கு வித்திட்ட மார்ட்டின் லூதர் கிங்.
  • “நான் சொல்வது மற்றவர்களுக்குப் புரிவதேயில்லை” என்று பலர் பிறர்மீது புகார் சொல்வார்கள். நீங்கள் சொல்வது பிறருக்குப் புரியவில்லை என்றால் உங்களிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது. அது அவர்களுடைய பிரச்சினை அல்ல. அதே போல மற்றவர்கள் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை என்றால், அதை அவர்கள் பிரச்சினையாகப் பார்க்காமல் உங்கள் பிரச்சினையாகப் பார்த்தால் தீர்வு நிச்சயம்.
  • கண்ணாடியின் இயல்பு பிரதிபலிப்பது. அதை நீங்கள் சுக்கு நூறாக உடைத்துப் போட்டால்கூட பிரதிபலிப்பது என்கிற அடிப்படைத் தன்மையை அது இழந்துவிடாது. அதுபோல் வாழ்வில் என்ன நேர்ந்தாலும் தன் அடிப்படைத் தன்மை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்.
  • நம்முடைய கல்வி முறையில், பதில் சொல்கிற பிள்ளைகள் புத்திசாலிகள் என்கிற கணக்கு இருக்கிறது. உண்மையில் பார்த்தால், பதில் சொல்கிற பிள்ளைகளைக் காட்டிலும் கேள்வி கேட்கிற பிள்ளைகள் இன்னும் புத்திசாலிகள்.
  • உழைக்காமல் முயற்சிக்காமல் வெற்றி பெறும் எளிய வழி சொல்லித்தரப்படும் என்று முல்லா அறிவித்தார். ஊரே திரண்டது. “எல்லோரும் வந்துவிட்டீர்களா? எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?” என்று கேட்டார் முல்லா. எல்லோரும் வந்துவிட்டார்கள் என்று தலைகளை எண்ணிச் சொன்னார்கள். முல்லா மெல்ல அங்கிருந்து நகரத் தொடங்கினார். “வெற்றி பெறும் வழியைச் சொல்லாமல் எங்கே போகிறாய்” என்று எல்லோரும் வழிமறித்தார்கள். “இந்த ஊரில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று அரசர் கணக்கெடுக்கச் சொன்னார். அந்த வேலை முடிந்தது. புறப்படுகிறேன்” என்றார் முல்லா.
  • உழைப்பு, முயற்சி எல்லாம் இலக்கை நோக்கி மேற்கொள்கிற பயணங்கள். இலக்குக்கு எத்தனை முக்கியத்துவம் உண்டோ அத்தனை முக்கியத்துவம் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *