வெற்றி வாசல் 2009

இந்த மாதம்  மனநலமருத்துவர் ஷாலினி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து …

மனமிருந்தால்….

நமது நம்பிக்கை மாத இதழ் ஆண்டுதோறும் நடத்திவரும் வெற்றி வாசல் எனும் மெகா பயிலரங்கம் 20.12.2009 அன்று கோவை எஸ்.என். ஆர் அரங்கில் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே தமிழகம் முழுவதும் இருந்து நம்பிக்கை யாளர்கள்

600க்கும் அதிகமானோர் உற்சாகத்தோடு பங்கேற்றனர். எழுத்துச் சித்தர் பாலகுமாரன், பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி,  ஊடக நட்சத்திரம் திரு. ரமேஷ் பிரபா,           திரு. கோபிநாத் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்த அந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஆற்றிய உரை உங்களுக்காக…

மனம் என்றால் என்ன? மனதை எப்படி கையாள்வது என்கிற அடிப்படை விஷயத்தைத் தான் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். முதலில் மனம் என்பது எங்கே இருக்கிறது? இதயத்தில் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். அது தவறு. இதயம் என்பது உடலில் ஓர் உறுப்பு மட்டும்தான்.

சினிமாவில் வரக்கூடிய பிரபலமான வரி, “என் மனதிற்குத் தெரிகிறது. என் மூளைக்குத் தெரிவதில்லையே” என்பது. இதைப் பார்க்கிற மக்களுக்கு மனமும் மூளையும் ஒன்றுதான் என்பது புரிவதில்லை. காரணம், பல ஊடகங்கள் இதயம் தான் மனம் என சொன்னதால் அந்த கருத்தில் இருந்து பலராலும்  வெளிவர முடியவில்லை. அப்படியானால் மனமும் மூளையும் ஒன்றா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். ஆம். ஒன்றுதான். உதாரணமாக, மின்சாரம் மூலமாகத்தான் விளக்கு எரிகிறது. ஆனால் நம்மால் மின்சாரத்தைப் பார்க்க முடிவதில்லை. அது போலத்தான் மனமும். நம் மூளையை இயக்குகிற கருவி மனம், ஆனால் நம்மால் பார்க்க இயலாது. மனம் என்கிற இந்த கருவி ஏன் உருவானது? கருவி இருந்தால் காரணம் இருக்க வேண்டும். அப்படியானால் இந்த மனம் என்னும் கருவியால் நமக்கு என்ன பயன்?

இந்தக் கேள்விக்கான பதிலை சொல்லும் முன் மற்றொரு கேள்வியையும் முன் வைக்கிறேன். இந்தக் கருவியை உருவாக்கியது யார்? எங்கிருந்து நீங்களும் இந்தக் கருவியும் வந்தது என்று பார்ப்போம். இந்தக் கேள்விக்கான பதில் நம் அனைவருக்கும் தெரிந்ததே. தாயிடம் 23 குரோமோசோம் தந்தையிடம் 23 குரோமோசோம் என மொத்தம் 46 குரோமோசோம்கள் இணைந்து ஓர் உயிர் உருவாகிறது. ஆக இந்த மரபணுதான் உயிர் என்று சொன்னால் அது நேரடியாக வந்து உயிர் வாழ்ந்துவிட்டு செல்லலாமே. எதற்காக ஒரு செடியாய், பூவாய் மனிதனாய் உருவம் கொண்டு உயிர்வாழ வேண்டும்?. உதாரணமாக, HIV போன்ற கிருமிகள் பிறரை தாக்கி உயிர் வாழ்கின்றன. அந்த கிருமியால் தாக்கப்பட்டவர் உயிர் இழந்தாலும் அந்த கிருமிகள் பல மில்லியனாக இனப்பெருக்கம் செய்து உயிர்வாழ்கின்றன. இந்த கிருமியைப் போல் உருவம் இல்லாமல்கூட வாழலாமே! எதற்காக இந்த உடல்? எதற்காக இந்த மனம்? என்கிற கேள்வி எழும். காரணம், இந்த மரபணுவால் சுயமாக இயங்க முடியாது. சுடும் வெயில்பட்டால்கூட இறந்துவிடும். அது வசிப்பதற்கு பாதுகாப்பான வீட்டை உருவாக்கும். அதுதான் செடி, விலங்கு என்று பல்வேறு உயிரினங்களாக இருக்கின்றன. மரபணு தனித்து இயங்க முடியாது என்பதால் மனித உடலை உருவாக்குகிறது. இந்த உடலால் உணவை இயற்கையிடமிருந்து நேரடியாகப் பெறமுடியாது. அதற்காகத்தான் வயிறு என்கிற கருவி. வயிறு என்கிற கருவியை நிரப்ப கை-கால் போன்ற கருவிகள் தேவை. கை, கால் இயங்க தசைகள் தேவை. தசைகள் இயங்க நரம்பு தேவை. நரம்பு இயங்க மூளை. மூளை இயங்க மனம் என்கிற கருவி தேவை. அனைத்து கருவிகளைக் காட்டிலும் முக்கியமாக விளங்கும் மனதை எப்படி உபயோகிப்பது. மரபணுவால் நேரடியாக வெளி உலகைக் காணமுடியாது. நம் மரபணுவிற்கும் வெளி உலக சூழ்நிலைகளுக்கும் நடுவில் எது சரி எது தவறு என்று ஆராய்ந்து தகவல் சொல்கிற தரகர்தான் இந்த மனம். இது மற்ற உயிரினங்களுக்கும் பொருந்தும். ஆக, நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்.

உதாரணமாக சிங்கம், புலி துவங்கி சாதாரண மரம் செடி உயிரினங்களுக்கும்  முக்கியமான வேலை தன் மரபணுவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது. ஆனால் மனிதனை பொறுத்தவரை இனவிருத்தி மட்டும் வாழ்க்கையாவதில்லை. திருவள்ளுவர், ராஜராஜ சோழன், மகாத்மா காந்தி இவர்களுக்கெல்லாம் எத்தனை குழந்தைகள் என்று நாம் சிந்திப்பதில்லை. ஆனால் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள் இவர்கள். இதைக்கொண்டு பார்த்து இனத்தைப் பெருக்குவது முக்கியமா? இல்லை நல்ல கருத்து களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி வாழ்வது முக்கியமா? எது தரமான வாழ்க்கை? மேல் சொன்ன இரண்டில் எது முக்கியம்?. இரண்டுமே முக்கியம்தான். மக்கள் தொகை குறையும்போது இனப்பெருக்கம் அவசியம். இன்று அது போதுமான அளவில் வளர்ந்துவிட்ட நிலையில் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வதுதான் தரமான வாழ்க்கை!

ஒருவர் திருக்குறளை படிக்கிறார் என்றால் அதை ஏற்றுக்கொள்கிற மரபணுக்கள் அவரிடம் இருப்பதாகப் பொருள். திருக்குறளைப் போன்ற நல்ல கருத்துகள் மூலமாக பல லட்சம் மக்களின் மரபணுக்களை ஊக்குவிக்க முடியும். இது ஒரு வகையான முதலீடு. மற்றொன்று இனப் பெருக்கத்திற்காக மரபணுவை முதலீடு செய்வது. ஆப்ரிக்காவில் ஒரு பெண்ணுக்கு 66 குழந்தைகள் பிறந்தது என்றும், மொரோக்கோவில் ஒரு ராஜாவிற்கு 888 குழந்தைகள் பிறந்தது என்றும் சொல்லப்படுகிறது. இவர்தான் உலகின் அதிகமான குழந்தைகளைப் பெற்றவர் என்று அறிக்கைகள் சொல்கின்றன. ஆனால் நம் கருத்துகளும் எண்ணங்களும் வெற்றியடைகிறபோது நம்மால் பலகோடி மக்களின் மரபணுக்களை மாற்றி அமைக்க முடியும்.

ஒன்று, இரண்டு என மரபணுக்கள் பரவுவது ஒருவகை. பல கோடிகளாக பரவுவது ஒரு வகை. நல்ல கருத்துகளை எப்படி கோடிக் கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பது? அதற்கு நாம் ஆரோக்கியமாக இருத்தல் மிக அவசியம். நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் மனதை எப்படி ஆரோக்கிய மாக வைத்துக்கொள்வது? திருவள்ளுவர் அறிவைப் பற்றி சொல்லும்போது, “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்கிறார். ஒரு கத்தியிருந்தால் அதை பயன்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அதை உபயோகப்படுத்தாவிட்டால் அது பயனற்றுப் போகும். அதுபோலத்தான் அறிவும் மனமும். அது எவ்வளவு கூர்மையானதாக இருந்தாலும் அதை உபயோகப்படுத்துவது அவசியம்.

எங்களிடம் மனதளவில் பிரச்சனை என்று வருகிற யாரிடமும் நாங்கள் ரத்தப் பரிசோதனை மற்ற பிற பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை. நாங்கள் கேட்பது மூன்றே கேள்விகள்தான். முதலில், தனக்கு நன்மை தரக்கூடிய செயல்களை அந்த மனிதர் செய்கிறாரா? இரண்டாவது, தனக்கான மற்றும் தன்னுடைய செயல்களை தானே செய்கிறாரா? இறுதியாக, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்கிறாரா? இந்த மூன்று கேள்விகளில் மூன்றாம் கேள்வி மிக முக்கியமான ஒன்று. மனிதர்களில் பலர் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் மூலமாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தவறி விடுகிறார்கள்.

ஒரு சிலர் எவ்வளவு பெரிய அறிவாளிகளாக இருந்தாலும் குடும்பத்தோடு ஒத்துப் போக மாட்டார்கள். அவர்களுக்கு வெகு விரைவாக கோபம் வந்துவிடும். அப்படியானால் அவர்களிடம் ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்து கொள்வோம். இந்தக் கோபத்தால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

நீங்கள் உங்களையே கேட்க வேண்டிய மூன்று அடிப்படை கேள்விகள். உங்களால் உங்களுக்கே பயன் இருக்கிறதா? உங்கள் குடும்பத்துக்கு பயன் இருக்கிறதா? உங்கள் சமூகத்திற்கு பயன் இருக்கிறதா? இந்த மூன்று கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்று பதில் இருந்தால், நீங்கள் 99 சதவீதம் சரியான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று பொருள். மீதமிருக்கும் 1 சதவீதம், அது மனிதர்களின் மனநிலையைப் பொறுத்து மாறுபடும். 1 சதவீதம் அலட்சியமாக இருப்பது தவறில்லை. ஆனால் இந்த அலட்சியத்தின் அளவு கூடுகிறபோதுதான் உங்கள் மனநிலையில் தவறுள்ளது என்று பொருள். இது எங்கள் அறிவியல் கண்டுபிடித்தது அல்ல, பழங்கால பெருமை வாய்ந்த ரிக் வேதத்திலும் இதுவே சொல்லப்பட்டுள்ளது. “அஸதோம ஸத்கமய ” என்று துவங்கி ‘ஓம் சாந்தி… சாந்தி… சாந்தி’ என்று முடிவடைகிற இந்த மந்திரத்தில் மூன்று முறை ஓம் சாந்தி என்பதன் பொருள் முதலில் உங்களுக்குள் அமைதி நிலவ வேண்டும் பிறகு உங்கள் குடும்பத்தில், அடுத்து சமூகத்தில் என்பதையே உணர்த்துகிறது.

சில சமயங்களில் நாம் செய்கிற செயல் ஒன்றாக இருக்கும். ஆனால் இடமும் சூழ்நிலையும் அதை வேறுபடுத்திக் காட்டும். நாம் செய்கிற செயல் சரியா தவறா என்று தீர்மானிப்பது காலம் தான் மிருகங்கள் தவறுசெய்வதில்லை.  இருப்பினும் இமயமலை போன்ற பகுதிகளில் வாழும் குரங்குகள் அங்கிருக்கும் ஒரு சில மனிதர்களால் போதை பழக்கத்திற்கு அடிமையாய் இருக்கின்றன. அவைகளால் போதை பொருட்கள் இல்லாமல் வாழ முடியவில்லை. மிருகங்களுக்கே இந்த நிலை என்றால் மனிதர்களுக்கு தீய பழக்கங்களில் இருந்து வெளிவருவது கடினம். எனவே, இந்த அறிவு என்கிற கருவியை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஹிட்லர் போன்ற மனிதர்களெல்லாம் உருவாகக் காரணம், அவர்கள் தன் அறிவெனும் கருவியை சரியாகப் பயன்படுத்தாததுதான். நம் எல்லோரிடமும் இருக்கிற மற்றொரு பிரச்சினை ‘automatic obedience’ நம் மதகுரு, ஆசிரியர், அம்மா, அப்பா, தலைவர் என யார் எது சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வது. அது எவ்வளவு முட்டாள்தனமாக இருந்தாலும் அதை நாம் செய்வோம். பிறகு நம் அனைவருக்கும் தனியே மூளையும் அறிவும் இருந்து என்ன பயன்? சுயமாக சிந்தித்து உங்கள் வாழ்க்கைக்கு எது சிறந்ததோ, அதை தேர்வு செய்யவேண்டும்.

வீட்டில் குழந்தைகள் எதிர்த்து கேள்வி கேட்கிறபோது பெற்றோர்களுக்கு கோபம் வரும். ஆனால் அந்த கேள்விகள்தான் உலகத்தின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணம். மொத்தத்தில் மரபணுக்கள் மூலம் நம் கருத்துக்களை பரப்ப நம் மனநிலை நல்ல நிலையில் இருத்தல் அவசியம்.

இன்று பல ஆண்கள் சாதிக்கிறார்கள் சாதிக்கத் துடிக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற தீவிரம் குறைவாக இருக்கும். காரணம், குழந்தைகளை பெற்றெடுப்பது என்ற செயல் மூலமாகவே தான் ஒன்றைப் படைத்து சாதித்துவிட்டோம் என்கிற மனநிறைவே இதற்குக் காரணம். ஆனால் ஆண்களைப் பொறுத்த அளவில் அவர்கள் எதையேனும் சாதிக்க வேண்டும். எதற்காக அவர்கள் சாதிக்கவேண்டும்? மனித இனத்தில் மட்டுமல்லாமல் மற்ற ஜீவராசிகளிலும் ஆண் இனம் கம்பீரமாகவும் பெண் இனம் மிகவும் அமைதியானதாகவும் இருக்கும் ஏன்? ஆண்கள் தன் கம்பீரத்தின் மூலம் பெண்களை வசீகரிக்கவா? அல்லது தன் சாதனைகள் மூலம் பெண்களிடம் அவர்கள் திறமையை நிரூபிக்கவா?

ஆம். பெண்களிடம் தங்களை நிரூபித்துக் கொள்ள இந்த சாதனைகளும், திறமைகளும் தேவைப்படுகிறது. காரணம், பெண்கள் எப்போதும் வெற்றிபெறுகிற மரபணுவைத்தான் ஏற்றுக்கொள்வார்கள். அப்படி ஏற்றுக்கொள்கிற போதுதான் அவர்களது அடுத்த தலைமுறையும் வெற்றிகரமாக அமையும்.

உடனே வெற்றி பெறவேண்டும் என்பதற்காக தீமை விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடக்கூடாது.

உலகத்தின் தலை சிறந்த கண்டுபிடிப்புக்கள் எல்லாம் பெரும்பாலும் ஆண்கள்தான் கண்டு பிடித்திருப்பார்கள். ஆனால் உபயோகப் படுத்துவது பெண்களாகத்தான் இருப்பார்கள். ராணுவப் பணியாளர்களுக்காக கண்டுபிடிக்கப் பட்டது ‘மைக்ரோவேவ் ஓவன்.’ இன்று பெண்கள்                     தான் உபயோகப்படுத்துகிறார்கள். இது எதைக் குறிக்கிறது தெரியுமா. ஒரு புதிய கருத்தை பெண்கள்தான் முதலில் ஏற்றுக்கொள்வார்கள். புத்தர், காந்தி, இயேசு என யாராக இருப்பினும் அவர்கள் வழியை முதலில் பெண்கள்தான் ஏற்றுக் கொள்வார்கள். காரணம், தனக்கு தேவைப்படுகிற சக்தியையும் வல்லமையையும், ஏற்றுக்கொள்கிற தன்மை பெண்களிடமே உண்டு!

எப்பொழுதும் நம் ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்தால்தான் நம் மனமெனும் கருவி சரியாகச் செயல்படுவதாக பொருள். அது சரியாக செயல்படாதபோது சுயபாதுகாப்பு இல்லாமல் போய்விடும். சில சமயங்களில் சரியாக செயல்படாத மனதை நல்லவைகளை பேசி, மாற்றலாம். மருத்துவங்கள் மூலமாக மாற்றலாம் கல்வி, மனச் சலவை மூலமாக சரியாக செயல்படாத மனதையும் மரபணுவையும் நம்மால் மாற்ற முடியும்.

ஆரம்பத்தில் சரியாக இயங்கிய கல்வித் திட்டம் இன்று எதை நோக்கிப் போகிறது என்பதை எண்ண வேண்டும். வேலையை நோக்கியும் பணம் ஈட்டும் வழியை நோக்கி மட்டுமே செல்கிறது. இந்த முறையால் இன்றைய இளைஞர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அறிவென்பது மிகவும் கூர்மையான மற்றும் ஆபத்தான கருவியும் கூட. அதை நம் சுயநலத்துக்காக பயன்படுத்துவது தவறு. இன்றைய தாய்மார்கள் அவர்கள் பிள்ளைகளை படி படி என்று கூறி பிறரை காட்டிலும் நாம் வசதியில் உயர்ந்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு.

முக்கியமான கல்வியை பணம் என்கிற ஓர் இலக்கிற்காக பயன்படுத்தாமல் சமூகத்தின் நன்மைக்காகவும் பயன்படுத்த வேண்டும். இன்று பலர் படித்தவர்களாக, பணம் படைத்தவர்களாக, சாதித்தவர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் அவர்களை மாவீரன் என்று கருதுவார்கள். ஆனால் அவர்கள் எங்களைப் போன்ற மனோத்தத்துவ நிபுணர்களிடம் வந்து சொல்வது என்ன தெரியுமா, எனக்கு நிம்மதியே இல்லை என்பதுதான். நம் அனைத்து தேடல்களையும் தாண்டி நமக்கு தேவைப்படுவது நிம்மதி. ஆக மனம் என்கிற கருவியை சரியாகப் பயன்படுத்தும் வேலையில் நாம் அடையப்போகும் பரிசு நிம்மதி.

5 Responses

  1. CM GURUMHURTHY

    Success is power… Thank you….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *