சேமிக்கலாம் வாங்க

சேமிப்பு / முதலீடு என்பதெல்லாம் மிகுதியான பணம் உடையவர்களுக்கும் நிரந்தர தொழில் படைத்தவர்களுக்கும்தான் சாத்தியம் என்று கருதி மாத வருவாயை நம்பியிருக்கும் நடுத்தர சம்பளக்காரர்கள் தங்களின் சேமிப்புத் திட்டத்தை காலம் கடத்தியோ அல்லது சேமிக்காமலேயே பொருளாதார சிக்கலில் அவதிப்படுகின்றனர். தொழில் லாபமோ மாத வருவாயோ அவை

பணத்தின் அளவீடுகள்தான். அதனைக் கொண்டு ஒருவருக்கு இத்தகைய தேவைகள் இருக்கும். மற்றவர்களுக்கு குறிக்கோள்களே இருக்கக்கூடாது என்று பொருளல்ல. அவரவர் வருவாய்க்கேற்ப தேவைகளும் அதற்கான செலவுகளும் மாறுபடும் . அவ்வாறே சேமிப்பும் முதலீடுகளும். மாத வருமானத்தில் எவ்வாறு சேமித்து வாழ்வின் பல்வேறு காலகட்டத்தின் குறிக்கோள்களை எத்தகைய திட்டங்களின் மூலம் அடையாளம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

திட்டமிடுதல்

சேமிப்பின் முதற்படி, ஒருவரின் தற்போதைய நிலையினை அறிதல். அதாவது வருவாய், செலவுகள், கடன்கள், குறுகிய கால தேவைகள் போன்ற நிதி நிர்வாகம் தொடர்பான தகவல்கள் குறித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் மருத்துவ தேவைகள். முதிர்வு கால நிதி, வீடு கட்டுதல் போன்ற நீண்டகால திட்டங்களை அவற்றின் முக்கியத்துவத்தின்படி வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான கால அவகாசத்தையும் குறிப்பிடுங்கள்.  ஒவ்வொரு தேவைக்குமான பணத்தை இன்றைய மதிப்பில் குறிப்பிட்டு அது தேவைப்படும் கால கட்டத்தில் பண வீக்கம் அடிப்படையில் எவ்வளவு செலவு ஆகும் என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும். அத்தொகையினை அடைய இன்றிலிருந்து மாத/ அரையாண்டு/ ஆண்டு முறையில் சேமிக்க வேண்டும்.

அவ்வாறு சேமிக்க அவரவருக்குப் பொருத்தமான திட்டத்தினை தேர்வு செய்ய வேண்டும்.

இத்துடன் நம் வேலை முடிந்து விடுவதில்லை. நாம் தேர்ந்தெடுத்த திட்டங்கள் நான் நினைத்தபடி செயலாற்றுகின்றனவா? என்று ஆண்டுக்கு ஒரு முறையோ இருமுறையோ தகுந்த ஆவணங்களின் படி உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் திட்டங்களை மறு பரிசீலனை செய்து மாற்றியமைக்கவேண்டும்.

மேற்கூறிய திட்டமிடும் வழிகள் அனைவருக்கும் பொருந்தும். லட்சமோ ஆயிரமோ அவை அளவீடுகள்தான். ஒருவரின் தேவைகளுக்கேற்ப அளவில்தான் மாறுபடுமே தவிர  அடிப்படை ஒன்றுதான். ஒவ்வொருவரும் தன் மாத வருமானத்தில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை சேமிப்பது சிறந்தது.

தேவைகளும் அதன் திட்டமிடுதலும்

மாத வருவாய் கொண்டு திட்டமிடும் போது கீழ்கண்ட வழிமுறைகளை அவரவர்களின் சூழலுக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மாத செலவினை கணித்து சுமாராக 3லிருந்து 6 மாதம் செலவுக்கான பணத்தினை வட்டி எதிர்பாராது எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளக் கூடிய வகையில் வங்கியில் போட்டு வைக்கலாம். இது அவசரகால தேவைகளை சமாளிக்க உதவும். உதாரணமாக, உடல் நலக்கேடு, வேலையிழப்பு போன்ற அசம்பாவித சூழல்களில் கை கொடுக்கும்.

தனிநபர் வருமானத்தை நம்பியிருக்கும் குடும்பமானால் 5 அல்லது 6 வருட வருமானம் மற்றும் கடன் தொகைகளுக்கான மதிப்பிற்கு ஆயுள் காப்பீடு எடுப்பது மிக அவசியம். குறைந்த பிரீமியத்தில் அதிக பலன் தரும் லாபமில்லா திட்டத்தை தேர்வு செய்து கொள்ளவும். குடும்பத் தலைவரின் எதிர்பாராத மறைவினாலோ விபத்து/ உடல் நலக் குறைபாட்டால் முழு செயல் திறனை இழக்க நேர்ந்தால் குடும்ப உறுப்பினர்கள் பாதிப்படைய மாட்டார்கள்.

இன்றைய சூழ்நிலையில் மருத்துவத்திற்கு ஆகும் செலவுகள் ஒரு குடும்பத்தின் நிதி நிலைமையை சோதித்துப் பார்க்கும் அளவிற்கு மிக அதிகமானவை. மொத்த குடும்பத்திற்கான Mediclaim Floater Policy யை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தச் செலவினை தவிர்க்கலாம்.

சேமிப்பின் நோக்கம் வளமான நிதி நிலைதான். எதிர்பாராத மருத்துவ மற்றும் நஷ்டங்களை தவிர்ப்பதுவும் திட்டமிடுதலின் முக்கிய அம்சங்கள்.

சேமிப்பு தேவைகளே அதன் திட்டங்களை தேர்ந்தெடுக்க உதவும். உதாரணமாக குழந்தைகளின் படிப்பு, வீடு கட்டுதல், முதிர்வு கால தேவைகள் போன்ற நீண்ட காலத் திட்டங்கள் நிறைவடைய பொருத்தமான திட்டங்களை தேர்வு செய்யலாம். இது போன்ற குறிக்கோள்களுக்கு நீண்டகால அடிப்படையிலானதால் டடஊ பரஸ்பர நிதி  (Mutual Fund ) போன்ற திட்டங்களும் சற்று கூடுதலான வளர்ச்சிக்கு பங்கு சந்தையிலும் (தக்க ஆலோசனையுடன்) முதலீடு செய்யலாம். எக்காரணத்தை முன்னிட்டும்  இந்தச் சேமிப்பை கரைக்கவோ நிறுத்தவோ கூடாது.மாத மாதம் ஒரு சிறு தொகையினை நிரந்தரமாக முதலீடு செய்வது நல்லது.

குறுகிய கால தேவைகளுக்கு வங்கியின் நிரந்தர வைப்பு, தபால்துறையின் சேமிப்பு திட்டங்கள்(POMIS,NSC,T.D) உதவும். குறைந்த வட்டியானாலும் பாதுகாப்பாக சுலபத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய திட்டங்கள். நம்பகமான நிதி நிறுவனங்கள் நடத்தும் சீட்டுத் திட்டங்களும் நடுத்தர வர்க்கத்தின் அவசரகால தேவைகளுக்கு பெரிதும் கை கொடுக்கின்றன.

தங்கத்தில் முதலீடு என்பது காலங்காலமாய் பின்பற்றப்படும் ஒரு சிறந்த சேமிப்பு முறையாகும். பண வீக்கத்துக்கு ஏற்ற வளர்ச்சி, சுலபமாக பணமாக மாற்ற, சமூக அந்தஸ்து/ அங்கீகாரம் போன்ற காரணங்களால் எல்லோராலும் பெரிதும் விரும்பப்படும் முதலீடு தங்கம். நவீன GOLD ETF திட்டங்கள், மேலும் பல லாபங்கள் கொண்டவை. உதாரணமாக பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக நகை செய்து சேமிப்பதற்குப் பதிலாக GOLD ETF  திட்டத்தில் இன்றைய மதிப்பில் பாண்ட் பத்திரங்களில் சேமிக்கலாம். இதன் மூலம் செய்கூலி, சேதாரம், வரிச் செலவுகள் மிச்சம். பாதுகாப்பானதும் கூட. காலத் தேவைக்கேற்ப பாண்டுகளை அன்றைய சந்தை மதிப்பில் பணமாக்கி அன்றைய டிசைன்களில் மாடல்களில் நகை செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒரு யூனிட் (1 கிராம்) அளவுக்குக்கூட சேமிக்க வசதியுள்ளதால் மாத வருமானக்காரரும் முதலீடு செய்யலாம்.

மண்ணில் போட்ட பணம் பொன் என்பது சான்றோர் மொழிந்த வாக்கு. மாத வருமானத்தில் இருப்போர் பெரும் பகுதியை வாடகையிலேயே செலவிடுகின்றனர். சொந்தமாக ஒரு வீடு வாங்கும் எண்ணம் இருந்தாலும் பொருளாதார சுமை விலைவாசி போன்ற காரணங்களால் அது எட்டாக் கனியாகவே உள்ளது. தங்களின் சேமிப்பின் ஒரு பகுதியை அரசாங்கம் அமைக்கும் வீட்டு வசதி வாரிய மனைகள் மற்றும் வீடுகளில் முதலீடு செய்யலாம். நியாயமான விலை, பாதுகாப்பான  முதலீடு, அடிப்படை வசதிகள் கடன் வாய்ப்புகள் போன்ற பல சாதகமான விஷயங்கள் உள்ளன.

மேற்கூறிய சேமிப்பு திட்டங்கள் மூலம் பல வரிச் சலுகைகளும் உள்ளன. 80சி வரிச்சலுகையின் படி ரூ.1லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு விலக்கு அளிக்கப் படுகின்றன. இதுவே வருமானக்காரர்களுக்கு பெரும் லாபமாகும்.

காலம் தாழ்த்தாமல் உடனே சேமிப்பு திட்டத்தை துவக்குதல், சிறிதாயினும் சேமிப்பை நீண்டகாலம் தொடருதல், இடைக்கால லாப வரவுகளை சேமித்தல், எதிர்கால நலன் கருதி அனாவசிய செலவுகளை குறைத்தல், முதலீட்டின் குறிக்கோள்களுக்கான காரணத்திற்காக மட்டும் திட்டங்களை பயன்படுத்துதல் – இவையே சேமிப்பின் தாரக மந்திரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *