புத்தம் புதிய தொடர்
இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உங்களுக்கு ‘சட்’டென்று தோன்றுவது என்ன? இது ஊக்கம் கொடுக்கும் பொன்மொழி என்பீர்களா? கவித்துவமான வெளிப்பாடு என்பீர்களா? கேட்க நன்றாயிருக்கிறது – காரியத்திற்கு ஆகுமா என்று எண்ணுவீர்களா? “இது உண்மைதான்” என்று மனதுக்குள் சொல்வீர்களா?
மேலே கண்டவற்றில் நீங்கள் எதைச் சொன்னாலும் சரி. அல்லது இதில் இல்லாத ஒன்றைச் சொன்னாலும் சரி. இந்தத் தொடர் வழியாக உங்களுடன் பேச ஏராளமான விஷயங்கள் உள்ளன.
இந்தத் தலைப்பை இன்னொரு முறை படியுங்கள். முடிந்தால் – வாய்விட்டுப் படியுங்கள். மலையை நகர்த்தும் முன்னால் இந்தத் தலைப்பு பற்றிய கேள்விகளை உங்கள் மனதிலிருந்து தற்காலிகமாக நகர்த்தி வையுங்கள்.
இப்போது உங்கள் மனதில் ஒரு மலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை நீங்கள் நகர்த்தப் போகிறீர்கள்.
ஒரு மலையை எப்படியெல்லாம் நகர்த்தலாம் என்பதிலிருந்து கற்பனையைத் தொடங்கலாம். “மலையை நகர்த்துவது” என்பதை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ அதைப் பொறுத்து இப்போது உங்கள் கற்பனை செயல்படத் தொடங்கும்.
ஓர் எல்லையை எட்ட ஒரு மலை உங்களுக்குத் தடையாக இருப்பதால் அந்த மலையை நகர்த்துவது என்று இதைப் புரிந்து கொள்ளலாம். அப்படியானால் உங்கள் முக்கிய நோக்கம் மலையை நகர்த்துவதல்ல. ஓர் எல்லையையோ இலக்கையோ எட்டுவதுதான்.
இலக்கை எட்டுவதற்கு மலையே தடையாக இருந்தால்கூட அதனை நகர்த்தி வைத்துவிட்டு நகர முடியும் என்ற நம்பிக்கைதான் இங்கே உந்து விசையாக உள்ளது.
“மலையை நகர்த்துவதா” என்று மலைத்துப் போகிறதா மனது? நமக்குத் தடையாக இருக்கும் மலைப்பான விஷயத்தைத் தாண்டிச் செல்வது என்று புரிந்து கொள்ளும்போது சில புதிர்கள் விலகுகின்றன.
உதாரணமாக, ஒரு மலையைத் துளைத்துக்கொண்டு பாதைபோட்டு மலை வழியாக வெளியே வரலாம். அல்லது மலைமீது ஏறி மறுபுறம் இறங்கி மலையைத் தாண்டிச் செல்லலாம். மூன்றாவதாக மலையை சுற்றிக்கொண்டு மறுபுறம் போகலாம், இந்த மூன்றில் நீங்கள் எதைச் செய்தாலும், மலையை நகர்த்தியதாகத்தான் பொருள். அதாவது, ஓரிடத்தில் இருந்த மலையைத் தூக்கி வேறிடத்தில் வைக்கவில்லையே தவிர, “மலை ஒரு தடை” என்கிற எண்ணத்தை நகர்த்திவிட்டு, அதைத் தாண்டிக்கொண்டு போகவோ – துளைத்துக் கொண்டு போகவோ சுற்றிக்கொண்டு போகவோ தெரிந்துவிட்டது உங்களுக்கு. இதுவே மலையை நகர்த்தியதற்குச் சமம்தான்.
அதேபோல, பெரிய பிரச்சினையைத் துளைத்துக்கொண்டு வெளிவரவோ, தாண்டி வந்துவிடவோ, அந்தப் பிரச்சினையை முற்றிலும் தவிர்த்துவிட்டு சுற்றிக்கொண்டு வந்துவிடவோ உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் வழியில் இருந்த பிரச்சினையை நகர்த்தி வைத்துவிட்டதாகத்தான் அர்த்தம்.
மலையை உள்ளபடியே அசைத்து நகர்த்த முயன்ற ஒருவரைப்பற்றி நாம் படித்திருக்கிறோம். சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போக இராவணன் முயன்றதாகவும், சிவபெருமான், தன்னுடைய கால் கட்டைவிரலால் அழுத்தியதும் வலி பொறுக்காமல் தவித்ததாகவும் புராணங்களில் படித்திருக்கிறோம்.
இராவணனுடைய நோக்கம் சிவனை வணங்குவது. தன் இதயத்தில் சிவபெருமானை இருத்துவதற்கு பதிலாக, அவர் இருப்பிடத்தை அசைக்க நினைத்ததால் அடியில் அகப்பட்டான் இராவணன். இதற்கு தனிமனிதன் தன்னளவில் காணவேண்டிய அர்த்தமும் உண்டு.
தன் நோக்கத்தைக் குறுக்குவழியில் எட்ட நினைப்பவர்கள், அந்த பிரச்சினையின் அழுத்தத்தில் அகப்பட்டுக்கொண்டு அல்லல் படுவார்கள் என்பதைத்தான் அந்தக் கதை சொல்கிறது.
பிரச்சினைகளை வெற்றி கொள்வது பற்றி, மலையுடன் சம்பந்தப்பட்ட மகத்தான பழமொழி ஒன்றும் தமிழில் உண்டு. “மலைபோல் வந்தது பனிபோல் விலகியது” என்பதுதான் அது.
இந்தப் பழமொழியை சற்றே உற்றுப் பார்த்தால் வாழ்க்கை பற்றிய சுவாரசியமான பரிமாணங்களைப் பார்க்க முடியும்.
“பிரச்சினை என்று நீங்கள் பெரிதாக ஒன்றைக் கற்பனை செய்து கொண்டது உண்மையில் பிரச்சினையே இல்லை” என்பதுதான் இந்தப் பழமொழியின் சாரம்.
கடும்பனிக்காலங்களில் காலை வேளைகளில் அடர்த்தியான பனியை நாம் பார்க்க முடியும். அது பனியென்று தெரியாதவர்கள். இரவுக்குள்ளே நம்வீட்டு வாசலில் மலையே முளைத்துவிட்டதாக நினைத்துவிட வாய்ப்புண்டு. ஆனால், சூரியன் வந்ததும் அந்தப் பனித்திரள் கரையத் தொடங்குகிறது.
ஒரு விஷயத்தைப் பற்றிய தெளிவான புரிதல் நமக்குள் தோன்றாத வரையில், அது தீர்க்க முடியாத பிரச்சினையாக நமக்குத் தோன்றுகிறது.
தெளிவு வந்ததும், வந்த வேகத்தில் செயல்புரியத் தொடங்கும்போது வேகவேகமாய் தீர்வு கிடைக்கிறது. பிரச்சினை மலைபோல் வந்தால், அது மலைதான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது மலைபோல் தோற்றமளிக்கும் பனியாகவும் இருக்கக்கூடும் என்பதை நாம் ஆராய்வதில்லை.
மலையைப் பற்றிய இந்த முது மொழியை நினைக்கும்போது தலையைப் பற்றிய ஒரு முதுமொழியையும் சேர்த்தே சிந்தித்துவிடலாம். “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று” என்றொரு முதுமொழியை எத்தனையோ நூற்றாண்டுகளாக நம்முடைய உதடுகள் உச்சரித்துக் கொண்டிருக்கின்றன.
யுத்த காலங்களில் தலைக்கு விட்ட அம்பு மகுடத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டால், ‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று’ என்பதாகப் பொருள். கர்ணன் நாகபாசத்தை அர்ச்சுனன்மீது ஏவியபோது கண்ணன் தேரைத் தரைக்குள் அழுத்த, அது மகுடத்தைத் தட்டிக்கொண்டு போனது என்பது ஓர் உதாரணம்.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், ‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று’ என்றால் என்னவென்று, சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணிந்ததால் பிழைத்தவர்களைக் கேளுங்கள். அவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு புதிய விளக்கம் தருவார்கள்.
தலைப்பாகை என்பது நம்முடைய தற்காப்பு நடவடிக்கை. எந்த ஒரு மோதலிலும், முதலில் தற்காப்பு செய்துகொள்பவன் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம். முதலில் தாக்குபவன் விரைவிலேயே சோர்ந்துவிடுகிறான். தற்காப்பில் கவனம் செலுத்துபவன் கூடுதல் விழிப்புணர்வுடன் களத்தில் செயல்படுகிறான்.
எனவே, எந்தப் பிரச்சினையும் மலைபோல் தோற்றமளித்தாலும் உண்மையில் அது மலையா பனியா என்று பார்த்தால் பெரும்பாலான பிரச்சினைகள் மலைபோல் தோற்றமளித்தால் அவை பனி போலக் கரைந்துவிடக் கூடியவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரு வேளை எளிதில் கரைந்துவிடாத பிரச்சினையாக இருந்தாலும்கூட அவற்றில் எவற்றை துளைத்துக்கொண்டு வெளிவரலாம், எவற்றை ஏறிக்கொண்டு தாண்டிவிடலாம், எவற்றை சுற்றிக்கொண்டு போய் தவிர்த்து விடலாம் என்கிற தெளிவு இருந்தால் போதும்.
நம்மைத்தடுக்கும் தடைகளைத் தாண்டி வருவதற்குத்தான் மலையை நகர்த்துவது என்று பெயர்.
இதுவரையில் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ மலைகளை நகர்த்தியிருக்கிறோம். இன்றுமுதல் விபரத்தோடும், விழிப்புணர்வோடும் முயற்சி செய்தால் எத்தனையோ மலைகளை நம்மால் இன்னும் திறமையாக நகர்த்த முடியும்.
மலைகளை நகர்த்துவோம் வாருங்கள்.
(தொடரும்)
Brown
In truth, immediately i didn’t understand the essence. But after re-reading all at once became clear.
Shabeer Ahmed
Well begun is half done.The first part itself is really encouraging and motivating.Best wishes.
Karthikeyan
Really a good article.