பணத்தை ருசியுங்கள் – Money Magnet – Law of Attraction

அட்டைப்படக் கட்டுரை

Money Magnet – Law of Attraction

– கிருஷ்ண. வரதராஜன்

சாமான்யர்களும் லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம்.

வறுமையில் வாழாதீர்கள்.

10வது படிக்கிற பையனிடம், ‘என்ன படிக்கிறாய்?’ என்று கேட்டதற்கு ‘டாக்டருக்கு படிக்கிறேன்’ என்றான். அங்குள்ள அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்க்க, ‘டாக்டர் ஆவதற்கான அடிப்படைகளை பத்தாவதில் படிக்கிறேன்’ என்று விளக்கினான்.
இன்று நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், அது அடுத்த நிலை

போவதற்கான படிநிலைதான். படிப்பினைதான் என்பதை உணருங்கள்.

நீங்கள் வறுமையிலேயே இருந்தாலும்கூட வறுமையில் வாழாதீர்கள். மனதளவில் வறுமையை ஒப்புக் கொள்ளாதீர்கள். ஒரு கோடி ரூபாய் வைத்திருப்பவர்கள்கூட பிஸினஸில் பணம் போட்டுவிட்டு கையில் காசில்லாமல் சில நேரங்கள் இருப்பார்கள். உங்களை அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் பணத்தை சம்பாதியுங்கள். பிறகு பணம் பணத்தை சம்பாதித்துக் கொள்ளும். அது சரி, அந்த கொஞ்சம் பணம் எவ்வளவு? அதை எப்படி சம்பாதிப்பது ?

பணத்தை ஈர்க்கும் வழிமுறைகள்

இரும்பை ஈர்க்கும் காந்தத்தை போல பணத்தை ஈர்க்கும் மனிதராக நாம் மாற முடியும்.

எல்லாமே சாத்தியம்தான்.

எதையும் முடியாது என்று நினைக்காதீர்கள். ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால், முடியாது இன்றைக்கு விற்கிற விலையில் இடம் வாங்கி வீடுகட்டுவது என்பது நடக்காத காரியம் பணத்திற்கு எங்கே போவது என்றெல்லாம் யோசனை ஓடும்.

நீங்கள் வசிக்கும் நகரில் இடத்தின் விலை அதிகமாக இருக்கும் என்றால் நகர எல்லையில் அல்லது அருகில் உள்ள கிராம எல்லையில் இரண்டு பிளாட் இடம் வாங்குங்கள். நான்கு வருடத்தில் இடத்தின் விலை நிச்சயம் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்துவிடும். இரண்டையும் விற்று நகரத்தில் வீடு வாங்கலாம். அல்லது ஒன்றை மட்டும் விற்று அந்தப்பணத்தில் வீடு கட்டலாம்.

இப்போது வீடு கட்டுவது சாத்தியம் என்று தோன்றுகிறதா? வீடு கட்டுவது மட்டுமல்ல… எல்லாமே சாத்தியம்தான். எனவே ஆசைகளை வளரவிடுங்கள். வளர வேண்டியதை அவ்வப்போது கத்தரித்து கத்தரித்து போன்சாய் மரங்களாக்கிவிடாதீர்கள்.

செல்வத்தை அள்ளுங்கள். கொடுப்பதற்காக

பல பேர் பணம் சம்பாதிப்பதையே பாவம் என்று நினைக்கிறார்கள். லட்சாதிபதி ஆகுங்கள் என்றால் பயப் படுகிறார்கள்.

அது ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம். அங்கே சிறு மலைக்குன்றாக குவித்து வைக்கப் பட்டிருந்தது சாக்லேட். யார் வேண்டுமானாலும் எவ்வளவு சாக்லேட் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சில குழந்தைகள் ஓடிப்போய் கைக்கொன்றாய் சாக்லேட் எடுத்துக் கொண்டன. ஒரு குழந்தை மட்டும் கை நிறைய அள்ளிக் கொண்டது. பெரும்பாலான குழந்தைகள் தயங்கி தயங்கி அம்மாவைப் பார்த்தபடியே தயங்கி நின்று கொண்டிருந்தது. இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பையன் சாக்லேட் எல்லாவற்றையும் அப்படியே மூட்டையாக கட்டினான். எல்லோரும் பதறினார்கள். என்ன செய்கிறாய்? பையன் சொன்னான், ‘இவர்கள் தயங்கிக்கொண்டே இருப்பார்கள். எடுக்க மாட்டார்கள். இப்படித்தானே மற்றவர்களும் தயங்கிக் கொண்டிருப்பார்கள் என்பதை உணர்ந்து எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்கவும் மாட்டார்கள்’ என்றான்.

உண்மைதான். நாமும்கூட குவிந்து கிடக்கிற செல்வத்தை அள்ளாமல் தயங்கிக் கொண்டே இருக்கிறோம்.

பில்கேட்ஸ் பெயர், உலகிலேயே அதிகம் நன்கொடை கொடுத்ததற்காக கின்னஸில் இடம் பெற்று உள்ளது. உங்கள் பெயரும் நாளை இடம் பெற வேண்டுமென்றால் முதலில் பொருளீட்டுங்கள்.

நகர்வலம் செல்லுங்கள்

நீங்கள் அறிவாளி என்பது உங்களுக்கு தெரியும். அது இந்த உலகத்திற்கு தெரிய வேண்டும் என்றால் தலைநகருக்கு செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

சில சிறுநகரங்களில் மிகச்சிறந்த திறமை யாளர்களை கண்டிருக்கிறேன். தங்கள் திறமைக்கேற்ற வளமையை அவர்கள் பெறாமல் இருப்பதை கண்டு வருந்தியும் இருக்கிறேன். காரணம் சொந்த ஊர் என்ற ஒரே காரணத்திற்காக அங்கேயே தங்கிவிடுகிறார்கள். அவர்கள் திறமைக் கேற்ற வாய்ப்புகளோ வருமானமோ அங்கே கிடைக்காது என்பதை அறியாமலே தங்கள் காலத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

வெளியூரில்தான் வெற்றியிருக்கிறது. தைரியத்தையும் நம்பிக்கையும் தருகிறது. குறைந்த பட்சம் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு வாருங்கள்.

ஒவ்வொரு முறை சென்னையில் உள்ள நிறுவனங்களை பார்க்கும்போதும் எழுச்சி பெறுவீர்கள்.

பணத்தை ருசியுங்கள்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் ஒரு முறை மைசூர்பா வாங்கி சுவைத்துவிட்டால் ஆசை அடங்காது. மைசூர்பாவை நீங்கள் கடிக்க முடியாது. அதுவாக கரையும். நாவில் அது நடனம் புரியும். இன்னொரு மைசூர் பா சாப்பிட வேண்டும் போல இருக்கும். அதன் பிறகு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இருக்கிற திசையை பார்த்தாலே வாய் இனிக்கும்.

உணவு ருசிபோல வெற்றி ருசியும் பண ருசியும் விடாது நம்மை செயல்பட வைக்கும். ஒரு நாள் உங்கள் சக்திக்கு மீறி வாழ்ந்து பாருங்கள். வழக்கமாக ஆட்டோவில் செல்வீர்கள் என்றால் அன்று வாடகைக் காரில் செல்லுங்கள்.

லட்சியம் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி

சரவணன் தன் நண்பர்களுடன் பொருட் காட்சிக்கு சென்றான். பொருட்காட்சியில் விதவிதமான விளையாட்டுக்கள் இருந்தன. எல்லாவற்றிலும் விளையாட ஏதோ ஒரு கட்டணம் இருந்தது.

சரவணன் வளையம் எறியும் விளையாட்டில் மட்டும்தான் விளையாடினான். விதவிதமான பொருட்களை டேபிளில் அடுக்கி வைத்திருப்பார்கள். வளையத்தை எறிய வேண்டும். அது எந்தப் பொருள் மீது விழுகிறதோ அந்த பொருள் பரிசாக கிடைக்கும். போடும் இடத்திற்கு அருகில் டேபிளின் ஆரம்பத்தில் விலை குறைவான பொருட்கள் இருந்தது. தூரத்தில் விலை அதிகம் உள்ள பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. டிவி கூட இருந்தது. ஆனால் எல்லோருக்கும் தெரியும். அது போட முடியாத தூரத்தில் இருக்கிறது என்று.

சரவணன் பொருட்காட்சி நடந்த பத்து நாட்களும் வளையம் எறியும் விளையாட்டு விளையாட வந்தான். தினமும் டிவியை மட்டுமே குறி வைத்து வளையம் எறிவான். அது போய் விழாது. சில நேரங்களில் வேறு ஏதாவது சின்ன பொருட்கள் மீது வளையம் விழும். அது பரிசாக வழங்கப்பட்டாலும் வேண்டாம் என்று வந்து விடுவான். எல்லோரும் அவனை கிண்டல் அடித்தார்கள். பொருட்காட்சி நிறைவடைய போகிற பத்தாவது நாள், சரவணன் கையில் பத்து ரூபாய்க்கு வாங்கிய மூன்று வளையங்களோடு நின்றுகொண்டிருந்தான். வழக்கத்தைவிடவும் நண்பர்கள் அதிகமாக கிண்டல் அடித்தார்கள். சரவணனுக்கோ டிவியை தவிர எதுவும் காதிலோ கண்ணிலோ படவில்லை. கடைக்காரர் கூட அவனை நக்கலாகத்தான் பார்த்தார். ஒவ்வொரு வளையமாக  ஏறிந்தான். மூன்றும் துல்லியமாக டிவியில் போய் விழுந்தது. அத்தனை பேரும் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்க சரவணன், நூறு ரூபாய் செலவில் வாங்கிய டிவியோடு வீட்டிற்கு நடந்தான்.

சின்ன சின்ன வெற்றிகளில் நாம் திருப்தி அடைந்துவிடுவதாலும் சில நேரங்களில் திசை மாறி விடுவதாலும்தான் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய பெரிய வெற்றி இன்னும் கூட சாத்தியமாகவில்லை. சரவணன் வாங்கிய டிவி நமக்கு உணர்த்துவது இதைத்தான்.

குறைந்தபட்சம் நான்கு வருமானம்.

நீங்கள் லட்சாதிபதியாவதை உங்கள் லட்சியமாக கொண்டிருந்தால் உங்களுக்கு குறைந்த பட்சம் நான்கு வழிகளில் வருமானம் வர வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவருக்கான வருமானம் என்பது அவர் பெறும் மாதச்சம்பளமாக மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் ஒரு பேராசிரியர், சம்பளம் மட்டுமே வருமானம் என்று நினைக்காமல் சம்பளத்தோடு சேர்த்து வேறு விதங்களில் சம்பாதிக்கும் விதத்தினை பாருங்கள். அவர் சில நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணி ஆற்றுகிறார். அதற்கென்று சன்மானம் பெறுகிறார். இது அவர் பெறும் இரண்டாவது வருமானம்.

அவர் மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதற்கு கல்விக் கட்டணம் பெறுகிறார். அது அவரின் மூன்றாவது வருமானம். எல்சிடி புரஜக்டர் ஒன்று வாங்கி தன் மாணவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுகிறார். இது அவரின் நான்காவது வருமானம். அத்துடன் மேற்படி வழிகளில் ஈட்டிய வருமானத்தினை உரிய வகையில் சேமிக்கிறார். எனவே நான்கு வழிகள் மட்டுமல்ல, பல்வேறு வழிகளிலும் வருமானத்தினை உயர்த்திக் கொள்ள முடியும். இவ்வழிகளை அவர் அறிந்திருந்ததால் அவரிடம் பணம் குவிந்தது.

பரமபத விளையாட்டில் ஏணிகள் மட்டும் இல்லை. பாம்புகளும் உண்டு.

பொருளாதார ரீதியாக இறங்குமுகம் வந்தால் துவளாதீர்கள். பரமபத விளையாட்டில் பாம்புகள் ஏணிகள் இரண்டும் உண்டு. பாம்பில் வந்து இறங்கும் நிலையில் இன்னும் சில ஏணிகளை சந்திக்கப்போகிறோம் என்று உற்சாகம் கொள்ளுங்கள். இந்த முறை நீங்கள் சந்திக்கப் போவது சின்ன சின்ன ஏணிகளுக்கு பதில் பெரிய ஏணியாகக் கூட இருக்கலாம் இல்லையா ?

வெற்றிக்கு மட்டுமில்லை, தோல்விக்கும் திட்டம் வைத்திருங்கள். அந்தத் திட்டம் அடுத்த வெற்றியை உங்களுக்கு மிகப்பெரியதாக தரும்.

3 Responses

 1. ELANGOVAN

  This Message is very nice. It will be very useful for youngsters. Thank u for your kind message.

 2. v.chandrasekar

  excellent example for saravanan and how to earn money. thank you.

 3. saran

  really super sir. idhu mathiri athigama ezhuthugal.
  Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *