இளமையின் ரகசியம் வெற்றி

வெற்றி கிடைக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் மகிழ்ந்து போகிறோம். நமக்கு நாமே உற்சாகப்படுத்திக்கொள்வோம். உலகமே நம் கைக்குள் இருப்பது உண்மையாகத் தோன்றும். பார்க்கின்ற எல்லாமே நமக்குச் சந்தோஷத்தைத் தரும். வெற்றி அனுபவத்திற்காக எப்போதும் வெற்றி பெறத் தோன்றும். விம்பிள்டன் டென்னிஸில் 9

முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மார்ட்டினா நவரத்திலோவா ஒவ்வொரு வெற்றிக்கு பின்பும் சொல்வார். எனக்கு ஒரு வயது குறைந்திருக்கிறது என்று, அண்மையில் மூன்றாவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ் சொன்னது, “தற்போது இளமையாக உணர்கிறேன்”. புதியதாய்ப் பிறந்த உணர்வு வெற்றி அனுபவத்தில்தான் கிடைக்கும்.

கடவுளிடம் ஒரு மனிதன் கேட்டானாம் “எனக்கு எல்லாம் கொடு, நான் அப்பத்தான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்” என்று. அதற்கு கடவுள் சிரித்தபடி சொன்னாராம், “அட மனுஷா! உனக்கு வாழ்க்கையையே கொடுத்திருக்கிறேன். வாழ்க்கையிலே எல்லாமே இருக்கே” என்றாராம். ஆமாங்க! எல்லாமே இருக்கிற வாழ்க்கையை தொலைத்து விட்டு எங்கோ தேடினால் கிடைக்காது. தேடவேண்டியதும் நாம்தான். தேட வேண்டிய இடமும் நாமேதான்! நமக்குள்ளேதான்!!

உப்பு தண்ணீரில் கரைந்தால் உப்புத் தண்ணீராகிவிடும், சர்க்கரையும் அப்படித்தான். நீரில் கரைந்து நீரின் தன்மையை மாற்றுவதைப் போல, நாம் செய்கின்ற செயலிலே நாமும் ஒன்றுபட்டு முழுகவனத்துடன் செய்தால் அந்த செயலே நாமாகி விடுவோம். இந்தச் செயல் இவரால் செய்யப்பட்டது என்ற நிலைமாறி, இவர்தான் இதை செய்தார் என்கின்ற ஒரு வெற்றி நிலைவரும். வெற்றியாளன் செயலின் மேல் தன்னை நிலை நிறுத்துகிறான்.

டாக்டர் ஜார்ஜ் வாஷிங்டன் என்கின்ற விஞ்ஞானி தன் வெற்றியின் இரகசியம் எனச் சொல்கிறார், “பிரார்த்தனை செய்யும்போது கடவுளின் கருணையைச் சார்ந்தது என்பேன். என் வேலையைச் செய்யும் போது என் செயலைச் சார்ந்தது என ஈடுபடுவேன்”.

பல தடங்கல்களும் இடர்ப்பாடுகளும் தோன்றும் போது சே! என்ன வாழ்க்கை போதும், வெற்றி வந்த வரை போதும் என்று நமக்குள்ளே ஒரு குரல் கேட்கும். இயற்கைதான். நம்பிக்கை கொண்ட நண்பர்களே, மலையளவு கடலில் நீர் இருந்தாலும் கப்பல் அனுமதித்தால்தான் கடல் தண்ணீர் கப்பலுக்குள் செல்ல முடியும். அப்படித்தான் நம்முடைய கவலைகளும், தடங்கல்களும். நம்முடைய அனுமதியின்றி கவலை நம் மனதுக்குள் வந்து உட்கார முடியாது. நிமிர்ந்தவன் மீது அடிகள் விழாது. சில நேரங்களில் வேதனைகள் வந்தாலும், மறைந்திருக்கின்ற வெற்றிக்காக பொறுத்துக் கொள்வோம். மீண்டெழுவோம். வேதனை இல்லாமல் என்றும் வெகுமதியில்லை. வேதனை இல்லாமல் வெகுமதி பெறுவது எப்படி என்றால் விடாமுயற்சி என்பதுதான் பதிலாக இருக்கும்.

“சோம்பேறிகளிடமிருந்தும் கூட பாடம் கற்றுக் கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் ஒரு வேலையை மிகச் சுலபமாக செய்வது எப்படி என்று தெரிந்து வைத்திருப்பார்கள்”. இது உலகின் மிகப்பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் வசனம். அட ஆமாம்! பில்கேட்ஸின் வெற்றியின் இரகசியம் இதுதான் போல. ஈசியாக ஜெயிப்பது எப்படி என்று கற்றுக் கொண்ட ஜாலி மனிதர்.

உன்னால் இதைச் செய்ய முடியாது என்று பிறர் சொல்லிய செயலை செய்து காட்டுவதில் இருக்கிறது இன்பம். தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒன்றின் மீது நமக்குப் பரிச்சயம் இருப்பது சிறந்த வெற்றிக்கு வழி ஆகும். பல இலைகள் சேர்ந்ததுதான் ஒரு முட்டைக்கோஸ். அப்படித்தான் வெற்றியும். பல அனுபவங்களின் தொகுப்புத்தான் வெற்றி. ஏளனச் சிரிப்புக்களைத் தாண்டிக் குதித்தால் வெற்றிப் புன்னகைதான். இதோ ஒரு புன்னகை மனிதர். 1983ல் ஆஸ்திரேலியா சிட்னியில் உலக மாரத்தான் ஓட்டப் போட்டி அறிவிக்கப்படுகிறது. 30 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். ADIDAS, NIKE போன்ற மிகப் பெரிய கம்பெனிகளின் விளம்பர பனியன்கள், ஷுக்கள் அணிந்த போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீளமான மேலங்கி, காலில் சாதாரண இரப்பர் செருப்பு, ஒல்லியான தேகத்துடன் வந்தவர், என் பெயர் கிளிப்யெங் நானும் ஓடுவேன் என்கிறார். அமைப்பாளர் சிரித்துக் கொண்டே இது இளைஞர்களுக்கானது என்கிறார். “இல்லை நான் ஓடுவேன். நான் மாடு மேய்த்துக் கொண்டிருப்பவன். 2000 ஏக்கர் பரப்பளவில் தொடர்ந்து ஓய்வில்லாமல் ஓடிய பழக்கம் உண்டு” என்று திரும்பத் திரும்பச் சொல்லவும், சரி ஓடுங்கள் என்கிறார் அமைப்பாளர். 5 நாட்கள் கொண்ட போட்டி அது. தினமும் 18 மணி நேரம் ஓடலாம். 6 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். முதல் நாள் கிளிப்யெங் பின்னால் வருகிறார். இரண்டாம் நாளும் பின்தங்குகிறார். மூன்றாம் நாள் மற்றவர்கள் ஓய்வு எடுக்கின்றனர். இவர் ஓடிக் கொண்டிருக்கிறார். 4ம் நாள் முந்துகிறார். 5ம் நாள் துவக்கத்தில் இலக்கை எட்டுகிறார். 875 கி.மீ. தூரத்தை குறிக்கப்பட்டிருந்த நேரத்திற்கு முன்பாக சரியாக 9 மணி நேரம் முன்னதாக, (அதாவது 540 நிமிடங்கள்) இலக்கை அடைந்தார். இன்று வரை இந்த ரெக்கார்டை முறியடிக்க முடியவில்லை. ஆட்டையும், மாட்டையும் மேய்த்த கால்கள் பம்பரமாய் மாறின. வெற்றியை தன் வசப்படுத்தியது. பெரியவர் கற்றுத் தந்த பாடம் இதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *