தரமான கல்வி, சிறந்த வியாபாரம், மகிழ்ச்சியான வாழ்க்கை, வண்டி வாகனம், நினைத்ததை அடையும் தன்மை, வெளியுலகில் மரியாதை, நண்பர்களுடன் நல்ல நட்பு, குடும்பத்தில் பாசம், குழந்தைகளுடன் அன்பு, மனைவியுடன் காதல்,
தொழிலாளர்களுடன் உறவு, வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை, இவைகளை எல்லாம் கனவாக கொண்டுதான் வியாபாரத்தைத் துவங்குகிறோம்.
இவைகளை நிச்சயம் அடைவது மிக எளிது. எப்பொழுது என்றால் நிர்வாகத் திறமை (நிதி) வளரும் போது.
கொள்முதல் செய்வது, உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது, சரியான நபர்களை சரியான இடத்தில் அமர்த்தி வேலை கொடுப்பது, கொடுத்த வேலையை சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனிப்பது, நிதி பற்றாக் குறையே வராமல் அதை மிகக் கவனமாக கவனிப்பது, தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது.
எந்த எந்த வேலைக்கு யார் யாரிடம் ஆலோசனை கேட்பது என்பதை தெரிந்து செயல்படுவது. சில நேரங்களில் ஏற்படும் பணப் பற்றாக் குறைக்கோ, ஆர்டர் பற்றாக்குறைக்கோ, எந்த விதமான சங்கடமும் படாமல் நிறுவனத்தை சிறப்பாக நடத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவசரத் தேவையை எவ்வாறு சரி செய்வது, உதவி செய்பவர்களிடத்தில் உண்மையாய் இருக்கும்போதுதான் உதவி உடனடியாகக் கிடைக்கும்.
எக்காரணம் கொண்டும் லாபம் அதிகம் வரும் பொழுதோ பணம் அதிகமாக இருக்கும் பொழுதோ தேவையில்லாத பொருள்களை வாங்குவதையும், தெரியாத தொழிலில் முதலீடு செய்வதையும் தவிர்க்கப் பழக வேண்டும்.
தொழிலுக்கு எப்படி முதலீடுகள் தேவையோ அதே போல் வியாபார சம்பந்தமாக தொடர்பு வைத்துள்ளவர்களுடன் உரையாடும் போதும் தெளிவாக நமது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.
தேவையில்லாத பேச்சுக்களை யாராக இருந்தாலும் தவிர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நமக்கு வருகின்ற வரவை சரியான தேதியில் வசூல் செய்வதும், நாம் கொடுக்க வேண்டியவர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் அவர்கள் கேட்காமலே சென்றடைவதும் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருக்கும்.
நாம் கூறுகின்ற ஒவ்வொரு கருத்துக்களும், நாம் கேட்கின்ற ஒவ்வொரு கேள்விகளும் உறவுகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும் வளரவிடாமல், அதற்கான தீர்வுகளுக்கான வழிகளைக் காண வேண்டும்.
பிரச்சினைகளைக் கண்டு நாம் பயந்தால் அது நம்மை துரத்திக்கொண்டு வரும். அதே பிரச்சினையை எதிர் நோக்கித் தயாராக இருந்தால் பிரச்சினை எளிதில் முடியும். எதிர் நோக்கி வருகின்ற எந்தப் பிரச்சினையையும் எளிதில் முடிக்கும் தைரியமும் நமக்குக் கிடைக்கிறது.
சில நேரங்களில் தவறு நம்முடையதாகக் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் விட்டுக் கொடுக்கப் பழகிவிட்டால் வெற்றி பெறுவது எளிதாகிவிடுகிறது. அதனால்தான், “விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை”.
சிலர் கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு நேரில் பேச அச்சம் கொண்டு சிறியதை பெரிதாக்கிவிடுகிறார்கள். இதற்கெல்லாம் நல்ல மனம் வேண்டுமே தவிர நிறையப் பணம் தேவையில்லை.
நிர்வாகத் திறமை என்பது நிதியும், நீதியும் கலந்த கலவை. எப்படி அதை நிர்வகிக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
இளைஞர்களை வளர வைப்போம்!
இந்தியாவை ஒளிர வைப்போம்!!
Leave a Reply