– தே. சௌந்தரராஜன்
அதிக கவனம்
நாம் நடந்து செல்லும்போது கூட “பார்த்து நிதானமாக செல்” என்பர் பெரியோர். எப்போதெல்லாம் நாம் செயல்களை செய்கிறோமோ, அப்போதெல்லாம் தவறுகள் வர வாய்ப்புகள் அதிகம். (Slow & Steady) மெதுவாக, கவனமாக செல் என உரைக்கப்படுவதுண்டு. வேகமாக செல்லும் போது இன்னும் அதிகக் கவனம் தேவையல்லவா?
வாகனங்கள்
மிகப் பெரிய தேருக்கும்கூட முட்டுக்கட்டை தேவை. பாய்ந்து செல்லும் வாகனங்கள் புரண்டு (Upset) விடாமல் இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. ஒரு வாகனம் எத்தனை வேகமாக பாய்கிறதோ அந்த அளவிற்கு அதன் கட்டுப்பாட்டுத்திறன் (Brake) கூடுதலாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த வாகனங்களில் Anti Brake System என்ற மிகச்சிறந்த பிரேக் அமைக்கப்படுகிறது. எனவே எத்தனை வேகமாக சென்றாலும் அதனை கட்டுப் படுத்த முடிகிறது.
வாகனங்கள் மலைப்பாதையில் வேகமாக ஏறமுடியாது. கியரில்தான் மெதுவாக ஏறமுடியும். மலைப்பாதையில் இறங்கும்போது வாகனங்கள் மிக வேகமாக இறங்கும். வண்டி வேகமாக இறங்குகிறதே என்று (Top Gear) உச்ச கியரில் இறக்கினால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அதல பாதாளத்தில் விழுந்து, நொறுங்கிப் போக நிறைய வாய்ப்புகள் உண்டு.
பண பலம், பதவி பலம், மக்கள் பலம் அதிகமாக பெற்றிருப்போர் தங்கள் செயல்களில் சாமானியர்களைவிட கூடுதல் நிதானமும் கவனமும் கொள்ள வேண்டும். “நான் ஒரு அடி எடுத்து வைக்கும் முன் நான்கு முறை திரும்பிப் பார்ப்பேன்.” என்கிறார் நெப்போலியன். மகாத்மா காந்தி தான் எழுதிய கடிதங்களை மூன்று முறை திருப்பி படிப்பாராம்.
விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலங்களில் மிகச்சிறிய தவறு வந்துவிட்டால் கூட மிகப்பெரிய பண இழப்பும் கால விரயமும் ஏற்படுகிறது.
மகத்தான செயல்களைச் செய்வோருக்கும், மாபெரும் சாதனைகளை நிகழ்த்த இருப்போருக்கும், விரும்புவோருக்கும் தமது ஒவ்வொரு செயலிலும் அலட்சியமற்ற ஆழ்ந்த கவனமும் எச்சரிக்கை உணர்வும் என்றும் தேவை.
பக்க விளைவுகள்
ஒரு செயலுக்கு ஒரு விளைவு உண்டு என்பது போல ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பக்க விளைவும் உண்டு. யானை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆயிரக்கணக்கான எறும்புகள் மடிகின்றன. அது பற்றி யாருக்கும் கவலை இல்லை.
ஆனால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம்மைச் சுற்றி இருப்போருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு வராமல் செயல்பட வேண்டும்.
அரசு செயல்படுத்தும் மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்கள் அநேக வேளைகளில் பல லட்சம் சாமான்யர்களை பாதிப்பதாக அமைந்து விடுகின்றன. மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களின் பல தொழில்களும் இதுபோல அநேக மக்களை பாதிப்பதாக அமைகின்றன.
இது போன்ற பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படாமல் அவர்களை பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமை அவர்களுக்கு உண்டு.
தன் பலத்தை யாவரும் கண்டிட
இளையோர் தந்தையின் தோளுக்கு மேல் வளர்ந்துவிடும் போது அவர்கள் உடலிலே ஒரு தெம்பு, மனதிலே ஒரு கட்டுக்கடங்கா வேகம்.. எங்கே பாயலாம் என்று தோன்றும். “ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது” என்ற கூற்றுக்கிணங்க சிறகடித்து பறக்கத் துடிக்கும் வயதின் வேகம்.
“நரம்புகள் முறுக்கேறி இருக்கும்போது வரம்புகள் மீறிப் போகின்றன. இரத்தம் சூடாய் இருக்கும் போது சித்தம் கல்லாகிப் போகின்றது” என்கிறார் கண்ணதாசன்.
இந்த நேரத்தில் இந்த வேகத்தோடு விவேகத்தையும் சேர்க்க வேண்டும். துள்ளிப் பாயும் நதி போன்ற இவர்களுக்கு போகும் வழி காட்ட ஒரு குரு தேவை. போகும் வழிகளில் ஆழங்களையும் அகலங்களையும் தூரங்களையும் எடுத்துச் செல்ல ஒரு வழிகாட்டி வேண்டும். சந்தரகுப்த மௌரியனுக்கு ஒரு சாணக்கியன் போல, விவேகானந்தருக்கு ஒரு இராமகிருஷ்ணர் போல, ஒரு நல்ல ஆசிரியர் வேண்டும். அப்போது அவர்கள் வேகங்கள் சிகரத்தை எட்டும்.
“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் (நடு இரவில்) குடை பிடிப்பானாம்” என்பது பழமொழி. கராத்தே படித்த புதிதிலும், புதிதாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடலை உரமேற்றிக் கொள்ளும் வேளையிலும் தன் பலத்தை சோதித்து பார்க்க ஆசை வரும். புதிய பணக்காரர்களுக்கும், புதியதாக பதவி, அதிகாரங்களை பெற்றோருக்கும் இது போன்று ஆவல் வரலாம்.
தலையில் கை வைத்து யாவரையும் அழிக்க வரம் பெற்றான் பத்மாஸ்வரன். அந்த வரத்தை ஈசனிடமே சோதிக்க எண்ணினான். அதன் பலனாக தன்னையே அழித்துக் கொண்டான்.
“உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சைப் பாராதிருப்பாயாக” என்று பைபிள் கூறுகிறது. ஆகவே தேவையில்லாமல் நமது பலத்தை உபயோகிக்கவோ, சோதித்துப் பார்க்கவோ நினைப்பது மாபெரும் தவறு.
ஆர்வக் கோளாறு
பாட்டிலை திறந்தால் பொங்கியெழும் சோடாவின் வேகம், மறு நொடி முழுவதும் தணிந்து விடும். இதுபோன்ற ஆரம்ப வேகம் கொண்டோரை “சோடாப்பாட்டில் உற்சாகம்” என்பர்.
பளபளக்கும் சாலையில் பல மைல் வேகத்தில் பாய்ந்து செல்லும் வாகனங்கள் பாலை மணலில் புதைந்து விடுகிறதே! ஆனால் கனத்த டாங்கிகளோ ஆழ்ந்த மணல் பரப்பிலும் அசராமல் செல்கிறது. தாக்குப்பிடிக்க வெறும் வேகம் போதாது. இழுதிறன் (Pulling Power) வேண்டும்.
இளைஞர்கள் இருவர் ஆயுதம் ஏந்தி போர்க்களம் செல்கின்றனர். ஒருவன் சிரித்த முகத்துடன் செல்கிறான். மற்றொருவன் கனத்த முகத்துடன் செல்கிறான். யார் சரியான போராளி? கனத்த முகத்துடன் செல்பவனே சிறந்த போராளி. சிரித்த முகத்துடன் செல்பவன் தான் எதிர் கொள்ள இருக்கும் போராட்டங்களை பற்றிய உணர்வில்லாமல் இருக்கிறான். ஆகவே மலையென தடைகள் வரும்போது தளர்ந்து விடுகிறான்.
மனிதர்கள் யாவருக்கும் தன் உயரம் என்ன? தன் பலம் என்ன? என்பதை கூடுதலோ குறைவோ இல்லாமல் சரியாக நிதானிக்கக் தெரியவேண்டும். தான் செய்ய இருப்பது புதிய தொழிலாக இருக்கலாம். வீடு கட்டுவதாக இருக்கலாம். திரைப்படம் எடுப்பதாக இருக்கலாம். தன் பலம், பலவீனம், வாய்ப்பு, எதிர்ப்பு (Swot) என்ற விஷயங்களை ஆராய வேண்டும்.
தொழிலில் முதலீடு பத்து லட்சமானால் பாதுகாப்புத் தொகையாக 5லட்சம் கையில் வேண்டும். அப்போதுதான் சிக்கல்களில் சிக்காமல் தாவிச் செல்ல முடியும். நமது நாணயமும், நம்பகத்தன்மையும் காப்பாற்றப்படும்.
அமெரிக்காவில் தடுக்கி விழுந்த கொலம்பஸையோ, சென்றேன், கண்டேன் வென்றேன் என்ற ஜுலியஸ் சீசரையோ இதற்கு முன்னுதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இலட்சியங்களுக்காக வாழ்வது வேறு இலட்சங்களுக்காக தொழில் செய்வது வேறு. நம் வாழ்வு சிறக்க நாம் செய்யும் தொழில் நம் நல்வாழ்வை முடக்கக் காரணமாக அமையலாமா? புதிய செயல்களை ஆரம்பிக்குமுன் அந்த தொழிலின் மேல் நமக்கு உள்ள தணியாத ஆர்வம், தாக்குப் பிடிக்கும் தன்மை, அது சம்பந்தப்பட்ட ஞானம் இவைகளை அறிய சற்று நிதானமாக காலம் தாழ்த்தி தொடங்குவது மிக மிக நன்று.
வெற்றி மயக்கம்
நாம் பெறும் வெற்றி நம் தன்னம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. நம் மனத்தை உரப்படுத்துகின்றன. நமது செயல்கள் உறுதிமிக்கதாக விளங்குகின்றன.
நாம் உண்ணும் உணவுகள் உடலுக்கு வலுவேற்றுகின்றன. அதே உணவுகளில் சில தீய தன்மைகளும் உள்ளன. ஆப்பிள் பழத்தில் கூட மிகமிகச் சிறிய அளவில் சயனைடு உள்ளது. என்கிறார்கள். இது போன்ற வேண்டாத விஷங்களை உடல் அவ்வப்போது வெளியேற்றிவிடுகிறது.
வெற்றி நமக்கு தன்னம்பிக்கையை மட்டுமா கொடுக்கிறது. கூடவே ஆணவம் என்ற போதையையும் இலவசமாகத் தருகிறதே. இந்த போதை நம் இதயத்தில் கலந்து விடாதபடி விழிப்போடு அகற்றவேண்டும்.
மாருதி, டாட்டா, ஹுண்டாய் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் கூரிய மதியுடைய பல சிறந்த வல்லுநர்கள் உள்ளனர். இவர்களின் தீவிர ஆராய்ச்சியினால் புதிய வடிவமைப்புடன் கூடிய மிகச்சிறந்த வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் புதிதாக சந்தைப்படுத்தப்படும். இந்த வாகனங்கள் யாவும் மக்கள் மனம் கவர்ந்துவிடுவதில்லை. ஆனால் அதில் ஏதோ சில மகத்தான வெற்றி பெற்று பணத்தை அள்ளிக் குவிக்கின்றன.
பல கோடிகளை கொட்டி உருவாக்கப்படும் மிகப் பிரமாண்டமான திரைப்படங்களில் சில தோல்வி காணலாம். மிகச்சிறிய செலவில் உருவாக்கப்படும் சில படங்கள் பெரும் வெற்றி பெறலாம்.
திரைப்படத்துறையில் படத்தை நன்றாக உருவாக்கியுள்ளார் என்று கூறுவதில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்வதே வழக்கம். வெற்றி நம்மில், நம் உழைப்பில் மட்டும் வருவதல்ல. அதற்கு மேல் அது ஒரு வாய்ப்பு. சில வேளைகளில் நம் உழைப்புகள் சிறப்பாக அமைந்து பெரும் வெற்றியை கொடுக்கும். இருப்பினும் அந்த வெற்றிக்கு நாம்தான் முழுக் காரணம் என சொந்தம் கொண்டாடக் கூடாது. நமது ஒவ்வொரு வெற்றிக்கும் எத்தனையோ பேர் தோள் கொடுத்திருப்பார்கள். அவர்களை நன்றியோடு நினைக்கவேண்டும்.
கடின உழைப்பு உழைப்பவர்களுக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு கிட்டும். ஆனால் எல்லா செயல்களும் வெற்றி பெறும் என்று உறுதி கூறமுடியாது. சில வெற்றிகள் நம்மை உச்சத்துக்கே அழைத்துச் செல்லலாம். ஆனாலும் வெற்றியின் பெருமையில் மிதந்து கொண்டிருக்கக் கூடாது. தோல்வியே நமக்கில்லை என அசந்திருக்கக் கூடாது. வெற்றி பெறுவதைவிட அதை தக்க வைத்துக் கொள்ள அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.
வெற்றி என்ற ஆசனம் ஓய்வாக அமர்ந்திருக்கும் ஆசனமல்ல. குதிரை வீரன் ஓடும் குதிரையில் பாதி அமர்ந்து, பாதி நின்றநிலையில் இருப்பது போன்ற விழிப்பான (Alert) நிலையில் இருக்கவேண்டும்.
ஒன்றைநினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.
-அவ்வையார்
தோல்வியால் துவளாமை
நீங்கள் தோற்றுப்போகும் போது வருத்தமடைவீர்களா? என்ற கேள்விக்கு செஸ் சாம்பியன் விஸ்வநாத் ஆனந்த் பதில் கூறுகிறார் “வருத்தப்படமாட்டேன். ஆனால் நான் என்ன தவறு செய்ததால் இந்த தோல்வியை பெற்றேனோ அதே தவறை மீண்டும் செய்யமாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பேன்”
வெற்றி பெறும் போது?
“எதிராளி என்ன தவறு செய்ததால் தோல்வியுற்றாரோ அதே தவறு என் ஆட்டத்தில் வராது கவனமாக இருப்பேன்”
வெற்றியிலும், தோல்வியிலும் அவரிடம் இருப்பது மகிழ்ச்சியோ, துன்பமோ அல்ல, மனம் சிதறாத ஆழ்ந்த கவனமும், வெற்றி நோக்கமுமே.
ஒரு செங்கல்லை சுவரில் எறிந்தால் அந்த செங்கல் உடைந்து அதே இடத்தில் விழும். ஒரு இரும்புத் துண்டை வீசினால் அது சுவரை காயப்படுத்திவிட்டு அதே இடத்தில் விழும். காற்றடைத்த பந்தை சுவர் மீது வீசினால் பந்தும் காயப்படாது சுவரையும் காயப்படுத்தாது. அதே வேளை பந்து எறிந்த இடத்திற்கே திரும்பும்.
ஊக்கம் என்ற உணர்வுகளை தன்னகத்தே கொண்டவர்கள் இந்த பந்தைப் போல விழுந்தால் துள்ளி எழுவார்கள். தான் காயப்படுவதுமில்லை, யாரையும் காயப்படுத்தி சக்தியை வீணாக்குவதுமில்லை.
வெற்றியில் நிதானமும் தோல்வியில் துவளாத வேகமும் யாவருக்கும் வேண்டும்
Leave a Reply