-ருக்மணி பன்னீர்செல்வம்
கிடைத்திருக்கின்ற காலத்தை நாம் வரவாக்க வேண்டுமே தவிர காலத்தால் நாம் செலவழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இருங்கள்
நீங்கள் வைரக்கல்லாய் ஜொலிக்க வேண்டுமா? இந்தக் கேள்வியை நம்மிடத்தில் யாராவது கேட்டால் ‘இல்லை’, ‘வேண்டாம்’ என்று யாராவது சொல்லுவோமா! எல்லோருக்கும் வைரமாக
ஜொலிக்க வேண்டும் என்ற பேரார்வம் இருக்கிறது. ஆனால் எப்படி என்கின்ற வழிமுறைகள்தான் தெரிவதில்லை. எப்படியென பொதுவாக கேட்டோமென்றால், அதிகமான உழைப்பு வேண்டும், திறமை வேண்டும், ஆற்றல் வேண்டும், என்கின்ற பொதுவான விடைகளே கிடைக்கும். ஆனால் வைரமாக நாம் பிரகாசிக்க வேண்டுமெனில் இவையெல்லாம் இருந்தால் மட்டுமே போதாது நண்பர்களே!
வாருங்கள். நாம் வைரமாக மாறுவது எப்படியெனப் பார்ப்போம். அதற்கும் முன்னால் வைரக்கற்களுக்கு கண்ணைப் பறிக்கின்ற பிரகாசமான ஒளி எப்படி கிடைத்தது என்பதையும் பார்ப்போம்.
வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நீலம், புஷ்பராகம், கோமேதகம், முத்து, பவளம் ஆகிய ஒன்பது நவரத்தினக் கற்களில் மிகவும் ஒளிவீசக் கூடியது வைரமாகும். கண்களையும், மனதையும் ஒருசேரப் பறிக்கும் வைரமாக மாறியுள்ள பொருள் எது என்றால் சாதாரண ‘கரி’தான்.
சாதாரண கரி எப்படி வைரமாக மாறியது?
பூமிக்கடியில் பல்லாண்டுகளாக புதைந்திருக்கும் கரியானது மிக அதிக அழுத்தத்தையும், வெப்பத்தையும் தாங்கி தாங்கி நாளடைவில் வெண்பழுப்பு நிறக் கல்லாக மாறுகிறது. பூமியைத் தோண்டி அதனை வெட்டியெடுத்து தூய்மைப் படுத்தி உரிய வகையில், உரிய அளவில் பட்டை தீட்டிய பின்னரே ஒளிவீசுகின்றது.
சாதாரணமாய் பூமியில் மட்குகின்ற பொருளோடு பொருளாய் இருக்கும் கரி, தானும் மக்கிப் போய்விடாமல் தன்மீது ஏற்பட்ட அதிகமான அழுத்தத்தையும் வெப்பத்தையும் தாங்கிக் கொண்டதால் தன் நிலையிலிருந்து மாறு படுகிறது. அதற்கும் மேல் பட்டை தீட்டியதால் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் ஒளி வெளிப்பட்டு நம்மை கொள்ளை கொள்வதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய மதிப்பை மிக அதிக அளவில் உயர்த்திக் கொள்கிறது. விலை உயர்ந்தும் காணப்படுகின்றது.
நாமும் பல நேரங்களில் நமக்கு ஏற்படும் துன்பங்களில் புதையுண்டு போய்விடுகிறோம். நமக்குள் ஏற்படும், அக அழுத்தங்களாலும் நம்மேல் ஏற்படும் புற அழுத்தங்களாலும் துவண்டு போய்விடுகிறோம். இவற்றால் உண்டாகும் வெப்பத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் சோர்வடைந்துவிடுகிறோம். இந்தச் சோர்வு நம் செயல்பாடுகளை முடக்கிப் போட்டுவிடுகிறது. அதன் விளைவாய் வெற்றியின் தூரம் நீண்டு விடுகிறது. நமக்குள் ஒளி இருப்பதை அறியாமலேயே அதனை வெளிப்படுத்தாமலேயே இருந்துவிடுகிறோம்.
நம்முடைய குடும்பம், தொழில், சார்ந்திருக்கும் சமூகம் ஆகிய சூழலுக்கேற்றவாறு அழுத்தங்கள் மாறுபடலாம். கரியைப் போல் அவற்றை தாங்குகின்ற மனவலிமையை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கரி, அழுத்தத்தை தாங்குவதென்பது எப்படி இயல்பாக நடைபெறுகின்றதோ, அதைப்போல் நம்மீதான அழுத்தங்களையும் மிக இயல்பாக எதிர்கொண்டு தாங்குகின்ற வலிமையைப் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
“Strike the Iron while it is Hot” என்பது ஆங்கிலப் பழமொழி. பழுக்கக் காய்ச்சியிருக்கும்போதே, இரும்பை அடித்தால்தான் அது தகடாக மாறும். நாம் விரும்புகின்ற வடிவத்தில் மாற்றவும் முடியும்.
நல்ல சூழ்நிலையில் நாமிருக்கும்போது, தோன்றாத வழிமுறைகளும் தெளிவுகளும் புதிய சிந்தனைகளும், நாம் துன்பப்படும் சூழ்நிலையில் அதனை இயல்பாக எதிர்கொள்ளும்போதுதான் அதிகமாக தோன்றும். அவற்றை செயல் வடிவத்திற்கு கொண்டுவந்து விட்டோமென்றால் வைரமாய் நாமும் ஜொலிக்கலாம்.
கோயிலிலோ, சர்க்கஸிலோ, சங்கிலியால் பிணைக்கப்பட்டு பாகன் ஆட்டுவிக்கின்ற படியெல்லாம் ஆடுகின்ற யானை தனக்குள் இருக்கும் பலத்தை உணராததாலேயே கன்றாய் இருக்கும் போதிருந்து உருவாக்கப்பட்ட பழக்கத்தினால் தனக்குப் பொருத்தமில்லாத வித்தைகளை காண்பித்துக் கொண்டிருக்கிறது.
தன் கால்களைப் பிணைத்திருக்கின்ற சங்கிலியை ஒரே இழு இழுத்து அறுத்தெறிகின்ற, தன்னுடைய சுதந்திரத்தை மீட்டெடுக்கின்ற பலம் தன்னிடத்திலேயே இருக்கின்றதென்பதை யானை எப்போது உணர்கின்றதென்றால் அழுத்தம் அதிகமாகும் போதுதான். அழுத்தம் அதிகமாக அதிகமாக மதநீர் அதிகமாய் சுரந்து, இத்தனை நாள் அடக்கி வைத்த தன்னுடைய இயலாமையை, கோபத்தை, வெளிப்படுத்த முற்படுகின்றது. கண்ணில் பட்டதையெல்லாம் பாகன் உட்பட தூக்கியெறிந்து துவம்சம் செய்து விடுகின்றது. யோசித்துப் பாருங்கள். இதனால் யானைக்கோ பிறருக்கோ என்ன நன்மை என்று? ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. இது யானையின் இயல்பு. இந்நிலையை நம்மால் மாற்றமுடியுமா என்றால் யானைகளை அப்படிப் பிணைப்பதை தவிர்த்து வனத்தில் அதன் போக்கில் வாழவிட்டு விடுவதுதான் வழியாகும்.
நாமும் அதைப்போல்தான் அழுத்தங்களை சேமித்து வைத்து ஒருநாள் பிறரும், தானும் துன்புறும் வகையில் வெளிப் படுத்துவதைக் காட்டிலும், இயல்பாக எதிர்கொண்டு அதிலிருந்து நம்மை மீட்டெடுத்து இலட்சியங்களை அடைகின்ற வழிநோக்கி இயங்க வேண்டும்.
நம்மில் பலரும் யானையைப் போல் தன்னுடைய பலம் என்னவென்று உணராமலேயே வாழ்வதும். நமக்குள் இருக்கும் பலத்தை, ஆற்றலை அறிந்து கொண்ட பின்னரும் அவற்றைப் பயன்படுத்தாமல் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதும்., அடிமை நிலையில் நம் வாழ்வை நகர்த்திக் கொண்டிருப்பதுமாகவே இருக்கிறோமே! இந்தச் சாதாரண வாழ்க்கை வாழவா நாம் பிறந்தோம்?
கிடைத்திருக்கின்ற காலத்தை நாம் வரவாக்க வேண்டுமே தவிர காலத்தால் நாம் செலவழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருங்கள்.
‘சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது’ என்று, சிலர் எதிர்பாராத இடையூறுகளால் தங்கள் முயற்சிகளில் உண்டாகும் சரிவினைச் சொல்வார்கள். எல்லா முயற்சிகளுமே திட்டமிட்டபடியே நடந்துவிடுவதில்லை. நம்முடைய திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதென்பது பல விஷயங்களை உள்ளடக்கியும், பலரைச் சார்ந்தும் இருப்பதால் சில நேரங்களில் சறுக்கல்கள் ஏற்படலாம். ஆனால் அவற்றையும் ஏற்றுக்கொண்டு இயங்கும் தொடர் இயக்கத்தில்தான் நம்முடைய வெற்றி அடங்கியுள்ளது.
மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்க நாட்டில் அதிபராய் பில் கிளிண்டன் வீற்றிருக்கும்போது தன்னுடைய கணவரான கிளிண்டனுக்கு மிக இக்கட்டான சூழ்நிலை உட்பட எல்லாவகையிலும் துணை நின்றவர் ஹிலாரி ரோத்தம் கிளிண்டன். அமெரிக்க ஏகாதிபத்திய நாட்டின் அதிபர் அரியாசனத்தினை தானும் அடைய வேண்டும் என்கின்ற இலட்சியக் கனவோடு, தன்னுடைய செயல்பாடுகளை வடிவமைத்து இயங்கிவந்தவர். ஜார்ஜ் புஷ்ஷிற்குப் பின் ஹிலாரிதான் அதிபர் ஆவார் என்றும் முதன்முதலில் ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டின் பெண் அதிபர் எனும் சாதனை சரித்திரத்தை படைக்கப்போகிறார் என்கின்ற எதிர்பார்ப்பும் அமெரிக்க தேசம் முழுவதும் பரவியது.
ஆனால் திடீரென்று காட்சி மாறுகிறது. ஜனநாயகக் கட்சியிலேயே ஹிலாரிக்கு போட்டியாளராக பராக் ஒபாமா இறங்குகிறார். முதலில் அதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்ட ஹிலாரி நாட்கள் செல்லச்செல்ல அதிபர் பதவிக்கான வேட்பாளராக தான்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தன்னால் முடிந்தமட்டும் என்பதை விட, தன் சக்திக்கு மீறிய முயற்சிகளைச் செய்து வந்தார்.
எப்படியாவது பராக் ஒபாமாவை களத்தைவிட்டு விலகச் செய்யவேண்டும் என்பதற்காக ஹிலாரி தம்பதியினர் ஒபாமாவை மிக மட்டமாக விமர்சிக்கக்கூடத் தயங்கவில்லை. ஆனால் அதுவே ஹிலாரியின் தோல்விக்கு வித்திட்டுவிட்டது. ஹிலாரியின் கடுமையான பேச்சுக்களை இயல்பாக எடுத்துக்கொண்ட ஒபாமா தன்னுடைய பணியிலேயே கவனமாக இருந்து இறுதியில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். மிகவும் நம்பிக்கையோடு இருந்த ஹிலாரி மனந்தளர்ந்து போய் இனி என்ன செய்வதென்றே புரியாமல் ஓரிரு நாட்கள் அமைதிகாத்தார்.
எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதற்காக சோர்ந்துபோய்விடக் கூடாதென்று தன்னை தேற்றிக்கொண்ட ஹிலாரி, ஒபாமாவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தன்னுடைய கணவரான கிளிண்டனையும் ஒபாமாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வைத்தார். வெற்றிக்கனியைப் பறித்து அதிபரான பராக் ஒபாமா முதலில் ஹிலாரி கிளிண்டன் தம்பதியர்க்கு தன் குடும்பத்தினரோடு நன்றி தெரிவித்தார். அதோடு நின்றுவிடாமல் ஹிலாரிக்கு உரிய பதவியை அளிக்கவும் முன்வந்தார். எத்தனையோ எதிர்ப்புகள் இருந்தபோதிலும், ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதலைப் பெற்று ஹிலாரியை அமெரிக்க நாட்டின் வெளியுறவுச் செயலாளராகவும், தன்னுடைய ஆலோசகராகவும் நியமித்தார்.
தான் அடையவேண்டிய இலக்கு என்று திட்டமிட்ட அதிபர் பதவி கிடைக்கவில்லையே என துவண்டுபோய்விடாமல் அதனை மிக இயல்பாய் எதிர்கொண்டு தொடர்ந்து இயங்கி வந்ததால் இன்றைக்கு அமெரிக்க நாட்டின் மதிப்பு வாய்ந்த வெளியுறவுச் செயலாளராய் உலகம் முழுவதும் உலாவந்து கொண்டிருக்கிறார். இந்தக் காலகட்டங்களில் அரசியல் உலகில் எடுக்கப்படும் பெரும்பாலான முக்கிய முடிவுகள் ஹிலாரியின் பேச்சு மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் அமைந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
நம் கண் எதிரே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நமக்கும் பாடமாகக் கொண்டு நம் செயல்பாடுகளை வடிவமைப்பதும், தேவைப்படும்போது மாற்றியமைப்பதும்தான் நாம் வைரமாய் ஜொலிக்க உதவும்.
Leave a Reply