– மரபின் மைந்தன் முத்தையா
எந்த ஒன்றையும் வெற்றி கொள்ள எளிதான வழி, அதை எதிர் கொள்வதுதான். நம்மைவிட பலமடங்கு பெரிதாகவே ஓர் எதிராளி இருந்தாலும்கூட, எதிர்கொள்ளத் தொடங்கியதுமே ஒருவருக்கொருவர் பொருட்படுத்தத்தக்க சமமான சவாலாக மாறிவிடுவதைப் பார்க்க முடியும்.
நம்மைவிடவும் பெரிதாக ஒன்றைப் பார்த்து வியந்து நிற்பதும், மிரண்டு நிற்பதும் இயல்பான விஷயம். ஆனால் அது உங்களைத் தனிமைப் படுத்திவிடும். ஒரு சின்னக் குன்றின்மீது குழந்தைகள் ஏறுகிறார்களே, எவ்வளவு குதூகலமாக ஏறுகிறார்கள்! என்ன காரணம் தெரியுமா? தாங்கள் ஏறுவது ஒரு மலையின் மேல் என்கிற அச்சமோ மிரட்சியோ அவர்களிடம் இல்லை.
மலையானால் ஏறுவது, குளமானால் குதிப்பது என்று அனிச்சையாகவே அவர்கள் ஆயத்தமாகி விடுகிறார்கள். உற்சாகமாகவும் பயமில்லாமலும் ஒன்றில் ஈடுபடுவது நம்மை மிக நிச்சயமாய் வெற்றியடையச் செய்யும்.
நீங்கள் மலையை நகர்த்துவதென்று முடிவு செய்து விட்டால் அது மலை என்கிற அச்சவுணர்வு அறவே ஆகாது. வாழ்க்கையின் பாதை விசித்திரமானது. உங்களுக்கு சவுகரியமான சமவெளிச்சாலை எதுவரை நீள்கிறது, எங்கே ஒரு மலை எதிர்ப்படுகிறது என்கிற விபரங்களோ வரைபடங்களோ இல்லாமல்தான் அந்தப் பாதை நீண்டு செல்லும். சமவெளிச் சாலையிலும் சிகரங்களிலும் ஒரே மாதிரியான உத்வேகத்தோடு போகிற போதுதான் பாதை பற்றி பயப்படாமல் பயணம் புரிவது சாத்தியமாகிறது.
எடிசனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், சின்னஞ்சிறு வயதில் எடிசனுக்குள் இருந்த எல்லையில்லாத உற்சாகம், அவரை சவால்களை எதிர்கொள்ளும் சிறந்த உத்வேகத்துடன் உருவாக்கியது.
எடிசனுக்கு அப்போது வயது 12. ஓஹியோ ரயில் நிலையத்தில் தினமும் காலை தன் தந்தையுடன் காத்திருக்கும் எடிசனின் கண்களில், ஹுரான் துறைமுகத்துக்குப் போவதற்காக வைக்கப் பட்டிருந்த சரக்குகள் கண்களில் பட்டன.
ரயில் வரும் வரை சிறுவன் எடிசனுக்குப் பொழுது போக வேண்டுமே. அங்கிருந்த பெயிண்ட் டப்பா கண்ணில் பட்டது. டப்பாவை எடுத்து, குனிந்து அமர்ந்து ஒவ்வொரு சரக்கு மூட்டை மீதும் POST HURON என்று வரைந்து முடித்த போது சிறுவனின் தோளைப் பற்றித் தூக்கியது ஒரு கை. ஓஹியோ ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் அவர், தினமும் காலை இதே வேலையை செய்து தருமாறு கேட்டுக் கொண்டு, அதற்காக முப்பது டாலர்கள் சம்பளம் தருவதாகவும் அறிவித்தார்.
பன்னிரண்டு வயதுச் சிறுவனைப் பொறுத்தவரையில் முப்பது டாலர்கள் என்பது மிகப்பெரிய வருமானம். ஆனால் அங்கேயே எடிசன் போதும் என்று நின்றுவிடவில்லை. தினமும் எப்படி வெறுமனே பயணம் செய்வது? பல நாளிதழ்களை ஓடும் ரயிலில் விற்பனை செய்யத் தொடங்கினார்.
ரயிலுக்குள் நடந்து நடந்து விற்பனை செய்வது சுவாரசியமானதாக இருந்தது எடிசனுக்கு. டெட்ராய்ட்டில் இறங்கி, அந்த ரயில் திரும்பும்வரை காத்திருக்க வேண்டி வந்தது. அப்போது மட்டும் சும்மா இருக்க முடியுமா என்ன? அங்கிருந்த யங்மேன் சொசைட்டி என்ற அமைப்பில் உறுப்பினராக சேர்ந்த எடிசன் அங்கிருந்த நூலகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நூல்களை ஆவலுடன் படிக்கத் தொடங்கினார்.
இதற்கு மத்தியில், நாளிதழ் நிறுவனங்களுடன் ஏற்பட்ட அறிமுகம் அவருடைய புத்தியில், புதிய உத்தி ஒன்றையும் உதிக்கச் செய்தது. நாளிதழ் அச்சகங்களில் உபரியாய் இருந்த காகிதம், அச்சு மை ஆகியவற்றைஅவர்களுடைய அனுமதியுடன் எடுத்துக் கொண்டார். அச்சு இயந்திரம் ஒன்றை வாடகைக்குப் பெற்றார். அவ்வச்சகம் அமைக்க இடம் வேண்டுமே?
தன்னை முதன் முதலில் சம்பளத்திற்கு அமர்த்திய ஸ்டேஷன் மாஸ்டரிடம் உதவி கேட்டார் எடிசன். அவர் தினமும் பயணம் செய்த கிராண்ட் டிரங்க் ரயிலின் ஒரு பெட்டியில், யாருக்கும் இடைஞ்சல் இல்லாத ஒரு மூலையில் தன் நான்கடி அகல அச்சகத்தை அமைத்துக் கொண்டார் எடிசன். ஓடும் ரயிலில் இதழ் சுடச்சுட அச்சாயிற்று. அந்த இதழுக்கு அவர் சூட்டிய பெயர் ‘கிராண்ட் டிரங்க் ஜர்னல்’. வார இதழாகிய கிராண்ட் டிரங்க் ஜர்னல் 8 சென்ட்க்கு விற்கப்பட்டது.
ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம்தான் எடிசனை உந்தித்தள்ளியது. “பத்திரிகை நடத்துவதா! அது மிகவும் சிரமமாயிற்றே” என்பது போன்ற யோசனைகள் எடிசனுக்கு எழவேயில்லை. பத்திரிகை போடுகிற பையனின் அடிவயிற்றில் அனலிருந்தால் அவன் பத்திரிகை நடத்துகிற ஆசிரியராய் உயர முடியும் என்று எடிசனை உந்தித் தள்ளியது உற்சாகம் தானே தவிர, வேறொன்றுமில்லை.
அந்த வயலில், சோளக் கதிர்களைக் கொத்தித்தின்ன வந்த பறவைகளின் செவிகளில், நில உரிமையாளரும் அவருடைய மனைவியும் பேசிக் கொண்டது காதுகளில் விழுந்தது.
“யாராவது ஆளைவிட்டு கதிர்களை அறுவடை செய்யச் சொல்லவேண்டும்!! வேறு வயல் பார்க்க வேண்டியதுதான் என்று பறவைகள் பேசிக்கொண்டன. மூத்த பறவை ஒன்று சொன்னது – “கவலைப்படாதீர்கள்! நாம் தொடர்ந்து இங்கேயே சாப்பிடலாம்”.
அடுத்த வாரம், அதே நில உரிமையாளர் அதே விவகாரத்தைப் பேசிக்கொண்டிருந்தார். “அறுவடைக்கு சொல்லிவிட்டிருக்கிறேன். ஆட்கள் வந்துவிடுவார்கள்!! இப்போது பறவைகள் பயப்படவில்லை. இன்னும் ஒரு வாரம் சாப்பிட்டன.
அடுத்த வாரம், அந்த முதிர்ந்த பறவை கவலையோடு சொன்னது. “நண்பர்களே! நாம் வேறு வயல் பார்க்க வேண்டியதுதான்! தூரத்தில் அந்த நில உரிமையாளர் கையில் அரிவாளுடன் கதிர் அறுக்க வந்து கொண்டிருந்தார்.
“யாரோ வந்து செய்வார்கள்” என்றிருந்த வரையில் பறவைகள் பயப்படவில்லை. தாமே முன் வந்தபோதுதான் பயந்தன. தள்ளிப்போடும் வரையில் எந்த சாதாரண வேலையும்கூட மலைபோல் மலைப்பாகத் தெரியும். தாண்டிச் செல்வதென்று முடிவெடுத்துவிட்டால் மலைகூட சாதாரணமானதாகத்தான் தெரியும்.
மலைத்துப் போய் உட்கார்ந்தால் மண்துகளும் பெரியது.
முதலடி எடுத்துவைத்தால் மலை மிகவும் சிறியது.
(மலைகள் நகரும்)
Leave a Reply