மாற்றம் தொடங்கட்டும் உங்களுக்குள்
சுயமுன்னேற்ற பயிற்சியாளர் சஞ்சீவ் பத்மன்
1. உங்கள் பின்புலம் பற்றி?
எனக்கு விமானப்படையில் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேவை. அதனால் PSG கலை அறிவியல்
கல்லூரியில் என்னுடைய B.Sc., பட்டப்படிப்பை முடித்தேன். சில காரணங்களால் என்னால் விமானப் பணியில் சேர முடியவில்லை. அடுத்ததாக நான் பணியாற்றியது விற்பனைத் துறையில். 4 முதல் 5 ஆண்டுகள் கணினி விற்பனைத் துறையில் பணியாற்றினேன்.
2. நீங்கள் பயிற்சியாளராக என்ன காரணம்?
என் பெரும்பாலான ஆண்டுகள் RPG குரூப்ஸின் ICIM என்ற கம்பெனியில்தான் கழிந்தது. அங்கே போட்டிகள் அதிகம். இருப்பினும் சிறப்பாக பணியாற்றினேன். அந்த அனுபவத்தில் நானே புதிய தொழில் துவங்கினேன். 1996 வரை மிகவும் சிறப்பாகச் சென்றது. பின் என் தொழிலில் பெரும் சரிவு ஏற்பட்டது. ஏறத்தாழ 4 கோடி வரையில் நஷ்டம் அடைந்தேன். அந்த தருணத்தில் தான் நான் சிந்தித்தேன். இத்தனை நாள் கற்ற தொழில், அனுபவம், என் திறமைகள் எதுவும் எனக்கு உபயோகப்படவில்லை. நாம் தோல்வியடையும் போதுதான் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நானும் ஏராளமான விமர்சனங்களை எதிர் கொண்டேன். பெரும் பண நெருக்கடிக்கு உள்ளானேன். அதே சமயம் எனக்கு தோன்றிய சிந்தனை இதுதான். “நாம் கஷ்டப்படுகிற போது யாரும் நமக்கு உதவப் போவதில்லை அது கடவுளாக இருந்தாலும் சரி”. அதிர்ஷ்ட வசமாக நான் ஒரு விளம்பரத்தை கண்டேன். DTH Dishnet நிறுவனத்திற்காக “Jim Ron” இந்தியா வருவதாக அந்த விளம்பரம். நான் சென்று அவரை சந்தித்தேன். அவருக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது. அதனால் இந்த கஷ்டங்களில் இருந்து வெளியே வர எனக்கு 12 லட்சம் மதிப்புள்ள பயிற்சியை எனக்கு 70 ஆயிரத்திற்கு வழங்கினார். அதையும் தவணை முறையில் செலுத்த அனுமதித்தார். அந்தப் பயிற்சி என் அனுபவத்தை, அறிவை, எப்படி பயன்படுத்துவது என்று எனக்கு கற்றுத் தந்தது. பல கேள்விகளுக்கு பதிலளித்தது. இதுவே நான் பயிற்சியாளராக ஆரம்பித்த நாட்கள்… பின்பு எனக்கு கிடைத்த இந்த தெளிவையும், அறிவையும் பயன்படுத்தி புதிதாக தொழில் தொடங்கலாமா? இல்லை. பிறருக்கும் இதை எடுத்து கூறி அவர்களுக்கு உதவலாமா என்று எண்ணியபோது நான் தேர்ந்தெடுத்த வழி தான் என்னை ஒரு பயிற்சியாளனாக உருவாக்கியது.
3. எதிர்பாராமல் ஏற்பட்ட சரிவு உங்களுக்கு என்ன சொல்லித் தந்தது?
மனஅளவில் இப்படியொரு சரிவுக்கு நான் தயாராக இல்லை. ஆனால் என்னைச் சுற்றி இருந்தவர்கள் பலதும் பேசத் தயாராக இருந்தனர். “இது நடக்குமென்று தெரியும்’, “இதிலிருந்து நீ மீளமுடியாது”, “நீ பெரும் தவறு செய்துள்ளாய்” என்றெல்லாம் சொன்னார்களே தவிர, இதிலிருந்து நான் வெளியே வர அவர்கள் யாரும் எதுவும் சொல்லவில்லை. எனவே மற்றவர்களின் கருத்தைக் கேட்பதைவிட என் அறிவைப் பயன்படுத்தி மீண்டு வர முடிவு செய்தேன். சரிவு கற்றுத் தந்த முதல் பாடம் இது.
4. உங்களை சுயமுன்னேற்றப் பயிற்சியாளராக செதுக்கியவை, உங்கள் அனுபவங்கள் தானா?
உண்மைதான். யாரோ கொடுத்த ஊக்கத்தாலோ, எங்கோ படித்த புத்தகத்தாலோ நான் இந்தத் துறைக்கு வரவில்லை. வாழ்வில் நான் எதிர்கொண்ட சரிவுகளும், அதிலிருந்து மீண்டு வந்த விதங்களுமே ஊக்கம் குறித்த விதையை என்னில் விதைத்தது. விபத்தில் சிக்கிக் கொண்டவன்தான் அந்த அனுபவத்தை விவரிக்க முடியும். வேடிக்கை பார்த்தவர்கள் அல்ல. இந்த அனுபவத்தையே தகுதியாக்கிக் கொண்டுதான் என் பயணம் தொடங்கியது.
ஜிம் எனக்கு சொன்ன விஷயங்கள் மிகப் பெரியவை. அவற்றை சிறிய பகுதிகளாகப் பிரித்தேன். என் வாழ்வில் நானே பரிசோதித்துப் பார்த்தபிறகு அவற்றில் ஏற்பட்ட நல்ல விளைவுகளால் மனம் மகிழ்ந்தேன். அவற்றைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள வந்தேன்.
5. என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சில உதாரணங்கள்….?
உங்கள் அனைத்து எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஒரு புத்தகத்தில் எழுதி வையுங்கள்.. நீங்கள் என்னவாக நினைக்கிறீர்கள். அதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள். 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பின் நீங்கள் உங்களை எப்படி காண நினைக்கிறீர்கள் என்று எழுதி வையுங்கள். முதலில் படிக்கிறபொழுது ஒரு விளையாட்டுத்தனம் போலத் தோன்றும். ஆனால் 10 அல்லது 15வது முறை படிக்கிறபொழுது அதன் பொருள் விளங்கும். உங்களுடைய இலக்கை நீங்கள் நிர்ணயம் செய்வீர்கள். உங்கள் இலக்கின் மீதான கவனத்தை (Focus) ஒரு போதும் இழக்காதீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் மனதில் இருக்கும் பயத்தை தூக்கிப் போடுங்கள். இவையே பயிற்சியாக மேற்கொள்ளும் பொழுது உங்களில் வித்தியாசத்தை உணர்வீர்கள்.
6. என்ன மாதிரியான மாற்றங்களை இந்தப் பயிற்சிகள் மக்களிடம் ஏற்படுத்தும்?
என்னிடம் பயிற்சி மேற்கொள்பவரிடம் நான் காணும் முதல் மாற்றம் பொறுப்புணர்ச்சி. தன் வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் பொறுப்பேற்பது, பிறரை எவ்வகையிலும் குறை சொல்லாது இருக்கும் பண்பு, இதுபோன்ற நல்ல மாற்றங்களை நான் மக்களிடம் காண்கிறேன்.
உங்கள் 4 அல்லது 5 நாள் பயிலரங்கம் ‘வாழ்க்கை’ முறையையே மாற்றுமா?
நிச்சயமாக. இது ஒரு நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தும். பயிலரங்கில் பங்கேற்றபின் நிச்சயமாக அவரால் பழைய விதமாக இருக்க இயலாது. ஒரு புதிய மாற்றம் உண்டாகும்.
இது எப்படி சாத்தியம்………?
எங்கள் பயிலரங்கில் மூன்று முறைகளை கையாள்கிறோம்.
முதலில், நாங்கள் உங்களை உங்களுக்கே அறிமுகம் செய்வோம். உங்கள் தகுதி என்ன, உங்களால் எத்தனை தூரம் சாதிக்க இயலும் என்பதை உணர வைப்போம். ஒரு புதிய அணுகுமுறையை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்போம். இரண்டாவது, உங்களை 5 அல்லது 10 ஆண்டுகளில் எப்படி பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை உணர வைப்போம். மூன்றாவது,
அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி அதை செயல்படுத்த வேண்டும். இதில் மிக முக்கியமாக நம்முடைய பழக்கங்களை சரியான முறையில் அமைக்க வேண்டும்.
7. இது போன்ற பயிற்சிகளெல்லாம் ஒருநாள், ஒரு மாதம், ஒரு ஆண்டு சாத்தியம்? இதை தொடர நாம், இதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது அவசியமா?
நிச்சயமாக, செய்தே ஆக வேண்டும். வேறு வழியே கிடையாது. வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறவர்கள், செய்யா விட்டால் எங்கிருந்து வரும் வெற்றி? இதை செய்யச் செய்யத்தான் வாழ்வில் வெற்றிகள் சாத்தியம். இதுபோன்ற பயிற்சிகள் வாழ்வில் உயர வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத்தான். இது மாயமந்திரம் அல்ல. இது பயிற்சியில் மட்டுமே சாத்தியம்.
8. தனி மனிதன், ஒரு நிறுவனம், சமுதாயம் இவற்றில் நீங்கள் கொண்டு வர நினைக்கும் மாற்றங்கள் என்ன?
தனிமனிதன்:- இதுவரை சாதித்தது உன் திறமையில் ஒரு பங்குதான். செய்கிற செயல்களில் எது நன்மை, தீமை என்று பிரித்துப் பார்க்கிற பக்குவம் வேண்டும். இந்த மாற்றத்தைத்தான் தனி மனிதனிடம் கொண்டு வர நினைக்கிறேன்.
ஒரு நிறுவனம்:- ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் வேலைகளை கடந்து சிந்தித்து செயல்பட வேண்டும். எண்ணங்களில் தெளிவு ஏற்படுத்த வேண்டும். காரணம் எண்ணங்கள்தான் செயலாகவும் பின்பு நல்ல முடிவுகளையும் கொடுக்கும். எனவே நிறுவனங்களில் நல்ல எண்ணங்களை உருவாக்க வேண்டும்.
சமுதாயம்:- ஒருவர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிற பொழுது அந்த தனிப்பட்ட நபரின் இலக்கும் வெற்றி பெறவேண்டும் என்று நிறுவனம் கருத வேண்டும். அதேபோல் தன்னுடைய இலக்கு மட்டுமன்றி அந்த நிறுவனமும் உயர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
இந்த மாற்றங்களைக் கொண்டு வருவதால் என்ன விளைவுகள் வரும்?
அவனுடைய வாழ்க்கை முறை 1 சதவீதமேனும் மாறி இருக்குமே, ஆனால் இதன் விளைவு, இந்த மாற்றத்தின் விளைவுகள் தனிப்பட்ட நபரை பொறுத்தது. அவர் நன்மையாக கருதும்பட்சத்தில் இந்த மாற்றம் நல்ல விளைவுகளைக் கொடுக்கும்.
9. நேர்மறை எண்ணங்களால் வெற்றி கிடைக்கும் என்பது உண்மைதானா?
நேர்மறை எண்ணங்கள் வெற்றிக்கான ஆரம்பப் புள்ளி என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் வேண்டிய அளவு புரிதலோடும் மனத் தெளிவோடும் விழிப்புணர்வோடும் செயல் படுவோர்களுக்குத்தான் பலன் கிடைக்கும். இதை நான் நேர்மறை அறிதல் (Possitive knowing) என்று சொல்வது வழக்கம். திட்டமிடுதலில் கூட இலக்கை நோக்கி ஒவ்வொரு நாளும் கவனம் குவிப்பது அவசியமாகிறது. ஏனென்றால் எதில் உங்களுக்கு கவனம் குறைகிறதோ அதில் உங்களுக்கு ஆர்வம் குறைகிறது. ஆர்வம் குறைகிற போது செயல்திறனும் குறைகிறது.
10. அப்படியானால் ஒன்றைப் புரிந்து கொள்கிற போதுதான் மாற்றங்கள் தொடங்குகின்றன என்கிறீர்களா?
நிச்சயமாக. ஓர் உதாரணம் சொல்கிறேன். உங்களுக்கு ஒரு நண்பர் இருக்கிறார். இருபது ஆண்டுகளாய் இணை பிரியா நண்பர். அவர் உங்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக மற்ற நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. அந்த ஒரு நண்பருக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் அந்த நண்பரின் ஏமாற்று வேலைகள் உங்களுக்கு வெட்ட வெளிச்சமாகிறது. உடனே அந்த மனிதரைப்பற்றி உங்கள் அத்தனை அபிப்பிராயங்களும் அறவே மாறுகின்றன. இது முழுமையான புரிதலில் ஏற்படுகிற மாற்றம். எல்லா மாற்றங்களும் இப்படித்தான் உருவாகும்.
11. மாற்றத்தை நம்மில் ஏற்படுத்த நம்மை ஊக்கப்படுத்துபவை எவை?
ஒருவனுக்கு எதில் மிக தீவிரமான தேடுதல் இருக்கிறதோ, அதுவே அவனை ஊக்கப்படுத்தும். உதாரணமாக, ஒருவனை மிக வேகமாக ஓடச் சொன்னால், அவன் சிறிது வேகமாக ஓடுவான். அதுவே அவனை ஒரு நாய் துரத்துவதாகச் சொன்னால் அப்பொழுது அவன் வேகம் கூடும். ஆக, பல இக்கட்டான சூழ்நிலைகளில், தேவை வரும் பொழுது நம் திறனைக் கூட்டிக் கொள்கிறோம். எது உங்களுக்கு மிக அவசியம் என்று படுகிறதோ அதுவே உங்களுக்கான உந்து சக்தியாய் உருமாறுகிறது.
12. மாற்றம் என்பது மாறுதலுக்குரியது. இதில் நீங்கள் எவ்வகை மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கிறீர்கள்…..?
இங்கே மாற்றம் என்பது வளர்ச்சியைக் (Progress) குறிக்கிறது. ஒருவன் வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்பது மாற்றம். அதற்கான செயலில் ஈடுபடுவது வளர்ச்சி. நான் அந்த வளர்ச்சியைத்தான் ஏற்படுத்த நினைக்கிறேன். வெறும் பிரார்த்தனை செய்தால் மட்டும் சூழ்நிலை மாறிவிடுமா என்ன? ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சக்தியின் மிகச்சிறிய சதவிகிதத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறான். தன்னை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே தர வேண்டும். தற்போதுள்ள சூழல் மாற வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. சூழ்நிலையை எவ்வாறு மாற்றலாம், என்னென்ன தேவை என்பதை அறிய வேண்டும். பிறரை குறை சொல்வதைக் காட்டிலும் அனைத்திற்கும் பொறுப்பெடுத்துக் கொள்ளும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய தேவையை அறிந்து அதில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
13. உங்களை பொறுத்தவரை மனிதர்கள் சிக்கல்களிலிருந்து விடுபட வழி என்ன?
சிக்கல்களில் தடுமாற்றங்களும் ஏற்பட்டு விட்டால் தன்னைத் தானே நொந்து கொள்ளாமல் ஏதோ ஓர் அற்புதம் நிகழ்ந்து எல்லாம் சரியாகும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் ஆழாமல் முதலடியை எடுத்து வையுங்கள். தீர்வை நோக்கி திடமாக நீங்கள் நகர தொடங்கும் போதே நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கும்.
Leave a Reply