இறங்கினால் வெற்றி

– சோம வள்ளியப்பன்

நண்பர் ஒருவரை வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். முன்பிருந்த அளவு பருமனாக தெரியாததால், கேட்டேன், ‘என்ன  ரவி, எடை குறைந்தது போல தெரிகிறதே!’ மனிதர் சந்தோஷமாகிவிட்டார். தினமும் ஒரு மணி நேரம் நீச்சல்

செய்வதாக சொன்னார். டிசம்பர் மாதம் ஆயிற்றே! குளிருமே! என்றேன். குளிரெல்லாம் தண்ணீரில் குதிக்கும்வரைதான். அதன் பிறகு தெரிவதில்லை என்றார்.

‘குதிக்கும் வரைதான். அதன் பிறகு தெரியாது’. இந்த வாக்கியம் எனக்குள் சில சிந்தனைகளைத் தூண்டிவிட்டது. ஒரு நிகழ்ச்சியில் என் நண்பர் உதயகுமார் பகிர்ந்துகொண்டதும் உடன் நினைவிற்கு வந்தது.

1971. சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்தார் உதயகுமார். அது சமயம் அந்தக் கல்லூரியில், ‘டாக்கர்ஸ் கிளப்’ என்று ஓர் அமைப்பு இருந்தது. மேடைப்பேச்சு பயிற்சிக்காக, குறிப்பிட்ட தினங்களில், மாலை வேளைகளில் மாணவர்கள் கூடுவார்கள். பேச விரும்புகிறவர்கள் அவர்களுடைய பெயர்களை முன்கூட்டியே கொடுத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரை பேச அழைப்பார்கள்.

பேச வேண்டியவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தலைப்புகள் தரப்படும். என்ன தலைப்பில் பேச வேண்டும் என்பதை முன்கூட்டி சொல்லமாட்டார்கள். மேடை ஏறிய பின்புதான் தெரிவிப்பார்கள். தலைப்பு கொடுத்ததிலிருந்து ஒரு நிமிட நேரம் வரை தலைப்பினைப் பற்றி அங்கேயே நின்று யோசிக்கலாம். சரியாக 60 வினாடிகள் முடிந்ததும் பேசத் தொடங்கிவிட வேண்டும். 2 நிமிடங்கள் பேச வேண்டும்.

உதயகுமாருக்கு டாக்கர்ஸ் கிளப் கூட்டத்தில் கலந்துகொள்ளப் பிடிக்கும். தவறாமல் அந்த கூட்டத்திற்குப் போய் விடுவார். இயல்பாகவே சற்று கூச்சசுபாவம் உள்ள அவர், எப்படியெல்லாம் பலரும் திடீர் தலைப்பு களுக்கு உடனடியாக மேடையில் நின்று பலரும் கவனிக்கும்போது சரளமாகப் பேசுகிறார்கள் என்று வியப்பார். ரசிப்பார்.

அப்படி ஒருநாள் அவர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கையில், ‘அடுத்து பேச வருபவர், உதயகுமார்’ என்கிற அறிவிப்பு வந்தது. ‘அட! நம் பெயரில் இன்னொருவர்! யார் அது?’ என்று சுற்றிமுற்றிப் பார்த்திருக்கிறார். எவரும் எழுந்து மேடைக்குப் போகவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பர்கள் அவரை, ‘என்ன பார்க்கிறாய். உன்னைத்தான் கூப்பிடுகிறார்கள். போ உதயா,’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

உதயகுமாருக்கு வியர்த்துவிட்டது. ‘என்னது நானா! நான் பெயர் ஏதும் கொடுக்கவில்லையே!’ என்று சொல்ல, அதற்குள், ‘உதயகுமார், உதய குமார்’ என்று மைக்கில் தொடர்ந்து அழைப்பு வந்தது. வேறுவழியில்லை. எழுந்துபோய்விட்டார்.

தலைப்பு கொடுக்கப்பட்டது. சினிமா என்பதுதான் தலைப்பு. கடினமான தலைப்பல்ல. என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவருடைய கால்கள் பஞ்சுபோல் லேசாகி விட்டன. நிற்க முடியவில்லை. வாய் உலர்ந்து விட்டது. மேசை மீதிருந்த கடிகாரத்தின் வினாடி முள் நகர்கிற சத்தம் அவருக்கு பெருஞ்சத்தமாக கேட்டது. 60 வினாடிகள் முடிந்ததற்கு அடையாளமாக, மேசை மீது ஓங்கி ஒரு தட்டு தட்டினார் நடுவர். பேச ஆரம்பிக்கவேண்டும்.

இரண்டு முழு நிமிடங்கள். என்னவோ பேசினார் உதயகுமார். முடித்தார். ஓடி வந்து தன் நாற்காலியில் அமர்ந்துகொண்டுவிட்டார். அன்றைக்கு அவர் பேசியது படு சுமாரான பேச்சு. அதை பேச்சு என்றுகூட சொல்லமுடியாது. என்னென்னவோ தொடர்பில்லாமல் சொல்லி விட்டு வந்துவிட்டார். வியர்த்து விறுவிறுத்து, கை கால்கள் சில்லிட்டு… வாய்குளறி…

இன்றைக்கு அவர் மிகவும் மதிக்கப்படுகிற ஒரு பயிற்சியாளர். கோர்மைண்ட் என்கிற நிறுவனத்தை நடத்துகிறார். நிறுவனங்களில் உயரதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக மூன்று நாட்கள்கூட தொடர்ந்து பேசுகிறார். பல நாடுகளுக்கும் போய்வருகிறார்.

அவருடன் படித்தவர்கள், ‘அவரா, இவர்?’ என்று ஆச்சரியப்         படுகிறார்கள். இந்த மாற்றம் எப்படி வந்தது? நிகழ்ந்தது எப்படி? நிகழ்த்தியது எது?

அவரே அதைப்பற்றி சொல்லும்போது, யாரோ பெயர் கொடுத்து ‘டாக்கர்ஸ் கிளப்’பில் மாட்டிவிட்ட அந்த கன்னிப்பேச்சுதான் அவருடைய வெற்றிகளுக்குக் காரணம் என்கிறார். அந்த முதல் 60 வினாடிகளும் அதற்கு அடுத்த 120 வினாடிகளும் அவருக்குள் மிகப்பெரிய மாற்றத்தினை உண்டாக்கியிருக்கின்றன. அந்த மூன்று நிமிடங்கள் அவரை புடம் போட்டு விட்டன.

சர்க்கஸ்களில் உயரத்தில் தொங்கும் நூலேணியின் நுனியைப் பிடித்து தலைகீழாக தொங்கியபடி, மற்றதைப் பிடிப்பதற்காக, பிடித்திருப்பதை விடுவார்களே, அதே போன்ற அனுபவம் அது. ஒன்றை விட்டாயிற்று. அடுத்ததைப் பிடிக்கவேண்டும். தவறவிட்டால் அவ்வளவுதான். இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல், இடையில் நகரும் அந்த ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் அது.

தன்னால் சரியாகப் பிடிக்க முடியுமா என்கிற சந்தேகமும், பிடிக்காவிட்டால் என்னாகும் என்கிற பயமும் முதல் முறை செய்பவர்களிடம் இருக்கும். செய்து பார்த்தவர்களுக்கு? அந்த பயம் இருக்காது. அதே சூழ்நிலைதான். ஆனால் பயமில்லை. காரணம், செய்துபார்த்து, இதுதான் இவ்வளவுதான் என்று தெரிந்துகொண்டுவிட்ட  அனுபவம்தான். ஊங்ஹழ் ர்ச் மய்ந்ய்ர்ஜ்ய் என்கிற தெரியாததைப் பற்றிய அச்சம் என்பது பரிச்சயமானதில் இருக்காது.

முதன்முதலாக இருக்கிற பயம் அடுத்தடுத்த முயற்சிகளில் முழுவதும் போகாவிட்டாலும், கண்டிப்பாக குறைந்துவிடும். போகப்போக காணாமல் போய்விடும்.

வெற்றி பெற்ற ஒருவரிடம் கேட்டார்கள், உங்கள் வெற்றிகளுக்கு என்ன காரணம்? அவர் சொன்னார், நான் எடுத்த சரியான முடிவுகள்தான். அப்படியா? உங்களால் எப்படி சரியான முடிவுகள் எடுக்க முடிந்தது என்றதற்கு, அவருடைய அனுபவங்களே காரணம் என்றார். அந்த அனுபவங்கள் எப்படி கிடைத்தன என்று கேட்டதற்கு, தான் எடுத்த தவறான முடிவுகள்தான் அந்த அனுபவத்தினை தந்தது என்றார்.

தவறாகிவிடுவோமா? வெற்றி கிடைக்காமல் போய்விடுமோ! கேலிக்குரியவர் ஆகிவிடுவோமா? இப்படிப்பட்ட பயங்கள்தான் சிலருடைய கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டிருக் கின்றன. இதனால்தான் அவர்கள் முயற்சிப்பதே இல்லை. ஊங்ஹழ் ர்ச் ஊஹண்ப்ன்ழ்ங். தோல்வி வந்துவிடுமோ என்கிற பயம்.

உதயகுமார் தன்னால் பேச முடியாது என்று நினைத்திருக்கிறார். அதனால் ஒதுங்கியே இருந்திருக்கிறார். யாரோ பிடித்து தள்ளிவிட்டு விட்டார்கள். அதனால் முயற்சித்தார். அவர் மூழ்கி விடவில்லை. ஏதோ செய்து வெளியே வந்து விட்டார். அதன் பிறகு அவருக்கு மேடைப்பேச்சு குறித்த பயம் போயேவிட்டது. பேசியே பயிற்சி கொடுக்கும் வெற்றியாளர் ஆகிவிட்டார்.

தண்ணீருக்குள் குதிக்காத வரைதான் குளிர். குதித்தபின் இல்லை. குதித்தால்தான் அது தெரியும். குதிப்பதற்கு முன்னும் பின்னும் இருக்கிற அந்த சில நொடிகள்தான் பிரச்சனை. அவற்றைத் தீண்ட நமக்கு வேண்டும், தைரியம். அது போதும்.

எல்லோராலும் வரமுடியும். எல்லோராலும் செய்ய முடியும். தன்னை நம்பவேண்டும். பரீட்சித்துப் பார்க்க வேண்டும். தயக்கத்தை தள்ள வேண்டும்.

வெல்லவேண்டியது வேறெதையும் இல்லை. நமது பயத்தினை, தயக்கத்தினைத்தான். அதை வென்றுவிட்டால் மற்ற எல்லாவற்றையும் வெல்லலாம். பயங்களை விட்டுவிட்டு செயலில் இறங்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *