– கிருஷ்ண. வரதராஜன்
தினமும் எதையாவது மறந்துவிட்டு வந்து மனைவியிடம் திட்டு வாங்கும் ஒருவர், மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியதும், மனைவியை அழைத்து பெருமையுடன் சொன்னார், ‘எனக்கு மறதின்னு சொல்லி காண்பிப்பியே. தோ பார் இன்னிக்கு காலையில வீட்டுலேயிருந்து எடுத்துக்கிட்டு போன குடையை பத்திரமா
திருப்பிக் கொண்டாந்திருக்கேன்… பார்’. மனைவி பல்லைக் கடித்தபடி கோபத்தோடு கத்தினாள், ‘நீங்க காலையில ஆபிஸ் போகும்போது குடையே எடுத்துக்கிட்டு போகல’. இது எல்லா வீடுகளிலும் நடக்கிற ஒன்றுதான்.
‘மறக்காம வாங்கிட்டு வந்திடுங்க’, என்று எதையாவது காலையில் சொல்லி அனுப்பினால் மாலையில் அதை மறக்காமல் மறந்துவிட்டு வரும் கணவர்கள் இங்கே அதிகம்.
கல்வியில் மட்டுமல்ல, வாழ்வில் எல்லா நிலைகளிலும் நினைவாற்றல் இன்றி வெற்றி இல்லை. மருத்துவருக்கு அவர் அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில் செய்முறை நினைவிற்கு வரவில்லை என்றால் என்ன ஆகும்? வழக்கறிஞர் வாதாடிக் கொண்டிருக்கும்போது முக்கியமான சட்டப் பிரிவு நினைவிற்கு வரவில்லை என்றால் என்ன ஆகும்? மறதி அவர்களை மட்டுமல்ல. அவர்களை சார்ந்தவர்களையும் அல்லவா பாதிக்கும்?
மறதி, எல்லோரையும் பாதிக்கும் ஒன்று என்றாலும் மாணவர்களை சற்று அதிகம் பாதிக்கிறது. ஏனெனில் கல்வியே நினைவாற்றல்தான்.
“நல்லாதான் படிச்சுட்டு போனேன். ஆனா எக்ஸாம் ஹால்ல எல்லாம் மறந்து போச்சு..’
‘என்ன படிச்சாலும் மனசில பதிய மாட்டேங்குது. எனக்கு ஞாபகத்திலே இல்ல….’ என்று கண் கலங்கி சொல்லும் குழந்தைகளை நான் சந்தித்திருக்கிறேன்.
நினைவாற்றல் பயிற்சி வகுப்புகளில் எல்லா மாணவர்களும் பெற்றோர்களும் திரும்பத் திரும்ப கேட்கின்ற கேள்வி, ‘ஞாபக மறதி எதனால் வருகிறது?’ அதற்கான பதிலை இங்கே பார்ப்போம். அதோடு குழந்தைகளின் மறதியை விரட்டுகிற வழிகளையும் தொடர்ந்து பார்ப்போம்.
‘பேனாவை எங்கே வைத்தோம்’ என்று பள்ளிக்கு கிளம்புகிற நேரத்தில் வீடு முழுக்க தேடித் திரியும் போது, பள்ளிக்கு வந்து பையை திறந்ததும் அன்றைய வகுப்புக்கு தேவையான புத்தகங்களை கொண்டு வரவில்லை என்பது ஞாபகத்திற்கு வரும்போது, செய்யவேண்டிய ஹோம் ஒர்க்கை மறந்துவிட்டு ஆசிரியரிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளும்போது… எக்ஸாம் ஹாலில் நன்றாக படித்த பாடம் சட்டென்று நினைவிற்கு வராத போது… என பல சந்தர்ப்பங்களில்… ‘ச்சே! இவ்வளவு மறதியாக இருக்கிறோமே’ என்று மாணவர்கள் தங்கள் மீது எரிச்சல் பட்டுக் கொள்வதுண்டு.
அப்படிப்பட்ட நேரங்களில் எரிச்சல்படுவதற்கு பதில், ஏன் மறக்கிறது? எப்படி நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது என்று பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களை யோசிக்க வையுங்கள்.
இதைப் புரிந்து கொண்டு விட்டால் உற்சாகமாகச் சொல்லலாம். மறதிக்கு பை பை.
மறதி எதனால்?
சிலருக்கு மட்டும் ஞாபகசக்தி நன்றாக இருக்கிறதே? சிலருக்கு மறதி அதிகமாக இருக்கிறதே? ஏன் இந்த வித்தியாசம்? – பலருக்கும் இந்தக் கேள்வி உண்டு.
இயற்கையில், நினைவாற்றல் திறன் அனைவருக்கும் சமமாகவே உள்ளது. ஆனால், அதை முறையாகப் பயன்படுத்தாததால்தான் இந்த வித்தியாசம்.
மறதி ஒரு வியாதியா? என்று பயத்தோடு கேட்பவர்களும் உண்டு.
சில வியாதிகளினால் மறதி வருவதுண்டு என்றாலும் மறதி ஒரு வியாதியல்ல.
இப்படி மறதி பற்றி புலம்புபவர்களுக்காக சொல்கிறேன், மறதி என்பதே கிடையாது. ஏனெனில் ‘நினைவில் பதிந்த எதுவும் அழியாது’ என்கிறார்கள், நினைவாற்றல் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்.
ஓர் உதாரணம் பார்ப்போமே.
உங்கள் சட்டையில் 50 ரூபாய் பணத்துடன் கடைக்குச் செல்கிறீர்கள். கடைக்குச் சென்ற பிறகு சட்டையில் வைத்திருந்த பணம் காணாமல் போய்விடுமா என்ன? வைத்திருந்தால் கட்டாயம் இருக்கும், இல்லையா?
பையில் வைக்காமலோ அல்லது ஓட்டைப்பையில் வைத்துவிட்டோ காணவில்லை என்று தேடினால் எப்படி?
அது போல உங்கள் மூளையில் உள்ள நினைவகத்திலிருந்து ஏதாவது ஒரு தகவல் உங்களுக்குத் தேவையான நேரத்திற்கு நினைவிற்கு வர வேண்டுமென்றால், முதலில் அந்தத் தகவலை நீங்கள் சரியான முறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மறதிக்கு முக்கிய காரணம் நினைவாற்றல் குறைவாக இருப்பது அல்ல. தகவல்களைப் பதிந்து வைக்கும் திறன் குறைவாக இருப்பதுதான்.
இந்த இடத்தில் எல்லா பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டியது, உங்கள் குழந்தைகளின் மதிப்பெண் குறைவிற்கு நிச்சயம் நினைவாற்றல் குறைபாடு காரணம் கிடையாது.
உண்மையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு நினைவாற்றலில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் சொல்வதை நீங்களே உங்கள் குழந்தையிடம் சோதித்துப் பாருங்களேன்.
கடந்த வருடம் அவர்கள் படித்த மனப்பாட திருக்குறளில் இருந்து ஏதாவது சில திருக்குறள்களை சொல்லச் சொல்லுங்கள். பெரும்பாலும் பதில் தெரியாமல் விழிப்பார்கள். இப்பொழுது ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தில் உள்ள பாடல்களை சொல்லச் சொல்லுங்கள். அல்லது 5 வருடத்தில் வந்த ரஜினி படங்களை வரிசையாகச் சொல்லச் சொல்லுங்கள். விரைவாக பதில்கள் வரும்.
படம் மனதில் பதிகிற அளவிற்கு பாடம் ஏன் மனதில் பதிவதில்லை?
மனதில் பதியாததற்கு பல காரணங்கள் இருக்கிறது என்றாலும் முக்கியமானவைகள்.
1) ஆர்வமின்மை 2) கவனமின்மை 3) ஒழுங்கின்மை 4) பதட்டம்.
ஆர்வமின்மை:
பையனுக்கு படிப்பே வரல. ரொம்ப மறதி என்று கவுன்சிலிங்கிற்கு அழைத்துவரப்பட்ட பையன்களிடம் பேசிப்பார்த்து வியந்திருக்கிறேன். கிரிக்கெட்டில், எந்த மேட்சில், எந்த பிளேயருடைய ஸ்கோர் கேட்டாலும் சொல்வார்கள். அல்லது சினிமா பற்றிய புள்ளி விபரங்களை துல்லியமாக தருவார்கள்.
இன்னும் சிலர் ஒரு சில பாடத்தில் சட்டென்று பதில் தருவார்கள். அப்படியென்றால் அந்தப் பாடத்தில் மட்டும் நினைவாற்றல் உண்டு, மற்றதில் இல்லை என்றா அர்த்தம்?
இப்பொழுது புரிகிறதா, பிரச்சனை நினைவாற்றலில் இல்லை. ஆர்வத்தில்தான் என்று.
எதில் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும். நினைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை.
கவனமின்மை:
அடுத்த காரணத்தை விளக்க இன்னும் ஓர் எளிய சோதனை. உங்கள் குழந்தையிடம் அவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள அட்டைப்படத்தை வரையச் சொல்லுங்கள். அட்டையில் உள்ள படங்களுக்கு என்னென்ன வண்ணம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதையும் குறிக்கச் சொல்லுங்கள். பிறகு ஒப்பிட்டுப் பாருங்கள். பெரும்பாலான விஷயங்களை தவறாக குறித்திருப்பார்கள். அல்லது குறிக்காமல் விட்டிருப்பார்கள். பாடப் புத்தகங்களை விடுங்கள், அவர்கள் விரும்பி பார்க்கும் டிவி சேனலின் லோகோவையும் வரையச் சொல்லுங்கள்.
தினமும் பார்க்கிற புத்தகம்தான் அல்லது தினமும் பார்க்கிற டிவி தான். இருந்தாலும் சரியாக எழுத முடியாததற்கு காரணம் நாம் பார்க்கிறோமே தவிர கவனிப்பதில்லை. நினைவாற்றலின் அடிப்படையே இந்த கவனிக்கும் திறன்தான்.
ஒழுங்கின்மை:
‘சையின்ஸ் புக் எங்க கிடக்குன்னு தெரியலையே’ என்று நாள் முழுவதும் புலம்பிக் கொண்டும் தேடிக்கொண்டும் இருப்பார்கள். இருபது அல்லது முப்பது புத்தகங்கள் உள்ள ஒரு சின்ன அறையிலே நம்மால் நமக்கு தேவையான புத்தகத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லையே. லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள லைப்ரரிக்கு அழைத்துச் சென்று, அங்கே பணியாற்றுபவர்கள் மட்டும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்பதை அவர்களை விட்டே கண்டறியச் சொல்லுங்கள். காரணம் இதுதான், வீட்டில் புத்தகங்கள் கிடைக்காததற்கு காரணம் புத்தகங்கள் “கிடப்பதே”. லைப்ரரியில் கிடைப்பதற்கு காரணம் “இருப்பதே”. கிடப்பது என்றால் வைக்கும்போதே கவனமின்றி வைக்கப்படுவது அல்லது தூக்கி எறியப்படுவது. இருப்பது என்றால் சரியான முறையில் அடுக்கி வைப்பது.
குழந்தைகள்தான் என்றில்லை, நாமே கூட பல நேரங்களில் எங்க கிடக்குன்னு தெரியலையே என்று புலம்பிக் கொண்டே நமக்கு தேவையானவற்றை தேடி இருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா? இப்பொழுது அதற்கான காரணம் உங்களுக்கே புரிந்திருக்கும்.
ஆர்வத்தையும் கவனத்தையும் வளர்க்க சில பயிற்சிகள்:
வெளியில் எங்காவது சென்று வந்த பின் அங்கே பார்த்தவற்றைப் பற்றி கேள்வி கேளுங்கள். உதாரணத்திற்கு ‘ஷாப்பிங் மாலில் அவர்கள் பார்த்த பொருட்களின் வரிசையை அல்லது தெருவில் உள்ள கடைகளின் வரிசையை எழுதச் சொல்லுங்கள். அல்லது இன்று வகுப்பில் ஆசிரியர் முதலில் சொன்ன வார்த்தை எது என்று கேளுங்கள். இதனால் அனைத்தையும் ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனிக்கத் தோன்றும்.
ஒழுங்கை வளர்க்க சில பயிற்சிகள்:
உங்கள் உள்ளே ஓர் ஒழுங்கு ஏற்பட வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யும் வெளிச் செயல்களிலும் ஓர் ஒழுங்கு நிச்சயம் வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் ஒழுங்கோடு செய்யச் சொல்லுங்கள்.
பள்ளியிலிருந்து வந்ததும் ஷுவை நிதானமாக கழற்றி ஒழுங்காக அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். சாக்ஸை கழற்றி துவைப்பதற்கென்று உள்ள பக்கெட்டில் போட வேண்டும். பெல்ட், டை ஆகியவற்றை அதற்கென்று உள்ள இடத்தில் மாட்டி வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலையும் ஓர் ஒழுங்கோடு செய்தால், உள்ளேயும் அதாவது மனதின் செயல்பாடுகளிலும் ஒழுங்கு ஏற்படத் துவங்கும்.
மேலே சொன்னவற்றை எல்லாம் ஒழுங்காகப் பின்பற்றினால் நீங்களும் சொல்லலாம். மறதிக்கு குட்பை.
madheena manzil
yaaaaaa nice