மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்..!

– மரபின்மைந்தன் ம. முத்தையா

கொஞ்சம் முயன்றால் அதைச் செய்திருக்கலாம். சூழ்நிலை சரியாக இல்லை, பொறுப்பில்லாமல் எதையாவது முயற்சி செய்து சூடுபட வேண்டாமே என்று பார்த்தேன்”. சவால்களை எதிர்கொள்ளாத பலரும் சொல்லிக் கொள்கிற சமாதானம் இது.

பொறுப்புடன் இருப்பதென்றால் கனவு களைத் துறப்பதல்ல. பொறுப்புடன் இருப்பதென்றால் சவால்களைத் தவிர்ப்பதல்ல. துணிந்து களத்தில் இறங்கி, முயன்று, வெற்றிகளைத் தட்டிப் பார்க்கும்போதுதான் ஒரு மனிதனின் பொறுப்பு முழுமையடைகிறது.

தன்னுடைய கனவுகளைத் தானே கை விட்டவர்கள் எதை அடைந்தாலும் மனநிறைவை அடைய முடியாது. வாழ்வின் வெறுமை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

விரும்புகிற விஷயங்களைச் செய்தால் வருமானம் குறையும் என்ற அச்சமோ, தவறு நேர்ந்தால் விமர்சனங்கள் எழும் என்ற தயக்கமோ ஒருவரை தடுத்து நிறுத்தக்கூடும். ஆனால், முழு விருப்பத்துடன் செய்யும் செயலில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.
தான் ஆசைப்பட்ட நல்ல விஷயங்களைத் துணிந்து செய்தவர்கள், தாங்கள் வெற்றி பெறுவதோடு நிற்பதில்லை. தங்கள் துறையில் ஒரு புதிய கதவையே திறந்து விடுகிறார்கள். சங்கீதம், நாட்டியம், ஓவியம், சொற்பொழிவு போன்ற கலைத்துறைகளில் ஆசை இருந்தாலும், அது சோறு போடுமா என்ற தயக்கத்தில் அவற்றிலிருந்து தள்ளி நிற்பவர்கள் ஏராளம்.

ஆனால், அந்தத் துறைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, அதே உற்சாகத்துடன் தொடர்ந்து முயன்று வந்தவர்கள், பொருளும் புகழும் பெருகும் விதமாய் மிகச்சிறந்த இசைக்கலைஞர்களாக விளங்குகிறார்கள்.

ஓர் இலக்கை எண்ணிப் பார்த்தால் அதை எட்டுவதற்குத் தடையாய் இருக்கும் எத்தனையோ தடைகளும் நம் நினைவில் நிழலாடும். ஆனால், அந்த இலக்கை எட்டிவிட்டதாகவே நினைப்பவர் களுக்கு அந்தத் தடைகளைத் தாண்டுவது மிகமிக எளிதாக இருக்கும்.

இது பற்றிய சுவாரஸ்யமான ஆராய்ச்சி ஒன்றும் உண்டு. விண் கலங்கள் பல வானில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பூமியையும் பிற கிரகங் களையும் பிரபஞ்ச வெளியையும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்து பூமிக்கு அனுப்புகின்றன. அவையெல்லாமே ஆளில்லா விண்கலங்கள். கட்டுப் பாட்டுக்கூடத்திலிருந்து பிறப்பிக்கும் ஆணைகளை நிறைவேற்றும் விதமாக அவை வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.

கட்டளைகளை ஏற்கும் தொழில் நுட்பத்தை அந்த விண்கலங்களில் ஒரு முறை பொருத்தி விட்டால், அதன் பிறகு அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை.
அதுபோலவே, கனவுகளை, இலட்சியத்தை ஆழ்மனதில் ஆழமாகப் பதித்து விட்டால், அது தானியங்கி முறையில் அந்த இலட்சியத்தை எட்டப் புறப்படும்.

நீங்கள் வாகனம் ஓட்டப் பழகும்போது, தடு மாற்றத்தால், பதட்டத்தால், உங்களைக் கடந்து போகிற ஒவ்வொரு வாகனத்தையும், எதிரே வருகிற ஒவ்வொரு வாகனத்தையும் பொருட்படுத்தத் தொடங்குவீர்கள். ஆனால், நன்கு ஓட்டிப் பழகி விட்டால், உங்கள் வாகனம், எப்படி நகர்கிறது, போக வேண்டிய இடத்திற்கு எப்படிப் போய் சேர்ந்தது என்று உங்களுக்கே தெரியாது.

பழைய காலங்களில், மாட்டு வண்டிகளில் தொடர்ந்து ஒரே இடங்களுக்கு சென்று வருபவர்கள், போக வேண்டிய திசையில் வண்டியைத் திருப்பிவிட்டு வண்டியிலேயே படுத்துத் தூங்கிவிடுவார்கள். பழக்கப்பட்ட மாடுகள், போக வேண்டிய இடங்களுக்கு சரியாகப் போய்விடும்.

அந்த மாட்டு வண்டிக்காரர்களுக்குப் பகைவர்கள் இருந்தால், பாதிவழியில் அந்த மாடுகளை மெல்ல போக்குக்காட்டி திசை திருப்பி விடுவார்கள். காலையில் புறப்பட்ட இடத்திற்கே மாடு திரும்பி இருக்கும்.

ஆளில்லாத விண் கலங்கள் ‘ ஆள் இருந்தும் தூங்குகிற மாட்டு வண்டிகள் ‘ ஆள் விழித்திருந்து ஓட்டுகிற வாகனங்கள் என்று எல்லாமே ஒரு விதமான தானியங்கி முறையில் இயங்குகிறதே, இதுபோல்தான் மனமும் சில அபிப்ராயங்களை அதுவே வடிவமைத்துக்கொள்கிறது. அதை நோக்கிப் பயணம் செய்கிறது. இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்தவரின் பெயர் மால்ட்ஸ். விழிப்புணர்வுடன் யோசிக்கும்போது வழி முறைகள் மனதில் தோன்றுகின்றன. அவற்றை ஆழ்மனதில் பதித்து வைத்தால் நினைத்தது போலவே எல்லாம் நடக்கின்றன என்பதை அவர் கண்டறிந்தார். அவர் கண்டறிந்ததன் பின்புலத்தில் ஒரு சம்பவமும் உண்டு.

மால்ட்ஸ், அடிப்படையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர். காயப்பட்டு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்கிற நோயாளிகள் மனநிலையை ஆராய்ந்தார். அறுவை சிகிச்சை முடிந்து பல நாட்களாகி, தழும்புகள் எல்லாம் அறவே மறைந்தாலும்கூட அவர்களில் பலர் மகிழ்ச்சியாக இல்லையென்று கண்டு பிடித்தார்.

காரணம், தங்கள் தோற்றம் பற்றி ஆழ் மனதில் அவர்களுக்கு ஒரு பிம்பம் இருக்கிறது. விபத்துக்குப் பிறகு, அந்த மனபிம்பம் அடி பட்டது அடிபட்டதுதான். அந்த பிம்பத்திற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை கிடையாதே!! எனவே தங்களுக்கு குணமாகிவிட்டது என்று அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். எனவே மகிழ்ச்சியின்றித் தவிக்கிறார்கள்.
சின்னச் சின்னத் தோல்விகளை மனதுக்குள் ஏற்றிக்கொண்டால் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படும். எனவே வென்றதாகவே நம்புகிறவர்கள், தோல்வி பயம் என்ற மலையை மனதிலிருந்து நகர்த்தி விடுகிறார்கள்.

மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் போல் சிலர் பாதியில் திசை திருப்பப் படுகிறார்களே….. அது ஏன்…? அடுத்த மாதம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *