காலம் உங்கள் காலடியில்

– சோம வள்ளியப்பன்

மாலை மணி ஆறு. மருத்துவமனை. அறுவை சிகிச்சை அறை. பரபரப்பாக இருக்கிறது. பல மானிட்டர்கள், யந்திரங்கள், உபகரணங்கள், வாயில் பச்சைத்துணி கட்டிக்கொண்டு, உடம்பு முழுவதையும் மூடும் பச்சை வர்ண அங்கி அணிந்து கொண்டு, பத்திற்கும் அதிகமான நபர்கள். அவர்களில் சிலர் மருத்துவர்கள். மற்றவர்கள் உதவியாளர்கள்.

அறைக்கதவுகள் மூடப்படுகின்றன. அது ஓர் இதயமாற்று அறுவை சிகிச்சை. ரண சிகிச்சை தொடங்குகிறது. மணி எட்டு. ஒன்பது. பத்து. பதினொன்று, பன்னிரெண்டு, மிகக்கவனமாக தொடரும் வேலை. தொடர்ந்து நடக்கும் வேலை. தண்ணீர் கூட குடித்தார்களா என்று தெரியாது.

மணி ஒன்று. தையல் முடித்துவிட்டு, வெளியேறுகிறார்கள். அதன் பிறகுதான் அமர்கிறார்கள். உணவருந்துகிறார்கள்.

ஆமாம், இது எதற்கான உதாரணம்? மருத்துவர்களின் சிறப்பான வேலை பற்றியதா? வேலை சிறப்பானதுதான். ஆனால் உதாரணம் வேறு ஒன்றுக்கானது. எப்படி கவனம் மாறாமல், ஒரு குறிப்பிட்ட வேலையைப் பலமணிநேரங்கள் தொடர்ந்து செய்கிறார்கள் என்பதற்கான உதாரணம்.

‘கருமமே கண்ணாயினார்’ என்பது போல. கண்கள், காதுகள், மனது, மூளை என்று எல்லா புலன்களையும் ஒரே ஒரு செயலின் மீது வைப்பது. எடுத்துக்கொண்ட அந்த ஒரு செயலினை வெற்றி கரமாக முடிப்பதிலேயே குறியாக இருப்பது. ஆங்கிலத்தில் ஃபோக்கஸ் என்பது இதனைத்தான். சிலர் இதனையே ‘லேசர் பீம் ஃபோக்கஸ்’ ‘ரேசர்‘ஷார்ப் ஃபோக்கஸ்’ என்பார்கள். இரும்பையும் வெட்டும் ஒளிக்கற்றை போல ஒன்றின் மீது குவிக்கப்படுகிற ஆற்றல்.

இப்படிச் செய்தால்தான் அந்த வேலை முடியும். அந்த வேலை மட்டுமல்ல. இன்னும் எத்தனையோ வேலைகளும் அப்படிச் செய்யப்பட, ஒரே அமர்தலில் முடியும். நேர்த்தியாகவும் முடிந்துவிடும்.

ஆனாலும் பல வேலைகள் அப்படி முடிக்கப்படுவதில்லை. காரணம், அப்படி தொடர்ந்து ஒரே வேலையை பலமணி நேரங்கள் செய்ய பலராலும் முடிவதில்லை.

அத்தியாயம் 17ல் பார்த்த பாண்டியனை நினைவிருக்கலாம். செய்வார். செய்து முடித்ததை அவசரமாக கொடுத்துவிடுவார். பெறுபவர் அதில் இருக்கும் சிறுதவறுகளை சுட்டிக்காட்ட, அட ஆமாம் என்று போய் திருத்தி எடுத்து வருவார். தேவையில்லாமல் கெட்ட பெயர் எடுப்பவர். செய்யத் தெரியும். ஆனால் நிதானம் இல்லை. கவனம் இல்லை. தேவை, செய்வதில் கவனம். செய்வதில் மட்டுமே கவனம்.

சில வேலைகளை கவனமின்றியே சரியாக செய்து விடமுடியும்தான். கார் ஓட்டுவது. சைக்கிள் மோட்டார் வாகனங்கள் ஓட்டுவது, டைப் அடிப்பது, பூ கட்டுவது என்று சிலவற்றை, அதன்மீது முழுகவனம் செலுத்தாமலேயே செய்ய முடியும். காரணம், ஏற்கனவே அவற்றை பலமுறை செய்திருக்கிறோம். அதனுள்ளிருக்கும் ‘புரோகிராம்’ தட்டினை மீண்டும் சுழலவிட வேண்டியதுதான். வேலை அதன் போக்கில் தன்னால் நடக்கும்.

ஆனால் வேறு சில வேலைகள் அப்படிப்பட்டவை அல்ல. காரணம், அவற்றை அதற்குமுன் செய்ததில்லை. பரிச்சயமில்லாத ஒன்று. அதனால் அதனை கவனமாகத் தான் செய்யவேண்டும். முதல் முறை வண்டி ஓட்டுபவர் பராக்கு பார்த்துக்கொண்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ, பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டோ வண்டி ஓட்டுவாரா? அவரால் முடியுமா?

கவனமாக பார்த்துப் பார்த்து மெதுவாகவே செய்வார். அதேதான், திட்டமிடுதல், ஆராய்தல், உருவாக்குதல் போன்ற வேலைகளை நிதானமாகவும் கவனமாகவும் செய்யவேண்டும்.

மூளை, இருதய அறுவை சிகிச்சை போல, வேலை முடிய கூடுதல் நேரமாகலாம். ஆனாலும் தொடர்ந்து செய்தலே சரி. செய்கிறார்கள். அப்படிச் செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

சில பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஆழ்ந்து சிந்தித்தால் மட்டுமே கிடைக்கும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சமயங்களில் சில நாட்கள் கூட தொடர்ந்து வேலை செய்ததுண்டாம். தூக்கம் உணவு எல்லாம் இரண்டாம்பட்சம் தானாம். தேடுதலில் அவ்வளவு கவனமாக இருப்பாராம்.

எவராலும் மிகத்தரமான வேலைகளை செய்ய முடியும். அதற்கான முயற்சிகளுள் ஒன்றுதான், போதிய நேரம் ஒதுக்குவது. Spending Quality Time என்று சொல்லலாம்.

நல்ல காபி என்றால், தரமான பாலில் போட வேண்டும் என்பதுபோல, நல்ல சாப்பாடு என்றால் தரமான அரிசியில் வடிக்க வேண்டும் என்பது போல, தரமான வேலையினைச் செய்ய, மேன்மையான பலனைப்பெற, ‘தரமான நேரத்தினை’ பயன்படுத்த வேண்டும்.

தரமென்றால் கலப்படமில்லாதது. நேரம் என்பதிலும் கலப்படம் உண்டு. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகள் செய்வது. ‘மல்டி டாஸ்கிங்’ தான். எல்லா வேலைகளுக்கும் ‘மல்டி டாஸ்கிங்’ முறை சரியில்லை. சில வேலைகளுக்கு ‘சிங்கிள் டாஸ்க்’ தான் சரி.

குழந்தைகள், ஊழியர்கள் சொல்லுவது போலதான். ‘என்னோடு பேசுவதென்றால் என்னோடு பேசுங்கள். பேச்சை மட்டும் செய்யுங்கள். வேறு ஏதோ செய்துகொண்டே பேசவேண்டாம்’.

எந்த வேலைகளுக்கு தரமான நேரம் ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அவற்றைச் செய்யும்போது, கவனச் சிதறல்களே கூடாது.

ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து செய்வதாகவும் அது இருக்கலாம். ஈடுபடவேண்டிய அனைவரையும் (அறுவை சிகிச்சையின் போது நடப்பது போலவே) அப்படியே நடந்துகொள்ள கேட்டுக் கொள்ள வேண்டும்.

அலைபேசி, தொலைபேசி, பார்வையாளர்கள், உதவியாளர்கள், ஏன் மேலதிகாரிகளின் குறுக்கீடல்கள் கூட கூடாது. செய்வோரின் பேச்சுகளும் கூட அதே எடுத்த வேலைகளின் மீதேதான் என்கிற ஒழுங்கு கடைப் பிடிக்கப்பட வேண்டும். மற்றவையும் அலுவலக வேலைகள் அல்லது செய்து முடிக்கப்பட வேண்டியவைதான் என்றாலும் எடுத்துக் கொண்டதை முடித்துவிட்டு அடுத்தது என்கிற ஒழுங்கு அவசியம்.

கலையும் கவனம், தள்ளிப்போடும் மனப்பான்மை, என்ன செய்யவேண்டும், எப்போது செய்யவேண்டும்,யார்யாருடன் இணைந்து செய்ய வேண்டும் என்பது போன்றவற்றை முடிவு செய்து கொள்ளாதது என்று, ஒரே கவனமாக செய்ய முடியாமல் போவதற்கு நபருக்கு நபர் காரணங்கள் வேறுபடலாம்.

எதுவாக இருந்தாலும், கிடைக்கும் பலன் கருதி, அவற்றைச் சரி செய்துகொள்ளவேண்டும்.

நல்ல விளைந்த மாம்பழம். அதன் இரண்டு கன்னங்களையும் அரிகிறோம். திரட்சியான கன்னக் கதுப்புகள். சதைப்பகுதி. உண்பவருக்கு எத்தனை இன்பமாக இருக்கும்! ஓடிவந்து வீசப்படுகிற பந்தை லாவகமாகத் தட்ட, ஆறு ஓட்டங்கள் கிடைக்கிறது என்றால், அந்த சிக்ஸர் அடித்தவருக்கும் அவர் அணியினருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!

அதேபோன்ற இன்பம் பெரிய கடுமையான வேலைகளை முடிக்கும்போதும் கிடைக்கும். பெரிய முக்கியமான வேலைகளை செய்து முடிக்கும்போது கிடைக்கும் திருப்தியின் தன்மையே தனிதான்.

அதற்கு தரமான நேரம் ஒதுக்க வேண்டும். தரம் என்றால், போதிய அளவு நேரம் என்பது மட்டுமல்ல, போதிய அளவு கவனமும்.

தரமான நேரம் ஒதுக்கி செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்று யோசிக்கலாம். இந்த யோசிப்பிற்கேகூட இப்படிப்பட்ட நேரம்தான் வேண்டும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *