சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம்

துணிவே துணை என்பது நம்முடைய பெரியோர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற பாடம். எந்தவொரு செயலிலும் இன்றைக்கு பாராட்டப்படுவது துணிச்சல்தான். ஆனால் தாங்கள் ஈடுபட்டிருக்கின்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் துணிச்சலை வெளிப்படுத்துபவர்கள்

எத்தனைபேர் என்றால் மிகக் குறைவுதான். இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்துபவை நம்நாட்டின் தனிநபர் வருமானம், நம்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம், நாட்டின் வருமானம் உள்ளிட்டவைதான்.

பரந்துவிரிந்த மிகப் பெரிய நாடு, அதிகமான மக்கள்தொகை, தொழிற்சாலைகளோ, மிகப்பெரிய தொழில் நிறுவனங்களோ தொடங்குவதற்கு எல்லாவகையிலும் ஏற்ற இடம், வளர்ச்சிக்கு ஏற்ற மிகப்பெரிய களம், நம்முடைய நாடு என்பதை புரிந்துகொண்டு வெளிநாட்டுக்காரர்கள் இங்கே வந்து கடை போடுகிறார்கள். நாம் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி போட்டிபோட முடியாமல், வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றோம்.

அவர்கள் நம்நாட்டில் உள்ள மனித வளத்தையும் மற்ற வளங்களையும் பயன்படுத்திக் கொண்டு தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே போகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மீண்டும் நம்முடைய வளங்கள் சுரண்டலுக்கு உட்பட்டு நமக்கு பயன்படாமல் மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பதுதானே உண்மை.

என்னதான் அவர்களால் நம்முடைய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றதென்றாலும் தொடர்ந்து இதே நிலையில் இருப்பது நம்மை, நம்நாட்டை பின்தங்கிய நிலையிலும் மிஞ்சிப்போனால் நடுத்தர நிலையிலுமேயல்லவா வைத்திருக்கும். பிரம்மாண்டங்களைப் பார்த்து எப்போதும் அதிசயிக்கின்ற நம்முடைய மக்கள் இப்போதும் அயல்நாட்டுக்காரர்கள் நம் நாட்டில் தொடங்கியுள்ள தொழில்நிறுவனங்களைப் பார்த்து பிரமித்துப்போய் பின்தங்கி இருக்கின்றனர் என்பதுதானே இன்றைய நிதர்சனம்.

உழைத்து சம்பாதித்து, துன்பத்தையும் துயரத்தையும் தாங்கி நாம் வாழ்வதற்கென செலவழித்துக் கட்டிய வீட்டில் நாம் வாழாமல், வாடகைக்கு விட்டுவிட்டு வெளியே இருந்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

ஒருபுறம் அவர்களோடு போட்டிபோடுவதற்கு நமக்கு நிதிவசதி இல்லை என்பதும் சொந்த நாட்டினர் என்று வரும்போது அரசு மற்றும் அரசியல் ரீதியாக சந்திக்கின்ற சிக்கல்களும், வங்கியில் கடன்வாங்கி வட்டிகட்டுவது பெரும் சுமையாய் ஆகிவிடுகின்றது என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் மறுபுறம் இதற்கெல்லாம் மேலாக மிக வலுவாக வெளிப்படுகின்ற ஒரு காரணம் நமக்கு துணிச்சலும் தொடர்முயற்சியும் குறைவு என்பதுதான்.

நம்முடைய தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்த நமக்கு துணிச்சல் இருப்பதில்லை. சற்றுக் கூடுதலாய் செலவழிக்க துணிச்சல் இருப்பதில்லை. தேவையான செலவுகளைச்செய்தால்தான் எதிர்பார்க்கும் வருவாயைப் பெற முடியும் எனும்போது செலவழிக்க மனம் வராமல், இருப்பதை வைத்துக்கொண்டே எப்படியாவது காலத்தைத் தள்ளி வருவாயைப் பார்க்க முடியுமா என நினைத்து அதற்கேற்றாற்போல் செயல்படுவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படியானால் நம் நாட்டில் மிகப்பெரிய அளவில் தொழிற்சாலைகளோ, தொழில் நிறுவனங்களோ இல்லையா அல்லது இருப்பவை அந்தப் பட்டியலில் வராதா என்று கேட்டால், இங்கே பட்டியலிட்டுக் குறிப்பிடும் அளவு இருக்கின்றன. ஆனால் எண்ணிக்கைதான் குறைவு. இல்லையெனில் ஏன் நம்முடைய மக்கள் இலட்சக் கணக்கில் அயல்நாடுகளுக்கு வேலை செய்யச் சென்று அல்லல்படுகிறார்கள்.

மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இடமும், போதுமான மனித வளமும், மற்ற வளங்களும் இல்லாத நாடுகள் எல்லாம் இன்றைக்கு தொழிற்துறையில் முன்னணியில் இருந்து தனிநபர் வருவாயையும், நாட்டு வருவாயையும் உயர்த்தியபடி முன்னேறி வளர்ந்த நாடுகள் பட்டியலில் பளிச்சென நிற்கும்போது நாம் எத்தனை காலத்துக்குத்தான் வளரும் நாடுகள் பட்டியலில் இருப்பது?
மிகப்பெரிய ஒன்றை பெறவேண்டுமெனில் மிகச்சிறிய ஒன்றையாவது இழப்பதற்கு தயாராக இருக்கவேண்டும். ஆனால் இருக்கின்ற எதையும் இழப்பதற்கு நாம் தயாராய் இருப்பதில்லை.

எச்சரிக்கையாய் இருப்பதென்பது மிகவும் அவசியமானதுதான். அதற்காக எதற்குமே துணிச்சல் இல்லாமல் இருப்பது எப்படி மாற்றங்களையோ முன்னேற்றங்களையோ கொண்டுவரும்?

இன்றைக்கு இந்தியாவில் மிகப்பிரபலமாகியுள்ள இங்கிலாந்தின் ‘வெர்ஜின்’ மொபைல் வெறும் அவர்களின் பிராண்ட் மட்டுமே கொடுத்து நம்நாட்டவர்களாலேயே எல்லாப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளப்பட சம்பாதித்துக் கொண்டிருக்கின்றது. இந்த வெர்ஜின் நிறுவனம் இங்கிலாந்தில் பிறந்த கதையும், இதன் நிறுவனர் ரிச்சர்ட் ப்ரான்ஸன் எப்படி பல துறைகளிலும் கால்பதித்து வெற்றிக் கொடி நாட்டி ‘வெர்ஜின்’ என்கின்ற தன்னுடைய பிராண்ட் பெயரை உலகளாவியப் புகழைப் பெறவைத்தார் என்பது தெரிந்தால் பிரமிப்பிலேயே சுவாசிக்கக் கூட மறந்துவிடுவோம்.

அதனை பின்பொருமுறை பார்ப்போம். இப்போது நமக்குத் தேவை துணிச்சல் என்பது எப்படி புத்திசாலித்தனமாய் வெளிப்பட வேண்டும் என்பதுதான். இங்கிலாந்து மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் மிக வியப்பாய் பார்க்கின்ற ஒரு மனிதர் ‘வெர்ஜின்’ நிறுவனங்களின் உரிமையாளர் ரிச்சர்ட் ப்ரான்ஸன். துணிச்சலுக்கு மறுபெயர் ரிச்சர்ட் ப்ரான்ஸன் என்று சொல்லுமளவிற்கு துணிச்சல் மிக்கவர்.

எப்போதும் தொழில் தொழில் என்றே ஓடிக் கொண்டிருக்கிறோமே எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாய் ஒரு இரண்டு நாட்களாவது இருக்க முடியாதா என்று ஏங்கிய ரிச்சர்ட் ப்ரான்ஸன் தன் காதலி ஜோனுடன் மகிழ்ச்சியாய் பொழுதைக் கழிக்க வேண்டுமெனில் அது எங்காவது ஒரு தீவுக்குச் சென்றுவிட்டால்தான் முடியும் என்று நினைத்தார்.

ஓய்வெடுக்க தீவுகளைத் தேடி எப்போதாவது செல்வதென்பதைக் காட்டிலும் தமக்கென்று ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கிவிட்டால் எப்போது வேண்டுமானாலும் போகலாமே என்று முடிவு செய்த ப்ரான்ஸன் அதற்குரிய நபர்களிடம் விசாரித்து தனக்கும் தன் காதலி ஜோனுக்கும் மனதிற்குப் பிடிக்கும் தீவைப் பார்க்க உற்சாகமாய் புறப்பட்டார்.

பல தீவுகளைப் பார்த்துக் கொண்டே வந்த ரிச்சர்டும் ஜோனும் ‘நெக்கர்’ என்கின்ற தீவைப் பார்த்ததும் அதன் அழகில் மனதைப் பறிகொடுத்தனர். வாங்கினால் இந்தத் தீவைத்தான் வாங்க வேண்டும் என முடிவுசெய்தனர். ஆனால் விலையைக் கேட்டதும் தலையைச் சுற்றியது அவர்களுக்கு. ஆம். நெக்கர் தீவின் விலை முப்பது இலட்சம் பவுண்ட்கள்.

இப்போதைக்கு இது நம்மால் வாங்க இயலாதென்று நினைத்த ப்ரான்ஸன் விலையைக் குறைக்க முடியுமா என்று கேட்டு எதிர்விளைவைப் பார்த்து சற்று அவமானப்பட்டதாய் உணர்ந்தார். இவ்வளவு அழகான தீவையா பணமில்லையென இழந்துவிடுவது என்று மிகவும் கவலையோடும் சலிப்போடும் அங்கிருந்து கிளம்பி விமான நிலையத்திற்கு வந்தால் அங்கே மேலும் சலிப்பை ஏற்படுத்தும் விதமாய் அவர்கள் புறப்படவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் தன்னைப் போல் பல சுற்றுலாப் பயணிகளும் அங்கே விழித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ரிச்சர்ட் ப்ரான்ஸன் யோசனையில் ஆழ்ந்தார். விமானம் ரத்தானதால் தன்னைப்போல் ஐம்பது பயணிகள் பாதிக்கப்பட்டிருப்பதையும் தான் உடனடியாய் அங்கிருந்து செல்லவேண்டிய அவசரத்தையும் உணர்ந்த ப்ரான்ஸன் உடனடியாய் தன் வியாபார யுக்தியைக் கையாள முடிவு செய்தார்.

தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு விசாரித்தார். செலவினைக் கணக்குப் போட்டுப் பார்த்து அங்கிருக்கும் பயணிகளுடன் அதனைப் பங்கிட்டுக் கொள்ள முடிவுசெய்தார். உடனடியாய் ஒரு விமானம் அங்கிருந்து புறப்படவிருப்பதையும் அதற்குரிய கட்டணத்தையும் அறிவித்தார். காத்திருந்த பயணிகள் அத்தனை பேரும் டிக்கெட்டிற்கான பணத்தைச் செலுத்தி வாங்கிக்கொண்டனர்.

திடீரென உருவாக்கிய அவசர திட்டமாய் இருந்தாலும் அதற்கும் ‘வெர்ஜின் ஏர்லைன்ஸ்’ என்று பெயரிட்டு மகிழ்ச்சியோடும், மற்றவர்களுக்கும் உதவிய நிறைவோடும் அதே நேரத்தில் அதிலும் தன் தொழில் திறனை வெளிப்படுத்திய பெருமிதத்தோடும் பறந்தார். இந்த சம்பவத்தையே அடிப்படையாய் வைத்து பின்னால் உலகப்புகழ் பெற்றுத் திகழும் வெர்ஜின் அட்லாண்டிக் விமான சேவையைத் தொடங்கிய அதிசய துணிச்சல்காரர் ரிச்சர்ட் ப்ரான்ஸன்.

– ருக்மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *