உடல் நலமா? மன நலமா?

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம்

தொடர் எண் : 8

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள, மலேசிய அமைச்சர் நண்பர் டத்தோ சரவணன் அவர்கள் வந்திருந்தார். நண்பர் மரபின் மைந்தன் முத்தையாவுடன் அமைச்சரும், நானும் கவிஞர் வீட்டுக்குச் சென்றோம். விழாவுக்கு

கிளம்புவதற்கு முன், சிறிது நேரம் எல்லோருடனும் பேசிக்கொண்டிருந்த போது கவிஞர் சொன்ன ஒரு கருத்து மனத்தில் அப்படியே தங்கியது.

“வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் ஒருவன் செய்ய வேண்டிய முதல் காரியம் அவனது ஆயுளைப் பிடித்து வைத்துக் கொள்வதுதான். ஆயுளைப் பிடித்து வைத்துக் கொண்டு உழைப்பவரிடம் வெற்றி
கண்டிப்பாக வந்து சேரும்”.

இந்தச் சொற்கள் சாதாரணமானவையல்ல. நூல்களைப் படித்ததனாலும் அனுபவ அறிவினாலும் சொல்லப்பட்டவை.

வாழ்க்கை என்பதன் நோக்கம் என்ன? பல்வேறு விதங்களில் விளக்கங்கள் கூறப்பட்டாலும். ஒன்றுதான் உண்மையானதாகப்படுகிறது. ‘மரியாதையுடன் இறப்பது’ என்பதுதான் அது! எத்தகைய மரியாதையுடன் இறக்கிறோம் என்பது நமது செயல்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது! உடலின் செயல்திறனை உறுதியுடன் வைத்துக் கொள்ளும்போது மரியாதையுடன் இறப்பதற்கான வாய்ப்பு கூடுகிறது!

உடம்பில் அழியின் உயிரான் அழிவர்
திடம்படு மெய்ஞானம் சேரவும் மாட்டா;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே

என்ற திருமூலரின் வரிகள் வியப்புரியவை மட்டுமல்ல; பின்பற்றுதற்குரியவை. “ Healthy mind in a healthy body “என்று ஓர் ஆங்கிலப் பழமொழி கூட உண்டு.

நாட்டையும் மக்களையும் நேசிக்கும் எந்த இளைஞரையும் கவர்ந்த இருவர் நம் நாட்டில் வாழ்ந்தனர். வங்க மண் தந்த வீரச் சிங்கம் விவேகானந்தர் ஒருவர்; தமிழ்த்தாயின் தவப்புதல்வன் மகாகவி பாரதி மற்றவர். இருவரும் இளைஞர்களைப் பற்றியே எண்ணினர். அவர்களை முன்னேற்றும் கருத்துக்களையே சொல்லினர்.

“நான் விரும்பும் நூறு இளைஞர்களைக் கொடுங்கள்; இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன்” என்றார் விவேகானந்தர். “எஃகு போன்ற தசைகளும் உறுதிமிக்க நரம்புகளும் கொண்ட இளைஞர்களே நாட்டுக்குத் தேவைப்படுகிறார்கள்” என்றார். “இளைஞர்களே! உடலினை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பகவத் கீதையை படிப்பதைவிடவும் கால்பந்து விளையாடுவதன் மூலம் இறைவனைக் காண முடியும்” என்று இளைஞர்களைத் தூண்டியவர் அவர்.

“விசையுறு பந்தினை போல் – உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்”

என்றான் பாரதி. உள்ளம் ஆசைப்படுவதை உடல் செய்யாமல் போய்விட்டால், வாழ்வில் நிறுத்தம் வந்துவிட்டது என்பதுதானே பொருள்…!

தோளை வலிவுடையதாக்கி – மனச்
சோர்வும் பிணி பலவும் போக்கி – அரி
வாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு
மாறா உடலுறுதி தந்து….
என்று தனது வேண்டுகோளை இறைவனிடம் வைக்கிறான் பாரதி. ‘உடலினை உறுதி செய்’ என்றே புதிய ஆத்திசூடியில் எழுதினான். இளைஞர்களைப் பற்றியும், இளைஞர்கள் உடலினை உறுதியாக வைத்திருக்க வேண்டும் என்று சொன்ன இவர்கள் இருவருமே இளமைக் கட்டுக்குறையாமல் இறந்து போனார்கள். இருவருமே 39 வயதினைத் தாண்டவில்லை என்பது மிகப்பெரிய வேதனை.
ஒருவேளை இன்றைய அறிவியல் வளர்ச்சி அப்போது இருந்திருக்குமானால், அவர்களை காப்பாற்றியிருக்கக்கூடும்…. அன்றைய நிலையில் அந்த அளவு மருத்துவ வசதி இல்லை. ஆதலால் விவேகானந்தரும் பாரதியும் இறந்தனர். இன்று, உயிரைக் காப்பாற்றும் மருத்துவ வசதிகள் ஏராளமாக வந்துவிட்டன. ஆனால் அப்படி முனைந்து காப்பாற்ற வேண்டிய உத்தமர்களாக ஒரு பாரதியும், ஒரு விவேகானந்தரும் நம்மிடையே இல்லை.

எண்பது வயது நிறைந்த நிலையிலும் அவர்கள் இருவரும் இருந்திருப்பார்களேயானால், நாடும் மொழியும் எவ்வளவு நலம் பெற்றிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் இருவருமே, பிறரைப் பற்றிக் கவலைப்பட்ட அளவுக்கு தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் போயினரோ….. அல்லது, உடன் இருந்து வற்புறுத்தி அவர்கள் உடல் நலம் பேணத் தகுந்தவர்கள் இல்லாமல் போயினரோ தெரியவில்லை. எப்படியாயினும் இழப்பு நமக்குத்தான்.
இளைஞர்களுக்கு சொல்லப்பட வேண்டிய செய்திகளில் முக்கியமானது உடல்நலம் பேணுவதும் தான்! உடம்பு என்பதும் இயந்திரம் தானே….? உரிய முறையில் பராமரிக்கப்படாத எந்த இயந்திரமும் நீண்ட காலம் உழைக்காது என்பதற்கு உடம்பும் ஓர் உதாரணம் தான்.
சிலர் பயன்படுத்தும் பொருளோ அல்லது வாகனமோ வாங்கி சில ஆண்டுகளிலேயே பார்க்கவும் கேவலமாக இருக்கும். வாகனம், புகையைக் கக்கிக் கொண்டுதான் நகரும்; தேவையற்ற ஒலிகளை எழுப்பும்; தெருவிலும் காற்றிலும் இருக்கும் சேறும் புழுதியும் முழுமையாக வண்டியில்தான் இருக்கும். இத்தகைய வாகனம் எத்தனை நாட்கள்தான் உழைக்கும்….?

வாங்கி 15 அல்லது 20 ஆண்கள் கழிந்த பிறகும் வண்டியை நல்ல நிலையில் வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரே காரணம் தான்! வண்டி அவ்வப்போது தூய்மை செய்யப்படுகிறது. புறத்தூய்மை நீரால் அமையும். ‘பொறி’யின் தூய்மை உரிய எண்ணையால் அமையும். ஒரே கடையில் பெட்ரோலோ, டீசலோ போடுவார்கள். குறிப்பிட்ட மெக்கானிக்தான் சரிசெய்வார். ஒரே நபர் தான் எப்போதும் ஓட்டுவார். தினமும் வண்டியைத் துடைத்து அழுக்கு இல்லாமல் வைத்துக் கொள்வார்கள்.
இயந்திரத்துக்கும், மனித உடம்புக்கும் என்ன பெரிய வேறுபாடு. உயிர் என்பதைத் தவிர? வண்டிக்குப் போடும் சரியான எண்ணெயும், அவ்வப்போது துடைத்து, சரிசெய்து வைத்துக் கொள்வதுமே வாகனத்தைச் சரியாக வைத்துக் கொள்கின்றன… உடலினை சரியான உணவும், முறையான உடற்பயிற்சியும் மட்டுமே சரியாக வைக்கின்றன.
பள்ளி, கல்லூரிப் பருவங்களில் மாணவருக்கு இதைப் புரியவைப்பதும் சிரமம்; அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது. ஏனென்றால் அவர்களால் அந்த வயதில்
படுத்த நிலையினின்று துள்ளி எழுந்து அமர முடியும்; அமர்ந்த நிலையில் இருந்து சரேலென எழுந்து நிற்க முடியும். அப்படியே வேகமாக ஓட முடியும். இந்த உடல் நிலையை அனுபவிக்கும் இளைஞர்களுக்கு, படுக்கையில் முதலில் ஒரு பக்கமாகத் திரும்பி படுத்துப் பின் எழுந்து அமர்ந்து; அதன் பின் கால் முட்டியை ஒரு கையால் பிடித்து முன்கையால் தரையை ஊன்றித் தள்ளாடி எழுந்திருக்கும் முதியோரைப் பார்த்தால் கிண்டலாக இருக்கும். முதியோர் பிறக்கும்போதே அப்படித் தள்ளாடிக் கொண்டே பிறந்தது போலவும், அவர்கள் மட்டும் எப்போதும் இதே வேகத்துடன் இருக்கப் போவதாகவும் நினைத்துக் கொள்வார்கள்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னர், அந்த முதியோரும் தன்னைப் போல இருந்தவர்கள் என்பதும், இன்னும் ஒரு ஐம்பதாண்டுகளில், தானும் அவர்களைப் போலத்தான் ஆவோம் என்பதும் அந்த வயதில் இளைஞருக்கு புரிவது சிரமம்தான்.
இதையெல்லாம் புரிந்து கொண்டோ அல்லது புரியாமலோகூட விளையாட்டிலும், உடற்பயிற்சியிலும் இளைஞர்கள் ஈடுபடுவது அவசியம். அவர்களை அப்படி ஈடுபடுத்துவது பெரியோர்களின் கடமைகளில் ஒன்று. இளமையிலேயே இந்தப் பழக்கம் வந்துவிடுமானால், வயதுக்குத் தகுந்த அளவுக்கு உடலைப் பேணி உறுதியாக வைத்துக் கொள்ளும் பழக்கமும் வந்துவிடும்.
இளைஞர்கள் சோம்பல் காரணமாக “நேரமே இல்லை” என்பார்கள். நடுவயதுக்காரர்கள், வேலை அழுத்தம் காரணமாக “நேரமே இல்லை” என்பார்கள். இவை இரண்டுமே சரியில்லாத காரணங்கள். அருமையான உதாரணம் ஒன்றினை ஒரு நூலில் படித்தேன். “உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத அளவுக்கு எனக்கு வேலைப்பளு உள்ளது” என்று சொல்வது, “பெட்ரோல் போடக்கூட நேரமில்லாத அளவுக்கு காரில் நான் வேகமாகப் போக வேண்டியுள்ளது ” என்பதைப் போல……
முக்கியமான அலுவலுக்காக விரைவில் போக வேண்டும்; நிறுத்தக்கூட நேரமில்லை என்பதற்காக வண்டியில் பெட்ரோல் போடாமல் போக முடியுமா? அப்படி நினைத்தால் போகத்தான் முடியுமா? சாப்பிடாமல் கூட நாம் பயணம் செய்யலாம். எண்ணெய் இல்லாமல் வண்டி போகுமா? பயிற்சி இல்லா உடம்பும் அப்படித்தான் தடுமாறி நிற்கும். கிராமத்து மக்களுக்கு இதைப்பற்றி அவ்வளவாக கூற வேண்டியதில்லை. வயற்காட்டிற்கும், சந்தைக்கும் நடந்தே செல்பவர்கள் அவர்கள். வாழ்க்கைப் போராட்டத்திற்காக காடு மேடெல்லாம் நடக்கும் மக்களுக்கு உடலில் உரம் பாய்ந்து இருக்கும். கிராமத்து மக்களின் கால்களை பார்த்திருக்கிறீர்களா? நடந்து நடந்து உரமேறிய கால்கள் அவை. உடல் உழைப்பில் இருக்கும் மக்களுக்கு இயல்பிலேயே உடலில் உறுதி இருக்கும்.
உடல் நலத்தைப் பேண வேண்டும் என்பதாலேயே ஆன்மீகக் கருத்துக்களையும் உடல் நலத்துடன் சேர்த்து நமது முன்னோர்கள் சொன்னார்கள். ‘உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்’ என்று சொன்னதன் உட்பொருள், அந்த உடம்பு காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான். தேவையற்ற வீண் பழக்கங்களுக்கு இளமையில் ஆட்படும் உடம்பு, எதிர்காலத்தில், மனத்துக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையானதாக மாறிவிடுகிறது.
‘பாப்’ இசை உலகின் மன்னன் என்று அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் மரணம் உலகில் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடைய ரசிகர்கள் 12 பேர் தீக்குளித்து மாண்டதாக செய்திகள் வந்தன. பலர் அந்த எதிர்பாராத மரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டார்கள். 51 வயதில் அவரை மரணம் தழுவியதற்கு அவர் உடல் நலத்தைப் பேணாதது மட்டுமல்ல; பல விதங்களிலும் அவர் உடம்புக்கு அவரே கொடுத்துக் கொண்ட தொல்லைகளும் காரணமாகிவிட்டன. ‘இறந்த நேரத்தில் அவரது உடலின் எடை 55 கிலோவுக்கும் குறைவாக இருந்தது; அவரது உயரத்திற்கு அந்த எடை மிகவும் குறைவானது’ என்றார்கள் மருத்துவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும். அதுவும் மிகக் குறைவான உணவை உட்கொண்டார் என்றும்; போதை மருந்துகளையும், வலி நிவாரண மாத்திரைகளையும் நிறைய பயன்படுத்தினார் என்றும்; உடலில் போதை ஊசிகள் நிறையப் போட்டுக் கொண்ட தழும்புகள் இருந்தன என்றும்; இறந்த பின் செய்த உடற்கூறு பரிசோதனையில், வயிற்றில் பாதி கரைந்த நிலையில் மாத்திரைகள் மட்டுமே இருந்தன என்றும்; மருத்துவமனையில் சேர்ந்தவுடன், இதயத்தை இயங்க வைக்க மருத்துவர்கள் மார்பினை அழுத்தியபோது மார்பின் எலும்புகள் சில நொறுங்கிவிட்டன என்றும் வந்த செய்திகள், அவரை நேசித்த பலருக்கும் மன வேதனை தந்தன. தனது ஆற்றலால் கோடிக்கணக்கான ரசிகர்களை உலகெங்கும் இளமையிலேயே பெற்றிருந்த ஒருவரின் இந்த முடிவு எவ்வளவு வேதனையானது…. அவரது உடலைத் தங்க இழைகள் பதித்த உயரிய சவப் பெட்டியில் வைத்து புதைத்தார்கள். என்ன பயன்……..?
ஏறத்தாழ அதே நேரத்தில் இந்திய நாட்டின் சண்டிகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பற்றிய செய்தியும் செய்தித்தாள்களில் வந்திருந்தது. ஆணழகன் போட்டியில் அவர் வென்றார் என்பதே அந்தச் செய்தி. அதிலென்ன முக்கியம் என்கிறீர்களா? சரியாக 7 ஆண்டுகளுக்கு முன்னர்தான், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இதயத் திறப்பு அறுவை சிகிச்சை (Open Heart Surgery) நடந்திருந்தது. உள்ள உறுதியும், உழைப்பும், பயிற்சியும் உணவும் அவரை ஆணழகனாக உயர்த்தியிருந்தன.
மனிதர்கள் பொருள் சம்பாதிப்பதற்காக, நேரம் பார்க்காமல் உழைத்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். கெட்டுவிட்ட உடல் நலத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், சம்பாதித்த பொருள்களையெல்லாம் இழக்கிறார்கள். இதுதான் வாழ்க்கை என்றாகிவிடுமோ…..?
எல்லாவற்றையும் இழந்து, முயன்று, இறுதியில் மகிழ்ச்சியை அடைவேன் என்பவன், என்றும் மகிழ்ச்சியடைவதேயில்லை. மகிழ்ச்சி என்பது வாழும் முறையிலேதான் இருக்கிறது.
வயதிற்கேற்ற பயிற்சி உடலை நலத்துடன் வைத்துக் கொள்கிறது. வயதிற்கேற்ற மகிழ்ச்சி மனத்தை நலத்துடன் வைத்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *