நீங்களும் ஜீனியஸ்தான் – 2

அத்வைத் சதானந்த்

ஜீனியஸ்கள் வசதியானவர்கள் வீட்டில்தான் உருவாகிறார்கள்

கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர்

முதல் கட்டுரையை படித்துவிட்டு நிறைய கேள்விகளை நம் வாசகர்கள் முன் வைத்தார்கள். கேள்விகள் தான் ஜீனியஸ்களை உருவாக்குகிறது என்பதால் இந்த மாதம் கேள்வி பதில் மூலமாக நாமும் ஜீனியஸ்தான் என்பதை உணர்வோம்.

யாரெல்லாம் ஜீனியஸ் ஆகமுடியும்?

தங்கள் துறையில் உச்சக்கட்ட அறிவை பெறுபவர்கள் அதற்காக தங்களின் திறனை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே செல்பவர்கள்தான் ஜீனியஸ் ஆகமுடியும்.

ஜீனியஸ் என்று இந்த உலகால் அங்கீகரிக்கப்பட்டவர்களை எல்லாம் உதாரணமாக எடுத்துப் பார்த்தால் இந்த பதில் உங்களுக்கே புரியும். அவர்களில் சிலர் ஐன்ஸ்டின், லியர்னோ டாவின்சி, மொசார்ட், கணித மேதை சீனிவாச ராமானுஜம். இவர்களின் வாழ்வினை பார்த்தால் மேலே சொன்னது உடன் புரிந்துவிடும்.

ஜீனியஸ் என்று அறியப்பட்டவர்களுக்குள் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா?

எதையும் அறிந்து கொள்வதில் அதாவது கற்றுக்கொள்வதில் காட்டிய ஆர்வமும் துடிப்பும்தான் இவர்களுக்குள் இருந்த ஒற்றுமை.

ஜீனியஸ்கள் வசதியான குடும்பத்தில்தான் பிறக்கிறார்களா?

ஆம். அதிர்ந்து விடாதீர்கள். பதிலை முழுமையாக படியுங்கள். வசதியான குடும்பம் என்பதற்கு பொருளாதார ரீதியான அர்த்தம் என்றால் இல்லை என்பதே என் பதில். வசதியான குடும்பம் என்பதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்துவதில், அன்பு காட்டி அரவணைப்பதில் என்றெல்லாம் பொருள் கொண்டால் எல்லா ஜீனியஸ்களும் வசதியான வீட்டில்தான் உருவாகிறார்கள்.

இன்றைய சூழல் ஜீனியஸ்கள் உருவாவதற்கு உகந்ததாக இருக்கிறதா?

தகவல் தொடர்பு வாய்ப்புகள் குறைவாக இருந்த கால கட்டத்தில் தங்கள் சிந்தனைகளை உலகம் முழுவதும் வெளிப்படுத்தி அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பு சில சமயங்களில் சிலருக்கு குறைவாகக்கூட இருந்திருக்கிறது. ஆனால் இன்று உங்களுடைய புதிய ஒரு ஐடியாவை டிவியின் மூலமாகவும் இன்டர்நெட்டின் மூலமாகவும் உலகம் முழுவதற்கும் ஒரு நொடியில் கொண்டு போய் சேர்த்துவிட முடியும்.

எனவே முன்னெப்போது இருந்ததை விடவும் இன்றைய சூழலில் எல்லோருமே ஜீனியஸ்களின் வாழ்க்கையை அறியவும், தானும் பின்பற்றவும், ஜீனியஸ் ஆகவும் வாய்ப்புகள் அதிகம்.

மார்க் வாங்குபவர்கள்தான் ஜீனியஸா? அல்லது ஒரு மாணவன் பெறும் மதிப்பெண்ணை வைத்து பிற்காலத்தில் இவன் ஜீனியஸாக வருவான் என்று கண்டறிய முடியுமா?

எதையும் புரிந்து கொள்ளாமல் தேர்வெழுதி மதிப்பெண் பெற முடியும் என்பதால் மதிப்பெண்களை வைத்து நிச்சயம் ஒருவரின் தகுதியை அளக்க முடியாது. பொதுவாக ஜீனியஸ்களுக்கு இருக்க வேண்டிய தகுதி ஒன்றை நன்கு புரிந்து கொள்வது… அதையும் தாண்டி சிந்திப்பது.

எவ்வளவு சொன்னாலும் என்னால் என்னை ஜீனியஸ் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

இந்த உலகம் கொண்டாடிய பிறகே எல்லா ஜீனியஸும் தாங்கள் ஜீனியஸ் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். எல்லா கற்களுக்குள்ளும் சிற்பம் இருக்கிறது. சிற்பம் வெளிப்பட தேவை உளி தாங்கும் வலிவும் நல்ல சிற்பியும்.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பம் வெளிப்பட சிற்பிக்காக காத்திருக்காதீர்கள். சிற்பமும் நானே சிற்பியும் நானே என உணர்ந்தால் நீங்கள் சீக்கிரம் ஜீனியஸ் ஆகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *