நூற்றுக்கு நூறு வாங்க நூறு டிப்ஸ்

11. இயங்க வைக்கும் இலக்கு

படிக்கும்போது நம்மையும் அறியாமல் எதை எதையோ யோசிக்கத் தொடங்கி படிக்க உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே மறந்து யோசனையில் ஆழ்ந்து கிடப்போம். இந்த பகல் கனவு இயல்பான ஒன்றுதான் என்றாலும் இதனால் நாம் படிக்கும் நேரம் வீணாகிறது இல்லையா?

இதனால் படிக்க உட்காரும் போதும் சரி, படித்து முடித்த பிறகும் சரி உங்கள் அறையில் உங்கள் இலக்கை ஒட்டிவைத்து அதை ஒரு முறை பாருங்கள். அதை அடைந்து விட்டமாதிரி உணருங்கள்.

இலக்கு உங்களை தானாக இயங்க வைக்கும். கனவுகள் குறைந்து சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

12. என்ன வந்தாலும் சரி டெக்னிக்

இன்னும் சிலருக்கு பிடிக்காத பாடத்தை கையில் எடுத்துவிட்டால் போதும். அப்போதுதான் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். பாத்ரூம் போக வேண்டும் போல இருக்கும். போன் அடிப்பது நன்றாக காதில் கேட்கும். பசி எடுக்கும். தாகமாக இருக்கும். இதெல்லாம் மனம் செய்கிற மாயம். என்ன வந்தாலும் சரி எதற்கும் எழுந்திருக்க மாட்டேன். விடாமல் படிப்பேன் என்பதுதான் இந்த என்ன வந்தாலும் சரி டெக்னிக். இதனால் மெல்ல மெல்ல மனம் ஒன்ற ஆரம்பிக்கும்.

13. இசை கேட்டால் மனம் இசைந்தாடும்

மொசார்ட் அவர்களின் இசையை சிலரை தொடர்ந்து கேட்கச்செய்து அதன் பிறகு அவர்களின் மூளைத்திறனை ஆராய்ந்ததில் அதில் வியத்தகு முன்னேற்றம் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். (இதற்கு மொசார்ட் விளைவு என்றே பெயர் கொடுத்திருக்கிறார்கள்.) இசையின் வலிமையை இதைப்போல பல ஆராய்ச்சிகளில் நிரூபித்திருக்கிறார்கள். மாணவர்கள் பலரே படிக்கும்போது இசை கேட்க விரும்புவது மூளையில் இயல்பாகவே உள்ள இந்த விருப்பத்தால்தான். எனவே படிக்கும் நேரத்தில் திரை இசையைத் தவிர்த்து வாத்திய கருவிகளின் இசை தொகுப்பை கேட்பதால் நீண்ட நேரம் சோர்வின்றி படிக்க முடியும்.

14. பகல் கனவுக்கு முற்றுப்புள்ளி

தறிகெட்டு ஓடும் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னொரு எளிய வழி. படிக்கும் நேரத்தில் பாடங்களை மெல்ல முணுமுணுத்தபடி படிப்பது. இதன் மூலம் கற்பனைகள் நிற்காது. ஆனால் நாம் வாய்விட்டு படிப்பது நின்றுவிடும். பக்கத்தில் இருப்பவர்கள் நினைவூட்ட சீக்கிரம் பாடத்தை படிக்க துவங்கிவிடுவோம்.

15. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு இடம்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களை படிக்க வேண்டியிருந்தால் ஒவ்வொரு பாடத்தையும் ஒவ்வொரு அறையில் உட்கார்ந்து படிக்கலாம். இதனால் மூளை பாடங்களை தனித்தனியாகப் பதிவு செய்ய உதவியாக இருக்கும்.


16. படுத்துக்கொண்டே படிக்க வேண்டாம்

சாப்பிட, குளிக்க, உறங்க என நம் உடல் ஒவ்வொரு செயலையும் அதற்கேற்ற நிலைகளில் செய்கிறது. உறங்கும் நிலையில் நாம் படித்தால் விரைவில் நம் உடல் உறக்கத்திற்கு தயாராகிவிடும். எனவே நீண்ட நேரம் படிக்க வேண்டும் என்றால் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள்.

17. நிமிர்ந்து உட்கார்ந்தால் நிறையப் படிக்கலாம்

குனிந்து வளைந்து உட்காரும் போது நம் நுரையீரல் சுருங்குவதால் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவும் அதன் மூலம் நம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும். இதனால் படிக்க உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவோம். பிறகு நமக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று முடிவுக்கும் வந்துவிடுவோம். கொட்டாவி ஆக்ஸிஜன் குறைபாடுதானே தவிர ஆர்வக் குறைபாடு இல்லை. எனவே நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள். சுவாசமும் சீராக இருக்கும். சோர்வும் சட்டென்று ஏற்படாது.

18. திட்டமிட்டபடி படியுங்கள்:

உதாரணத்திற்கு மூன்று மணிநேரம் படிப்பது, இந்த இந்த பாடத்திற்கு இவ்வளவு நேரம் என்று முடிவு செய்து உட்கார்ந்திருப்பீர்கள். முதல் அரை மணி நேரத்திலேயே முதல் பாடம் சற்றே கடினமாக இருக்க பர்ஸ்ட் கெமிஸ்ட்ரி படிப்போம் என்று மனம் அந்த பாடத்திலிருந்து தப்பிக்க நினைக்கும். அப்போது உறுதியாக இருங்கள். புரிகிறதோ இல்லையோ திட்டமிட்ட நேரம் வரை படித்துவிட்டுஅடுத்த பாடத்தை படியுங்கள்.

19. ஐ லவ் ரீடிங்

பிடிக்காத உணவுசெரிக்காது. பிடிக்காத பாடம் மனதில் பதியாது. இந்த இரண்டும் அறிவியல் உண்மைகள். எனவே இந்த உண்மையை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு பாடம் கடினமாக இருக்கிறது. அதனால் பிடிக்காத பாடம் என்று முடிவு செய்துவிட்டீர்கள். முடிவு செய்தது கூட அந்த பாடம் பிடிக்காததற்கு காரணம். பிடிக்காத பாடம் என்கிற போது மனம் முதலில் ஈடுபாட்டோடு இருக்காது. ஈடுபாடு இல்லாமல் படித்தால் எப்படி மனதில் பதியும். பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிடிக்காத பாடம் பிடிக்காத பாடம் தான்.

உங்கள் நோட் புக்கில் பிடிக்காத நடிகர் படம் இருக்கிறது. என்ன செய்வீர்கள்? பிடித்த நடிகரின் படத்தை அதை மறைத்து ஒட்டிவைப்பீர்கள் இல்லையா. அதே போல உங்களுக்கு பிடிக்காத சப்ஜெக்ட் மேத்ஸ் எனில் அதற்கு அட்டை போட்டு அதன் மேல் ஐ லவ் மேத்ஸ் என்று எழுதி வையுங்கள்.

20. கடினமும் எளிதாகும்

சில மாணவர்கள் முதலில் கடினமான பாடத்தை படித்து முடித்துவிடுவார்கள். அந்த உற்சாகத்திலேயே மற்ற பாடத்தை முடித்துவிடலாம் என்பது அவர்கள் எண்ணம். இன்னும் சிலர் எளிதான பாடத்தை முதலில் படிப்பார்கள். பாடத்தை வேகமாகப் படித்த திருப்தியிலேயே பிறகு கடினமான பாடத்தையும் எளிதில் படித்துவிடுவார்கள். இரண்டில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, அதைக் கடைப்பிடியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *