சாதனைச் சதுரங்கம்

– ம. திருவள்ளுவர்

மாற்றமே ஏற்றத்துக்கான வித்து

வருமுன்னரே செயல்பட்டு உரிய மாற்றங்களை நாமே உருவாக்கிவிட வேண்டும்

மாற்றம் காணாத எதுவும் உயிர்த்திருப்பது அரிது. மாற்றமே நிலையானது. நிலைத்துக் கிளைக்க வேண்டுமானால்

மாறவேண்டும். நாம் எல்லோரும் இப்போதைய இன்றைய வாழ்நிலையிலும் – நாம் வாழும் சூழ்நிலையிலும் மாற்றத்தை விரும்பிக்கொண்டே இருக்கிறோம். மாற்றத்தை விரும்பும் நாம் – மாறத் தயாராக இருக்கிறோமா? என்பது நமக்கு நாமே கேட்டுக் கொள்ளப்பட வேண்டிய கேள்வி. மாற்றத்திற்கான தடை நம்முள் இருந்துகொண்டே இருக்கிறது. நாமே முன்வந்து மாறுவதில்லை. நம்முள் நடக்கும் மாறுதல்களை ஏற்றுக்கொள்வதுமில்லை. இதுவே பிறகு பெரும் சிக்கலாக வடிவெடுத்து விடுகிறது. மாறாக மாற்றத்தை விரும்பும்போதுதான் நாம் விரும்பும் ஏற்றத்தை வாழ்நிலையிலும் சூழ்நிலையிலும் நம்மால் நிஜமாகக் காணமுடியும்.

மாற்றத்தில் இரண்டு வகை உண்டு. மோசமான ஒரு விளைவைச் சந்தித்த பிறகு மாற்றத்தைக் கொண்டு வருவது ஒன்று. வரப்போவதை முன்னரே உணர்ந்து – அதைச் சந்திப்பதற்குத் தயாராய் – முன் கூட்டியே உரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது, மற்றொன்று.

“வரும் முன்னர் காப்பது” என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் சொன்னது.

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறி கல்லாதவர் – என்றவரும் வள்ளுவரே!
அறிவு நிறைந்தவர்கள், பின்னர் வரப்போவதை முன் கூட்டியே அறிந்திருப்பர் என்கிறார்.
எதிர்தாக்காக்கும் அறிவினார்க்கில்லை
அதிர வருவதோர் நோய்! – என்பதும் வள்ளுவர் தான்.

அடுத்து வரப்போவதை அறிந்து உணரும் அறிவுடையோர்க்கு எதிர்பாராமல் வந்து தாக்கும் நோயென்று ஏதுமில்லை – என்பது அதன் பொருள். வருமுன்னர் செயல்படுவதை மேலாண்மை உலகம் “PRO ACTIVE BEHAVIOUR” என்று குறிப்பிடுகிறது. சூழ்நிலையில் ஒரு மாற்றம் நிகழ்ந்து பிறகு நாம் மாறிக் கொள்வதை “REACTIVE BEHAVIOUR” என்பார்கள். சூழலில் ஏற்பட்ட மாற்றத்தை சமாளிப்பதற்கு அவசரமாக மேற்கொள்ளும் முயற்சியை மேலாண்மையில் “CRISIS MANAGEMENT” என்றழைக்கிறார்கள். அதாவது “நெருக்கடி கால மேலாண்மை’ என்பது அதன் பொருள். நெருக்கடி வந்த பிறகு நாம் செயல்படும் போது நமது செயல்களில் பதற்றமிருக்கும். நாமெடுக்கும் முடிவுகளில் தடுமாற்றம் இருக்கும். சில குளறுபடிகள் நேரும். பொருளும், நேரமும், சக்தியும் விரயமாகக் கூடும். அதுமட்டுமல்ல, மன உளைச்சலும் ஏற்படும். இவையாவும் விரும்பத்தகாத விளைவுகள். இவற்றைத் தவிர்க்க வேண்டுமென்றால் வருமுன்னரே செயல்பட்டு உரிய மாற்றங்களை நாமே உருவாக்கிவிட வேண்டும். மாற்றத்தை தவிர்க்க வேண்டுமெனில் முன்னிலை வகிக்க வேண்டும். அப்படி உருவாக்கப்படும் மாற்றமே புதிய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு உதவியாக அமையும், புதிய பாதையை உருவாக்கும்.

மாற்றத்தை நிகழவிட்டுக் காத்திருப்பதைவிட (வேடிக்கை பார்த்திருப்பதைவிட) மாற்றத்தை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சியே வெற்றியை நிலைப்படுத்தும். (அப்படிப்பட்ட முயற்சியே சவால் நிறைந்ததும் ஆகும்). “PRO ACTIVE BEHAVIOUR” – (வரும் முன்னர் காக்கும்) பயிலரங்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சிறுகதையை இப்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு கடற்கரையில் ஓரத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. ஒரு நாள் மாலை நேரத்தில் அந்த கடற்கரை வழியாக நடந்து சென்ற இரண்டு மீனவர்கள் அந்தக் கடலில் மறுநாள் ஒரு புயல் மையம் கொள்ளப் போவதாகவும் அதனால் அடுத்த நாள் காலையில் வலை வீசி மீன்களை பிடிக்கப்போவதாகவும் பேசிக் கொண்டே சென்றனர். இதை மூன்று மீன்களும் கேட்டன. “இப்போது என்ன செய்வது” என்று ஒரு மீன் கேட்டது. “புயல் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதுவரை எனக்கு கவலை இல்லை” என்றது முதல் மீன். இரண்டாவது மீன், “புயல் வரும் நேரத்தில் நான் ஏதாவது தந்திரம் செய்து தப்பித்துக் கொள்வேன்” என்றது. மூன்றாவது மீனோ சற்று சிந்தித்தபிறகு ஒரு தீர்மானத்திற்கு வந்தது. “நாளை புயல் அடிக்கப் போகிறது எனும் முன்னெச்சரிக்கை வந்த பின்னும் பேசாமல் இருக்க என்னால் முடியவில்லை. தயவு செய்து நீங்கள் இருவரும் என்னோடு வாருங்கள். கடலின் ஆழத்திற்கு சென்று நம்மை காத்துக்கொள்வோம்” என்றது. ஆனால் மூன்றாவது மீன் சொன்னதைக் கேட்க மற்ற மீன்கள் இரண்டும் தயாராக இல்லை. ஆழ்கடலுக்குள் செல்ல மறுத்துவிட்டன. மூன்றாவது மீனுக்கு வேறு வழி தெரியவில்லை. அது தீவிரமான சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தது. “நண்பர்களே, ஆபத்து வருவதை அறிந்தும் நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை என்றால் அது நம்மை நாமே அழித்துக் கொள்ளும் தற்கொலைக்குச் சமமாகி விடும். உங்களைப் பிரிவது வருத்தமாக இருந்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே மனதின் வலியோடு கடலின் ஆழத்திற்குச் செல்கிறேன்”, என்று கூறி கடலின் ஆழத்திற்கு நீந்திச் சென்றது.

அறிவிக்கப்பட்டது போலவே அடுத்த நாள் புயலும் வந்தது. புயல் வராது என எண்ணிய முதல் மீன் என்ன செய்வது என அறியாமல் வலையில் சிக்கிக்கொண்டது. இரண்டாவது மீன் வலையில் சிக்கிய பின் இறந்துவிட்டது போல் நடித்துத் தப்பிக்க முற்பட்டது. ஆனால் இறந்து போன மீன்களை, அந்த மீனவர்கள் கடற்கரையில் வெகு தொலைவில் தூக்கி எறிந்துவிட்டதால் இரண்டாவது மீனும் இறந்து போனது. மூன்றாவது மீன் தன் இடத்தை மாற்றிக் கொண்டதால் தப்பிப் பிழைத்தது.

இந்த கதை (அல்லது) சம்பவம் நமக்கு, “உரிய தருணத்தில் நமக்குள் நாம் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் அது ஆபத்தை ஏற்படுத்திவிடும்” என்னும் உண்மையையே வலியுறுத்துகிறது.
இதைத்தான் வள்ளுவரும்,
“வரும்முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்” என்கிறார்.

தீங்கு வருவதற்கு முன்பே காத்துக் கொள்ளாவிடில் தீயின்முன் வைக்கப்பட்டிருக்கும் வைக்கோல் போல் வாழ்க்கை எரிந்து அழிந்து போகக்கூடும், என்று, இன்று நாம் பேசும் “PROACTIVE MANAGEMENT” பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பே “தீர்க்க தரிசனத்தோடு” திருவள்ளுவர் கூறி வைத்ததால்தான் அவரை காலத்தை வென்று வாழும் தெய்வப்புலவராக உலகம் போற்றுகிறது.

வள்ளுவரைப் போற்றும் நாம், விவேகானந்தரைப் போற்றும் நாம், ஏசுநாதரைப் போற்றும் நாம், நபிகளைப் போற்றும் நாம், அவர்கள் பொன்மொழிகளாக எழுதி வைத்திருக்கும் நுணுக்கங்களை, நுட்பங்களை, இரகசியங்களை நாம் முழுமையாகக் கடைப்பிடிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டு நம் மனதில் உறுதியை வளர்த்துக் கொண்டால் நம்மால் முடியாதது எதுவும் இல்லை.

மாறுவது அவசியம் என்பதைப் புரிந்துகொண்டோம், அந்த மாற்றம் குடும்பத்தில், சமூகத்தில் – பண்பாடாய் – கலாச்சாரமாய் உருவெடுக்க வேண்டுமானால் அது முதலில் எங்கு தொடங்க வேண்டும்? அது மனித மனதில் உருவாக வேண்டும். ஒவ்வொரு மனிதரின் “மனோபாவம்” மாறினால் மட்டுமே ஒரு மாபெரும் மாற்றத்தை நாம் சமூகத்தில் காணமுடியும். பொதுவாக, நம்மில் பலர் மாற்றத்தை எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை. பழக்கத்திலிருந்து விடுபடும் மனோபாவம் நம்மிடம் குறைவு. மாற மறுப்பதால் பல நல்ல புதிய திட்டங்களை செயல்படுத்தியதில் ஆங்காங்கே சிரமம் காணப்படுகிறது. புதிய திட்டங்களை நிறைவேற்றிட வேண்டுமெனில் நம் மனோபாவம் மாறவேண்டும்.

இனி “மனோபாவம்” என்பதென்ன? மாற்றங்களை உருவாக்குவதில் மனோபாவத்தின் பங்கு என்ன? மனோபாவத்தை மாற்றிக் கொள்ளும் மார்க்கம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில்களைத் தேடி இனி பயணிப்போம்.

மனிதன் ஒரு அற்புதமான பிறவி. அவனது இனம் ஆறறிவு படைத்தது. அவனால் ஆக்க முடியாதது ஏதுமில்லை. ஆனால் அவனது ஆற்றலின் முழுமையை அவன் பெரும்பாலும் சரியாக அறிந்து கொள்வதில்லை. அவனை அவனுக்கு முறையாக அறிமுகம் செய்து கொண்டால் அவன் ஆளுமை பெற்று உயர்வடைவான். அந்த நிலைமை அடையும் வரை அவன் அறியாமையாலும், புரியாமையாலும், உயராமையாலும் தெளிவடையாமல் அவலங்களுக்கு ஆட்பட்டு, அலைபாய்ந்து, அவதியுற்று அலைக்கழிக்கப்படுகிறான். இந்த நிலை இனிமை தருமா? – என்றால் தராது. இந்த நிலையிலிருந்து அவன் விடுபட்டால் மட்டுமே அவனால் உண்மையான சுதந்திரத்தை – சுகத்தைக் கண்டடைய முடியும். தற்காலிகங்களை சுகமென்று எண்ணி சிக்கிக் கொள்வதை விட்டு – நிரந்தர நிம்மதியில் அவன் திளைக்க முடியும்.

மனிதன் எதனால் ஆனவன்? உடலால் – உயிரால் – ஆன்மாவால் என்னும் பகுப்பு ஒருபுறமிருக்கட்டும். மனிதனின் எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் – நம்பிக்கைகளுக்கும் – உணர்வுகளுக்கும் காரணமாகத் திகழும் மனதால் ஆனதே மனிதனுடைய நடைமுறை வாழ்க்கை என்பதை நாமறிவோம். உடலின் அமைப்பை உடற்கட்டு என்று குறிப்பிடுவது போல் கண்ணுக்குத் தெரியாதிருக்கும் மனதின் கட்டுமானத்தையே நாம் மனோபாவம் என்கிறோம். மனிதகுல மாற்றத்திற்கு அடித்தளமாகத் திகழும் அந்த “மனோபாவம்” குறித்து விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம்.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *