– மரபின் மைந்தன் ம. முத்தையா
தயங்கத் தயங்குங்கள்
மொத்த பூமிப்பரப்பில், ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே மலைகள் என்கிறது, பூகோளம். மனித வாழ்க்கையின் பெரும்பகுதிகூட செயல்களால் ஆனது. ஐந்தில் ஒரு பகுதிதான் சவால்களால் ஆனது. பூமி முழுவதும் பயணம் செய்ய ஒருவர் முடிவு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஐந்தில் ஒரு பங்கு மலையைக் கடப்பது எப்படி என்கிற கவலையிலேயே அவர் பயணம் செய்து கொண்டிருந்தால், சமவெளிகளில் பயணம் செய்யும் சந்தோஷத்தை இழந்துவிடுகிறார் இல்லையா?
இதே உதாரணத்தை மனதில் பதித்துக்கொண்டு வாழ்க்கைக்கு வாருங்கள். எப்போதோ எதிர்கொள்ள வேண்டிய சவால்களைப் பற்றிய அச்சம் மனதிலிருந்தால் அன்றாட அலுவல்கள்கூட சோர்வு தருவதாகவே இருக்கும்.
அன்றாட அலுவல்கள் மட்டும் சரியாகப் போய்க்கொண்டிருந்தால் போதும் என்று கருதுவது வாழ்வின் வெற்றிகளுக்கு வாசல் திறக்கக் கூடாது. சராசரி வேலைகளைவிடவும் சவால்களை விரும்புகிறவர்களே சாதனையாளர்களாக மலர்ந்திருக்கிறார்கள். “அச்சுறுத்தல் இல்லாத போது யுத்தத்தில் இறங்காதீர்கள்” என்பது சக்திமிக்க பொன்மொழி. அதேநேரம், அச்சுறுத்தல் இருக்கும்போதுகூட வலிமைகளை வெளிக்காட்டாமல் தயங்கி நிற்பது தவிர்க்கப்பட வேண்டிய குணம்.
ஜெரால்ட் மைக்கல்சன் என்பவர், நிர்வாகவியல் நிபுணர். அவரை அணுகினார் உணவக உரிமையாளர் ஒருவர். அவருக்கிருந்த பிரச்சினையை விளக்கினார். நிபுணர்கள் என்ன முயன்றும், அவருடைய பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. ஏன் தெரியுமா? “வாடிக்கையாளர்கள் ஆதரவு எங்கள் உணவகத்திற்குக் கிடையாது” என்ற அசைக்க முடியாத எண்ணம் உணவக உரிமையாளரின் உள்ளத்தில் வேரோடியிருந்தது.
அடுக்கடுக்கான தீர்வுகளை நிபுணர்கள் திட்டமிட்டு அறிக்கை கொடுக்கும் முன்பாகவே அவர் உணவகத்தை மூடியிருந்தார். என்னால் முடியாது என்று யாராவது எண்ணி விட்டால், அப்புறம் அவரால் மூன்றடிகள் கூட முன்னே நகர முடியாது. அப்புறம் எங்கே மலையை நகர்த்துவது?
மலை உதாரணத்துக்கே மறுபடி வருவோம். சிலருக்கு மலைப்பயணங்கள் என்றால் ஒத்துக்கொள்ளாது. மலையேறத் தொடங்கினாலே தலைசுற்றல் தொடங்கும். வாந்தி தொடரும். உடன் வருபவர்களையும் படுத்திவிடுவார்கள். எலுமிச்சம் பழத்தில் தொடங்கி எத்தனையோ உப கரணங்களைக் கைநிறைய வைத்திருந்தாலும் வேலைக்காகாது.
இவர்களைப் பொறுத்தவரை, மலைப்பயணம் என்றாலே பிரச்சினைதான். உண்மையில் பிரச்சினை மலையிலா இருக்கிறது? இவர்கள் உடம்பில்தான் இருக்கிறது. எதிர்ப்பு சக்தி குறைவு என்பது உட்பட எத்தனையோ காரணங்கள். தன்னை சரிபண்ணிக் கொள்ளாமல், எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்துவந்த மலைகளை நொந்துகொண்டு என்ன பயன்?
எவ்வளவு பெரிய சவால்களையும் ஏறிக்கடக்க முடியும் என்கிற அடிப்படை உந்துசக்தி இல்லாத போது எத்தனை பெரிய முயற்சிகளும் பலன்தராது.
வாழ்வில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கு ஆசைப்பட்டு, அதன்படியே விற்பனைத்துறையில் உலக சாதனையாளராக மலர்ந்தவர்தான் மார்க் விக்டர். தன் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், தன்னுடைய வழிகாட்டியாய், மதித்த ஒருவரிடம் அவர் கேட்ட கேள்வி, “சவால்களை முறியடித்து, சாதனையாளராய் மலர, நான் என்ன செய்ய வேண்டும்?” அந்த வழிகாட்டி சொன்னார், “ஒன்றே ஒன்றைச் செய்தால் போதும்”. என்ன அது? ஆர்வமானார் மார்க் விக்டர். அவருடைய வழிகாட்டி சொன்னார், “நேற்று நீங்கள் செய்யாத ஒன்றை, இன்று செய்ய வேண்டும். அதுதான் வழி”. இதற்குமுன் செய்யாததை, ஆர்வத்துடனும், அச்சமில்லாமலும் செய்வதுதான் சவால்களை எதிர்கொள்கிற சக்தியை நமக்குக் கொடுக்கும்.
இந்த உலகத்தில், தகுதியின்மையால் தடைபட்டு நிற்கும் வேலைகளைவிடவும் தயக்கம் காரணமாய் தடைபட்டு நிற்கும் வேலைகளே அதிகம்.
நெல்சன் மண்டேலா, ஒருமுறை சொன்னார், “நம்முடைய ஆழமான அச்சம், நம் குறைபாடல்ல. பலர் தங்களின் இருட்டான பக்கங்களைப் பார்க்க அஞ்சுகிறார்கள். மிகப்பலரோ தங்களின் வெளிச்சமான பகுதிகளைப் பார்க்கவே அஞ்சுகிறார்கள். கடவுளின் மகத்தான ஆற்றல், ஒரு சிலருக்குள் மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நாம் நம்முடைய அச்சத்திலிருந்து விடுதலை அடையும் போது, மற்றவர்களை விடுவிக்கும் மகத்தான ஆற்றல் நம்மை வந்தடைகிறது” என்றார் அவர்.
குப்பைக் கிடங்கை ஒட்டிய ஒரு நிலப்பகுதி விலைக்கு வந்தது. வாங்க நினைத்த ஒருவருக்கு, அருகிலிருக்கும் குப்பைக் கிடங்கு அருவருப்பைத் தந்தது. இன்னொருவருக்கு, அந்தக் குப்பைக் கிடங்கையும் சேர்த்து வாங்கி, குப்பைகளை அகற்றி, அந்த இடத்தில் அழகிய வளாகத்தைக் கட்டி எழுப்பும் யோசனை வந்தது.
நம்முடைய பலங்கள் அந்த நிலப்பகுதிபோல. நம்முடைய பலவீனங்கள் குப்பைக்கிடங்கு போல. நம்பார்வையில் குப்பைக் கிடங்கே பிரதானமாகத் தெரிந்தால், அழகிய நிலப்பரப்பை இழக்க நேரிடும். நம் பலவீனங்கள் தருகிற தயக்கத்தால் நம் பலங்களைக் கணக்கில் எடுக்காமல், சவால்களை சந்திக்கத் தயங்கி விலகி நடப்பது ஒருபோதும் வெற்றியைத் தராது.
வெற்றி பற்றிய விருப்பங்களை வளர்த்துக் கொள்பவர்கள், தாங்கள் கருதியதை சாதிக்கக் களத்தில் இறங்குபவர்களாக இருக்கிறார்கள். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தங்கள் இலட்சியத்தை நெருங்கவே பயன்படுத்துகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன், பில்கேட்ஸ் இந்தியா வந்தபோது, நிகழ்ந்தவொரு சம்பவத்தை தன் நூல் ஒன்றில் பகிர்ந்து கொள்கிறார், சுப்ரோட்டோ பாக்சி. விரல்விட்டு எண்ணி விடக்கூடிய சிறு எண்ணிக்கையில், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் புதுடெல்லியின் மவுரியா ஷெரட்டன் ஹோட்டலில் கூடியிருந்தனர். பில்கேட்சுடனான பிரத்யேக சந்திப்பு அது. தகவல் தொழில் நுட்பத்தின் எதிர்காலம் பற்றி பில்கேட்ஸ் பிளந்து கட்டப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் எல்லோரும் இருந்தனர்.
பில்கேட்ஸ் வந்தார். தகவல் தொழில்நுட்ப உலகுக்குத் தன்னுடைய பங்களிப்பாகிய “விண்டோஸ்” பற்றி விரிவாகப் பேசினார். அதன் சிறப்பம்சங்களை சிறப்பாக விளக்கினார். அதன் தொழில்நுட்ப மேம்பாடுகளைத் துல்லியமாய் விவரித்தார். விடைபெற்றார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர், தன் தயாரிப்பின் விற்பனையாளரைப் போன்ற தொனியில் பேசினாரே… ஏன்?
தன்னுடைய தயாரிப்பை அவர் நேசித்தார். இந்தியாவின் தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் பத்துப் பதினைந்து பேர்தான் அங்கே இருந்தார்கள் என்றாலும், அவர்களுக்கு தன் தயாரிப்பின் உள்ளும் புறமும் உணர்த்தப் படவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.
நம்முடைய மரியாதைக்கு, நம் தயாரிப்பைப்பற்றி நாமே பேசுவதா என்கிற தயக்கம் அவரைத் தொடவேயில்லை. நாமறியும் பில்கேட்சாக அவரை உயர்த்தியதே இந்தத் தயக்கமின்மை தான்.
தாண்டக் கூடியது சவால் எனும் மலை
தயக்கம் ஒன்றுதான் மாபெரும் தடை
(மலைகள் நகரும்)
Leave a Reply