எட்ட நில் பயமே கிட்ட வராதே

– டாக்டர். எஸ். வெங்கடாசலம், டாக்டர். ஆவுடேஸ்வரி

உலக நாடுகளின் பெரும் நெருக்கடிகளில் முதலிடம் பெறுவது ‘நகர்மயமாதல்’. எந்தத் திட்டமும் வரையறையுமின்றி நகரங்கள் பெருத்து வருகின்றன. வாழ்க்கை மதிப்பீடுகளோ சிறுத்துச் சிதைந்து வருகின்றன. குடும்பத்திற்கான இலக்கணமும் பண்புகளும் குலைந்து வருகின்றன. இதன் விளைவுகளாய் பற்றற்ற

உறவுகளும், தீராத அன்னிய மோகங்களும், குழந்தைகள் புறக்கணிப்பும், பெண்கள் மீதான அவமதிப்புகளும் நிகழ்கின்றன.

பதினைந்து வயதுப் பெண்ணை அவளது தாய் அழைத்து வந்தார். ஒளிரும் விழிகளும் மாறாத புன்னகையும் கொண்ட மலர்ந்த முகத்துடன் இயற்கை செதுக்கிய அழகிய ஓவியம் போல் காணப்பட்டாள். தாய் முகம் துயரக்களையுடன் இறுக்கமாய் இருந்தது. மகளைப் பற்றி விவரித்துவிட்டு “இவள் தூங்கி ஒரு மாதமாகி விட்டது! தூங்கினால் போதும்!” என்று முடித்தார். தூங்காத விழிகளா அவை? தூங்காத முகமா அது? மீண்டும் உற்றுப் பார்க்க…. அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை….. அத்தனை பிரகாசம்!

அவள் மூளைவளர்ச்சி குன்றியவள் என்றறிந்த போது இரக்கம் சுரந்தது. பாடங்களை மட்டுமல்ல, மனித இயக்கங்களையும் சூழலையும்கூட அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. “இனி அவளது அறிவுத்திறன் வளர வாய்ப்பில்லை” என்று மருத்துவ நிபுணர்களும், “வயதுக்கு வந்ததும் திருமணம் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சில உறவினர்களும் கூறியபோது தாயும் தந்தையும் திசை தெரியாமல் தவித்தனர். தங்களது முதுமையிலும், தங்கள் காலத்திற்குப் பின்னரும் மகளின் கதி என்ன என்று எண்ணி மருகினர். அவள் பொருட்டு அவர்கள் வடித்த கண்ணீருக்கு அளவில்லை. வேதனைகளும் குழப்பங்களும் மேலோங்க அவளை விஷ ஊசி போட்டுக் கொன்றுவிடலாமா என்று சிந்திக்குமளவு போய்விட்டனர். எஞ்சிய கருணையால் இன்னும் இருக்கிறாள்.

அவளுக்கு ஆனா ஆவன்னா தெரியவில்லை என்பதல்ல ஆண் பெண் பேதம் தெரியவில்லை என்பதே பிரச்சனை. எப்போதும் தனக்குத் தானே குழந்தைத் தனமாய் பேசிக் கொள்கிறாள். இரவுகளில் டிவி முன் நீண்ட நேரம் செலவிடுகிறாள். அல்லது படுக்கையில் விழித்தபடி பேசுவதும் பாடுவதும் மெல்லிய சப்தமாய் சிரிப்பதும், தூக்கம் தொலைந்து என்னென்னவோ செய்கிறாள்.

“அவளது தூக்கத்தில் மட்டுமல்ல… அறிவுத் திறனில், சிந்தனையில், செயல்பாடுகளில் கூட முன்னேற்றம் ஏற்படுத்த ஹோமியோபதி மற்றும் மலர் மருத்துவச் சிகிச்சைகளில் வாய்ப்புள்ளது” என்று கூறினோம். தாயின் முகம் மகிழ்ச்சியால் நிறைந்தது. உரிய ஹோமியோபதி மருந்துகள் வழங்கினோம். பத்து நாள் கழித்து அவளது தாய் செல்பேசியில் அழைத்து… தனது மகள் நன்கு தூங்கி விழிப்பதாகவும் தானாகப் பேசுவது குறைந்திருப்பதாகவும் கூறி நன்றி பாராட்டினார். அவளுக்கான சிகிச்சை தொடர்கிறது.

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை சிறப்புக் குழந்தைகளாய் சமூகமே கொண்டாட வேண்டும். மாறாக சுமையாகக் கருதும் நிலையே உள்ளது. இந்தக் குழந்தைகளிடம் பாலியல் வன்முறையும் நடக்கின்றன. இரண்டாண்டு முன்னர் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 53% குழந்தைகள் உறவினர்களின் பாலியல் தொல்லைகளுக்கு பலியாவதாகத் தெரியவந்தது.

உலகக் குழந்தைகளில் 19% இந்தியாவில் உள்ளனர். இந்திய மக்களில் 18 வயதுக்குட்பட்டோர் 42% என்றும், இதில் சரிபாதிக்கும் மேலாக பெண்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகளை மையப்படுத்தி பாதுகாப்பு, நல்வாழ்வுத் திட்டங்கள் போன்றவை தேவையான அளவிற்கு இங்கு இல்லை. சினிமாவில்கூட குழந்தைகளைப் பற்றிய படங்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர குழந்தைகளுக்காக படங்கள் எடுக்கப்படுவதில்லை.

குழந்தைகளிடம் கற்பனைகள் ஊற்றெடுக்க பெற்றோர் உதவலாம். பொய்களும், போலித்தனங்களும் கற்பித்தால் என்ன பயன்? பெற்றோரின் பேரன்பும், உயரிய பண்புகளும், பாதை காட்டலும் கிட்டாத குழந்தைகளின் பார்வைகளும் ஒழுக்க நெறிகளில் தடுமாறுகின்றன. இதனால் எதுசரி எது தவறு என்றறிய முடியாமல் நவீன காலம் விரித்துள்ள மாய வலைகளில் வீழ்ந்து விடுகின்றனர். எழ முடிவதே இல்லை.

“எண்ணிலா நோயுடையார் – இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலா குழந்தைகள் போல்- பிறர்
காட்டிய வழிசென்று மாட்டிக் கொள்வார்” என்று பாரதி கூறிய நிலையை இவர்கள் அடைகின்றனர்.

விடிய விடிய இணைய உலகத்திற்குள்… மூழ்கிக் கிடந்து, தூக்கம் கெட்டு, உடல் நலம் கெட்டு, மனநலம் கெட்டுக் குட்டிச் சுவராய் போன ஒரு செல்வந்தர் குடும்பத்து சீமந்த புத்திரன் அழைத்து வரப்பட்டான். இணையமே அவன் உலகம். அதில் பெறும் இன்பமே வாழ்க்கை குடும்பத்திலிருந்து, எல்லோரிடமிருந்து அவன் துண்டிக்கப்பட்டான். அவனை மீட்கும் முயற்சியில் காலம் கடந்து செயல்பட்ட பெற்றோருக்குத் தோல்வியே எஞ்சியது. அவனுக்கு ஏற்கனவே மனநல மருத்துவர்களிடம் BIPOLAR DISORDER, என்றும் OBSESSIVE COMPULSIVE DISORDER என்றும் சிகிச்சை எடுத்த நாட்களில் மாத்திரைகளின் வலிமையால் செயற்கையாக தூங்க வைக்கப்பட்டுள்ளான். நாளடைவில் மாத்திரைகள் பயனற்றுப் போயின. தொடர்ந்து விழிக்கிறான். இரவுகளில் இணையத்திற்குள் மூழ்குகிறான், அல்லது பெற்றோரிடம் கோபப்படுகிறான். ஆபாசமாகத் திட்டுகிறான். ஆவேசமாகத் தாக்குகிறான். பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவனுக்கு SCHIZOPHRENIA எனும் மனச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அவனை மீட்பதற்கு செர்ரிப்ளம், இம்பேசன்ஸ், செஸ்நட்பட், வால்நட் போன்ற மலர்மருந்துகளும் ஹையாசியாமஸ். வெராட்ரம் ஆல்பம், சாமோமில்லா போன்ற ஹோமியோ மருந்துகளும் உதவின. அவனிடம் அமைதியும் நிவாரணமும் காணப்பட்டாலும் முழு நலம் பெறவேண்டி சிகிச்சை நீள்கிறது.

புகை, மது போல இணையமும் ஓர் அடிமைப்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது. இணைய உரையாடல் தளங்களில் உரையாடுவோரில் 60% பேர்கள் பெயர், வயது, உயரம், நிறம், எடை போன்றவற்றை போலிகளாகத் தருவதாக ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. எதிர்பாலினரை வசீகரிக்கும் விதத்தில் தகவல்கள் தந்து…. ஒருவித கிளர்ச்சி கொண்ட போதையில் பாலியல் உரையாடல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் உடலும் மனமும் பாழாகின்றன.

எங்களிடம் சிகிச்சை பெற்ற இணைய அடிமை இளைஞனை ஆய்வு செய்த போது அவனது வீழ்ச்சிக்கு இரு முக்கியக் காரணங்கள் புலப்பட்டன. 1. அவனது மூத்த சகோதரன் நல்ல நிறம். நல்ல படிப்பு. அவன் கறுப்பு. படிப்பு சுமார். மிகச் சிறிய வயதிலேயே இருவரையும் ஒப்பிட்டுப் பேசுவது அம்மாவின் வழக்கம். மூத்தவன் ‘என் செல்லம்’ என்று கூப்பிடுவதும் அவனை ‘கருவாயா’ என்று கூப்பிடுவதும் நடந்துள்ளது. 2. சிறு பிராயம் முதல் அன்பை, நிம்மதியை, அங்கீகாரத்தைத் தேடித் தேடி அலுத்து அயர்ந்து போன அவனது மனம் இணைய உலகில் சரணடைந்துவிட்டது. அவன் விரும்பியதெல்லாம் அங்கு கிடைப்பதாய் ஒரு மாய உணர்வு.

தாழ்வு மனப்பான்மை உள்ளோரும், இணையத்தில் சங்கமிக்கிறார்கள். சராசரி வாழ்வில் ஹீரோ, ஹீரோயின்களாய் ஆளுமை பெற இயலாமல் தோற்று இணைய உலகில் முகம் மறைத்து சாகசம் நிகழ்த்துகின்றனர். இதனால் நிஜவாழ்வின் நிழல்கூட அவர்கள் மீது படிவதில்லை.

அன்போடும், அறிவோடும், பண்பார்ந்த பார்வைகளோடும் வளர்க்கப்படும் இளைஞன் இணையத்தை படிக்கட்டுகளாய் பயன்படுத்தி முன்னேறுவான். மற்றவர்கள் இணைய அடிமைகளாய், INTERNET ADDICTION DISORDER (I.A.D.) எனப்படும் பாதிப்பு உள்ள நவீன நோயாளிகளாய் மாறுகின்றனர்.

இதனால்தான் தென்கொரிய அரசு 1000க்கும் மேற்பட்ட மனநல ஆலோசகர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்து இணையப் பழக்க அடிமைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. சீனாவில் 17 சதவீத பதின் பருவத்தினர் இணைய அடிமைகளாய் உள்ளனர். சீன அரசு அதிர்ச்சி அடைந்து, துரிதமான மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. பதின்பருவத்தினர் கணினி கஃபேக்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இளைஞர்களைக் கெடுக்கும் பல்வேறு இணைய தளங்களை முற்றிலும் தடை செய்துள்ளது. பீஜிங் அருகே டாக்ஸிங் மருத்துவமனையில் தினமும் 60 முதல் 280 பேர்கள் வரைத் தாமாகவே முன்வந்து இணைய அடிமை மீட்புச் சிகிச்சை பெறுகின்றனர். சீன ராணுவத்தினரால் நடத்தப்படும் போதை மீட்புச் சிகிச்சை மையங்கள் இணைய அடிமை மீட்புக்கும் பயன்படுத்தப் படுகிறது.

குழந்தைகளுக்கு பெற்றோரும் ஆசிரியரும் திசைகாட்டிகளாய் அமைந்துவிட்டால் எதிர்காலம் சிறக்கும். பள்ளிப் பாடங்களும், மனப்பாடங்களும், மதிப்பெண்களும் மட்டுமே இலக்காகக் கொண்டு பிள்ளைகளை அழுத்தம் கொடுத்தால் வாழ்வியல் பண்புகளையும், உயர்ந்த பழக்கங்களையும் எங்கே, யார் கற்றுத் தருவார்கள்?

“எறும்புகள் நசுக்கப்படுவதற்கு
என்ன காரணமிருக்க முடியும்
அது எளிது என்பதைத் தவிர?” என்றொரு கவிதை உண்டு. குழந்தைகளும், சிறுவர்களும் எளிய உயிர்கள்தான். அவர்களின் வாழும் உரிமைகள் காக்கப்படவேண்டும்.

“கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால்
நீரிலும் தேன் ஊறும்”

என்ற உன்னத உணர்வுகளோடு குழந்தைகளைக் கொண்டாடி மகிழ்வோம். அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் சொத்துக்கள். வருங்கால பாரதத்தின் சிற்பிகள்.

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *