மந்திரமும் மனதின் திறமும்

சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர் கூட்டம் 01.11.2009 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு கோவை சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராசினி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

வள்ளலாரின் அணையா ஜோதியால் தன் ஆளுமை நிறைந்த சன்மார்க்க அரங்கம் 20 வயதே நிரம்பிய இளம் ஞானி பாலரிஷி அவர்களின் வருகையால் மேலும் தன் ஆளுமைத் தன்மை மிகுந்தது என்றால் அது மிகையல்ல. சிகரம் உங்கள் உயரம் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் என அரங்கு நிரம்பி ததும்பியது. வந்திருந்தவர்களின் முகங்களில் கிடைக்கும் தெளிவுக்கான வரவேற்பு தெரிந்தது.

‘சிகரம்’ பொருளாளர் திரு சுரேஷ்குமார் வரவேற்புரை நல்க, நிறுவனர் தலைவர் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா துவக்கவுரை வழங்கினார். அவர் தமது உரையில் மனிதனின் மனச் சஞ்சலமான நேரங்களில் இறைவன் குறித்த மந்திரங்களும், நாமங்களும் மனநிம்மதியையும் ஆறுதலையும் தருகின்றன என்று குறிப்பிட்டார்.

10 வயதில் அருள் நிலையை பெற்றவர்; சித்தர் மரபை தம் குருமரபாக கொண்டிருப்பவர்; மனதின் சக்தி பற்றியும் ஒலி இசை ஆகியவற்றின் அதிர்வுகள் பற்றியும் ஆய்வு செய்து வருபவருமான பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராசினி அவர்கள் மந்திரமும் மனதின் திறமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தனக்கே உரித்தான தேவிலி மந்திரத்துடன் உரையை துவக்க, மந்திரத்தால் மக்களின் மனது வசப்பட்டது. தமது உரையில், “நம்முடைய மனம் தான் நம்மை வழிநடத்துகின்ற சக்தி. மனதை அழகாகவும் அழகில்லாமலும் வைத்துக்கொள்வது நம் கைகளில்தான் உள்ளது. மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் வாழ வேண்டும். தவறான செயல்களால் மனம் சஞ்சலப்படும். அதற்கென்று பரிகாரங்கள் எதுவும் கிடையாது. உள்ளம் தூய்மையாக இருந்தால்தான் நாமும் தூய்மையாக இருக்கமுடியும்.

பிரச்சனைகள் இல்லாதவர்கள் என்று இங்கு யாராவது இருக்கிறீர்களா? இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை.

தொழிலாளர்கள் பிரச்சனை, எதிர்காலம் பற்றிய பயம், ஏமாற்றம், படித்த சான்றோர் பெருமக்களிடம் பலருக்கும் பயம், ஒரு வித தயக்கம். இவை பிரச்சனைகள் என்பது உங்கள் கருத்து. எந்த பிரச்சனைக்கும் முடிவுண்டு. அமர்ந்து யோசிக்க வேண்டும். பேசவேண்டும். உட்கார்ந்து பிரச்சனைகளைப் பற்றிப் பேசும்பொழுது எத்தகைய தன்மையுடையதாக இருந்தாலும் அவை சரியாகிவிடும்.

எதிர்காலம் பற்றிய பயம் தேவையற்ற ஒன்று. நமக்கு உரித்தான செயல்களை சரியாக செய்ய வேண்டும். பலனை இறைவனிடம் விட்டு விடவேண்டும். நான் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. தவறில்லை. நான் மட்டும்தான் என்று மாறுகின்ற போதுதான் அது அகம்பாவம் என்கின்ற தன்மையுடையதாக மாறிவிடும். அகம்பாவ பாவனை இல்லாமல் இருக்க வேண்டும்.

பிறப்பு இறப்பை முடிவு செய்ய முடியாது. ஆனால் வாழ்கின்ற வாழ்க்கையை நாம் முடிவு செய்ய முடியும். நம் கைகளில்தான் வாழ்க்கை இருக்கிறது. கலியுகத்தின் நன்மை தீமை பகுத்தறிந்து நடக்கவேண்டும். உணவு வகைகளில் நமக்குக் கட்டுப்பாடு தேவை. காரம் மசாலா கலந்த உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத சாத்வீக உணவுகளை உண்ண வேண்டும். அதற்கு நம் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும்.

கோபத்தை தவிர்த்தல் மிகவும் நல்லது. கோபம் ஏற்படும்போது மன இறுக்கமும், படபடப்பும் ஏற்படும். கண்ணாடி நம் உருவத்தை பிரதிபலிப்பது போன்று நம்முடைய உணர்வுகள் நம்மை பிரதிபலிக்கின்றன. நல்லவை எண்ணுதல் முக்கியம். செயல்படுத்துதல் அதனினும் நன்று” என்று உரை நிகழ்த்தினார். கூட்டம் இனிதே நிறைவுற்றது. நிறைவாக தியானப் பயிற்சியும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *