வல்லமை தாராயோ

பல மொழிகள் படியுங்கள் படிப்படியாய் உயருங்கள்

தீபாவளி வெளிச்சத்தின் சுவடுகள் வானத்தில் மிச்சமிருக்கும்போதே அக்டோபர் 18 மாலை, கோவை பாரதீய வித்யா பவனில் அலை மோதியது மக்கள் வெள்ளம்.

மிகச்சரியாக மாலை 6.15 மணிக்கு வல்லமை தாராயோ நிகழ்ச்சி தொடங்கியது.

‘சிகரம் உங்கள் உயரம்’ அமைப்பின் உறுப்பினர் திரு. ஐ.எஸ்.ஓ. நாகராஜ், வெற்றிப் பயணம் குறித்து உருவகமாய் புதிய கோணத்தில் உரையாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

‘நமது நம்பிக்கை’ ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா வாழ்த்துரை வழங்கினார்.

பேரா. த. ராஜாராம், தன் சிறப்புரையில் பாரதத்தின் வரலாற்றுப் பெருமைகளே நம்பிக்கை உணர்வின் நிகரற்ற புதையலாக விளங்குவதை நினைவு கூர்ந்தார்.

நான்கு வயதுக் குழந்தையாய் பகைவர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட ராணா பிரதாப் சிங், 53வது வயதில் எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்து பதவியில் அமர்ந்த வரலாற்றை உணர்ச்சி பொங்க விவரித்தார் அவர்.

“இந்தியாவை அச்சுறுத்தும் சீனாவைவிட, இந்தியர்கள் வலிமையோடு விளங்குவது, ஆங்கிலத்தில் இந்தியர்கள் கொண்டிருக்கும் ஆற்றலால்தான். ஆகவே பலமொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். ஜப்பானுடன் வர்த்தகத் தொடர்பும் தொழில் நுட்பத் தொடர்பும் வளர்கிறது. எனவே ஜப்பான் மொழி பயிலுங்கள்.

ஆரம்பத்தில் பேசிப்பழகும்போது ஆங்கிலம் தப்புத்தப்பாகப் பேசினால் கவலைப்படாதீர்கள். அதற்கு ஆங்கிலேயர்கள்தான் கவலைப்பட வேண்டும்.

காந்தியடிகள், ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரிக்குக் கடிதம் எழுதினார். சாஸ்திரி, அதிலுள்ள இலக்கணப் பிழைகளைக் குறிப்பிட்டு காந்திக்கு அனுப்பினார். காந்தி பதில் எழுதினார். “என்னிடம் இப்படி இலக்கணப் பிழைகள் உள்ள எத்தனையோ கடிதங்கள் உள்ளன. அவற்றைத் திருத்தித்தர உதவியாளர் இல்லை. சாஸ்திரி அந்த வேலைக்கு வரவேண்டும்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். தலைமையில் இது ஒரு வகை.

இன்னொரு வகையான தலைமையும் உண்டு. பாரதத்தின் பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் அவர்களுக்கு 23 மொழிகள் தெரியும்.

அவர் ஸ்பெயின் நாட்டுக்குப் போனபோது ஸ்பெயின் பிரதமர் சிரமப்பட்டு ஆங்கிலத்தில் பேசினார். ஆனால் நரசிம்மராவ் ஸ்பெயின் மொழியில் பதில் பேசினார்.

மகிழ்ந்து போன ஸ்பெயின் பிரதமர், இந்தியாவுக்குத் தரவேண்டிய உதவியைப் பலமடங்கு கூடுதலாகத் தந்தார்.

நம் பாரதத்தின் பெருமைகளை, குழந்தைகளுக்குத் தாய்மார்கள்தான் உணர்த்த வேண்டும். சத்திரபதி சிவாஜி சிறுவனாக இருந்த காலத்தில் அவருடைய அன்னை ஜீஜாபாய், சிவாஜியுடன் சதுரங்கம் விளையாடுவார். தன் மகனிடம் திட்டமிட்டுத் தோற்றுப் போவார். சதுரங்கம் விளையாடும் சாமர்த்தியமும், அதில் வெற்றி பெறவேண்டும் என்ற வேகத்தையும் குழந்தைப் பருவத்திலேயே விதைத்தார் ஜீஜாபாய்.

முயற்சிதான் மனிதனை முன்னெடுத்துச் செல்லும். முயற்சியின் மறுபெயர்தான் கடவுள் நம்பிக்கை.
நிர்வாகவியல், உளவியல் என்று காலத்தை வென்று நிற்கும் கருவூலம் திருக்குறள்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் – எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்” என்றார் வள்ளுவர்.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றபோது, இந்தத் திருக்குறள்தான் தன் வெற்றிக்குக் காரணம் என்று சொன்னார்.

சமீபத்தில் ஒபாமாவிடம் ஒரு மாணவி கேட்டார், “நீங்கள் வாழ்வில் யாரை சந்திக்க விரும்புவீர்கள்?” என்று.
“இந்தியாவின் தேசத் தந்தை காந்தியடிகளை சந்திக்க விரும்புவேன்” என்றார் ஒபாமா.

காந்தியடிகள் சொன்னார், “என்னை ஒரு நாள் சர்வாதிகாரி ஆக்கினால் மதுக்கடைகளை மூடிவிடுவேன்” என்றார். இந்த நாட்டில்தான், இன்று பெரிய தலைவர்களுக்குக் கூட தீபாவளிப் பரிசாக மதுபாட்டில்கள் அனுப்பப்படுகின்றன. “கள்ளுக்கடை மறியலில் அடிபட்ட தியாகியின் பேரனுக்கு டாஸ்மாக்கில் வேலை” என்றொரு புதுக் கவிஞன் எழுதினான்.

ஈயம் காய்ச்சி ஊற்றப்பட்ட பிரிட்டிஷ் லத்திகளை எதிர்கொண்ட சத்தியாக்கிரகிகள், அடியைத் தடுக்கக்கூட கைகளை உயர்த்தக் கூடாது என்று காந்தியடிகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நிபந்தனை விதித்தார். அதனை உள்ளத்தில் தாங்கினர் தியாகிகள் என்பதற்கு சாட்சிதான் திருப்பூர் குமரன். தேசியக் கொடியில் உள்ள காவிக்கொடி அத்தகைய தியாகிகளின் இரத்தத்தால் வந்தது.

நாற்பத்தாறு நாடுகளை ஆட்டிப்படைத்த பேரரசை தன் கோட்பாடுகளால் வீழ்த்திய காந்தி நம்பிக்கையின் நிகரற்ற அடையாளம்.

“அவுரி போராட்டம்” ஒன்றை காந்தியடிகள் முன்னெடுத்துச் சென்றார். அப்போது ஒரு மாவட்ட ஆட்சியாளர் கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தார். மாவட்டத்தில் காந்தியை எங்கு கண்டாலும் சுடுகிற உரிமை போலீசுக்குத் தரப்பட்டது. இரவு ஊருக்கு வந்த காந்தியிடம் தொண்டர்கள் இந்தத் தகவலைத் தந்தார்கள். இரவு பதினொன்றரை மணியிருக்கும். நேராக கலெக்டர் வீட்டுக்குப் போய் நின்றார் காந்தி.

“வணக்கம். என் பெயர்தான் காந்தி. என்னைக் கண்டதும் சுட உத்தரவு என்று கேள்விப்பட்டேன். உங்களுக்குத் தேடும் வேலை வேண்டாம் என்று நேரில் வந்தேன்” என்றார் காந்தி.

கலெக்டர் கண் கலங்கி, “நீங்கள் உண்மையிலேயே மகாத்மா” என்று வணங்கினார். இவருக்கு நிகரான மாவீரர் நேதாஜி. “நேதா” என்ற சொல்லுக்கே தலைவன் என்று பொருள். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்து வந்த நேதாஜி, பன்னிரண்டு வயது தொடங்கி, வெறுந்தரையில் படுப்பார் அவர். சக இந்தியர்கள் நிலை கண்டு பிள்ளைப் பருவத்திலேயே தியாக வாழ்வைத் தொடங்கிய தலைவர் அவர்.

நிறம், தோற்றம், உடல் வலிமை போன்ற அளவுகோல்களைத் தாண்டி நம்பிக்கையாளர்கள் வாழ்வில் உயர்கிறார்கள்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது கையில் ஆயுதமின்றி, உடல் சல்லடைக் கண்ணாய் குண்டுகளால் துளைக்கப்பட்டபோதும்கூட, சிறிதும் கலங்காமல் தீவிரவாதியைக் கைப்பற்ற உதவினார் துகாராம் ஆம்லே. உலக வரலாற்றிலேயே இது சாதனை” என்றார் பேராசிரியர் த. ராஜாராம்.

விழா நிகழ்ச்சிகளை செல்வி. ஆர். பிரவீணா தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *