வல்லமை தாராயோ : வருவது தானே வரும்; வருவதுதானே வரும்!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், “நமது நம்பிக்கை” மாத இதழுடன் இணைந்து 17.08.2008 அன்று திருச்சியில் நடத்திய வல்லமை தாராயோ நிகழ்ச்சி வாசகர் வெள்ளமும் மழை வெள்ளமும் சங்கமித்த அபூர்வ சம்பவமாய் அமைந்தது. “நமது நம்பிக்கை” மாத இதழ் ஆசிரியர் திரு. மரபின் மைந்தன் முத்தையா, திரைப்படக் கலைஞர் திரு. டெல்லி கணேஷ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். திரு. சிவகுருநாதனின் சிறப்புமிக்க ஒருங்கிணைப்பில் நடந்த இந்த நம்பிக்கைத் திருவிழாவில், திரு.டெல்லி கணேஷ் நிகழ்த்திய உரையிலிருந்து…

அன்றாட வாழ்வின் விதம்விதமான அம்சங்கள், வித்தியாசமான சம்பவங்களையும், மனிதர்களையும எதிர்கொள்ளச் செய்கிறது. நம்பிக்கையும் நெஞ்சுரமும் கொண்டு வாழ்வை எதிர்கொள்கிற வல்லமை நமக்கு வேண்டும்.

நூறு பேர் சேர்ந்திருக்கும் இடத்தில் ஒற்றை மனிதன் கலவரம் விளைவிக்கும் போது யாரும் தட்டிக் கேட்கத் தயங்குகிறார்கள். நமக்கேன் வம்பு என்று நழுவுகிறார்கள். நாமும் ஒதுங்கிவிடாமல் குரல் கொடுத்தால் மற்றவர்கள் உடனே சேர்ந்து கொள்வார்கள். முதல் குரல் எழுப்புகிற முனைப்பும் நெஞ்சுரமும் இருப்பவர்களே பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள்.

இத்தகைய பண்புகளைக் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். குழந்தைகளை மதிப்பெண் வாங்குகிற இயந்திரமாகவே பல பெற்றோர்கள் பார்க்கிறார்கள். தேர்வில் “மார்க்” வாங்குவது முக்கியம். அதே நேரம் எதிர்மறையான “ரிமார்க்” வராமல் வாழக் கற்றுக் கொள்வதே இன்னும் முக்கியம்.

ஒரு பெண்மணி, தன் குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பார். தன் குழந்தை எண்பத்தைந்து மதிப்பெண்கள் வாங்கியிருந்த நிலையில், இன்னொரு குழந்தையின் அம்மாவிடம், “உங்கள் குழந்தைக்கு எவ்வளவு மதிப்பெண்” என்றார். அவர், “தொண்ணூற்றைந்து மதிப்பெண்கள்” என்றதும் தன்னுடைய குழந்தையைக் கடிந்துகொண்டார். அடுத்த தேர்வில் இவருடைய குழந்தை அதே எண்பத்தைந்து மதிப்பெண்கள் வாங்கியிருந்தது. முதலில் தொண்ணூற்றைந்து மதிப்பெண்கள் வாங்கிய குழந்தையோ எழுபது மதிப்பெண்கள் வாங்கியிருக்க, அதன் அம்மா, “டீச்சர் ஏதோ தவறாகத் திருத்தி விட்டார்” என்றார். இந்த இரண்டு தாய்மார்களின் மனநிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் குழந்தையின் அறிவை அளக்கும் அளவுகோல் மதிப்பெண் மட்டும் அல்ல. மற்ற அம்சங்களும் அதில் இருக்கின்றன.

நல்ல நண்பர்களை, நம்பிக்கை தரும் உறவுகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் பொதுவாக எதற்கும் அவ்வளவு விரைவில் அஞ்சிவிடமாட்டேன். ஒருமுறைஉடல்நலக்குறைவு ஏற்பட்டபோது மருத்துவர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

ஒரு நண்பரிடம் விஷயத்தைச் சொன்னேன். “சில மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைக்கு ஆள் கிடைக்காமல் அலைகின்றன. அதற்கெல்லாம் போகாதே. வேறு மருத்துவரைப் பார்” என்றார்.

இன்னொரு நண்பரிடம் விவரம் சொன்னேன். “கொஞ்சமிரு வருகிறேன்” என்றவர் சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்தார். “பைபாஸ் இப்போதெல்லாம் சாதாரண விஷயம். எனக்கு நடந்தபோது நீ கூட வந்து பார்த்தாய். உனக்கு நடக்கும்போது நான் வந்து பார்ப்பேன். மருத்துவர்கள் காரணமில்லாமல் சொல்ல மாட்டார்கள்” என்று உற்சாகப்படுத்தினார். இரண்டு நண்பர்களும் வேண்டியவர்கள்தான். அணுகுமுறையில்தான் அடிப்படை வேறுபாடு.

ஒருவரை சந்திக்கப் போகிறபோதே “அவரைப் பார்க்கப் போகிறேன். அவர் இல்லையென்றால் திரும்பிவிடுகிறேன்” என்று சிலர் சொல்வார்கள். அந்த மனப்பான்மையே தவறு. “அவர் நிச்சயம் இருப்பார். பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன்” என்ற உணர்வுடன் போனால் அந்த சந்திப்பு சாத்தியமாகும். உங்களுக்கு வரவேண்டியது தானாகவே வரும். வராததைப் பற்றி வருந்துவதில் எந்தப் பலனும் இல்லை.

யாரைப் பற்றியாவது கருத்துச் சொல்வதென்றால், மனதில் கள்ளமில்லாமல் உண்மையைப் பேசவேண்டும். நீங்கள் சொன்னது விமர்சனமாக இருந்தால்கூட அதிலிருக்கும் உண்மை, சம்பந்தப்பட்டவரைக் காயப்படுத்தாது. இதற்கு என் வாழ்விலேயே ஒரு சம்பவம் நடந்தது.

“சிந்து பைரவி” படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. விழா மேடையில் இயக்குநர் பாலசந்தர், கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவக்குமார், இசைஞானி இளையராஜா போன்றவர்களுடன் நானும் அமர்ந்திருந்தேன். விழாவில் இயக்குநர் பாலசந்தர் பேசுகிற போது அனைவரையும் பாராட்டினார். என்னை மறந்துவிட்டார். நான் இருமியும் கனைத்தும் என் இருப்பை நினைவூட்டியதும் என்னைப் பற்றியும் குறிப்பிட்டார்.

விழா முடிந்து வெளியே வரிசையாக எங்களுக்காக கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எதில் வேண்டுமானாலும் ஏறிக்கொண்டு இரவு விருந்துக்குப் போகலாம் என்று சொல்லப்பட்டிருந்தது.

நானும், என்னுடன் வந்திருந்த இருவரும் பின்சீட்டில் ஏறிக்கொண்டோம். கார் கிளம்புகிற போது முன்னால் ஒருவர் வந்து ஏறினார். உடன் வந்த நண்பர், “இயக்குநர் பாலசந்தரிடம் நானொரு விமர்சனத்தைச் சொல்லவேண்டும்” என்றார்.

நான் அவரிடம், “இயக்குநர் மிகவும் உணர்ச்சிமயமான மனிதர். எப்போது எப்படி நடந்துகொள்வார் என்று தெரியாது. மேடையில் பேசும்போது என்னைக் கூட மறந்துவிட்டார். நீ உன் விமர்சனத்தைக் கடிதமாக எழுது. பொறுப்பாக பதில் எழுதுவார். அலுவலகத்தில் பார்த்துப்பேசு. காபி கொடுத்து காது கொடுத்தும் கேட்பார். வந்த இடத்தில் எதையாவது கேட்டு கோபித்துக் கொள்ளப் போகிறார்” என்றேன். உடனிருந்த என் உறவினர் என்னைக் கிள்ளினார். பார்த்தால் முன் சீட்டில் இயக்குநர் பாலசந்தர்!!

அதிர்ந்து போனேன். பிறகு தனியாக அவரைப் பார்த்து “தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றேன். பிறகு நடிகர் சிவக்குமாரிடம் இயக்குநர், “டெல்லி கணேஷ் என்னை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். என் இயல்புகளை உன்னிப்பாக கவனித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டதாகக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

நம்பிக்கையும் நல்லெண்ணமுமாக உணர்வுகள் இருந்தால் உறவுகளும் வாழ்வும் சீராகவே நடக்கும்” என்றார்.

விழாவில் அரங்கம் கொள்ளாத அளவு வாசகர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.