வீட்டுக்கு வீடு வாசிப்பு
இளம் பருவத்தினர், இல்லங்களில் நூலகம் அமைக்க வேண்டுமென்ற ஆலோசனையை அளித்தவர் அப்துல்கலாம்.
பயன்தரும் நூல்களும், படைப்பாளுமையை மேம்படுத்தும் புத்தகங்களும் இளைஞர்களின் இதயங்களில் புதிய வெளிச்சங்களைப் புகுத்த வல்லவை.
பார்க்கும் பழக்கத்தின் பிடியைவிட்டு படிக்கும் பழக்கத்திற்கு எல்லா வயதினருமே மாறிவருவது மிகவும் நல்லது. இந்தப் பழக்கத்தைப் புதிதாக உருவாக்கிக் கொள்வதற்கென்று சில வழிமுறைகளை வீட்டில் கைக்கொள்ளலாம்.
முதல் முயற்சியாக, வீட்டில் எல்லோரும் கூடி அமரும் இடத்தின் மையப்பகுதியாக தொலைக்காட்சி இருக்கும் நிலையை மாற்றி, இதுவரை தொலைக்காட்சி இருந்த இடத்தில் அழகிய புத்தக அலமாரி ஒன்றை அமைக்கலாம். தொலைக்காட்சியை சிறிய அறைகள் ஏதாவது ஒன்றிற்கு மாற்றலாம்.
இரண்டாவதாக, மாத செலவுத் திட்டத்தில் புத்தகத்துக்கென்று தொகையை ஒதுக்கலாம். பாடத்திட்டத்தில் உள்ள புத்தகங்கள் நீங்கலாக, பொதுவான புத்தகம் ஒன்றினையாவது ஒவ்வொரு மாதமும் புதிதாக படிக்க வேண்டும் என்கிற பழக்கத்தை சிறியவர்களிடம் குடும்பத் தலைவர்கள் கொண்டு வரலாம்.
மூன்றாவதாக, திருமணம் போன்ற வைபவங்களில் வழக்கமான “மொய்”யுடன் ஏதாவதொரு புத்தகத்தையும் பரிசாகக் கொடுக்கலாம்.
புதுமனை புகுவிழா, பிறந்த நாள் போன்ற கொண்டாட்டங்களில் புத்தகங்களை மட்டுமே, பரிசளிப்பது என்கிற பழக்கத்தை ஏற்படுத்தலாம்.
வீட்டிலிருக்கும் வெவ்வேறு வயதினரின் விருப்பங்களுக்கு ஏற்ற புத்தகங்களை சுழற்சி முறையில் மாதா மாதம் வாங்குவதோடு, வீட்டில் இருக்கும் சிறியவர்களை, நூலகப் பரிசளிப்புப் போட்டிகளுக்கு ஆளாக்கி பரிசுகள் தரலாம்.
புது வெளிச்சம் தரும் புத்தகங்களின் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்.
உங்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Leave a Reply