– க. அம்சப்பிரியா
பெரும்பாலோரின் மனதிற்குள்ளும் ஒரு மிருகக்குணம் இருபத்தி நான்கு மணி நேரமும் விழித்துக் கொண்டேயிருக்கிறது. வாய்ப்பு வருகிறபோது தன் குணத்தைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட குணத்தோடு ஒருவன் தீராத மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தான்.
அவன் பிரச்சனை மிக எளிதானது. யாரும் தனக்கு நம்பிக்கையானவர்களாக இல்லை. எல்லோரும் தனக்கு மட்டும் தேடி வந்து துரோகம் செய்வதாக எண்ணினான். அப்படிப்பட்ட துரோகிகளை பழிக்குப் பழி வாங்காவிட்டால் தன்னை மிகவும் தகுதி குறைந்தவனாக உலகம் எடைபோட்டுவிடுமென்று தனக்குத்தானே முடிவு செய்து கொண்டான்.
பிறரின் சின்னச் சின்னக் காரியங்களைக்கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் துவங்கினான். வார்த்தைகளால் பிறரைப் பதம் பார்த்தான். உறவுக்கூட்டம் உதறியெறிய, நண்பர் கூட்டம் தூர விலக்கியது.
யாரையேனும் சபித்துக் கொண்டேயிருந்தான். எல்லோரும் தன்னையும் சபிப்பதாக எண்ணினான். மனம் குழப்பத்தால் மூழ்கிக் கொண்டிருக்கையில் காப்பாற்ற வருகிற துடுப்புகூட மரணத்தின் முகவரியை பெற்றிருப்பதாகவே எண்ணத் தோன்றும்! அப்படித்தான் அவனையும் அந்த விஷக் கொடி பற்றிப் படர்ந்து மன அமைதியை நெருக்கியது.
கவலைகளைச் சேமித்து வைக்கிற குப்பைத் தொட்டியாய் மாறிக் கொண்டேயிருந்தான்.
அவனைத்தான் அந்தத் துறவியிடம் அழைத்து வந்திருந்தார்கள். எந்த மருந்தும் இல்லாமல் மூன்று நாளில் சிகிச்சை அளிக்கப்பட்டு, வியாதி குணப்படுத்தப்படுமென்று துறவி கூற, அவனின் குணம் தலை தூக்கத் துவங்கியது. தன்னிடமிருக்கிற பொருளைப் பிடுங்கிக்கொள்ள துறவி போடுகிற வேடமென்று பிதற்றினான்.
“எனக்கு ஒரு பைசாகூட கொடுக்க வேண்டாம்… நீ திரும்புகிறபோது நானே
உனக்குப் பணம் தருகிறேன்… ஒரே ஒரு நிபந்தனை மட்டும் உண்டு…” என்றார்.
“என்ன….? வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொள்ளப் போகிறீர்கள்… அதுதானே….” என்றான் இளக்காரமாக….!
“நீ யாரையும் நம்பாமல் இருக்கக் காரணம் எத்தனையோ இருக்கலாம்… நான் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை…. உனக்கு மூன்று நாட்கள் மட்டும் இங்கு வேலை தரப்படும்… முடிவில் நோய் குணமாகும்… நோய் குணமாகாவிட்டால் பணமாவது வரவாகும்…. என்ன சொல்கிறாய்…….”
மனதிற்குள் கருவிக் கொண்டான். “தன்னை வஞ்சித்து, பின் அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால் முதலில் உயிரோடு கொளுத்த வேண்டியது… இந்தத் துறவியைத்தான்….”
வேலைகளைப் பல்வேறு சீடர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறபோது இவனுக்கு கூரை வேயும் வேலையைக் கொடுத்திருந்தார்.
முதல்நாள் வேலையைத் துவங்குகிறபோது, ஒரு உணவுப் பொட்டலத்தை வழங்கி, “இதில் பாதியைச் சாப்பிடு… மீதியை நான் கேட்கிறபோது கொடு…..” என்றார்.
முதல் நாள் கடந்து போயிருந்தது. வாங்கிக் கொள்வார் என்று நினைத்தான். உணவு கெட்டுப் போகத் துவங்கியிருந்தது. “நாளை சாயங்காலம் வாங்கிக் கொள்கிறேன்…. கீழே கொட்டி விடாதே….” என்றார்.
இரண்டாவது நாள் இதுபற்றிப் பேசவேயில்லை. உணவுப் பொட்டலத்திருந்து துர்நாற்றம் அதிக வீச்சோடு வீசத்துவங்கியிருந்தது. இன்னும் இதை வைத்திருக்கத்தான் வேண்டுமா….? யோசனை ஓடியது.
இன்று ஒரு நாள் மட்டும் எப்படியாவது பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று முடிவானான்.
மூன்றாவது நாளும் துறவி எதுவும் பேசவில்லை. இவனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. எது நேர்ந்தாலும் பரவாயில்லை. விளைவுகளை ஏற்றுக் கொள்வது… அல்லது இந்த இடத்தைவிட்டு வெளியேறுவது…. இதான் இறுதி முடிவாயிருந்தது.
மூன்றாவது நாள்… துறவி முற்றம் கூடியிருந்தது. “எங்கே…. நான் கொடுத்த உணவுப் பொட்டலம்….” “அது…. அது… அதை எப்படி அய்யா வைத்திருக்க முடியும்… நான் முட்டாளா…? பைத்தியமா….. நாற்றம் சகிக்க இயலவில்லை… தூக்கி வீசி விட்டேன்”.
“இப்போது புரிந்ததா….. கவலைகளும், குழப்பங்களும் அன்றைக்கன்றைக்கு தூக்கியெறியப்பட வேண்டியவை…. சேர்த்து வைத்தால் வியாதிகளின் விளைச்சல் நிலமாகி விடுவோம்…”
மூன்றாவது நாள் வெளியேறியவனுக்கு புதிய திசை காத்திருந்தது!
madheena manzil
you try to teach us something and u did it nicely