ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா

இனிய மாணவ நண்பர்களே!

Exam – இங்கிலீஷில், மாணவர்கள் பலருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை.

உண்மையில் எக்ஸாம் என்பது நாம் என்ன கற்றுக்கொண்டுள்ளோம்? என்பதை, நாமே உணர்வதற்காக உள்ள வழிமுறை. நம் நிலையை தெரிந்துகொள்ள, நாம் ஏன்

பயப்படவேண்டும்? நம் தற்போதைய நிலை தெரிந்தால்தானே நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

தேர்வு பயம் எல்லோருக்கும் ஒன்றுதான் என்றாலும் காரணங்கள் பல….

1 ) பாடங்களை படிக்காததால்….

யாரும் இங்கே தேர்விற்கென்று பயப்படுவதில்லை; ரிசல்ட்டுக்குத்தான் பயப்படுகிறார்கள். எக்ஸாம் பற்றிய பயம் உண்மையில் இருந்திருந்தால் நிச்சயம் நீங்கள் கல்வியாண்டு துவக்கத்திருந்தே பாடத்தை படித்து முடித்திருப்பீர்கள்.

உண்மையில் ரிசல்ட் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று, நமக்கு ஏற்கனவே தெரியும். அது மற்றவர்களுக்கும் தெரியப்போகிறது என்றுதான் பயப்படுகிறோம்.

தேர்வுக்கு தயார் செய்துகொள்ள வேண்டிய நேரத்தில், ‘நாளைக்கு படித்துக் கொள்ளலாம்’ என்று, தினமும் ஜாலியாக இருந்துவிட்டு தேர்வெழுத வேண்டிய நேரத்தில் டென்ஷனாக இருப்பதற்கு பயமல்ல…, வெட்கம் அல்லவா பட வேண்டும்.

சரி, இனி என்ன செய்ய வேண்டும்? என்று யோசிப்போம். படிக்கவில்லையே என்று புலம்பிக்கொண்டிருக்காமல் இப்பொழுதில் இருந்தாவது முயற்சிசெய்தால் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறமுடியும். கிடைக்கப்போகும் மதிப்பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு நிமிடமும் முயற்சி செய்தால்கூட போதும் இன்றைய நிலையிருந்து மேம்பட்டுவிடலாம்.

தேர்வில் வெற்றிபெற தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக எப்படியாவது மார்க் வாங்கினால் போதும் என்ற எண்ணத்தைத்தான் பலரும் வளர்த்துக் கொள்கிறார்கள். தயவுசெய்து அந்த லிஸ்டில் நீங்களும் சேர்ந்துவிடாதீர்கள்.

தவறான வழிகளில் மதிப்பெண்ணை உயர்த்திக்கொண்டால் ஒருபோதும் உங்கள் உண்மை நிலையை உயர்த்திக்கொள்ளவே முடியாது. எனவே உங்கள் கற்கும் ஆர்வத்தை அதிகரித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் உயருவதற்கு வழி தேடுங்கள்.

2 ) படித்திருந்தாலும் பயம்…

படிக்காதவர்களுக்குத்தான் தேர்வு பயம் என்றில்லை. சில மாணவர்களுக்கு பாடங்களை எவ்வளவுதான் சிறப்பாக படித்திருந்தாலும் பயம் என்பது பழக்கமாகிவிட்டதால், மார்க்ஸ் குறித்த பயம், டென்ஷன், தேர்வு நெருங்க நெருங்க அதிகமாகிக்கொண்டிருக்கும்.

பயத்தில் பாடங்கள் மறந்து போய்விடுகிறது. அல்லது பதட்டத்தில் பதிலை மாற்றி எழுதிவிடுகிறோம். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் மார்க் குறைந்துவிடுமோ என்று டென்ஷன் ஆனோம், ஆனால் டென்ஷன் ஆனதால்தான் மார்க்கே குறைகிறது.

எனவே, முடிவெடுங்கள், நோ டென்ஷன்.

தேர்வுகள் நெருங்கிவிட்டதால் இனி உங்கள் பொழுதுபோக்குகள் கூட கல்வி சார்ந்ததாகவே இருக்கட்டும். இனி உங்களுக்கு என்டர்டெயின்மென்ட் அல்ல எஜுடைன்மென்ட்தான் எல்லாமே.

நண்பர்களை பாடத்திலிருந்து குறுக்கெழுத்துப்போட்டி அமைத்துத் தரச்சொல் விளையாடுங்கள். போரடித்தால் ஒவ்வொரு சப்ஜெக்டிலும் எந்தப் பக்கத்தில் என்ன பாடம் என்று நீங்களே விளையாட்டு அமையுங்கள்.

பள்ளி நண்பர்களோடு சேர்ந்து இருக்கும் நேரத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்டு பதில் சொல்லிப் பாருங்கள்.

எப்போது உங்கள் சிந்தனை சொல் செயல் எல்லாம் கல்வி சார்ந்ததாக மாறிவிட்டதோ அப்புறமென்ன … ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *