இனிமேல் இல்லை எதிர்மறை எண்ணங்கள்

– ஸ்ருதி

“தினமும் காலையில் பேப்பரைப் பிரித்ததும் ராசிபலன் பார்த்துட்டுதான் தலைப்புச் செய்தியைப் பார்ப்பேன்” என்றார் ஒருவர். “ஏதாவது நல்லா போட்டிருந்தா சரி. எதிர்மறையா போட்டிருந்தா என்ன செய்வீங்க” நண்பரின் கேள்வியில் நியாயமிருந்தது.

“அந்த நாள் எனக்கு சாதகமா இருக்குன்னு போட்டிருந்தா சந்தோஷமா இருப்பேன். அந்த நாள் எனக்கு எதிரா இருக்கிறதா போட்டிருந்தா, நான் அந்த நாளுக்கு எதிரா இருக்க மாட்டேன்னு முடிவெடுப்பேன். அப்படியும் சந்தோஷம்தான்” என்றார்.

இப்படிப்பட்ட மனப்பான்மை உள்ளவர்கள் ராசிபலன், ராசிக்கல் என்று எதைப் பார்த்தாலும் பிரச்சினையில்லை.

அநேக மனிதர்களுக்கு முட்டுக்கட்டையாய் இருப்பவை எதிர்மறை எண்ணங்கள்தான். நேர் மறையாய் சிந்திக்க விழிப்புணர்வு தேவைப் படுகிறது. ஆனால் எதிர்மறை எண்ணங்கள் அனிச்சையாகவே நிகழ்கின்றன.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல், நேர்மறை எண்ணங்களின் நல்ல பலன்கள், எதிர்மறை எண்ணங்களின் பாதிப்பில் தான் தெரியும். வெளிப்புறப் பாதிப்புகளால் எதிர்மறை எண்ணங்கள் வேகவேகமாய் வளர்கின்றன. மருத்துவர், சாமியார், அதிகாரி என்று எல்லாப் பெயர்களுக்கும் முன்னால் “போலி” என்ற வார்த்தையை சமூகம் சேர்த்து விட்டது.

இது எல்லோருடைய மனங்களிலும் இடம் பெறத் தொடங்கியிருப்பது இப்படித்தான். இரண்டாவது விஷயம், தன்னைப் பற்றிய அவ நம்பிக்கை. முன்னர் எடுத்த முயற்சி எதுவும் முறிந்து போயிருந்தால் இன்னொருதடவை முயன்று பார்க்க இதயம் இடம் கொடுப்பதில்லை.

யாருடனாவது பழகி, அவர்கள் துரோகத்தால் ஏமாந்துபோக நேர்ந்தால் வாழ்வில் நண்பர்களே வேண்டாமென்று நினைக்கத் தோன்றுகிறது.

இவையெல்லாம், நாம் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே இதயத்தை சூழ்ந்துகொள்ளும் எதிர்மறை எண்ணங்களின் பாதிப்புகள்தான். இன்னொன்று, எதிர்மறையான கற்பனையில் ஒரு சுவாரசியம் மறைந்திருக்கிறது. ஒன்று சரியாக நடக்கும் என்றால் ஒரேயொரு விளைவுதான் மனதில் தோன்றும். ஒன்று தவறாகப் போக எத்தனையோ வழிகள் இருக்கும். இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோ என்று கற்பனைகள் வளர்ந்து கொண்டே போகும். முன்னெச்சரிக்கையாய் இருப்பதற்காக எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி மறைந்தால் தவறில்லை. எண்ணங்களின் போக்கே அந்த விதமாக இருந்தால் அப்புறம் அவஸ்தைதான்.

இதில் நாம்  தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? எண்ணங்களை நேர்மறையாகவோ எதிர் மறையாகவோ செலுத்துவது நம்மிடம்தான் இருக்கிறது.

தபால் வருகிறது என்றால் உடனே வாங்கி அவசரமாய் பிரித்து அல்லது பிரிப்பதாய் நினைத்துக் கிழித்து, பக்கங்களை ஒட்டவைத்துப் படித்துவிடுவோம்.

ஆனால், பதிவுத் தபால் வருகிறதென்றால் உடனே வாங்க மாட்டோம். உஷாராகிவிடுவோம். யார் அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்த்து, ஏன் அனுப்பியிருப்பார்கள் என்று யோசித்து, விருப்பம் இருந்தால் வாங்குவோம், இல்லையென்றால் திரும்ப அனுப்பிவிடுவோம்.

எண்ணங்கள் அப்படித்தான் எதிர்மறையாய் போகத் தொடங்குகிறது என்று தெரிந்தால், நிதானித்து எண்ணங்களை மடை மாற்றினால், போகப்போக தானாகவே எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்முறை எண்ணங்கள் வரத் தொடங்கி விடும்.

இன்னோர் உதாரணம். குடும்பத்துடன் டிவி பார்க்கிறீர்கள். ஆபாசமான காட்சியோ அச்சுறுத்தும் காட்சியோ வருகிறது. குழந்தைகள் பெண்கள் பார்க்கக்கூடாது என்று நினைத்தால் உடனே சேனலை மாற்றுகிறீர்கள். இதே தொழில்நுட்பம்தான் உள்ளேயும் தேவை. எதிர்மறையான காட்சிகளும் எண்ணங்களும் தாறுமாறாக ஓடுகின்றனவா… சேனலை மாற்றுங்கள்!

நேர்மறையான சிந்தனைகளை வலியப் புகுத்துங்கள். எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.

2 Responses

  1. GOPINATH

    எதிர்மறை எண்ணங்கள்தான் நம்முடைய வெற்றியின் எதிரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *