வேலை தேடுகிறது உங்களை

-மகேஸ்வரி சற்குரு

வேலை என்பது பூனை மாதிரி. பூனையிடம் கோபப்பட்டு ஒதுக்கிப் பாருங்களேன். அது கொஞ்ச தூரம் சென்று பின் திரும்பிப் பார்க்கும். ‘ம்ஹும். உன்னை விட்டேனா பார்” என்பது போல ஒருமுறை முறைக்கும். பிறகு ஓடிப் போய்விடும். ரொம்பவும் கோபப்பட்டால் நம்மை பிறாண்ட வரும். கொஞ்சம் போராட்டம்தான்.

ஆனால் அதுவே பாருங்களேன், கொஞ்சம் நமது அன்பைக் காட்டினால் பூனை நம்மிடம் விளையாடும். மடியில் அமரும். பின் நமது காலில் அதன் எச்சிலை செய்யும். தோளின் மீது ஏறும். ஒரு கட்டத்தில் தலைக்கு ஏறிவிடும். அப்படித்தாங்க வேலையும்! ஒன்றிப் போய் ஈடுபாட்டுடன் செய்தால் செயலும் நாமும் நகமும் சதையுமாக மாறிவிடுவோம். வேலை நம்மைக் கொஞ்ச ஆரம்பித்துவிடும். “நீ செய்த வேலைக்கு இந்தா வாங்கிக் கொள்” என்று வெகுமதிகளை அள்ளித்தரும்.

வேலை என்கின்ற பூனையை புலி ஆக்குவதும், அடுப்பில் போய் தூங்கும் சோம்பேறி பூனையாக்குவதும் நம் கையில்தான் உள்ளது. ஈடுபாட்டுடன் இருந்தால் எந்த வேலையும் நம்மைத் தேடிவரும்.

சார்லி சாப்ளின் மிகச்சிறந்த சிரிப்பு நடிகர் எனத் தெரிவதற்குமுன் அவருக்கு நடிப்பு என்கின்ற வேலை பூனை மாதிரிதான் இருந்தது. இவரும் அவர் வேலையும் எதிராளிகளாக மாறினர். இவர் ‘உர்’ என்றால் இவரின் பணியும் ‘உர்’ என்றது. யோசித்தார்….. தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டார். நடிப்புதான் தனது தொழில். அந்தத் தொழிலை நேசிக்கக் கற்றுக்கொண்டார். தன் மனம் வலித்தபோதெல்லாம் சிரித்தார். அதனையே தொழிலாக மாற்றிக் கொண்டார். பிறரைச் சிரிக்க வைக்க நேர்த்தியாக தன்னை, தன்னுடைய இயல்பை மாற்றிக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தார். நடிகன் என்கின்ற வேலை அவரை நேசிக்கக் கற்றுக் கொண்டது.

எந்த வேலை செய்யும்போதும் சந்தோஷமாக செய்யப் பழக வேண்டும். நண்பர்களே! ஒரு சிலர் இருக்கிறார்கள், தங்கள் அலுவலகங்களையே சிறைச்சாலையோ என்கின்ற எண்ணத்தில் பார்ப்பார்கள். ‘இந்தாப்பா இதைச் செய்” என்று மேலதிகாரி சொல்லிவிட்டால் போதும் ஏதோ இவர் சொத்தையே பிடுங்கிட்ட மாதிரி முகத்தை கோபமாக தூக்கி வைத்துக் கொண்டு, திருவிழாவில் காணாமல் போன மாதிரி திருதிருவென முழித்துக்கொண்டு ஒரு மாதிரி அலைந்து கொண்டிருப்பார்கள். நீங்கள் வேலையைக் காதலித்தால், அதுவும் உங்களை காதலிக்கும்.

எந்தச் செயலைச் செய்தாலும் அது வேலைதான். ஆனால் அது ஈடுபாட்டுடன் செய்யப்படும் பொழுதுதான் நமக்கு ‘சுப வேளை’ யாக மாறும்.

எடுத்துக்காட்டாக டீக்கடையில் வேலை செய்யும் அயின் நிலை டேபிள் துடைப்பது, பாத்திரங்கள் கழுவுவது. “எனக்கு இதுதான் விதிச்சிருக்கு. இதுதான் வாழ்க்கை. இதுதான் வேலை” என்று கடனே என்று செய்தால் காலகாலத்திற்கும் அ டேபிள் கிளீனர்தான். காலமாற்றத்தில் லாரி கிளினீராக மாறலாம். அவ்வளவுதான். என்றைக்கும் ‘கிளீனர்’ என்ற நிலையிலிருந்து மாறுபடமுடியாது, தன் வேலையின் மீது ஈடுபாடு வைக்காவிட்டால். ஆனால், அதே அ செய்கின்ற வேலையில் நேர்த்தி, ஈடுபாடு, முழுக்க முழுக்க நன்றாகச் செய்ய வேண்டும் என்கின்ற உணர்வு மேலோங்கியது என்றால் அ யின் வாழ்வு அ 1(ஏ ஒன்) வாழ்வுதான். ஈடுபாட்டுடன் வேலை செய்தால் தேடல் அதிகமாகும். தேடலின் முடிவு நிறைவானதாக இருக்கும். இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பல ஹோட்டல் அதிபர்கள், ஆரம்பகால வாழ்க்கையில் கடைநிலை ஊழியர்தான்.

ஒரு சிறிது கோதுமை மாவில் சேர்க்கப் படுகின்ற ஈஸ்ட் எப்படி கோதுமையை மிருது வாக்குவதுடன், சுவையான ரொட்டியைத் தருகின்றதோ, அப்படி நேசித்துச் செய்யப்படுகின்ற நம் வேலை நம்மை நல்ல நிலைக்குக் கொண்டு செல்வதுடன், வாழ்க்கையையும் சுவை உள்ளதாக்கும்.

நேசிப்போம் வேலையை!
வாழ்வை யோசிப்போம்!!
வாழ்வை சுவை உள்ளதாக்குவோம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *