– மரபின் மைந்தன் முத்தையா
நம் வாழ்வில் எதிர்ப்படும் எவரையும் எளிதாக நினைக்காமல் உரிய மரியாதையை உள்ளம் மலர்ந்து தந்தாலே போதும். உறவுகளை மிக நன்றாக பலப்படுத்திக் கொள்ள முடியும்.
மேற்கோள்கள் பலவும் மேல்நாட்டு இறக்குமதிகளாகவே இருக்கின்றன என்பது சுய முன்னேற்ற உலகின்மீது சொல்லப்படுகிற குற்றச் சாட்டு. இதற்குக் காரணம் உண்டு. மேல்நாட்டினர் தங்கள் வாழ்வை – சம்பவங்களை – சவால்களை – சாதனைகளை அவ்வப்போது பதிவு செய்து விடுகிறார்கள். அவ்வளவு துல்லியமான பதிவுகள் நம்நாட்டில் இல்லை. கடந்த காலப் பதிவுகள் சில கல்வெட்டுக்களாக இருக்கின்றன.
நம் பழைய புராணங்கள், கூடுதலாக சில புனைவுகளைக் கலந்து பல வரலாறுகளை எழுதியிருக்கின்றன. அதில் சொல்லப்படுகிற கதைகளைத் தாண்டி அவற்றின் கனமான உள்ளடக்கத்தைக் கண்டுணரத் தெரிந்தால் போதும். எனவே, மேலை நாடுகள் அளவுக்கு நம் நாட்டின் சம்பவங்களை ஆவணப்படுத்தும் தேடல் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
மலையை நகர்த்தும் மனவுறுதி பற்றி புராணங்கள் பேசத்தான் செய்கின்றன. கயிலை மலையை இராவணன் அசைக்க நினைத்து அகப்பட்டுக் கொண்டது, நம் அனைவருக்குமே தெரியும்.
பழனி பற்றியும் அப்படியொரு சுவாரசியமான கதை, நம்முடைய புராணங்களில் உண்டு. ஆதியில் கயிலை மலைக்குக் கொஞ்சம் கூப்பிடு தூரத்தில்தான் பழனிமலை இருந்ததாம். அசுரர்களின் ஆசிரியன் இடும்பனிடம், அகத்தியர், அந்த இரண்டு மலைகளைத் தூக்கிவரச் சொன்னாராம். வருகிற வழியில் இரண்டு மலைகளையும் இடும்பன் வைத்துவிட்டு இளைப் பாறினானாம். மறுபடி எடுக்க முயன்றால் முடிய வில்லையாம். மழலை வடிவில் முருகன் மலைமீது நின்று கொண்டிருந்தானாம். நிமிர்ந்து பார்த்த இடும்பன் நகரச் சொல்லி மிரட்ட, முருகன் மறுக்க, தன்மீது பாய்ந்த இடும்பனை முருகன் கொன்றானாம். இடும்பன் ஒரு குடும்பி. அவன் மனைவி பெயர் இடும்பி. அவள் வேண்டுகோளுக் கேற்ப வேலவன் இடும்பனை உயிர்ப்பித்தாகக் கதை.
இதை அப்படியே நம் சுய முன்னேற்ற உலகுக்குக் கொண்டு வாருங்கள். அகத்தியர் கட்டைவிரல் அளவுதான் இருப்பாராம். குறுமுனி என்றே அவர் அழைக்கப்படுவார். அவரிடமிருந்த அபரிமிதமான தவ ஆற்றலுக்கு, அசுரர்களின் ஆசிரியர் அடிபணிந்து, இட்ட கட்டளையை ஏற்று செயல்பட்டார் என்று பார்க்கிறோம்.
நம்மிடம் இருக்கிற ஆற்றலைப் பொறுத்து, எவ்வளவோ பெரிய வலிமை உள்ளவர்களையும் நாம் எளிதில் வேலை வாங்க முடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது. நீங்கள் எல்லோருக்கும் தெரிந்த வராய் இருக்கிறீர்களா என்பது முக்கியமில்லை. எல்லோருக்கும் தெரிந்தவர்கள், எதையும் செய்யக் கூடியவர்கள், நீங்கள் சொன்னால் கேட்பார்களா என்பதுதான் முக்கியம்.
அதேபோல, ஒரு காரியத்தில் நம்மைக் குப்புறத் தள்ளி விடுபவை எவை என்கிற ரகசியமும் இந்தக் கதையில் இருக்கிறது. அவசரப்பட்டு எடுக்கிற முன்முடிவுகள்தான் நம்மைக் குப்புறத்தள்ளிக் குழியும் பறிக்கும்.
முருகன் என்கிற சிறுவனைப் பார்த்ததும் அலட்சியம்தான் இடும்பன் மனதில் எழுந்தது. அந்த அலட்சியம்தான் அவனையும் வீழ்த்தியது. ஒரு மனிதரின் தோற்றத்தை வைத்து அவர் சின்னவரா பெரியவரா என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது.
புது டெல்லியில் நடந்த அந்த சர்வதேசக் கண்காட்சியில் அயல்நாட்டு விற்பனையகம் ஒன்றின் அரங்கம் அமைந்திருந்தது. கதர் சட்டை, கதர் வேட்டி, நெற்றியில் நாமம். இந்தக் கோலத்தில் உள்ளே நுழைந்தார் ஒரு பெரியவர். நட்சத்திர உணவகங்களில் பயன்படுத்தக்கூடிய எந்திரம் ஒன்றைக் காட்டி இயக்கிக் காண்பிக்கச் சொன்னார். “இவருக்கும் இந்த எந்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?” விற்பனையாளரின் இதழ்களில் ஏளனப் புன்னகை. “பொழுது போகாமல் வேடிக்கை பார்க்க வந்த வயதான மனிதர் எந்திரத்தை வேறு இயக்கச் சொல்கிறாரா?” மனதில் ஓடிய கிண்டலை மறைத்துக்கொண்டே,” இந்த எந்திரத்தை இயக்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும்” என்று ஏளனமாகச் சொன்னார் விற்பனையாளர்.
உடன் வந்த இளைஞரைத் திரும்பிப் பார்த்தார் பெரியவர். உடனே ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலை எழுதப்பட்டது கையெழுத்துப் போட்டு நீட்டினார் பெரியவர். விற்பனையாளருக்கு அதிர்ச்சி, “கையெழுத்து இருந்தால் போதுமா? வங்கியில் காசு இருக்க வேண்டாமா?” விற்பனையாளரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட அந்தப் பெரியவர், “வேண்டுமானால் வங்கியில் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார். வங்கிக்கு அழைத்தார்கள். கையொப்பமிட்ட பெரியவரின் பெயரைச் சொன்னதும், “அவர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் காசோலை செல்லும்” என்றார்கள்.
அதிர்ந்து போன விற்பனையாளர் எளிய தோற்றத்தில் இருந்த அந்தப் பெரியவரிடம் மன்னிப்புக் கேட்டார். அதைப் பொருட்படுத்தாத பெரியவர், எந்திரத்தை ஓடவிட்டுப் பார்த்தார். சில நுணுக்கமான கேள்விகள் கேட்டார். விற்பனை யாளருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
விஷயம் கேள்விப்பட்ட ஹாலந்தைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் அதிபர், அந்தப் பெரியவரை, தன்னுடைய விருந்தினராய் ஹாலந்து நாட்டுக்கு அழைத்தார். அந்தப் பெரியவரைக் கொண்டு, தன் அலுவலகத்தில், அனைத்துப் பணியாளர்கள் முன்னிலையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
“உருவத்தைப் பார்த்து முடிவு செய்யக் கூடாது என்ற பாடத்தை நம்முடைய விற்பனை யாளருக்கு போதித்த இந்தியர் ஒருவரின் காசோலை” என்ற குறிப்புடன் அந்தக் காசோலை பிரேம் செய்யப்பட்டு இன்றும் ஹாலந்து நாட்டில் அந்தத் தொழிற்சாலையில் மாட்டப்பட்டுள்ளது.
அந்தப் பெரியவர்தான், உணவகத் துறையிலும், “பெரியவர்” என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் உணவகங் களின் தலைவர், அமரர் கே. தாமோதரசாமி நாயுடு அவர்கள்.
நாம் சிலரை சந்திக்கும் போது அவர்களின் சாமான்யத் தோற்றமும் சாதாரணப் பேச்சும் அடிப்படையில் ஓர் அலட்சியத்தை ஏற்படுத்தும். ஆனால் அந்த மனிதர் மிக முக்கியமானவர் என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் உணர்த்தும்.
நாம் விழிப்புடன் இருந்தால் உடனே நம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அவரிடம் நன்கு பழகி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவோம். இல்லையென்றால் இழப்புகளை எதிர் கொள்வோம்.
இதைத் தவிர்க்க ஒரு வழி இருக்கிறது. நம் வாழ்வில் எதிர்ப்படும் எவரையும் எளிதாக நினைக்காமல் உரிய மரியாதையை உள்ளம் மலர்ந்து தந்தாலே போதும். உறவுகளை மிக நன்றாக பலப்படுத்திக் கொள்ள முடியும். உறவுகள் உறுதியாய் இருந்தாலே மலைபோல் இருக்கும் எந்தத் தடையையும் எளிதில் தகர்த்தலாம். முன் முடிவுகளை மாற்றுங்கள். முன்னேற்றம் காணுங்கள்.
Leave a Reply