நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி

கதை வடிவில் பிஸினஸ் பாடங்கள்

மாற்றங்களை ஏற்படுத்துவது எப்படி?

சதீஷ் இனி வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாலும் சதீஷ் இல்லாமல் சதாசிவத்திற்கு என்னவோபோல் இருந்தது. அடிக்கடி அவன் ஞாபகம் வந்தது. சதீஷ் வேலையிலிருந்து நின்றுவிட்டான் என்பதை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்று யோசித்து இன்னும் குழம்பினார்.

சதீஷ் நம்மிடம் பேசியிருக்கலாம். என்ன பெரிய கஷ்டம் அவனுக்கு வந்துவிடும் இந்த மாற்றத்தால். அதே எண்ணம் மற்றவர்களிடமும் இருந்தால் அதை நம்மால் மாற்றமுடியுமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, ‘டாடீ உங்களுக்கு போன்..’ ‘டாடீ உங்களுக்கு போன்’ ஐந்தாவது தடவையாக செல் இப்படிச் சொன்னவுடன் சதாசிவம் போனை எடுத்தார்.
தன் மகளின் குரலிலேயே அமைந்த ரிங்டோன். வீட்டிலிருந்து போன் வந்தால் மட்டும் இந்த ரிங்டோன்.

வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா.. “வரும்போது டிஷ் வாஷ் பார் இரண்டு வாங்கிட்டு வந்திடுங்க.. சுத்தமா தீர்ந்து போச்சு.”
இரண்டு நாளைக்கு முன்னாடி லிக்வீடு டிஷ் வாஷர் வாங்கிக்கொடுத்தேனே.
அது சரியில்லைங்க ..”

சதாசிவம் எரிச்சலோடு செல்போனை வைத்தார்.

கேட்டபடி டிஷ் வாஷ் பார் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நுழைந்தபோது ஏனோ எரிச்சல் இன்னும் அதிகரித்தது.
மனைவியிடம் அதைக் கொடுக்கும்போது, எல்லாருமா சேர்ந்து என்னை படுத்துங்க.. ஒரு சோப்புகூட நான்தான் வாங்கிட்டு வரணுமா.. உன்னால முடியாதா” என்று கத்த வேண்டும்போல இருந்தது.

ஒன்றும் பேசாமல் இரவு சாப்பாட்டையும் தவிர்த்துவிட்டு பேராசிரியர் கொடுத்தனுப்பிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க உட்கார்ந்தார். கிருஷ்ண.வரதராஜன் எழுதிய வெற்றி தரும் மாற்றங்கள் என்ற புத்தகம்.

புத்தகத்தை புரட்டிய சதாசிவம் மாற்றமும் எதிர்ப்பும் என்ற தலைப்பில் ஈர்க்கப்பட்டு அந்த தலைப்பிற்குள் போனார். படிக்கப் படிக்க சதாசிவம் துள்ளி எழுந்தார். அவரால் உட்கார்ந்து படிக்க முடியவில்லை. குதிக்க வேண்டும் போல் இருந்தது.

மாற்றம் வரும்போது எல்லோரும் அதை ஆரத்தி எடுத்து வரவேற்பதில்லை. மிகச்சிலர் ஏற்கிறார்கள். சிலர் வேறுவழியின்றி பின்பற்று கிறார்கள். பெரும்பாலானவர்கள் எதிர்க்கத்தான் செய்கிறார்கள். அதற்கான காரணங்களும் அவை விளக்கப்பட்டிருந்த விதமும் தனக்காகவே எழுதப் பட்ட புத்தகம் என்று நினைக்கத் தோன்றியது சதாசிவத்திற்கு.

அவர் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் ஐசிஐசிஐ பற்றிய உதாரணம் வந்ததும் இன்னும் ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தார்.
பேங்க் ஆஃப் மெஜுரா அதாவது மதுரா வங்கி என்று ஒன்றிருந்தது தெரியுமா? அதை ஐசிஐசிஐ வங்கி கையகப்படுத்தி, தன் பெயரில் மாற்றி வங்கி நடைமுறைகளை துவக்கியது. அப்போது பழைய மதுரா வங்கிப் பணியாளர்கள் மத்தியில் தங்களை எப்படி நடத்துவார்கள் என்பதில் சிறிது குழப்பம் இருந்தது.

ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் அனைத்து பணியாளர்களும் கம்ப்யூட்டர் கற்க வேண்டும் என்றும் இனி வங்கி நடைமுறைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் என்று அறிவித்தது. கணினியை கையாளப் பயிற்சி வகுப்பும் கம்பெனி செலவிலேயே ஏற்பாடும் செய்யப்பட்டது. உடனே ஓடிப்போய் எல்லோரும் வகுப்பில் சேர்ந்து விடவில்லை.

‘இத்தனை நாளும் எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருந்தது. கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆச்சுன்னா எப்படி பணம் கொடுக்கிறது.’ ‘கரண்டு இல்லாத நேரங்கள்ல என்ன செய்ய முடியும்? லெட்ஜர்தானே பாதுகாப்பானது’ என்று எங்கு பார்த்தாலும் வேலையையும் தாண்டி இந்த கவலைகள் அதிகரிக்கத்தொடங்கின.

‘இந்த வயசில இனிமே நா போய் சின்னப் பசங்களோட உட்கார்ந்து கம்ப்யூட்டர் கத்துக்கணுமா’ வங்கி அறிவிப்பை அதாவது வேலைமுறையில் வரும் மாற்றத்தை எதிர்த்தார்கள்.

வயதானவர்கள், ‘இப்ப கம்ப்யூட்டர் கத்துக்கங்கம்பாங்க. நாளைக்கு கராத்தே கத்துகங்கம்பாங்க. நம்மளாலல்லாம் முடியாது’ என்று வி.ஆர்.எஸ் வாங்கிக்கொண்டார்கள். நம்மால் கற்றுக்கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் இருந்தாலும், உள்ளூர முணு முணுத்தாலும் வேறுவழியின்றி பலர் வகுப்புக்கு சென்றார்கள். கம்ப்யூட்டரை இயக்க கற்றார்கள். தங்கள் பணிகளில் சிறப்பாக தொடர்ந்தார்கள்.

கம்ப்யூட்டர்தான் இனி உலகை ஆளும் என்ற தீர்க்கதரிசனத்தாலோ அல்லது இதையும் தான் கற்றுவைத்துக்கொள்வோமே என்ற எண்ணத்தாலோ ஏற்கனவே கம்ப்யூட்டர் கற்று வைத்திருந்தவர்கள்கூட பலர் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் புதிய நிர்வாகத்தில் சட்டென்று உயர்நிலைகளை அடைந்தார்கள்.
சதாசிவத்திற்கு சட்டென்று சதீஷ் நினைவு வந்தது. இந்த மாற்றங்களை வரவேற்பவனாக இருந்திருந்தால் நிச்சயம் அவன் இன்னும் உயர்ந்து கொண்டேதானே இருப்பான்.

புத்தகத்தை மூடிவிட்டு மாற்றங்களை ஏற்க தயங்குவது நிறுவனங்களில் மட்டும் நடக்கும் ஒன்றா இல்லை எல்லா இடங்களிலும் இப்டித்தானா என்று யோசிக்கலானார்.

பல சம்பவங்கள் அவருக்கு வரிசையாக நினைவிற்கு வந்தது. கடந்த முறை இருந்த தமிழக அரசு கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு திட்டமாகட்டும், தற்போதைய தமிழக அரசு கொண்டு வந்த கட்டாய ஹெல்மெட் திட்டமாகட்டும், மிக நல்ல திட்டங்கள் என்ற போதிலும் மக்களிடம் எதிர்ப்புதான் கிளம்பிற்று.

கட்டாயத்தினால் மட்டுமே பலர் கடைப்பிடிக்கத் துவங்கினார்கள். ஆக மாற்றத்தை யாரும் விரும்புவதில்லை.
புத்தகத்தில் படித்த வாசகம் மீண்டும் மீண்டும் அவருக்குள் பளிச்சிட்டுக்கொண்டே இருந்தது. முட்டை ஓடு உடைவது வெளியி லிருந்தும் நிகழலாம். உள்ளிருந்தும் நிகழலாம். எது சிறப்பு?

முட்டை உள்ளிருந்து உடைபட்டால் அது ஜனனம். வெளியிலிருந்து உடைபட்டால் அது மரணம். மாற்றம் ஜனனமாக இருக்க வேண்டுமே தவிர மரணமாக இருக்கக்கூடாது.

என் மனைவி, ‘வாஷிங் லிக்வீடு வேண்டாம். பார்தான் வேண்டும்’ என்று கேட்டதற்குகூட மாற்றத்தை ஏற்காத மனம்தான் காரணமோ, எதையோ கண்டுபிடித்தவர்போல ‘கமலம்’ என்று உற்சாகமாகக் கத்தினார்.
‘என்னங்க.. எதுக்காக இப்படி கத்துறீங்க. பயந்தே போயிட்டேன்’

‘அந்த லீக்வீடு யூஸ் பண்ணி பார்த்தியா’

‘பாத்திரம் பளிச்சின்னு இருக்கணும்னு அதிக கெமிக்கல் போட்டிருப்பாங்க. கை எரிச்சல் வரும். கை புண்ணாயிடும்.’
‘நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. யூஸ் பண்ணி பார்த்தியா’

‘சோப்புலதாங்க அழுக்கு போகும். இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல’ உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக எடுத்துச் சொன்னார். ‘சோப்பு ஈரத்திலேயே கிடந்து ஊறியிருப்பதால் சீக்கிரம் கரைந்து போகும். ஸ்மெல் வேறு அடிக்கும். கொழ கொழ என்றாகி விடுவதால் அதில்தான் கையெரிச்சல் அதிகம். இதில் நீ வேண்டுமென்கிற அளவிற்கு எடுத்துக் கொள்ள முடியும். ஒரு சில சொட்டுக்கள் போதும். நம்ம பேக்கரியில இப்ப முழுக்க இதுதான் பயன்படுத்துறோம்.’மனைவி மலர்ச்சியோடு போவதை பார்த்த போது அவருக்கே பெருமிதமாக இருந்தது. அப்படியெனில் நிச்சயம் நம் நிறுவனத்திலும் இந்த மலர்ச்சியை கொண்டு வந்து விட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *