கேள்வி கேளுங்கள் நீங்களும் ஜீனியஸ்தான்

– அத்வைத் சதானந்த்

கன்பியூசியஸ் தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் கூட்டம் கூடி இருப்பதை பார்த்தார். என்ன நடக்கிறது என்று விசாரித்தார். இரண்டு மாணவர்களுக்கு இடையே சண்டை. கருத்துச் சண்டை.

சூரியனுக்கு அருகில் பூமி காலையில்தான் இருக்கிறது என்பது ஒரு பையனின் வாதம். மற்றவனோ மதியம்தான் என்றான்.

கன்பியூசியஸ் விளக்கம் கேட்டார். முதல் பையன் சொன்னான். ஒன்றின் அருகில் இருக்கையில் அது பெரிதாக தெரியுமா? அல்லது தொலைவில் இருக்கையில் அது பெரிதாக தெரியுமா?

கன்பியூசியஸ் உடனே, அருகில் இருக்கும் போதுதான் பெரிதாக தெரியும் என்றார். அதற்கு முதல் பையன் அப்படியானால் சூரியனுக்கு அருகில் பூமி காலையில்தான் இருக்கிறது, ஏனெனில் காலையில்தான் சூரியன் பெரிதாக தெரிகிறது என்றான்.

இரண்டாவது பையன் கேட்டான் வெப்பமான ஒன்றின் அருகில் இருக்கையில் சூடு அதிகமாக இருக்குமா ? அல்லது தொலைவில் இருக்கும்போது சூடு அதிகமாக இருக்குமா ? கன்பியூசியஸ் உடனே, அருகில் இருக்கும் போதுதான் சூடு அதிகமாக இருக்கும் என்றார். அதற்கு இரண்டாவது பையன் அப்படியானால் சூரியனுக்கு அருகில் பூமி மதியத்தில்தான் இருக்கிறது, ஏனெனில் மதியம்தான் சூடு அதிகமாக இருக்கும் என்றான்.

கூட்டமே விடை தெரியாமல் விக்கித்து நின்றது. கன்பியூசியஸ் சொன்னார் ‘விடையை உருவாக்குகிறவர்கள் படித்தவர்கள் ஆகிறார்கள். இப்படி கேள்விகளை உருவாக்குகிறவர்கள் மட்டுமே மேதைகள் ஆகிறார்கள்.’

உங்களுக்குள்ளும் எப்போதாவது இது போன்ற கேள்விகள் உருவாகியிருக்கிறதா? ஆமெனில் நீங்களும் ஜீனியஸ்தான். இல்லை யென்றால் நீங்கள் ஜீனியஸ் ஆகமாட்டீர்கள் என்று அர்த்தம் அல்ல. உங்களுக்குள் கேள்விகளை எழுப்பி ஒரு ஜீனியஸ்ஸிற்கு விதையிடுங்கள்.

உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஜீனியஸ் ஆக இருப்பவர்கள் அனைவருக்கும் ஓர் உந்துசக்தி உண்டு. உந்து சக்தி என்ற வார்த்தையை படித்ததும் யாரிடமிருந்து என்ற கேள்வி உங்களுக்குள் எழும்.

இதுதான் வித்தியாசம். உந்துசக்தி மற்றவர்களிடமிருந்து ஏற்படும் போது நின்று விடுகிறது. அதுவே உங்களுக்குள்ளிருந்து ஏற்படும் போது நிற்காமல் ஓடுகிறது.

மற்றவர்களின் உந்துதலால் ஓடும் சைக்கிள் உந்துவதை நிறுத்தியவுடன் நின்றுவிடும். பெருக்கெடுத்து ஓடும் ஆறு தடுத்தால் மட்டுமே நிற்கும்.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஜீனியஸ்ஸை வெளிக்கொணர ஒரே வழி அதாவது உங்களுக்குள் உந்துசக்தியை உருவாக்க ஒரே வழி கேட்பது. அதாவது கேள்வி கேட்பது .

எதில் வளர வேண்டுமோ அத்துறை தொடர்பான கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக் கொண்டே இருங்கள். விடைகள் கிடைக்காத வரை உறங்க முடியாது. இப்படி உறங்க விடாமல் செய்வதைத்தான் உந்து சக்தி என்கிறார்கள்.

நீங்கள் ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள். வாட்டர் பியூரிபையர் விற்க வரும் விற்பனையாளரிடம் ஒரு சிறுவன் தொடர் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பான். அதனால் என்னாகும்? அதனால் என்னாகும்?. விற்பனையாளர் தரும் விளக்கத்திலிருந்து கூட மறுபடியும் அவனுக்கு புதிய ஒரு கேள்வியே தோன்றும்.

சரி. இப்படி கேள்வி கேட்டுக் கொண்டிருந் தால் நான் என்ன ஆவேன்? என்கிறீர்களா? அதற்கு விடை நீங்கள் ஜீனியஸ் ஆவீர்கள்.

ஏன் பழம் மேல்நோக்கி போகவில்லை.? ஏன் கீழ் நோக்கி மட்டும் வருகிறது ? என்ற கேள்விதான் நியூட்டனின் தொடக்கம்.

என்னிடம் 5 பழங்களை 5 பேருக்கு பிரித்துக் கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் எத்தனை பழம் கிடைக்கும் என்ற வகுத்தல் பாடம் நடந்து கொண்டிருக்கும்போது, பூஜ்ஜியம் பழங்களை பூஜ்ஜியம் பேருக்கு பிரித்து கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் என்ன கிடைக்கும் ? என்ற கேள்விதான் இராமனுஜம் என்ற ஜீனியஸ்ஸின் தொடக்கம். அதுதான் முடிவுறா எண்களின் தொடக்கமும் கூட.

கேள்விகள் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அதிக ஆர்வம்தான் உந்துசக்தியாக மாறுகிறது.

படித்தவர்களால்தான் கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியுமா ? ஏன் என்னால் முடியாதா ? என்ற கேள்விதான் ஜி.டி நாயுடுவின் தொடக்கம்.

பூமி எப்படி அந்தரத்தில் சுற்றுகிறது? செடிக்கு ஊற்றப்படும் தண்ணீர் புவியீர்ப்பு விசைக்கு எதிராக எப்படி செடிக்குள் மேல்நோக்கி செல்கிறது ? இவ்வளவு வேகமாக வாழ்கிற மனிதர்கள் இன்னும் இருபது வருடம் கழித்து எப்படி இருப்பார்கள் ? இப்படி பார்க்கிற எல்லாவற்றையும் கேள்விகளாக மாற்றுங்கள்.

இதைப் படிக்கும்போதே நான் எனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் என்ன? என்று உங்களுக்கு தோன்று கிறதா… உங்களுக்குள்ளும் கேள்விகள் பிறக்கத் தொடங்கி விட்டதா? கையை கொடுங்கள். நீங்களும் ஜீனியஸ்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *