தோல்வி என்பது அபிப்ராயம்தான்

-லஷ்மி பிரியா

தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.

வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி. ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.

தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.

தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?

சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.

ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.

நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது. எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள். அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.

  1. sakthivel

    Good thinking. Very Good Passage. Thank you lakshmi priya.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *