உங்களைக் கேளுங்கள் உங்களை ஆளுங்க்ள்

– குமரன்

உங்கள் வேலையில் உங்கள் வாழ்க்கையில் என்னவாக வரவேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்களா?

எதில் உங்கள் கவனம் எப்போதும் குவிகிறதோ, அதுவாகவே நீங்கள் ஆகிறீர்கள். உங்கள் கவனத்தை உங்கள் இலட்சியத்தின் மேல் குவித்திருக்கிறீர்களா?

உங்கள் பலங்களை நினைவுபடுத்திக் கொள்வதன் மூலம் சவால்களை சந்தோஷமாக எதிர்கொள்ள முடியும். உங்கள் பலங்களின் பட்டியல் உங்களிடம் இருக்கிறதா?

உங்கள் மனப்பான்மை நேர்மறையாய் இருக்கும்போது நல்லதே நடக்கும். உங்கள் மனப் பான்மையை ஆராய்ந்தீர்களா?

வருமானத்தைப் பெருக்குவது போலவே வருவதை சேமிப்பதும் முதலீடு செய்வதும் முக்கியம். இந்தப் பழக்கமும் தெளிவும் உங்களிடம் இருக்கிறதா?

பரிவும், உதவும் உள்ளமும் உங்களை உயர்ந்தவராக்கும். உங்களுக்கு உதவிகள் கிடைப் பதற்கு வாசல்கள் திறக்கும். மற்றவர்களுக்கு உதவுவதில் முந்திக் கொள்கிறீர்களா?

சிரமங்கள் எல்லோருக்கும் உண்டு. பார்ப்பவர்களிடமெல்லாம் சிரமங்கள் பற்றியே பேசுவது உங்களை சிரமங்களுக்குள்ளேயே வைத்திருக்கும். சிரமங்கள் தீரும் என்று உறுதியாக நம்புகிறீர்களா?

உங்கள்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால்தான் உலகம் உங்கள்மேல் பிரியம் காட்டும். நீங்கள் உங்கள்மேல் பிரியமாய் இருக்கிறீர்களா?

தருகிற வார்த்தைகளைக் காப்பாற்றுவதன் மூலம் உங்களுக்கு நீங்களே மரியாதை செய்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளைக் காப்பாற்றுகிறீர்களா?

ஒருவர்மேல் உருவாகிற அபிப்பிராயம் தவறாக இருக்கிற பட்சத்தில், அதைத் திருத்திக் கொள்கிற துணிவு மிகமிக அவசியம். ஏற்கெனவே உள்ள அபிப்பிராயங்களை அவசியம் ஏற்பட்டால் மாற்றிக் கொள்ளத் தயாராய் இருக்கிறீர்களா?

வெளியே எவ்வளவு பரபரப்பான வேலைகள் இருந்தாலும் உள்நிலையில் அமைதியும் தெளிவும் முக்கியம். இதுவே ஆரோக்கியத்திற்கும் செயலாற்றலுக்கும் ஆதாரம். உள்ளே அமைதியை உணர்கிறீர்களா?

நாம் செய்யும் தவறுகள் நமக்கே தெரிந்தாலோ மற்றவர்கள் சுட்டிக் காட்டினாலோ ஒத்துக்கொள்ளும் குணம் நம்மை உயர்த்தும். தவறு களைத் தயக்கமில்லாமல் ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒரு நல்ல காரியம் நடக்கிறதென்று தெரிந்தால், தாமாக முன் வந்து உதவுவதும், அதில் பயன் கருதாமல் ஈடுபடுவதும், உங்களைப் பக்குவம் மிக்கவராய் பொதுவாழ்வில் உயர்த்தும். நல்ல விஷயங்களை ஆதரிப்பதில் முந்திக் கொள்கிறீர்களா?

மற்றவர்களின் திறமைகளை அடையாளம் காண்பதும், அவற்றை அங்கீகரிப்பதும் உங்கள் உறவை பலப்படுத்தும். உங்களை நம்பிக்கை மிக்கவராக மட்டுமின்றி நம்பகமானவராகவும் காட்டும். திறமையாளர்களை ஊக்குவிக்கிறீர்களா?

அடிப்படைத் திறமைகள் உங்களிடம் இருந்தாலும் தொடர் பயிற்சியும் திறமைகளை மேம்படுத்தும் ஆர்வமுமே உங்களை வெற்றி யாளராக நிலைபெறச் செய்யும். உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்கிறீர்களா?

இந்தக் கேள்விகளை உங்களிடம் நீங்களே கேளுங்கள். உங்களை நீங்களே ஆளுங்கள். ஏனென்றால், உங்களை ஆள்வதே முக்கியம். உலகை ஆள்வது அப்புறம்.

2 Responses

  1. Poongavanam

    Its really amazing, this above words all are very usefull to me also others…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *