சாதனையாளர்களான சாமானியர்கள்

– “சொல்லரசு” க. முருகபாரதி

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்!

நான் இறப்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை.

ஆனால், ஒரே ஒருமுறையேனும், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற பின்னர்தான் நான் இறக்க வேண்டும்

ஆர்ம்ஸ்ட்ராங்கா…..அவரைத்தான் எங்களுக்குத் தெரியுமே, நிலவில் முதல் முதலில் காலடிகளைப் பதித்தவர்தானே! என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்வது நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அவரும் மிகப்பெரிய சாதனை யாளர்தான் என்றாலும், நான் சொல்லவிருப்பவர் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்!

யார் இந்த லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்? அமெரிக்காவைச் சார்ந்த ஒரு சைக்கிள் பந்தய வீரர். நமக்குத் துன்பங்கள் வரும்போது எல்லாம், உலகத்திலேயே நாம்தான் அதிகம் கஷ்டப் படுவதாக நாம் எண்ணும்போதெல்லாம், இவரை ஒரு கணம் நினைத்தால் போதும். நம்பிக்கை ஊற்றெடுக்கும். வாழ்க்கையின் மீதான நம் பார்வை மாறும். புத்துணர்ச்சி பொங்கும். அப்படி என்ன செய்தார் இவர்…..?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் பிறந்த லான்ஸிற்கு, பிறந்தது முதலே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன. இரண்டு வயதில் அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட, அம்மாவுடனும் வளர்ப்புத் தந்தையுடனும் வளர்ந்த லான்ஸிற்கு, அவருடைய மணவாழ்க்கையும் சேர்த்து, குடும்ப வாழ்க்கை இறுதி வரை இனிமையாக அமையவே இல்லை.

இளமைக் காலத்தில் டிரையத்லான் (சைக்கிள், ஓட்டம் மற்றும் நீச்சல் – மூன்றும் சேர்ந்த போட்டி) வீரராக பல சாதனைகள் படைத்துக்கொண்டிருந்த லான்ஸின் முழுக் கவனமும் பின்னர், சைக்கிள் பந்தயத்தின் மீது திரும்பியது. வெற்றிகளும், தோல்விகளும் நிறையப் பார்த்தபோதும், ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆசை யெல்லாம், டூர் டி பிரான்ஸ் பந்தயத்தில் வென்று விட வேண்டும் என்பதாகவே இருந்தது.

முதலில் டூர் டி பிரான்ஸ் பந்தயத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்! உலகின் மிகக் கடினமான பந்தயங்களுள் ஒன்று அது. ஆண்டுதோறும் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், பிரான்ஸ் மற்றும் அதன் எல்லையோரங்களில், சுமார் 21 நாட்கள் நடைபெறும் அப்பந்தயத்தில் கடக்க வேண்டிய தூரம் சுமார் 3500 கிலோ மீட்டர்கள். பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து புல்வெளியில், சில கட்டங்கள் தொடர்ந்து மேடு-பள்ளங்கள் நிறைந்த சாலைகள், சில கட்டங்களோ மலைப்பகுதிகளில், என்று சைக்கிள் ஓட்டியாக வேண்டும். “உலகிலேயே அதிக உடல்திறன் தேவையான விளையாட்டுப் போட்டி” என்றும், போட்டியை முழுவதுமாக நிறைவுசெய்யத் தேவைப்படும் ஆற்றல் “மூன்று முறை எவரெஸ்ட் ஏறுவதற்கும், பல மராத்தான் ஓட்டப் பந்தயங்களுக்கும் இணையானது” என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அவ்வளவு கடுமையான பந்தயத்தில் வெல்லத்தான் லட்சியம் கொண்டார் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்.

அப்பொழுதுதான் அந்த விபரீதம் நேர்ந்தது! சைக்கிள் பயிற்சியின் போது தவறி விழுந்தார் லான்ஸ்! மருத்துவமனையில் அனுமதித்த சில நாட்களிலேயே கோமா நிலையை அடைந்தார்! காரணம், ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு….. கேன்சர்! ஆம்! கொடுமையான புற்றுநோய், அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அமெரிக்க மருத்துவர்களாலேயே, இவர் சில நாட்களில் இறந்துவிடுவார் என்று கணிக்கப் பட்டார்!

இந்த நிலையில்தான் ஒரு நாள், சில நிமிடங்கள் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு நினைவு திரும்பியது. கோமா நிலையில் இருந்த எந்த ஒரு நோயாளியானாலும், நினைவு வந்தவுடன் தன் உறவினர்களைத்தான் தேடுவார் அல்லவா! ஆனால், நம்  ஆர்ம்ஸ்ட்ராங்கோ, “டாக்டர்! என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்! நான் இறப்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை. ஆனால், ஒரே ஒருமுறையேனும், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற பின்னர்தான் நான் இறக்க வேண்டும்” என்றார். என்ன மனிதர் இவர்! மனதிற்குள் எத்தனை லட்சிய வெறி! என்று வியந்த மருத்துவர்கள், அவரை எப்படியாவது காப்பாற்றிவிட முனைந்தனர்.

ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக அமையவில்லை. முழு குணமடைவதற்குள் அவர் பட்ட வேதனைகள் ஏராளம்! கீமொதெரபி என்னும் மிகவும் கடுமையான சிகிச்சை பலமுறை அவருக்கு அளிக்கப்பட்டது! மூளையில் கட்டி வேறு ஏற்பட்டு, அதற்கும் அறுவை சிகிச்சை நடை பெற்றது. இவை போதாதென்று, தீவிரமான சிகிச்சைகளின் பக்க விளைவாக, நுரையீரலில் அடைப்பு, சிறுநீரகம் பழுது, பக்க வாதம் மற்றும் ஹார்ட் அட்டாக் என்று ஒரு மனிதன் சந்திக்கவே கூடாத அத்தனை பிரச்சனைகளையும், மொத்தமாக சந்தித்தார் ஆர்ம்ஸ்ட்ராங்! இத்தனைக்கும் பிறகு, இறைவன் அருளால், ஆர்ம்ஸ்ட்ராங்கின் லட்சிய வெறியால், உயிர் பிழைத்தார்!

உயிர் பிழைத்தாலும்கூட, இவரால் சைக்கிள் பந்தயத்தில் இனி பங்கேற்கவே முடியாது என்றுதான் உலகம் நினைத்தது! நினைத்ததோடு மட்டுமில்லை, தேசிய அணியில் இடம் கொடுக்காமல், அவரது இதயத்தில் இடியை இறக்கியது! எண்ணிப்பாருங்கள், ஒரு புகழ் பெற்ற வீரருக்கு, எவ்வளவு பெரிய அவமானம் இது!

ஆனால் ஆர்ம்ஸ்ட்ராங் மனம் தளரவில்லை! கடுமையாகப் பயிற்சி செய்தார்! தொடர்ந்து உழைத்தார்! நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்! மிக நல்ல உடல் நிலையோடு இருக்கும் ஒருவரால், ஒருமுறை வெல்வதே கடினம் என்று நம்பப்படும் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில், ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, தொடர்ச்சியாக ஏழு முறை (1999 – 2005) வென்று உலக சாதனை படைத்தார்.

செப்டெம்பர் 18, 1971-ல் பிறந்து, தற்போது 39-ஆவது வயதில், உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங், உலகெங்கும் கேன்சர் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டும், அதற்காக நிதி திரட்டிக் கொண்டும் சமுதாய சேவை செய்து வருகிறார்.

நினைத்ததை முடித்திட நினைப்போம்.

தினமும் அதற்காக உழைப்போம்.

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *