வருமானம் பெருக வளமான வழிகள்

நமக்கு நம்பிக்கை தருகிற முக்கியமான அம்சங்களில், முன்னணியில் இருப்பது வருமானம். நிறைய மனிதர்களின் அகராதியில், அதிக வருமானமென்றால் வேலைக்குப் போகாமல் காலாட்டிக் கொண்டே இருந்தாலும் வந்து சேர்கிற பணம் என்றொரு பொருள் இருக்கிறது.

வருமானத்திற்கான வழிகளைப் பெருக்கிய பிறகு இப்படியொரு நிலை உருவாகும் என்பது உண்மைதான். ஆனால், ஆரம்பநிலைகளில், வருமானம் பெருக்கி வளமை வேண்டுமென்றால், அதற்கு வேறொரு மனநிலையும் அணுகுமுறையும் அவசியமாகிறது.

நிதியியல் துறை ஆலோசகராகவும், உளவியல் நிபுணராகவும் விளங்கியவர், டாக்டர். ஸ்ரூ ப்ளாட்னிக் என்பவர். பெரும் செல்வந்தர்கள் எப்படி உருவானார்கள் என்கிற ஆராய்ச்சியில் இருபதாண்டுகள் மூழ்கியிருந்த இவர், முக்கியமான கண்டுபிடிப்பொன்றை அறிவித்தார்.

நிலம் விற்பதிலோ, பங்குச் சந்தையிலோ நேரடியாக முதலீடு செய்து இலட்சாதிபதியானவர்கள் குறைவு. தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் தலைசிறந்த நிபுணர்களாகி, விரும்பும் அளவு வருமானம் பெற்று, அந்தப் பணத்தை நிலத்திலோ, பங்குச்சந்தையிலோ முதலீடு செய்தவர்கள் இவர்கள் என்பதே அந்தக் கண்டுபிடிப்பு.

இதன் மூலம் இவர் சொல்ல வருவது என்ன தெரியுமா? செல்வந்தராக உயரவேண்டுமென்றால் முதல், உங்கள் திறமைகளில் முதலீடு செய்யுங்கள். அதில் வருகிற பணத்தை, பலமடங்கு பெருகக்கூடிய முறைகளில் முதலீடு செய்து முன்னேறுங்கள். பணம் பண்ணுவதற்கான பாலபாடம் இது. உங்களில் நீங்களே முதலீடு செய்ய வேண்டுமென்றால் முதல் சில கேள்விகளை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.
“நீங்கள் இப்போது செய்கிற வேலையோ, தொழிலோ உங்கள் சிறந்த திறமையை வெளிக் கொணர்கிறதா? உங்கள் வேலையையோ, தொழிலையோ நீங்கள் முழுமையாக நேசிக்கிறீர்களா?”

இந்த இரண்டு கேள்விகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏனென்றால், நீங்கள் செய்கிற வேலையை நீங்கள் நேசித்தால் மட்டும் போதாது. உங்கள் திறமையை அது முழுமையாக வெளிக்கொணர்வதாகவும் இருக்க வேண்டும். செய்வதற்கு சவாலான வேலையை செய்தால் அந்த சவாலான வேலைமீது ஆளுமை வளரும். அந்த சவாலே சுகமான அனுபவமாய் மாறி உங்கள் திறமைகளை வளர்ப்பதோடு வருமானத்தையும் வளர்க்கும்.

இதற்கு மிக முக்கியமான ஒன்றையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உங்கள் திறமையை வளர்த்தெடுக்கும் பயிலரங்குகளில், வழிகாட்டும் கருத்தரங்குகளில் பங்கேற்பது. உங்கள் சொல்திறனின் தரம் பலமடங்கு உயரும்போது, எந்த விதத்திலாவது நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.

இந்தக் கட்டுரையின் தலைப்பு, “வருமானம் பெருக வளமான வழிகள்” என்று இருக்கிறது. “பணம்” என்ற சொல்லையும் “வளம்” என்ற சொல்லையும் எடுத்துக்கொள்ளுங்கள். பணம் மட்டுமே வளம் அல்ல. உங்கள் சேமிப்புதான் வளத்தின் அளவென்றால், ஒவ்வோர் எறும்பும் உங்களைவிட வளமாகவே இருக்கிறது. உணவு, உடை, வீடு, வாகனம், சொத்து, இவற்றைவிட முக்கியமாய் சந்தோஷம் – இவையெல்லாம் சேர்ந்த வாழ்வுக்குத்தான் வளமான வாழ்வு என்று பெயர்.
பலர் கணிசமான அளவு பணம் சேர்த்துவிட்டு, அதனை மொத்தமாய் வங்கியில் போட்டுவிட்டு, உணவில் தொடங்கி எல்லாவற்றிலும் கடும் சிக்கனம் காட்டி (கஞ்சத்தனத்தின் நாகரீகமான பெயர்) கைக்கும் வாய்க்கும் பற்றாமலேயே போராடிக் கொண்டிருப்பார்கள்.

இவர்களால், வாழ்க்கையையோ, பணத்தையோ ரசிக்க முடியாது. அதனாலேயே ஓரளவுக்கு மேல் வருமானத்தையும் பெருக்க முடியாது. பணத்தை மனதுக்கும் கைகளுக்கும் நெருக்கமாக வைத்திருப்பவர்களே வளமுடன் வாழ்கிறார்கள். பணத்தைப் பார்த்து பயந்து கையாளத் தெரியாமல் மிரண்டு, லாக்கரிலும், ஏக்கரிலும் வைப்பவர்கள் வளத்தை ஒருபோதும் அனுபவிப்பதில்லை.

தன்னை ரசித்து, நிறைய சம்பாதித்து, போதுமான அளவு யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களிடமே பணம் சேர்கிறது. நீங்கள் கூர்மையாகப் பார்த்தால், கீழை நாடுகளில் தோன்றிய நீதி இலக்கியங்கள் எல்லாமே, பணத்தை எப்படிப் பயன்படுத்துவது என்றுதான் நீளமாகப் பேசியுள்ளனவே தவிர பணம் பண்ணுவதைப் பற்றி அவை நேரடிக் குறிப்புகளை நிறைய வழங்கவில்லை. என்ன காரணமென்றால், இருக்கிற பணத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களிடம் இயல்பாகவே பணம் பெருகும் என்பதை அந்த அறிஞர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள்.

வருமானம் பெருக வேண்டும் என்கிற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, “பணம் என்பது, நிபுணத்துவத்திற்குத் தரப்படுகிற அங்கீகாரம்”. நீங்கள் வெளிப்படுத்தும் தனிப்பட்ட திறமையாக இருந்தாலும் சரி, செய்யும் தொழிலாக இருந்தாலும் சரி, அதற்குத் தரப்படுகிற அங்கீகாரமே பணம்.

இதற்கு நீங்கள் பெரிய பெரிய உதாரணங்களைத்தான் தேட வேண்டும் என்பதில்லை. சின்ன வயதில் உங்கள் பெற்றோரின் பிறந்த நாளுக்கோ திருமண நாளுக்கோ ஏதாவது பரிசு கொடுக்க நினைத்திருப்பீர்கள். கையில் காசு இருந்திருக்காது. உங்கள் பிஞ்சுக் கைகளால் ஓர் ஓவியம் வரைந்தோ கைவினைப் பொருள் ஒன்று செய்தோ கொடுத்திருப்பீர்கள். உங்கள் பெற்றோர் மகிழ்ந்து நூறு ரூபாய் தந்திருப்பார்கள். இவை இரண்டுமே பாசத்தின் பரிமாற்றம்தான். ஆனாலும் நீங்கள் சரியான தருணத்தில், சரியான இடத்தில் வெளிப்படுத்திய திறமை ஒரு வெகுமதியை பெற்றுத் தந்தது.

நம்பகத்தன்மைக்கும் நிபுணத்துவத்துக்கும் வேண்டிய விலையைக் கொடுக்க இந்த சமூகம் எப்போதுமே தயாராகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

உங்கள் திறமை அளக்கத்தக்கதாக இருக்கும்போதும், திறமையின் வெளிப்பாடு கண்கூடான பலனைக் கொடுக்கும்போதும் உங்கள் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. வாழ்வில் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டும் என்பதை முதன்மை நோக்கமாக வகுத்துக் கொள்பவர்கள் உண்டு. ஆனால் வெற்றிகரமாக இருக்க வேண்டும், சாதிப்பவராக இருக்கவேண்டும், பயனுள்ளவராக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியானவர்களாகவும் மலர்ந்து விடுகிறார்கள்.

அளக்கத்தக்க திறமை, ஜெயித்துக் காட்டும் சக்தி, இரண்டும் சேரும்போது வருமானம் பெருகி வளமாக வாழமுடிகிறது.

மறந்துவிடாதீர்கள்! வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் நிகழ்ச்சி. இன்றைய தொலைக்காட்சி பாஷையில் சொன்னால், ‘மெகா ஷோ+! இதில் பார்வையாளர்களாக மட்டும் இருக்கையில் எதையும் பெரிதாய் எட்டமுடியாது. அத்தகைய நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் என்ன செய்கிறார்கள்? காட்டப்படுகிற காட்சிகளைக் காண்கிறார்கள். கைதட்டுகிறார்கள். வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். பங்கேற்பாளர்கள் பரிசு வாங்கும்போது உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்களுக்குக் கிடைப்பதென்னவோ – அரை ட்டர் ஆரோக்யா பால் – அதுவும் ஒரு நிகழ்ச்சியில் மட்டும்தான்!

ஆனால் வாழ்க்கை என்கிற மெகா ஷோ+வில் பங்கேற்பாளர்களாகப் பட்டையைக் கிளப்பும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தயக்கம் காரணமாகவோ திட்டமிடாமை காரணமாகவோ உங்கள் பங்கேற்பை மிகக் குறைவாக வைத்துக்கொண்டு, பார்வையாளர்கள் வரிசையில் அமர முடிவு செய்து விட்டீர்கள் என்றால், நீங்கள் வெற்றியாளர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பீர்களே தவிர உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெகுமதிகளை அள்ளிச்செல்லும் வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்.

எனவே, இதுவரை பார்த்த விஷயங்களின் இன்றியமையாத பகுதிகளைத் தொகுத்துப் பார்க்கலாம்.

  • உங்களுக்கு நன்கு தெரிந்த தொழிலையோ பணியையோ முழு வீச்சில் செய்து, அதில் முதன்மையாக வாருங்கள்
  • நீங்கள் நேசித்துச் செய்த – பணியில் ஈட்டிய பணத்தை முறையாக முதலீடு செய்யுங்கள்
  • பணத்தைப் பார்த்து மிரளாமல், அதனுடன் நெருக்கமான தோழமை கொண்டு அதனைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள்
  • பணம் ஒரு கருவி என்பதைப் புரிந்து கொண்டு கவனமாகக் கையாளுங்கள்
  • பணம் என்பது வாழ்வின் வளங்களைப் பெருக்கத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
  • உங்கள் திறமைகளைக் கூர்மைப்படுத்தும் விதமாக பயிற்சிகளில் பங்கெடுங்கள். உங்கள் முதல் முதலீடு, உங்கள் தகுதிகளை வளர்ப்பதில் இருக்கட்டும்.
  • வாழ்க்கையில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்காமல் பங்கேற்பாளராக இருங்கள். வளரும் வருமானமும் பெருகும் வாழ்வை வாழுங்கள்

2 Responses

  1. pandy

    dear sir
    this very good and useful store and thigking future and earning idea for peoples and also it is very nice emotional and mind crushed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *