இவையிரண்டும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம்

பல ஆண்டுகளுக்கு முன் புதுவை கம்பன் கழக மேடையில் நடந்த ஒரு நிகழ்வு. அடிக்கடி நெஞ்சில் நிழலாடும்.

ஒரு கருத்தரங்க மேடையில் அமர்ந்திருந்தோம். மறைந்த இலக்கிய வித்தகர் திருச்சி இராதாகிருஷ்ணன் தலைவராக

இருந்தார். முன்னிலை வகித்தவர், அப்போதைய புதுவை முதல்வர் திரு. M.O.H. பரூக் அவர்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் பேசிய திரு M.O.H. பரூக், திருச்சி இராதாகிருஷ்ணன் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். “ஐயா! தருமம் என்ற சொல் பல இடங்களில் பேசப்படுகிறது. பலர், பல சூழல்களில் அந்த சொல்லை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் தர்மம் என்றால் என்ன? அதற்கு என்ன விளக்கம் கொடுக்க முடியும்?”

மேடையில் இருந்த எனக்கு இது கடுமையான கேள்வியாகப் பட்டது அப்போது. தலைவர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்று எல்லோருமே எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஒலிபெருக்கி முன்னர் வந்து நின்று, சுற்றும் முற்றும் பார்த்தார் திருச்சி இராதாகிருஷ்ணன். அவருடைய குடுமியைக் கொஞ்சம் இறுக்கிக் கட்டினார். “தருமம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார் மதிப்பிற்குரிய திரு. பரூக் அவர்கள். தருமம் என்பதோ, அதற்குப் பொருள் சொல்வதோ சிரமமே இல்லாதது. அவரவர் வேலையை அவரவர் ஒழுங்காக செய்வதுதான் தருமம். என் வேலையை நானும், உங்கள் வேலையை நீங்களும் சரியாக கடமை தவறாமல் செய்வதைவிட பெரிய தருமம் ஒன்றுமே இல்லை” என்றார்.

மனத்தில் ஆணி அடித்து இறக்கியதைப் போல இறங்கியது இந்த விளக்கம். கடமை தவறாமல் இருப்பதைவிட உண்மையில் மிகப் பெரிய தருமம் உண்டா என்ன! அவரவர் வேலையை அவரவர் செய்துவிடுகிறார் என்பது மட்டும் நடைமுறையில் இருந்தால் மண்ணில் சொர்க்கத்தைக் காணலாமே!

காலையில் வீட்டைவிட்டு வெளியே இறங்கினவுடன் தெருவே சுத்தமாக இருக்கிறது; துப்புரவு பணியாளர்கள் விடிவதற்குள்ளேயே தெருவை பெருக்கி முடித்து, குப்பைகளும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன; அவற்றை அள்ளிச் செல்லும்போது சாலை நடுவில் விழும் குப்பைகள்கூட இல்லாமல் தெரு தூய்மையாக இருக்கிறது;  இரவோடு இரவாக சாலை ஓரம் பள்ளம் வெட்டிய தொலைபேசி ஊழியர்களோ அல்லது குடிநீர் வாரிய ஊழியர்களோ அல்லது மின்சாரவாரிய ஊழியர்களோ, குழிகளை நன்றாக மூடி பள்ளம் தோண்டியதுகூட தெரியாமல் தெருவை சமன் செய்து வைத்திருக்கிறார்கள்;  பேருந்துகள் சரியாக நிறுத்தத்தில் நிற்கின்றன; பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி முடித்ததும், வரிசையாக ஏறுகிறார்கள்; போக்குவரத்து விதிகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றன; ஒலிப்பான் (Horn)  சத்தமே இல்லாமல் சாலைகள் அமைதியாக இருக்கின்றன; பச்சை விளக்கு அணைந்ததுமே எல்லா வண்டிகளும் நிறுத்து கோட்டிற்கு முன்னரே நிற்கின்றன. ஒரு போக்குவரத்து காவலர்கூட சாலையில் தென் படவில்லை;  இருப்பினும் சாலைகளின் குறுக்கே எவரும் ஓடவில்லை;  அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்கிறார்கள்;  அவர்கள் சாலையைக் கடப்பதற்கு அனுமதித்து, வண்டியை ஓட்டி வருபவர்கள் வேகத்தைக் குறைக்கிறார்கள்;  அலுவலகங்களில் எல்லோரும் தங்கள் பிரச்சனைகளைத் தள்ளிவைத்து சிரித்த முகத்துடன் தங்கள் வேலையை பார்க்கிறார்கள்… இப்படி கற்பனை செய்து கொண்டுபோனால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது!

இதெல்லாம் கற்பனையில்தான் நடக்கும் என்று எண்ணினால் அது நமது அறியாமையைத்தான் காட்டும். உலகில் பல நாடுகளில் மக்கள் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். கடமையைச் செய்பவர்களும், விதிகளை மதிப்பவர்களும் இருக்கும் நாடுகள் தான் நல்ல வளர்ச்சியைக் காண்கின்றன. வளர்ச்சிக்கு முதற்படி கடமைகளைச் செய்வதும் விதிகளை மதிப்பதும்தான். இந்த இரண்டிலும் உறுதியாக இருக்கும் இளைஞர்களைத்தான் இந்த நாடு எதிர்பார்க்கிறது. இத்தகையவர்களை வெற்றி தேடிவரும் என்பது உறுதி.

இந்த இரண்டையும் இளமையிலேயே பழக்கமாகவே மனத்தில் நிலைகொள்ளச் செய்ய வேண்டும். இவை மனம் தொடர்பான குணங்கள்தான். கட்டாயத்தால் இந்த மாற்றங்களைக் கொண்டுவர இயலாது. சட்டம் கட்டுப்படுத்தும். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது மீறல் நிகழும். தமிழ்நாட்டில் ஹெல்மெட் சட்டம் பயன்படாது போனது போல!

சட்டம் ஒரு கருவிதான். அதற்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்று பூரணமாக என்னும் மக்களிடம் அது முழுமையாக வெற்றி பெறுகிறது. நம் நாட்டில் மிகச் சமீபத்தில் நிகழ்ந்துவிட்ட சில நிகழ்வுகளை எண்ணிப் பாருங்கள்.

தேக்கடியில் சுற்றுலா சென்ற இரண்டடுக்கு படகு கவிழ்ந்து பல சுற்றுலா பயணிகள் இறந்தனர். பின்னர் நடந்த விசாரணையில், அந்தப் படகு இரண்டு அடுக்கு கட்டி மக்களை ஏற்றுவதற்குத் தகுதியானது அல்ல என்று சொல்லப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில் மக்கள் படகில் ஏற்றப்பட்டனர் என்றும் சொல்லப்பட்டது. கீழ் அடுக்கில் குறைவாகவும் மேல் அடுக்கில் நிறைந்தும் மக்கள் இருந்தார்கள் என்றும், யானை கூட்டத்தைப் பார்க்க கீழே இருந்தவர்கள் மேலே ஓடினார்கள் என்றும் சொல்லப்பட்டது. படகில் குறைந்த அளவு இருக்க வேண்டிய உயிர் காக்கும் அங்கிகள் (Life Jackets) இல்லை என்றும் சொல்லப் பட்டது. இப்படிப் பல சொல்லப்பட்டன. பல அதிகாரிகளின் தலைகள் உருண்டன. அத்துடன் அது முடிந்தது.

ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள பள்ளிப்பட்டு என்று இடத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி அந்த இடமே எரிந்தது. பலர் உடல் கருகி மாண்டனர். பலருக்குக் கொடுங்காயம். பட்டாசுகள் விற்கப்படும் இடத்தில் பொதுவாக இருக்க வேண்டிய எவ்வித பாதுகாப்பும் அந்த இடத்தில் இல்லை என்று சொல்லப்பட்டது. அனுமதி இல்லாமல் அந்த இடத்தில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. அதிகாரிகளுக்கு இந்தத் தவறுகள் தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்கள் என்று சொல்லப் பட்டது. ஏழு அதிகாரிகள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் அது முடிந்தது.

வேதாரண்யத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒரு குளத்தில் கவிழ்ந்தது. ஒன்பது குழந்தைகளும், பல குழந்தைகளைப் போராடி காத்த ஓர் ஆசிரியையும் இறந்தனர். அந்த வண்டியை ஓட்டியவருக்கு ஓட்டுநர் உரிமம் கூட இல்லை என்று சொல்லப்பட்டது. அவர் செல்போன் பேசிக்கொண்டே வண்டியை வேகமாக ஓட்டினார் என்று சொல்லப்பட்டது. இந்த வாகனத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என்றும் சொல்லப்பட்டது. பள்ளியே அங்கீகாரம் பெறாத ஒன்று என்று சொல்லப்பட்டு அந்தப் பள்ளி மூடப்பட்டது. அத்துடன் அது முடிந்தது.

சமீபத்தில் மழையில் நீலகிரி மாவட்டத்தில் நிறைய பாதிப்பு. நிலச்சரிவு, சாலைகள் காணாமல் போயின, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பலர் மரணம் அடைந்தனர். முறைப்படி அனுமதி வாங்காமல் கட்டப்பட்ட கட்டடங்களே அனைத்துக்கும் காரணம் என்று சொல்லப் பட்டது. நீரோடைகள் பாயும் இடத்திலேயே குடில்கள் கட்டப்பட்டதாகவும் மழையில் அவை பெரும் சேதம் அடைந்தன என்று சொல்லப் பட்டன. அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன் அது முடிந்தது. மேற்கூறிய நிகழ்வுகளைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். சிக்கல்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை களோடு முடிந்துவிடுகின்றன; பாதிப்புகள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளன.

ஆனால் இவை அனைத்தும் ஒரே பாடத்தைத்தான் நமக்குத் திருப்பித் திருப்பிச் சொல்கின்றன. ‘விதிகளை மதி;  கடமைகளைச் செய்’ என்பதே அது.

அந்த இரண்டு உணர்வுகளையும் குழந்தைப் பருவத்தில் இருந்தே நாம் ஊட்டி வளர்க்க வேண்டும். இளமையிலேயே இந்த இரண்டு பண்புகளும் நம்மிடம் இணைந்து இருந்தால், வெற்றிக்கு வேறு எந்த உத்திரவாதமும் தேவையில்லை.

வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் இவை இரண்டையும் பயன்படுத்திப் பாருங்கள். இவை இரண்டுமே கத்தியாகவும் பயன்படும், கேடயமாகவும் பயன்படும். நாளடைவில் இவை நம் குணநலனுடன் பின்னிப் பிணைந்து நம்பிக்கைக்குரியவர் என்ற நற்பெயரை நமக்குப் பெற்றுத் தரும். இந்த நற்பெயரே நாம் செல்ல விரும்பும் இடத்துக்கான கதவுகளைத் திறந்து விடும்.

பொதுவாக மனிதர்களின் செயல்கள் அனைத்துமே சங்கிலித் தொடர்களைப் போல பின்னிப் பிணைந்தவைதான். பணம் தந்து விடுகிறேன் என்று ஒருவர் சொல்லும் உறுதியை நம்பித்தான் மற்றவரிடம் நீங்கள் உறுதி அளிக்கிறீர்கள். அவர் அதை நம்பி அடுத்த திட்டம் வைத்திருப்பார். உங்களுக்குப் பணம் வருவது தடைப்பட்டால் நேரிடையாக உங்களுடன் சம்மந்தப்படாத ஒருவரும் அதனால் பாதிக்கப்படுவார்.

குறிப்பிட்ட நேரத்தில் கணினியில் ஒரு செய்தி தயாரித்து தருவதாக ஒப்புக் கொண்டிருப்பீர்கள். இரண்டு நாட்களாகத் தடைபட்டும், மின் ஊழியர் வந்து தொடர்பு தரவில்லை என்றால், உங்கள் வாக்கு தவறும். உங்களிடமிருந்து செய்தியைப் பெற்று அடுத்த வேலைக்குச் செல்ல இருந்தவர்களும் பாதிக்கப் படுவார்கள்.

‘மாதவியின் கானற்பாணி கனகவிசயர்தம் முடித்தலை நெறித்தது’ என்று சிலப்பதிகாரத்தில் ஒரு வரி வரும். எங்கோ நடந்த ஒரு நிகழ்ச்சி வேறெங்கோ ஒரு மறுநிகழ்வை உண்டாக்கும்.

கடமை தவறும் இடத்தில்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். பல நேரங்களில் நமது அனைவரின் சிக்கல்களுக்கும் விதிகளை மீறுவதும், கடமை தவறுவதுமே காரணங்களாக இருக்கின்றன.

தாய் தந்தை இருபுறம் நின்று குழந்தையின் இரு கைகளைப் பிடித்து பாதுகாப்பாய் அழைத்து செல்வதுபோல, இவ்விரண்டு நற்பண்புகளும் நம்மை பாதுகாப்பாய் அழைத்துச் செல்கின்றன.

நாம் தாய் தந்தையர் இல்லாத அனாதைகளா என்ன?

3 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *