வீட்டிற்குள் வெற்றி

– கிருஷ்ண. வரதராஜன்

டியர் பேரண்ட்ஸ் டீச்சர் வேலை வேண்டாம்

உங்களுக்கு அதிர்ச்சி தரும் சில விஷயங் களை, இதில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் மூலம் குழந்தைகளுக்கு நாங்கள் எதையும் கற்றுக்ù காடுப்பதில்லை. கற்பதற்கான சூழ்நிலையை மட்டுமே ஏற்படுத்திக் கொடுக்கிறோம். அவர்களாகவே தங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பாடங்களை படித்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சில…

சுதந்திரா ஹாலிடே ஸ்கூலில் மாணவர் களுக்கு நாங்கள் எந்த கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. 9.30க்கு வகுப்புகள் தொடங்கு கிறது என்றால், 9.30க்கு நீங்கள் வந்தே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. 10.30க்கு வரலாம். 12.30க்கு வரலாம். ஏன் 4.30க்கு முடிகிற வகுப்புக்கு நீங்கள் 4.25 க்கு கூட வரலாம். ‘ஏன் லேட்?’ என்று யாரும் கேட்பதில்லை.

அதே போல் வகுப்பில் அமர்ந்திருந்தாலும் வகுப்பை கவனிக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. உங்களுக்கு வேடிக்கை பார்க்க வேண்டும் போல் தோன்றினால் தாராளமாக வேடிக்கை பார்க்கலாம். ‘அங்கே என்ன வேடிக்கை. இங்கே கவனி’ என்று யாரும் அதட்ட மாட்டார்கள். தூக்கம் வந்தால்கூட நீங்கள் தூங்கலாம். ஒரே ஒரு கட்டுப்பாடுதான் வைத்திருக்கிறோம். தூங்கும்போது குறட்டை விடக்கூடாது.  காரணம் பக்கத்தில் தூங்குபவர் விழித்துவிட நேரிடலாம்.

அதிர்ச்சியாகிவிட்டீர்களா…

சுதந்திரமான சூழலில்தான் கற்றல் சிறப்பாக நடைபெறும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

9.30க்குள் வந்தாக வேண்டும். இல்லை யென்றால் வெளியில் நிற்க வேண்டும் அல்லது முழங்கால் போட வேண்டும் என்பது போன்ற தண்டனைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாணவர்கள் சரியான நேரத்திற்கு வகுப்பிற்கு வரவேண்டுமென்றால் வகுப்பை சுவாரஸ்யமாக நடத்தவேண்டும் என்பதைத்தான் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வகுப்பு சுவாரஸ்யமாக இருக்கும்போது 9.30 வகுப்புக்கு மாணவன் 9.20க்கே வந்து அமர்ந்திருப்பான். வெளியில் வேடிக்கை பார்க்க மாட்டான். வகுப்பில் தூங்க மாட்டான்.

தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு நாள் வகுப்புக்கு லேட்டாக வந்திருந்தால் கூட அடடா வகுப்பு துவங்கிவிட்டதே என்று அவன் வருத்தப்படுவான். காலதாமதத்திற்கு என்ன காரணம் என்று பார்த்து அதை அடுத்த நாள் சரி செய்துகொள்வான். எனவே நாங்கள் எதையும் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில்லை அவர்களே கற்றுக்கொள்கிறார்கள். அதற்கு தேவையான உதவிகளை மட்டுமே நாங்கள் செய்கிறோம்.

எங்கள் சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் பயிற்சியாளர்கள், விடுப்பு எடுக்கிற சூழல்வந்தால் முதல்நாளே வகுப்பில் மாணவர்களிடம் அனுமதி கேட்பார்கள்.  நன்றாக கவனியுங்கள்.  ‘நாளை நான் லீவு’ என்ற தகவல் அல்ல அது . ‘நாளை எனக்கு இப்படிப்பட்ட ஒரு வேலை இருப்பதனால் லீவு தேவைப்படுகிறது. எடுத்துக் கொள்ளட்டுமா?’ என்று மாணவர் களிடம் கேட்பார்கள். எங்கள் மாணவர்கள் கோரஸாக ஓகே சொன்னால்தான் விடுப்பு. இந்தப்பழக்கத்தினால் இதுவரை எங்கள் மாணவர்கள் யாரும் சொல்லாமல், அனுமதி வாங்காமல் விடுப்பு எடுப்பதே இல்லை.

எதற்கு இந்த செய்திகள் எல்லாம் என்று யோசிக்கிறீர்களா… காரணத்தை சொல்லி விடுகிறேன்.

எதையும் கற்றுத்தருவதை விட கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் பெற்றோர்களின் கடமை. ஆனால் பல பெற்றோர்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை சிதைத்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்.

கற்றுக்கொள்வது என்பது உயிர் இயல்பு. அதனால்தான் குழந்தைகள் கண்ணில்படும் எல்லாவற்றையும் எடுக்க முயற்சிக்கிறது. சேரைப்பார்த்தால் இழுக்க முயற்சிக்கிறது. செல்லை பார்த்தால் பேச முயற்சிக் கிறது. ஆனால் இதெல்லாம் நடக்கும்போது நாம் சொல்லும் ஒரே வார்த்தை, செய்யாதே. ஆக கற்கும் ஆர்வத்தை நாம்தான் எடுக்காதே, இழுக்காதே,  தொடாதே  என சொல்லி சொல்லி குறைத்து விடுகிறோம்.

இன்னொரு உதாரணம் சொன்னால் என் கருத்தை எளிதாக புரிந்துகொள்வீர்கள்.

குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு நாம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தரவேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாள் அமைதியாக குழந்தைகளை வேடிக்கை பாருங்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கிறது என்பதை உணர்வீர்கள்.

உங்கள் வீட்டில் உள்ள குழந்தையை கவனித்திருக்கிறீர்களா.. எதன் மீதாவது ஏறி இடறி விழுந்து அடிபட்டிருந்தாலும் மறுபடியும் அதன்மீது ஏறுவார்கள். கவனித்து பார்த்திருக்கிறீர்களா?

சேரை இழுத்துப்போட்டு எதையோ எடுக்க ஏறுகிறார்கள். இடறி விழுந்து கையில் கட்டுப்போடும்படி ஆகிவிட்டது என்றாலும் கட்டுப்போட்ட நிலையிலேயே ஏறுவார்கள். ‘நம்மால் ஏறமுடியாது. ஏறினால் விழுந்து விடுவோம்’ என்று அவர்கள் நினைப்பதில்லை. அந்த வயதில் ‘முடியும்’ என்பதை மட்டும்தான் நினைக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்த உலகத்திற்கு வரும் போது ஒவ்வொரு குழந்தையும் ‘முடியும்’ என்ற வெற்றிச் சிந்தனையுடன்தான் வருகிறது.

ஆனால் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு தேர்வுகளில் பெயிலாகி விடுகிறது. ‘எனக்கு படிப்பு வராது. என்னால் படிக்க முடியாது’ என்கிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்து விடுகிறது. இப்போது பிஸினஸ் செய்கிறது . பிஸினஸில் தோல்வி வருகிறது. ‘எனக்கு பிஸினஸ் லாயக்கில்லை. என்னால் பிஸினஸ் செய்ய முடியாது’ என்கிறது.

முடியும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே கொண்டிருந்த அவர்கள், வளர்ந்த பிறகு ‘முடியாது’  என்று மாறியது எப்படி ?

இதற்கு காரணம் நாம் செய்கிற டீச்சர் வேலைதான்.  அதிலும் முடியும் என்பதை விட முடியாது என்பதைத்தான் அதிகம் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்.

எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ‘அங்க போகாதே. அப்படி ஆயிடும். இதைச் செய்யாதே இப்படி ஆயிடும்.’

“குழந்தை மாடியிலிருந்து எட்டிப் பார்க்கிறது. எட்டிப்பார்த்தால் விழுந்துவிடலாம். அடி பட நேரிடலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கற்றுத்தர வேண்டாமா ?” என்று நீங்கள் கேட்கலாம்.

குழந்தையின் கையில் மண் பொம்மையை கொடுங்கள். பால்கனியிலிருந்து இரண்டே நிமிடத்தில் எந்தக் குழந்தையும் நிச்சயம் தூக்கி எறிந்துவிடும். கீழே அழைத்து வந்து காண்பியுங்கள். தனித்தனியாக சிதறிக்கிடக்கும் பொம்மை நிலைதான் நமக்கும் என்பதை நீங்கள் சொல்லாமலே குழந்தையாக கற்றுக்கொள்ளும். இதில் நீங்கள் செய்தது, அதை கற்றுக்கொள்ள உதவியதுதான்.

படித்தால்தான் எதிர்காலம் என்ற பாடத்தை நாம் நம் குழந்தைகளுக்கு கதறக்கதற தினமும் கற்றுத் தருகிறோம். அதற்கு பதில் பல்வேறு வேலைக்கு செல்கிறவர்களை சந்திக்கச் செய்யுங்கள். அவர்கள் செய்யும் வேலை, அவர்களின் வாழ்க்கை தரம் ஆகியவற்றை காண்பித்து இதிலிருந்து என்ன புரிகிறது என்று கேளுங்கள்.

என்ன படித்திருக்கிறார்களோ, அதற்கேற்ற வேலை. அதற்கேற்ற சம்பளம் அதற்கேற்ற வாழ்க்கை முறைதான் அமைகிறது . எனவே நாமும் நன்றாக படித்து அறிவில் சிறந்து வாழ்வில் உயர வேண்டும் என்று அவர்களாக பாடம் கற்பார்கள்.

எனவே, எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தரும்போதும் அதை அவர்களாக கற்பதிலிருந்து நாம் தடை செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பல பெற்றோர்கள் வீட்டில் அப்பா அம்மாவாக இருப்பதில்லை. டீச்சராக மாறி எப்போதும் எதைப்பற்றியாவது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால், இது தன் குழந்தையிடம் இருந்து பாடம் படித்த அம்மாவின் கதை.

ஸ்கூல் முடிந்து வந்த தன் குழந்தையை உட்கார வைத்து ஹோம் ஒர்க் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார் அம்மா. ஒவ்வொன்றையுமே ஒரு முறைக்கு இரு முறை சொல்ல வேண்டி இருந்தது. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் அம்மா சீக்கிரம் சலிப்படைந்து கத்த ஆரம்பித்தார். “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித் தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல.. உன் வயசுல உள்ள குழந்தைங்க எல்லாம் தானா உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்யுதுங்க..” என்று துவங்கிய அர்ச்சனை இரவு உணவு வரை நீண்டது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புதிதாக வாங்கியிருந்த ஸ்கூட்டியை எப்படி ஓட்ட வேண்டும் என்று குழந்தையின் அம்மாவுக்கு அதன் அப்பா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். வண்டியை ஸ்டார்ட் செய்து காண்பித்து, ‘இப்போது நீ செய்’ என்று அம்மா கைக்கு வண்டி வரும். ஏறி உட்கார்ந்து பட்டனை அமிழ்த்த, வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான சத்தம் எல்லாம் செய்து கடைசியில் போக்கு காட்டி அணைந்து விடும். அப்பா சலித்து விட்டார். கத்த ஆரம்பித்தார்.. “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித்தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல..”

குழந்தை குறுக்கிட்டு, “திட்டாம சொல்லிக் கொடுப்பா.. திட்டிக்கிட்டே சொல்லிக்கொடுத்தா பதட்டத்திலேயே தப்புத்தப்பாதான் வரும். பாவம்பா அம்மா. ப்ளீஸ் திட்டாம சொல்லிக் கொடுப்பா.” என்றது.

குழந்தை இப்படிச்சொன்னதும் வண்டியி லிருந்து தாவிக்குதித்த அம்மா குழந்தையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சொன்னார், “இனிமேல் நான் உனக்கு டீச்சர் இல்லை”

நீங்களும் உங்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளத்தயாராக இருந்தால் உங்கள் குழந்தைகளும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும். நீங்கள் டீச்சராக வேண்டிய அவசியமே இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *