நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி

நம்பிக்கை யூனிவர்சிட்டி

எம்.பி.ஏ பாடம் சுவாரஸ்யமான கதை வடிவில்

36 கோடி ரூபாய் பிஸினஸ் படிக்காதவர்கள் செய்கிறார்கள்

முன்கதைச் சுருக்கம் :

சதாசிவம் 80 பேர் வேலைபார்க்கும் நிறுவனத்தின் நிர்வாகி. அவரைப்பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், 24 மணி நேரமும் வேலை செய்பவர். காரணம் கனவில்கூட உழைப்பவர்.

நிர்வாகி என்றால் வேலை செய்பவரல்ல.. வேலை வாங்குபவர் என்று பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்து கொள்ளும்போது கிடைத்த செய்தி அவரை புரட்டி போடுகிறது.

அந்த பயிற்சியாளர் ஒரு கல்லூரிப் பேராசிரியர் . அவரை தொடர்பு கொண்டு தனது நிர்வாகத்திறனை மேம்படுத்த உதவும்படி கேட்கிறார். அப்போது பேராசிரியர் சொன்ன கதை இது.

ஒரு காகம் மரத்தின் மேல் ஓய்வாக உட்கார்ந்திருந்தது. அது ஒன்றுமே செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பதை ரொம்ப நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முயல் கேட்டது, உன்னைப்போல் நானும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்கலாமா?  ஏன் தாரளமாக நீயும் என்னைப்போல் ஓய்வெடுக்கலாமே என்றது. உற்சாகமடைந்த முயல் மரத்தின் வேரில் கால்மேல் கால் போட்டபடி சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்ணை முடி ஓய்வெடுத்தது. அந்தநேரம் அங்கே ஒரு நரி வந்தது, அசந்திருந்த முயலை ஒரே அடியில் வீழ்த்தி உணவுக்காக அதை அள்ளிச்சென்றது.

கதை இதுதான். நீதி? நீங்களும் யோசியுங்கள்.

தாசிவம் உற்சாகத்தில் மிதந்தார். பேராசிரியரை சந்திக்க போவதும் அவர் கேள்விக்கு பதில் கண்டு பிடித்த உற்சாகமும் அவரை நிறுவனத்தை துவக்கிய போது இருந்த உற்சாகத்தை மீண்டும் ஏற்படுத்தியது.

எப்போது தனது நிறுவனத்திற்கு கிளம்பி னாலும் முதன் முதலாக கிளம்பியது போலத்தான் சதாசிவத்திற்கு. ஆனால் இன்று வழக்கத்தை விடவும் கூடுதல் வேகம்.

புதிராய் இருந்த கதை யோசிக்க யோசிக்க எளிதாய் விளங்கியது. நீ ஓய்வாய் இருக்க வேண்டுமெனில் உயரத்தில் இருக்க வேண்டும். அப்போது நான் பிஸினஸ் குறித்த பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டுமெனில் இன்னும் உயரத்திற்கு போக வேண்டுமா? அது வரை இன்னும் அதிகமாய் உழைக்க வேண்டுமா ?

நான் ஒருவனாய் உழைத்தால் தொழிலாளி. என் கீழ் நூறு பேர் உழைத்தால் நான் முதலாளி. அப்படியென்றால் என் கீழ் இன்னும் பலர் உழைக்க வேண்டும் . என்னைப்போலவே சிந்தித்து செயல்படக்கூடியவர்களை வேலைக்கு வைக்க வேண்டும். அப்படியெனில் படித்தவர்களைத்தான் வைக்க வேண்டும். பேராசிரியர் வருவதற்கு முன்னே சதாசிவத்திற்கு பல விஷயங்கள் விளங்கியதுபோல் இருந்தது.

பேராசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரும் நேரத்தை கேட்டறிந்தார். அப்போது அவர் சொன்ன கதைக்கான விளக்கத்தை கூறினார். அதை ஆமோதித்த பேராசிரியர், “நான் சொல்ல நினைத்ததும் இதுதான். நீங்கள் ஓய்வாக அமர்ந்திருக்க வேண்டுமென்றால் பிரச்சனைகள் தொடாத உயரத்தில் இருக்க வேண்டுமென்றால் இன்னும் தொழிலில் உயர்ந்த நிலைக்கு போக வேண்டும் என்றல்ல அர்த்தம். முடிவெடுக்க கூடியவர்கள் பலர் உங்கள் கீழ் இருக்க வேண்டும். அதாவது நிர்வாக அடுக்கில் நீங்கள் மேலே இருக்க வேண்டும்” என்று கூறினார்.

“நீங்கள் எம்.பி.ஏ படித்தவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கூட இல்லை. எம்.பி.ஏவில் என்ன கற்றுத்தரப்படுகிறது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் உங்களிடம் உள்ளவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.”

சதாசிவம் பேராசிரியரிடம் பாடம் படிப்பது என்று முடிவெடுத்துவிட்டாலும், தோன்றியதால் மனதில் வைத்துக்கொள்ளாமல் கேட்டார். “நான் எம்.பி.ஏ படிப்பதால், இனி என்ன பயன் வந்து விடப்போகிறது ?”.

பேராசிரியர் சிரித்தபடியே கேட்டார், “இந்த வருடம் உங்கள் நிறுவனம் வளர்ச்சி அடைந்திருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்”

சதாசிவம் பேராசிரியர் கேள்வியை முடிக்க கூட விடவில்லை. சட்டென்று பதில் சொன்னார். “அதிகரித்து வரும் விற்பனையை வைத்துத்தான். போன வருடம் 50 லட்சரூபாய் விற்பனை நடந்தது ஆனால் இந்த வருடம் 59 லட்சம்” என்றார் உற்சாகத்தோடு.

“கடந்த வருட விற்பனையோடு மட்டும் ஒப்பிட்டு விற்பனை மேம்பட்டிருக்கிறதா? என்று பார்ப்பது சாதாரண அணுகுமுறை. இன்னும் ஆழ்ந்து இதை புரிந்து கொள்வதுதான் எம்.பி.ஏ அணுகுமுறை.”

“உதாரணத்திற்கு 50 லட்சத்திலிருந்து 57 லட்சமாக விற்பனை உயர்ந்திருக்கிறது. எனவே நம் நிறுவனம் வளர்ச்சியில் இருக்கிறது என்று அவசர முடிவுக்கு வந்துவிடக்கூடாது. கடந்த வருடத்தில் 1 கோடி ரூபாய்க்கு இத்துறையில் வணிகம் நடந்தது. அதில் 50 சதவீத விற்பனையை அதாவது சந்தையில் பாதியை நாம் கைப்பற்றியிருக்கிறோம். ஆனால் இந்த வருடம் 50 சதவீதத்திலிருந்து நாம் மேம்பட்டிருக்கிறோமோ என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர நமது நிறுவனத்தின் விற்பனை அளவை மட்டும் பார்த்து அவசர முடிவெடுக்கக் கூடாது. இந்த வருடம் இத்துறையில் 3 கோடி ரூபாய்க்கு விற்பனை நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அதில் நாம் 57 லட்சம்தான் விற்பனை செய்திருக்கிறோம் என்றால் உண்மையில் நாம் வளரவில்லை என்றுதான் அர்த்தம். அதாவது இந்த முறை மொத்த விற்பனையில் நமது சந்தை வணிகம் வெறும் 19 சதவீதம். அதாவது 31 சதவீத வணிகத்தை நாம் இழந்திருக்கிறோம் என்று அர்த்தம்.”

சதாசிவம் அப்படியே உட்கார்ந்துவிட்டார். இதற்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா ?

போனிலேயே மொத்தத்தையும் சொல்லி விட முடியாது. இதைப்பற்றி விரிவாக நாம் நேரில் பேசலாம் என்ற பேராசிரியர் டப்பா வாலாக்கள் பற்றிய கேஸ் ஸ்டடியை பகிர்ந்து கொண்ட பிறகு தொலைபேசி தொடர்பை துண்டித்தார். கேஸ் ஸ்டடி பேராசிரியர் வருகை குறித்த எதிர்பார்ப்பு களை சதாசிவத்திற்கு அதிகப்படுத்தியது.

கேஸ் ஸ்டடி இல்லாமல் எம்.பி.ஏ பாடங்களே இல்லை. ஒரு பிஸினஸ் மாடலை பார்க்கும்போது நமக்கும் பல புதிய யோசனைகள் கிடைக்கும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, தவிர்க்க வேண்டியது ஆகியவற்றைஉணரவே இந்த கேஸ்ஸ்டடி படிப்புக்கள்.

ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்விகளை எல்லா கோணங்களிலும் அனுகுவதுதான் மேலாண்மை படிப்பே. அந்த வகையில் நிர்வாகி நாவலின் ஒரு பகுதியாக சதாசிவத்திற்கு பேராசிரியர் சொல்லும் கேஸ் ஸ்டடி இனி உங்களுக்காகவும்.

மற்றவர்கள் தோல்விகளிலிருந்து பாடம் படிப்பவர்களே புத்திசாலிகள் என்பதால் வெற்றிக் கதைகள் மட்டுமல்ல தோல்விக்கதைகள் கூட பிஸினஸ் கேஸ் ஸ்டடிதான்.

அவர்களுக்கு டப்பா வாலாக்கள் என்று பெயர். மும்பை மத்திய தர வர்க்கத்திற்கான மதிய உணவு டப்பாக்களை அவர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கே கொண்டு சேர்ப்பதுதான் அவர்களின் பிஸினஸ். அவர்களின் ஓராண்டு டர்ன்ஓவர் 36 கோடி ரூபாய்.

இரண்டு லட்சம் பேருக்கு வீடுகளிலிருந்து, அவர்களின் உணவை சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கும், உண்ட பிறகு காலி டிபன் கேரியரை மறுபடி வீட்டிலும் கொண்டு சேர்ப்பதுமான டப்பா வாலாக்களின் பணி பல எம்.பி.ஏக்களுக்கு இன்று பாடமாக இருக்கிறது.

வீட்டிலிருந்து அலுவலகம் , அலுவலகத்தி லிருந்து வீடு என மொத்தம் 4 லட்சம் பயணங்கள். குறைந்த பட்சம் ஒரு டிபன் கேரியர் 4 பேர் கை மாறுகிறது. ஒரு தவறும் இல்லாமல் சரியான நபருக்கு சரியான நேரத்தில் கூட்ட நெரிசல் மிகுந்த மும்பை மாநகரில் செய்து காட்டி பல வெளிநாட்டு வணிகர்களையும் டப்பா வாலாக்கள் ஈர்த்து வருகிறார்கள்.

இரண்டு லட்சம் பேருக்கான மதிய உணவை எந்த சிறு தவறுமின்றி சரியாக கொண்டு சேர்ப்பதால் சிக்ஸ் சிக்மா தரச்சான்றிதழை போர்ப்ஸ் குளோபல் இதழ் இவர்களுக்கு வழங்கியுள்ளது. MNC நிறுவனங்களான மோட்டாரோலா, ஜிஇ, போன்ற நிறுவனங்கள் பெற்றுள்ள விருது இது எனும்போது டப்பாவாலாக்களின் பெருமை இன்னும் நமக்கு விளங்கும்.

கின்னஸ் ரெக்கார்டு , சிக்ஸ் சிக்மா அவார்டு போன்றவற்றை பெற்றதையெல்லாம் விட ஆச்சரியம், படிக்காத டப்பாவாலாக்கள் எம்.பி.ஏ மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் என்பதுதான். டப்பாவாலாக்களில் 85 சதவீதம் பேர் படிக்காதவர்கள். மீதி 15 சதவீதம்பேர் மட்டும் எட்டாவது வரைதான் படித்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.மில்  டப்பாவாலாக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வகுப்பெடுக் கிறார்கள்.

125 வருடங்களாக இதைச் செய்துவரும் டப்பாவாலாக்கள், மும்பையின் அடையாளமாகவே மாறி விட்டார்கள். இன்று 5000 என்ற எண்ணிக்கையை தொட்டுவிட்ட அவர்கள் ஒரு முறைகூட ஸ்டிரைக் செய்தது இல்லை. மழை, வெள்ளம் என எந்தப்பிரச்சனை வந்தாலும் இவர்கள் பணி மட்டும் தடைபடுவதே இல்லை.

1890களில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மும்பைக்கு வேலைக்காக இடம் பெயர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. அரசு அலுவகங்களில் வேலை பார்த்த அவர்களுக்கு அங்கு கிடைக்கும் பிரிட்டிஷ் உணவு பிடிக்கவில்லை. வெளியிலும் ஹோட்டல்கள் கிடையாது. வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரலாம் என்றால் அதிகாலை கிளம்பி 50 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து அலுவலகத்திற்கு வருவதால் அதுவும் சாத்தியப்படவில்லை. இத்தேவையை புரிந்து கொண்டு மகாதியோ என்பவர் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள படிக்காதவர்களை இணைத்துக்கொண்டு துவங்கிய இத்தொழில் இன்றுவரை மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

பெரிய நிறுவனங்களில் இருப்பது போல பல அடுக்கு நிர்வாக முறை இவர்களிடம் கிடையாது. மொத்தம் மூன்றேஅடுக்குகள்தான்.  5000 டப்பாவாலாக்கள், அவர்களை வழிநடத்த 25 பேருக்கு ஒரு மேற்பார்வையாளர் என மொத்தம் 200 மேற்பார்வையாளர்கள், அவர்களை வழி நடத்த 5 பேர் கொண்ட ஆட்சிமன்றக்குழு. இதில் ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர் . இதுதான் அவர்களின் நிர்வாக அடுக்கு.

நிர்வாகத்திறமைக்கும், நிறுவன எளிமைக்கும் இவர்கள் சிறந்த முன்மாதிரிகள் என்கிறார் மேனேஜ்மெண்ட் குரு C.K.பிரகலாத்.

காந்தி தொப்பி, கதர் ஆடை, இவர்களது யூனிபார்ம். செயலில் மட்டுமில்லை தோற்றத்திலும் கூட, எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த டப்பாவாலாக்கள், எம்.பி.ஏக்களுக்கு பாடம் எடுக்கிறோம் என்பதனாலோ என்னவோ.. தங்களை நவீனப்படுத்திக்கொண்டு தங்களை தாங்களே அழகாக மார்க்கெட்டிங் செய்து கொள்கிறார்கள்.

டப்பாவாலாக்களுடன் ஒருநாள்

டப்பாவாலாக்களிடம் நாம் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. முக்கியமாக தொழில்பக்தி, கடின உழைப்பு, தவறு நிகழாத அவர்களின் டெலிவரி முறை.

தபால்துறைபோல இவர்களும் தங்களுக் கென்று ஒரு கோட்  (code) வைத்திருக்கிறார்கள். இவர்களின் ஆபிஸ் ரயில்வே ஸ்டேஷன்தான். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சேகரிக்கப்படும் டிபன் கேரியர்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டு, சென்று சேர வேண்டிய ஸ்டேஷன் வாரியாக பிரிக்கப்பட்டு, கொண்டு சேர்க்கப்படுகிறது. அந்ததந்த ஸ்டேஷனில் இறக்கப்படும் டப்பாக்கள் பகுதிவாரியாக பிரிக்கப்பட்டு மதிய உணவுக்காக காத்திருக்கும் மத்திய தர வர்க்கத்தினருக்கு கொண்டு சேர்க்கப் படுகிறது.

இந்தப்பணியை இவர்கள் செய்யும் விதத்தை இவர்கள் கூடவே இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம். இதற்காக இவர்கள் அறிவித்திருக்கும் திட்டம்தான் டப்பாவாலக் களுடன் ஒருநாள்.

காலை 8 மணிக்கு ஒரு டப்பாவாலாவின் வீட்டிலிருந்து கிளம்பி அவருடனே பணியாற்றி அவருடனே மதிய உணவு சாப்பிட்டு மறுபடி அவர் வீடு வரும் வரை உடன் இருந்து அவர்களின் செயல் முறைகளை கற்கும் வாய்ப்பு இதில் வழங்கப்படுகிறது.

பிஸினஸ் பிரபலங்கள் முதல் எம்பிஏ மாணவர்கள் வரை பலரும் டப்பா வாலாக்களுடன் ஒரு நாள் பயணிக்கிறார்கள். பாடம் கற்கிறார்கள்.

டப்பா விளம்பரம்

உணவு டப்பாக்களை மட்டுமல்ல, உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களையும் கொண்டு சேர்க்கத் தயாராக இருக்கிறார்கள் டப்பாவாலாக்கள். மைக்ரோசாப்டே இவர்கள் மூலம் விளம்பரம் செய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

டப்பாக்கள் விற்பனைக்கு

வெறுமனே போஸ்ட்மேன் போல வேலை பார்த்துக்கொண்டிருந்த இவர்கள் இப்போது சிறந்த வியாபாரிகள் ஆகிவிட்டார்கள்.  தங்களுக்கு கிடைத்துள்ள புகழின் ஒவ்வொரு துளியையும் சரியாக காசாக்கி விடுகிறார்கள். அதில் ஒன்றுதான் டப்பாக்கள் விற்கும் திட்டம். மதிய உணவை சுடச்சுட எடுத்துச்செல்லும் டப்பாக்களை விற்பனை செய்கிறார்கள். டப்பாக்கள் மட்டுமல்ல, மதிய உணவும் இவர்களே தருகிறார்கள்.

வீட்டில் ஆள் இல்லையா… டப்பாவாலாக் களிடம் சொல்லிவிட்டால் போதும் உங்களுக்கு ஏற்றவிலையில் வீட்டுச்சாப்பாடு வழக்கம்போல் உங்கள் இடத்திற்கு வந்துவிடும்.

டப்பாவாலாக்கள் வேலைக்கு வேண்டுமா ?

டப்பாவாலாக்களின் தொழில் நேர்த்தியை பற்றி படித்த நீங்கள் இப்படிப்பட்டவர்கள் வேலைக்கு வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? இவர்களிடம் பதிவு செய்து வைத்தால் வேலைக்கு ஆட்களும் தருகிறார்கள். இத்தொழிலிருந்து வெளியேறுபவர்கள் அவர்கள் இடத்திற்கு மற்றொருவரை பணியமர்த்தி விட்டுதான் வெளியேற வேண்டும் என்ற ஒரு விதியையும் தங்களுக்குள் கடைப்பிடிப்பதால் அவர்கள் பணிக்கு இடையூறு இல்லாமல் இதை நிறைவேற்றுகிறார்கள்.

எதிர்காலம் என்ன ?

டப்பாவாலாக்கள் பலருக்கு வயதாகி விட்டது. இத்தொழிலில் அவர்களின் இடத்தை நிரப்ப அவர்களின் வாரிசுகளுக்கு விருப்பம் இல்லை. அதிக வருமான எதிர்பார்ப்புகள், கற்ற கல்விக்கு ஏற்ற வேலை போன்ற காரணங்களால் இவர்களின் வாரிசுகள் வேறு வேலைக்கு சென்றுவிட 125 ஆண்டு பாரம்பரிய தொழில் இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பது தெரியவில்லை.

நமக்கான பாடங்கள்

நேரந்தவறாமை, அதற்காக, அவர் களுக்குள் உள்ள டீம் ஒர்க். டெக்னாலஜியை பயன்படுத்தாத போதும், சிறு தவறுகள் கூட ஏற்படாத அவர்களின் உழைப்பு, என்று யோசித்தால் டப்பாவாலாக்களின் தொழிலில் இருந்து நாம் படிக்க வேண்டிய பிஸினஸ் பாடங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *