வீட்டிற்குள் வெற்றி

– கிருஷ்ண. வரதராஜன்

உண்மையைச் சொல்லுங்கள் உங்கள் சொத்து உங்கள் குழந்தைகளுக்குத்தானா?

உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?  உங்களிடம் உள்ள எல்லா சொத்தும் உங்கள்

குழந்தைகளுக்குத் தானா? என்றைக்காவது இதையெல்லாம் யோசித்திருக்கிறீர்களா ?

‘இது என்ன கேள்வி?  நிச்சயமாக என் குழந்தைகளுக்குத்தான்’ என்கிறவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்க வேண்டியது அவசியம்.

நம்பிக்கையே நம் சொத்து

பணக்காரர்களுடைய குழந்தை,    பணக்காரனாகவே வளர்கிறது. ஏழையுடைய குழந்தை ஏழையாகவே வளர்கிறது. அதே போல உங்கள் குழந்தை, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் வளர்கிறது. ஓர் உதாரணம் பார்ப்போம்.

உங்களிடம், பர்ஸில் 50 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருக்கிறது . யாருக்கு, பணம் கொடுக்க வேண்டும் என்றாலும் 50 ரூபாய் நோட்டுக்களாகத்தான் கொடுப்பீர்கள்.

உங்களிடம், பர்ஸில் 10 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் இருந்தால் உங்கள் குழந்தைகள் கேட்டால் உங்களால் 10 ரூபாய்களாகத்தான் கொடுக்க முடியும்.

உங்களிடம் உள்ளதைத்தான் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும் என்றால் உங்களிடம் அதிகம் உள்ளது நம்பிக்கையா ? பயமா ?

கவனித்துப் பாருங்கள், குழந்தைகள் முதலில் கேட்கும் பெரும்பாலான வார்த்தைகள் பெற்றோர்களின் பயத்திலிருந்து உதித்த வார்த்தைகள்தான். ‘ஓடாதே, விழுந்திடுவ’.  ‘அத எடுக்காத, உடைச்சிடுவ ‘

நாம் நம் குழந்தைகள் தரையில் நடப்பதையே பயத்தோடு பார்க்கிறோம். ஆனால் கழைக்கூத்தாடிகள் தங்கள் குழந்தைகளை கயிற்றில் நடக்கவே பழக்கப்படுத்தி விடுகிறார்கள்.

நம்பிக்கை இருப்பதால் அவர்கள் கயிற்றில் நடக்கவே உற்சாகப்படுத்துகிறார்கள். பயம் இருப்பதால் நாம் தரையில் நடப்பதற்கே தடா விதிக்கிறோம்.

உங்களிடம் செல்லாத அல்லது கிழிந்த ஐந்நூறு ரூபாய் இருக்கிறது என்றால் உங்கள் குழந்தைகளுக்கு அதை அப்படியே கொடுப்பீர்களா? அல்லது அதை நல்ல நோட்டாக மாற்றிக் கொடுப்பீர்களா ?

பணத்தை மாற்றிக் கொடுப்பது போல உங்கள் பயத்தை, தைரியமாக மாற்றிக் கொடுங்கள். நிச்சயம் அவர்கள் ஜெயிப்பார்கள்.

பெயர்கூட சொத்துதான்.

நண்பர்கள் நான்கு பேர் தங்கள் அப்பா தங்களுக்கென்று விட்டுச்சென்ற சொத்துக்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். வீடுதான் எனக்குன்னு எங்கப்பா விட்டுட்டு போனது என்றார் ஒருவர். இன்னொருவார் ரிட்டையர் மென்ட் பெனிபிட் 5 லட்சம்தான் எனக்குன்னு எங்கப்பா கொடுத்தது என்றார். சுகர்தான் எனக்கு என் பெற்றோர்கள் கொடுத்தது என்றார் ஒரு நண்பர் சிரித்துக்கொண்டே.

பணம் , தோற்றம்,  நிறம்,  உடல்நலம் மட்டுமல்ல பழக்க வழக்கங்களும் பெற்றோர்கள் தரும் சொத்துக்கள்தான். பழக்கவழக்கங்கள் பெற்றோர்களைப் பார்த்து பார்த்து குழந்தை களுக்கும் படிமானமாகிவிடுகிறது.

அது சரி என்ற வார்த்தை என் நண்பர் அடிக்கடி பேச்சில் பயன்படுத்துவார். அவர் பையனும் பிறகு அப்படியே பேசுவதை பார்த்திருக்கிறேன். ஒரு நண்பர் நிதானமாக எதையும் பேசுவார். யோசித்து யோசித்துத்தான் பேசுவார். அவர் பையனும் அப்படியே.

எனவே, உங்கள் மேனரிசங்கள்கூட உங்கள் சொத்துத்தான். நீங்கள் பிரித்துக்         கொடுக்காமலேயே உங்கள் குழந்தைகளிடம் சேர்ந்து விடுகிறது.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அப்பாவுக்கு உள்ள நல்மதிப்பு அப்படியே குழந்தைகளுக்கும் மாறுவதை நான் கண்டிருக்கிறேன். என் அப்பா எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்வார். அவர் மகன் என்பதால் எல்லோரும் என்னையும் அப்படியே பார்த்தார்கள். அப்படியே மதித்தார்கள்.

ஆக, உங்கள் நற்பெயர்கூட உங்கள் குழந்தைக்கு சொத்துத்தான்.

சொத்து வேண்டாம் ; சொற்கள் போதும்.

பணத்தை சேர்த்து வைத்து செலவழிப்பது போல உங்கள் சொற்களும் சிந்தனைகளாக குழந்தைகளால் சேமிக்கப்பட்டு பிறகு செயல்களாக செலவழிக்கப்படுகிறது.

எக்ஸாம் நேரத்தில், ‘எனக்கென்னமோ நீ பாஸாகற மாதிரி தெரியலை’ என்றால் பதட்டத்தையும் பயத்தையும் உங்கள் சொத்தாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ வெற்றி பெற பிறந்திருக்கிறாய் என்ற நம்பிக்கை வார்த்தைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கொடுத்தால் அதை தன்னைப்பற்றிய உயர்வு அபிப்ராய சிந்தனைகளாக மாற்றி உங்கள் குழந்தைகள் சேமித்துக் கொள்ளும். பிறகு நம்பிக்கை யோடு செயலாற்றும். ஆக நீங்கள் தரும் பணம் மட்டு மல்ல, நீங்கள் சொல்லும் சொல்கூட சொத்துதான்.

அதற்கு, பணத்திற்கு பதிலாக, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் முதலில் நீங்கள் சம்பாதியுங்கள். அப்போது தான் அதை குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்.

லட்சங்கள் அல்ல லட்சியங்களே சொத்து

பல பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையே குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கத்தான் என்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பொருளீட்டுகிற அவசரத்தில்                    குழந்தைகளின் நிகழ்காலத்தை மிதித்துக் கொண்டே ஓடிக்கொண்டிருப்பார்கள்.

குழந்தைகளுக்கு சொத்து சேகரிக்க செலவிட்ட நேரத்தில் பத்தில் ஒரு சதவீதத்தை குழந்தைகளுக்கு அதை பராமரிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்க செலவிட்டிருந்தால் எல்லாக்குழந்தைகளும் ஜெயித்திருக்கும்.

புரிந்து கொள்ளுங்கள். முன்னேற நாம் அளிக்கும் லட்சங்கள் அல்ல, வாழ்வில் வழி காட்டும் லட்சியங்களே நாம் நம் குழந்தைகளுக்கு தர வேண்டிய சொத்து.

உங்கள் குழந்தைகள் கேட்கும் சொத்து

நம் அப்பா நமக்கு எவ்வளவு சொத்து தரப்போகிறார் என்று எந்த குழந்தையும் யோசிப்பதில்லை. ஆனால் நம்மோடு இன்று நேரம் செலவிடுவாரா? நம்மோடு மனம் விட்டு பேசுவாரா ? என்றுதான் எதிர்பார்க்கிறார்கள்.

குழந்தைகளுக்கு பணம் சேர்க்கும் நேரத்தில் கொஞ்சத்தை அவர்கள் எதிர்பார்க்கும் நேரமாகவே கொடுங்கள்.

24 மணி நேரம் என்பது உங்களிடம் இருக்கும் சொத்து. உண்மையைச் சொல்லுங்கள் உங்கள் சொத்து உங்கள் குழந்தைகளுக்குத்   தானா?

4 Responses

  1. M. J. SYED ABDULRAHMAN

    Very good Sir,
    Is the best tonic of parent

    Thank You கிருஷ்ண. வரதராஜன் Sir,

  2. M. J. SYED ABDULRAHMAN

    Very good Sir,

    Is the best tonic of parent

    Thank You கிருஷ்ண. வரதராஜன் Sir,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *