எனக்கே எனக்கா?

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம்

உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் மனித வாழ்விற்கு அடிப்படைத் தேவைகள். ஒவ்வொருவரும் மானத்துடன் உயிர் வாழ்வதற்கு இவை தேவையாகின்றன. எனவே இவை மூன்றும் எனக்கு வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. இவற்றைப் பெறுவதற்கான முயற்சியில் ஒருவர் ஈடுபடுவதிலும் தவறில்லை.

இவை மூன்றும் தேவைக்கு அதிகமாக இருக்கும்போதும், ‘இன்னும் எனக்கு வேண்டும்’, என்று தேடி ஓடுவதே பேராசையாகிறது. இவற்றை எப்படியும் அடைய வேண்டும் என்பதற்காக முறை தவறி செயல்படுவது, சமூகக் குற்றமாகிறது. பிறரைப் பற்றிய கவலையின்றி, ‘எனக்கு மட்டும் இவை வேண்டும்’ என்கிற எண்ணம் சுயநலமாகிறது. இவற்றைத் தாண்டிய நோய் ஒன்று உண்டு. அருகில் இருப்பவருக்குக் கிடைக்காமல் கெடுத்து, தான் மட்டும் இவற்றை அடைய வேண்டும் என்பதற்காக எல்லாவித முயற்சிகளிலும் இறங்குவதே அது.

நன்கு படித்த, அடுத்தவருக்கு அறிவுரை சொல்லக்கூடிய நிலையில் இருக்கின்றவர்களைக் கூட இந்த நோய் ஆழமாகத் தாக்கிவிடுகிறது.

இவர்களிடமிருந்து சமூகம் நிறைய கற்றுக் கொள்ளலாம். வள்ளுவன் தொடங்கி இன்றைய நவீன இலக்கியம் வரை; ஆன்மீகம் தொடங்கி இன்றைய அறிவியல் வளர்ச்சி வரை இவர்களின் ஒரு பேச்சைக் கேட்டோ அல்லது அவர்களின் ஒரு நூலிலிருந்தோ அல்லது உரையாடும் போதோ கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள இயலும். ஆனாலும் மேற்சொன்ன நோய்க்கு ஆளாகி யிருப்பார்கள். உலகச் செய்திகளை எல்லாம் மூளைக்குள் திரட்டி வைத்துக்கொண்டும், வள்ளுவன் சொன்னதைப் போல் ‘தான் அடங்காப் பேதையின் பேதையாக…..’ நாம் இருந்து என்ன பயன்?

ஒரு ஜென் கதை உண்டு. பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களை எல்லாம் படித்து தெரிந்து வைத்திருந்த ஓர் அறிஞர் இருந்தார். மேடையில் அவர் சொல்லும் மேற்கோள்களை எல்லாம் வியந்து கேட்பதற்கென்றே மிகப் பெரும் கூட்டம் கூடும். அவருடைய எழுத்துக்கள் தத்துவச் சிந்தனைகளையும் ஆழ்ந்த கருத்துக்களையும் கொண்டிருப்பதால் அவரது நூல்கள் மிகப்பெரிய அளவிற்கு விற்பனையாகும். அவருடன் உரையாடி மகிழ்வதற்கென்றே, நண்பர் கூட்டம் காத்துக் கிடக்கும்.

ஒரு நாள் தெருவில் அவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, காலில் அணிந்திருந்த செருப்பு அறுந்துவிட்டது. நல்ல வேளையாக, சற்று தூரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் நடந்து போனவர், ‘அப்பா! இதைத் தைத்து கொடு’, என்று சொல்லி செருப்பைக் கொடுத்தார். வேலையில் ஆழ்ந்திருந்த தொழிலாளி, ‘கொடுத்துவிட்டுப் போங்கள்; பிறகுவந்து வாங்கிக் கொள்ளுங்கள்’, என்றார். ‘நான் அவசரமாகப் போக வேண்டுமே!” என்றார் செருப்பை தைக்க கொடுத்தவர்.

“அப்படியானால் இந்த செருப்பைப் போட்டுக் கொண்டு போய்விட்டு வாருங்கள் அதற்குள் நான் உங்கள் செருப்பைத் தைத்து வைக்கிறேன்” என்ற தொழிலாளி ஒரு ஜோடி பழைய செருப்பைக் கொடுத்தார்.

செருப்பைத் தைக்க கொடுத்தவருக்குப் பெரும் கோபம் வந்துவிட்டது. “என்ன சொன்னாய்? அடுத்தவன் காலணியை நான் சுமப்பதா? எனக்கு மூளை இல்லையா?” என்று கோபமாகக் கேட்டார். வேலையில் இருந்த தொழிலாளி நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்துச் சொன்னார் ‘சரிதான்! அடுத்தவர் களுடைய கருத்துக்களை எல்லாம் உங்கள் தலையில் சுமந்து திரிகிறீர்கள்; கொஞ்சநேரம் அடுத்தவருடைய செருப்பைக் காலில் சுமந்தால் என்னதான் குறைந்துவிடும்?”

மெத்தப் படித்தவர் வாயடைத்துப் போனார்.

இந்தக் கதையின் பொருள் மிக எளிமையானது. பெரியோர்களின் கருத்தை யெல்லாம் தலையில் சுமந்து திரிவதில் மட்டும் பயனில்லை.

வாய்ச் சொல்லாக பேசித் திரிபவரைவிட வாழ்ந்து காட்டுபவர்களையே சமுதாயம் எதிர்பார்க்கிறது. தலையில் சுமந்து விளக்கம் சொல்கிறவர்கள் அதன்படி வாழ்வதில்லை. மனதில் சுமந்து வாழ்பவர்கள் அதற்கு விளக்கம் சொல்வதில்லை.

எனக்கு என்ன தேவைகள் உள்ளனவோ அதே தேவைகள் அடுத்தவருக்கும் உள்ளன என்று எண்ணுவதே அடிப்படை மனித பண்பு. என்னை அடுத்தவர் எப்படி நடத்த வேண்டும் என்று நான் எண்ணுகிறேனோ, அவ்வாறே அடுத்தவர்களை நான் நடத்துவதும், அவர்களிடம் நான் நடந்து கொள்வதும்தான் உயர் பண்பு. எவ்வளவு படித்தும் இந்தப் பண்பு செயல்களில் வரவில்லை என்றால் படித்துதான் என்ன பயன்?

“எனக்கும் வேண்டும்”. “எனக்கு வேண்டும்”. “எனக்குத்தான் வேண்டும்” இந்த மூன்று சொற்றொடர்களையும் தனித்தனியே எண்ணிப்பாருங்கள்.

“எனக்கும் வேண்டும்” என்பது உரிமைக்குரல். ‘எனக்கு வேண்டும்’ என்பது தேவைக்குரல். ‘எனக்குத்தான் வேண்டும்’ என்பது சுயநலக் குரல். இவற்றில் முதல்குரல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இரண்டாம் குரல் மதிக்கப்பட வேண்டும். மூன்றாம் குரல் நீக்கப்பட வேண்டும்.

பணத் தேவையும் கல்வி அறிவின்மையும் தான் சுயநலத்துக்கான காரணங்கள் என்று சொல்லப்படுகிறது. முழுவதுமாக இவை சரியான காரணங்கள் என்று தோன்றவில்லை. ஏனென்றால் பணமும் பதவியும் கூடும்போதுதான் சுயநலம் அதிகமாகக் கூடுகிறது.

திருக்குறள் முனிசாமி அவர்கள் மேடையில் பேசும்போது சிறுசிறு துணுக்குகள் சொல்லி, நகைச்சுவையுடன் கருத்துக்கள் கூறுவார்கள். அதில் கை தேர்ந்தவர் அவர். அவர் சொன்ன துணுக்குகளில் ஒன்று, சுயநலத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும்.

ஒரு கிராமப் பஞ்சாயத்துக்கு வழக்கு ஒன்று வந்தது. ஒருவன் 50 ஏக்கர் நிலம் வைத்து இருந்தான். பக்கத்தில் வேறு ஒருவன் 50 சென்ட் நிலம் வைத்திருந்தான். இந்த 50 சென்ட் நிலத்தின் மீது 50 ஏக்கர் நிலம் வைத்து இருந்தவன் வரப்பை தள்ளிப்போட்டுக் கொண்டான் என்பது வழக்கு.

“நீ 50 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறாய் உன்னைவிட மிகக்குறைவாக 50 சென்ட் மட்டுமே வைத்திருப்பவனின் நிலத்தின் மீது ஏன் உன் வரப்பை தள்ளிப்போடுகிறாய்?” என்று கேட்டனர் பஞ்சாயத்தார். “இந்த 50 ஏக்கர் நிலமும் எனக்கு வேறு எப்படி வந்தது என்று நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான் அவன்.

பணமும் வளர்ச்சியும் அதிகம் வரவர, அடுத்தவர் படும் சிரமத்தைப் பற்றி கவலைப்படாத மனமும் எனக்குத்தான் வேண்டும் என்ற எண்ணமும் வந்துவிட்டால், என்ன படித்தும், எவ்வளவு படித்தும் பயனில்லை.

தன்னுயிர் தான் பரிந்து ஓம்புமாறு போல்

மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்

இன்னுயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்

பொன்னுயிராய்ப் பிறந்து உயர்ந்து போகுமே!

என்று பழந்தமிழ்க் காப்பியம் சீவக சிந்தாமணி பேசுகிறது. அடுத்தவர்களின் உணர்வுகளை மட்டுமல்ல. அடுத்தவர்களின் தேவைகளை மதிப்பதும் தான் உயர் பண்பு.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று வள்ளுவன் சொல்லுவதும் அனைவருக்கும் அனைத்தும் வேண்டும் என்ற எண்ணத்தின்மீது எழுதப்பட்ட கருத்துதான்.

“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்,” என்ற கண்ணதாசனின் சினிமா பாடலும் இந்த கருத்தை மையமாகக் கொண்டதுதான்.

எல்லோருக்கும் வாரி கொடுக்கும் வள்ளலாக நாம் இருக்க முடியாமல் போகலாம். குறைந்தது, அடுத்தவருக்கு உரியதைத் தட்டிப் பறித்து உண்ணாமல் இருக்கலாம் அல்லவா?

ஒரு வரிசையில் காத்து நிற்கும்போது, நேரம் அதிகமாகி சலிப்பும், எரிச்சலும் வந்தாலும் வரிசையைக் குலைத்து உட்புகாமல் இருப்பது; ‘நான் வேகமாகப் போனால் போதும்’ என்ற எண்ணமின்றி, போக்குவரத்து விதிகளை மதித்து வண்டியை ஓட்டுவது; தகுதியானவருக்குத் தகுதி உள்ளவை கிடைக்கும்போது அதற்காகப் பொறாமைப் படாமல் இருப்பது போன்ற சிறுசிறு நிகழ்ச்சிகள்கூட, நம்முள் மாற்றங்களை கொண்டுவரும்.

சுயநலம் என்னும் கிருமி மனத்துள் புகுந்து வேர்விட்டால் வீட்டிற்குள் அமைதி கெடும். வீட்டிற்கு வெளியே நட்பு சீர்குலையும். சமுதாயத்தில் அமைதியின்மை ஏற்படும். இந்தக் கிருமி நம்முள் புகுந்துவிடாமல் இருக்க நாளும் நம்மை சுயதரிசனம் செய்து கொள்வது அவசியம்.

2 Responses

  1. M.J. SYED ABDULRAHMAN

    Dear moral sir, Please sir we need more
    தலையில் சுமந்து விளக்கம் சொல்கிறவர்கள் அதன்படி வாழ்வதில்லை. மனதில் சுமந்து வாழ்பவர்கள் அதற்கு விளக்கம் சொல்வதில்லை.
    of good conduct,
    Good Wishes,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *