வாழ்க்கை ஒரு பகிர்தல்

– க. அம்சப்ரியா

புதிய பொறுப்பின் நாற்காலியில் அமர்ந்து சில மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் தனக்குக் கீழ் உள்ள பணியாளர்கள் தன் வசமாகவில்ல என்பது அவன் கவலையாயிருந்தது. எல்லோருமே தன் முகம் பார்த்தால் மட்டுமே பணியில் கவனமாயிருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது.

தொடர்ந்து உற்பத்தியும், விற்பனையும் சரிந்து வருவதை மாதாந்திர அறிக்கைகள் எச்சரித்துக் கொண்டிருந்தன. அவனுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இடம் துறவி மடம். சாமியார்கள் இருக்கிற இடத்தில் தனக்கெங்கே தீர்வு கிடைக்கப் போகிறது என்கிற சிறு சந்தேகம் அவனைப் பற்றியிருக்க துறவியைத் தேடிச் சென்றிருந்தான்.

இன்னும் பத்து நாட்கள் கழித்து வருகிற பௌர்ணமி தினத்தன்று இதற்கான பயிற்சி என்றும், முழுமையாய் ஒருநாள் தங்க வேண்டும் என்றும், சம்மதமாயின் வரலாம் என்றும் கட்டணம் எதுவுமில்லை என்றும் கூறினார்.

குரு, தனது அடுத்தகட்ட செயல் பாட்டிற்காகவும் தன் சீடர்களை ஆசிரமத்தின் பல்வேறு பொறுப்புகளில் நியமிப்பதற்கான பயிற்சியாகவும் சில ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

பத்து நாட்கள் பயிற்சி அது!

கவலைகளை கிளைகளாக சுமந்த மரங்களாக மக்கள் அங்கு வசித்து வந்தார்கள். எந்தப் பறவைக்கும் இடம் தராதவர்களாகவும், உதிர்ந்து இலைகளாக இருப்பவர்கள் கூட கவலைகளையே மண்ணுக்குத் தானமாக்கிறவர் களாக இருந்தார்கள்! தன்னால் மட்டுமே இந்த மக்களை செழுமைப்படுத்த இயலாது என்பதாலும் தனக்கு உதவியாக தன் பொறுப்பைப் போலவே பதவியைப் பெறுவதற்கான ஒருவரை தேர்ந்தெடுக்கும்படியாகவும் அப்பயிற்சியைத் துவங்கியிருந்தார்.

ஆசிரமத்தில் தன்னோடு இருந்து பல்வேறு கருத்துக்களை அறிந்து செயல்படும் இருவரை முதன்மைப் பொறுப்பாளராக தேர்வு செய்து ஆளுக்கொரு அணியாக்கி மீதிச் சீடர்களை உறுப்பினர்களாக்கியிருந்தார்.

மக்களின் பிரச்சனைகளுக்குக் காரணம் என்னவென்று அறிந்து வருதல் ஐந்து நாள். தீர்வுக்கான வழியறிதல் ஐந்து நாள்.

இரு அணிகளும் தனது பத்துநாள் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பும் நாளில் துறவி சொன்னது போலவே வந்திருந்தான்.

துறவியின் அருகிலேயே அமர வைக்கப் பட்டிருந்தான். முதல்குழு அதிகாலையிலேயே வந்து சேர்ந்திருந்தது.

தனக்கு மிகப்பெரிய சொற்பொழிவாற்றப் போகிறார் அல்லது தனியே ஒரு வகுப்பு எடுக்கப் போகிறார் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

விசாரணையை துவங்கினார். இறுகிய முகங்களாக சீடர்கள் இருக்க, கம்பீரமும், மிடுக்குமாய் முதலாமவன் தன் குருவை எதிர்கொண்டான்.

“மக்களின் பிரச்சனைகளை அறிந்தீர்களா…..?” உறுப்பினர்களின் முகங்களைக் கூர்ந்து நோக்கினார். சட்டென்று பிரச்சனைகளைப் பற்றி பேசத்துவங்கினான் அணித் தலைவன்.

“மக்கள் தயக்கமின்றி உங்களோடு பேசினார்களா?”

இரண்டாவது வினாவிற்கும் தயங்காமல் பதிலைச்சொன்னது அணித்தலைவன்தான்!

“இவர்களிடம் ஏதும் கருத்தில்லையா…..?”

“ம்……… என் கருத்துத்தான் அவர்களுக்கும்…. தலைவனை மீறுகிற மாதிரி நான் இவர்களைத் தயார்படுத்தவில்லை குருவே…… எனது பதில்களையே இவர்களின் பதில்களாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்…”

“ம்….. சரி…… மாலையில் சந்திப்போம்…….. போய் ஓய்வெடுங்கள்” முதல் அணி ஓய்வெடுக்கச் சென்ற சிறிது நேரத்தில் இரண்டாவது அணியும் வந்திருந்தது.

“மக்கள் உங்களை எவ்வாறு எதிர் கொண்டனர்?” இரண்டாம் அணித் தலைவன் தன் சீடர்களைப் பார்த்தான்.

அதில் பங்கேற்ற ஒவ்வொவரும் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர்.

எந்தவொரு கேள்விக்கும், எல்லோரும் கருத்துச் சொல்கிற வாய்ப்பாக அமைந்திருந்தது.

அன்று மாலை துறவி முற்றம் கூடியிருந்தது. இரண்டு அணிகளில் எதைத் தேர்வு செய்கிறார் என்பதை உன்னிப்பாக கவனித்தபடியிருந்தான் பயிற்சி இளைஞன்.

தலைமைப் பொறுப்பு இரண்டாம் அணிக்கே வாய்த்தது.

“பயிற்சி முடிந்தது. நீ போய் வரலாம். சிறந்த தலைமையின் அழகு எது என்பது புரிந்திருக்கும். எதைத் தேர்வு செய்தாலும், அதிகாரம் சாதிப்பதில்லை. சென்று வா.” விடை பெற்று வந்தான். எதிர்காலம் எதுவென்று புரிந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *