வல்லமை தாராயோ

இந்த உலகில் ஏன் பிறந்தோம்?

தி.க. சந்திரசேகரன்

கொஞ்சம் ஆழமாக அமர்ந்து சிந்தித்தால் நாம் ஏன் இந்த உலகிற்கு வந்தோம் என்கிற கேள்விக்கு விடை கிடைக்கும். அந்த விடை கிடைக்காத வரையில் மேலே இருக்கிற நான் என்று சிந்திக்கும் போதுதான் எல்லா சிக்கலும் வருகின்றன.

மேலோட்டமான நான் வருத்தத்திற்கு காரணமாக அமைகிறது.

ஆழமாகச் செல்லும் போது மகிழ்ச்சி அங்கே வருகிறது. தங்கம் பூமிக்கு மேலே கிடைப்பதில்லை. பூமிக்குள் எத்தனையோ ஆண்டுகள் மக்கிப் போய் மறைந்திருந்த அந்த கார்பன் வைரமாக மாறி தோண்டி எடுக்கப்படும்போது கிடைக்கிறது.

முத்துக்கள் கடலின் ஆழத்திலே கிடைக்கின்றன. எனவே, உள்ளே உள்ளே என கடந்து செல்லும் போதுதான் நாம் யார் என்பதற்கான விடை கிடைக்கிறது என்பதைப் பார்க்கிறோம். அதற்காகத்தான் தியானங்கள் உதவியாக இருக்கின்றன.

ஐம்புலன்களையும் அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி மெல்லமெல்ல உள்ளே போகும் போது நமக்குள் தெய்வீகம் மலர்வதைப் பார்க்கிறோம்.

ஐற்’ள் ய்ர்ற் ற்ட்ங் ள்ர்ய்ஞ் க்ஷன்ற் ற்ட்ங் ள்ண்ய்ஞ்ங்ழ் என்கிற அற்புதமான ஆங்கிலப் பழமொழியை நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். பாடல் என்பது முக்கியமல்ல. பாடகர்தான் முக்கியம். விளையாட்டு என்பது முக்கியமல்ல. விளையாட்டு வீரர்தான் முக்கியம். பாத்திரம் என்பது முக்கியமல்ல. நடிகர்தான் முக்கியம். யார் வேண்டுமானாலும் வேஷம் போடலாம். ஆனால் சிவாஜி, கமல் போட்டால் நன்றாக இருக்கிறது. பாடம் என்பது முக்கியமல்ல. ஆசிரியர்தான் முக்கியம்.

எல்லோரும்தான் பாடம் நடத்துகிறார்கள். ஆனால் சில பேர் பாடம் நடத்தினால் நாம் மெய்மறந்து கேட்கிறோம். இப்படி ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தால் வாழ்க்கையில் நாம் முக்கியம். நான் என்கிற உணர்வு நமக்கு வரவேண்டும். நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். சாதனை செய்ய வேண்டும். உயர வேண்டும் என்பதற்கெல்லாம் இந்த நானை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு. இந்த பொறுப்புணர்ச்சி வரும்போது சாதாரண மனிதன் சிறந்த மனிதனாக மாறுகிறான். தயவுசெய்து யார் மீதோ பழியைப் போடுகிற பழக்கத்தை விட்டுவிட்டு எல்லாம் நான்தான். தீதும் நன்றும் பிறர்தர வாரா. நல்லதும் கெட்டதும் அடுத்தவர் தருவதல்ல. அதை நாமாகத்தான் உருவாக்கிக் கொள்கிறோம்.
நீங்கள் ஏன் ஏழையாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். நீங்கள் ஏன் பணக்காரராக இருக்கிறீர்கள் என்று கேட்டாலும் அதற்கும் நீங்கள்தான் காரணம். புகழ் கிடைத்தாலும் நீங்கள்தான் காரணம்.

பிறர் உங்களை தூற்றினாலும் அதுதான் காரணம். எப்பொழுது எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம், பொறுப்பு என்கிற உணர்வு வருகிறதோ அப்பொழுது சிறந்த மனிதன் என்கிற வல்லமையை மனிதன் பெறுகிறான்.

இரண்டாவது, நான் ஏன் இந்த பூமிக்கு வந்தேன் என்ற கேள்வி. அடிப்படை விஷயம் என்னவென்றால் எல்லா படைப்புக்கும் ஒரு காரணம் இருக்கிறது. நாம் சுவாசிக்கிற கார்பன்டை ஆக்ஸைடை ஏற்றுக் கொண்டு ஆக்சிஜனை வெளி விடுகின்ற சாலை ஓரத்தில் இருக்கின்ற சிறு செடிக்கும் ஒரு காரணம் இருக்கிறது.

நான் ஏன் இந்த பூமிக்கு வந்தேன் என்கிற கேள்வியை சதா திருப்பித் திருப்பி கேட்டுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பள்ளியில் தலைமையாசிரியர் என்றால் வகுப்பறைக்குள் நுழைந்து நாற்காலியில் அமரும்போது நான் எதற்கு இங்கே வந்திருக்கிறேன் என்று சிந்தியுங்கள். இந்த கேள்வியை கேட்க கேட்க, நான் ஏன் இங்கு வந்தேன் என்ற கேள்விக்கு பல விடைகள் கிடைக்கும்.

வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்திருக்கிற அற்புதமான வாய்ப்பு. கடவுளின் படைப்பில் உங்களைப் போல் இன்னொருவரை பார்க்க முடியாது. ஒரு பேக்டரியில் பிளாஸ்டிக் சேர் வருவது போல ஒரே வடிவத்தில் மனிதர்கள் வர மாட்டார்கள். உங்களைப் போல் ஒருவர் இதற்கு முன்னும் இருந்ததில்லை. இதற்கு பிறகும் வரப்போவதில்லை.

உருவ ஒற்றுமை இருந்தாலும் கூட ஒருவர் நினைப்பதை மற்றவர் நினைக்க முடியாது. உங்களுக்கு வருகிற அதே உணர்வுகள் அவர்களுக்கு வராது. எனவே, உங்கள் வாழ்க்கை உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் லைப். இந்த அபூர்வமான வாழ்க்கை உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதை எப்படி வாழப் போகிறீர்கள். இதை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள்.

நான் டைரி எழுதுவேன். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பெயர் கொடுத்துக் கொள்வேன். 2000 ஆண்டு பிறக்கும்போது ஆர்.எம்.கே.வியில் இருந்து ஒரு டைரி வந்தது. அந்த டைரியில் அந்த ஆண்டை கடன்கள் தீர்க்கும் ஆண்டு என்று குறிப்பிட்டேன். ஏனென்றால் எனக்கு ஏழு லட்சம் ரூபாய் கடன் இருந்தது. என் கவனம் முழுவதும் கடன்கள் தீர்ப்பதில் குவிந்தது. எதற்கு கடன் வாங்கினோம்.

என்ன வட்டி கட்ட வேண்டும். எதை எப்படி அடைக்க முடியும் என்று அட்டவணை போட்டேன். அந்த கடன் என்னிடம் நான்கைந்து வருடங்களாக இருந்தது. அதுவரைக்கும் நான் முயற்சி செய்யவில்லை. வட்டி கட்டுவதே பெரிய விஷயம் என்று கருதிக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டில் கடனை கட்ட முடியவில்லை. ஆனால் அடுத்த ஒன்றரை ஆண்டில் கட்டி முடித்தேன். இரண்டு வருடங்கள் கழித்து சொத்து வாங்கும் வருடம் என்று டைரியில் குறிப்பிட்டேன்.

அப்போது என் கண்கள் எங்காவது காலி இடம் விலைக்கு வருகிறதா என்று தேட ஆரம்பித்தது. சில சொத்துக்களை வாங்கினேன். இப்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பெயர் கொடுக்க வேண்டியது. அதை செய்ய வேண்டியது. இப்படி 60 வயது தாண்டி விட்டது. இந்த ஆண்டு ஏன் உயிரோடு இருக்க வேண்டும். இதை நினைத்தால் வரிசையாக பதில்கள் வருகின்றன. பெண்களுக்கு திருமணமாகி விட்டது.

ஒரு பெண் சொந்த வீட்டில் இருக்கிறாள். இன்னொரு பெண் வாடகை வீட்டில் இருக்கிறாள். அவளுக்கு ஏன் சொந்த வீடு கட்டித் தரக்கூடாது. இந்த வருடம் ஏன் மூன்று புத்தகங்கள் எழுதக் கூடாது. ஏன் இந்த வருடம் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செல்லக்கூடாது என்று இந்த வருடம் வாழ்வதற்கான நியாயங்கள் வரிசையாகத் தெரிகின்றன. அதுதான் இந்த பூமிக்கு நான் ஏன் வந்தேன் என்பதற்கு விடையாகத் தெரிகிறது.

ஒவ்வொரு வருடமும், செய்வதற்கென்று சில வேலைகள் வேண்டும். இடையில் இறந்தால் அது வேறு விஷயம்.

இருக்கிற சூழ்நிலைகளை மாற்றியமைப் பதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதுதான் விஷயம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சூழ்நிலை. வீட்டில் வறுமை. நான் இந்த நிலையை மாற்றுவேன். உடல்நிலை சரியில்லை. நான் இந்த சூழ்நிலையை மாற்றி ஆரோக்கியமாவேன் என்று ஒருவர் சொல்கிறார்.

இப்படி எல்லோருமே சூழ்நிலையை மாற்றுகிறார்கள். ஆகவே, நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, இருக்கிற சூழ்நிலையை மாற்றுவேன். அதற்காகத்தான் இந்தப் பூமிக்கு வந்திருக்கிறேன்.

ஆங்கிலத்தில், ”ஈர்ய்ற் ம்ஹண்ய்ற்ஹண்ய் க்ஷன்ற் ஸ்ரீழ்ங்ஹற்ங்” என்று சொல்வார்கள். இருப்பதை அப்படியே வைத்திராதே. அதை பெரியதாக மாற்று. அந்தக் காலத்து டெலிபோனை அப்படியே வைத்திருந்தால், இன்றைக்கு நாம் செல்போனை பார்த்திருக்க முடியாது.

நடப்பது நடக்கட்டும் என்று இருக்காதீர்கள். நடப்பது சரியாக இல்லையென்றால், மாற்றுங்கள்.

1968ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். படிக்கும்போது ஏதாவது ஒரு பள்ளியில், ஆசிரியர் பாடம் நடத்தும்போது, 15 நாட்கள் கவனிக்கவேண்டும். அது முடிந்தவுடன் ஏதாவது ஒரு பள்ளியில் 15 நாட்கள் பாடம் நடத்தவேண்டும்.

நான் முதலில் கவனிக்கப்போன பள்ளி, நுங்கம்பாக்கம் மாநகராட்சிப்பள்ளி. அது வகுப்பு மாதிரி இல்லை. பையன்கள் தரையில் யாரும் நடக்கமாட்டார்கள். பெஞ்ச் மேல்தான் நடப்பார்கள். பாடத்தை கவனிப்பதில்லை. எனவே, வேறொரு பள்ளிக்கு மாற்றம் செய்துதரச்சொல்லி கெஞ்சினேன். அவர்கள் செயிண்ட் தாமஸ் பள்ளிக்கு மாற்றம் செய்து கொடுத்தார்கள்.

அந்தப்பள்ளி தலைமையாசிரியரிடம் சென்று கடிதத்தை கொடுத்தவுடன், ஓர் ஆசிரியரை அழைத்து இவருக்கு ஒரு வகுப்பு கொடுங்கள் என்றார். அவரும் சரி என்று ஆசிரியர்கள் அறைக்கு அழைத்துப்போனார். அங்கே, அத்தனை ஆசிரியர்கள் மத்தியிலும் 9 பி போகிறீர்களா என்று கேட்டார். நான் சரி என்றேன். இதைக்கேட்ட ஆசிரியர் நமட்டுச்சிரிப்பு சிரித்தார்.

மற்ற ஆசிரியர்களும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அப்போது எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை.

அந்த வகுப்பிற்குப் போனால், 66 பெண்கள், 4 பையன்கள். நான் உள்ளே நுழைந்ததும் கடைசியில் அமர்ந்திருந்த நான்கு பையன்கள் மட்டும் எழுந்து ‘குட் மார்னிங்’ சொல்கிறார்கள். பெண்கள் எழவேயில்லை. எனக்கு அப்போதே ‘சுரீர்’ என்றது. பாடம் நடத்த ஆரம்பித்தேன். நான் என்னென்ன செய்கிறேனோ, அனைத்தையும் அந்தப்பெண்கள் செய்தார்கள்.

எப்போது 45 நிமிடம் முடியும் என்று கடிகாரத்தைப் பார்த்தால், அவர்களும் கடிகாரத்தைப் பார்ப்பதுபோல் பாவனை செய்கிறார்கள். அந்த வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் அறைக்கு வேகவேகமாகப் போனேன். எல்லோரும் ஆவலாய்க் காத்துக் கொண்டிருந்தார்கள், நான் பட்ட அவஸ்தையை கேட்க’. எப்படியிருந்தது வகுப்பு என்றார்கள். கொஞ்சம் ஒருமாதிரியாகத்தான் இருந்தது என்று மட்டும் சொல்லி வேறுயாரும் மேற்கொண்டு பேசாதபடி செய்து விட்டேன்.

அங்கிருப்ப வர்களிலேயே அன்பானவர் போன்று தோற்றமளித்த ஓர் ஆசிரியரிடம், ‘அந்த வகுப்பில் ஏன் அப்படி இருக்கிறார்கள்’ என்று கேட்டேன். அவர், ‘ஒன்பதாம் வகுப்பில் மற்ற பிரிவுகளில் இருப்பவர்களெல்லாம் எட்டாம் வகுப்பிலிருந்து தேறி வந்தவர்கள். பி பிரிவில் இருப்பவர்கள் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள். சிலர் 2,3,4 வருடங்களாக ஒன்பதாம் வகுப்பிலேயே இருக்கிறார்கள்.

அவர்கள் தேர்ச்சி அடையாததற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்று கருதுகிறார்கள். எனவே, அவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை’ என்றார்.

உடனே நான் வருகைப் பதிவேட்டை எடுத்து, யார் யார் எத்தனை வருடங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறித்துக் கொண்டேன். அடுத்த நாள் காலை வகுப்பில் அதே பழைய மரியாதைதான். ஆனால் இப்போது நான் அதிர்ச்சி அடையவில்லை. பாடம் நடத்தினேன்.

இடையில் சிலபேரைக் குறிப்பிட்டு அவர்களின் குடும்பச்சூழ்நிலையைச் சொல்லி, ‘அடுத்த வருடமும் இங்கேயே இரு. நான் பரிசு தருகிறேன்’ என்று சொன்னேன். இப்படி நான்கு பேரைச் சொன்னதும் வகுப்பே அமைதியாகி விட்டது. இடையிடையே கதைகள், நகைச்சுவை துணுக்குகள் சொன்னேன். சிரித்தார்கள். ரசித்தார்கள். வகுப்பு முடிந்தது. இப்போது ஆசிரியர் அறைக்கு ரிலாக்ஸாக சென்றேன். அவர்கள் வியப்போடு பார்த்தார்கள்.

அடுத்த நாள் காலை, வகுப்பில் எல்லோரும் எழுந்து நின்று, ‘குட்மார்னிங் சார்’ என்றார்கள். சத்தம் கேட்டு பக்கத்து வகுப்புகளில் இருந்து, ஆசிரியர்கள் எட்டிப் பார்த்தார்கள். இப்படி ஒரு மரியாதையை யாருக்கும் அந்த மாணவிகள் தந்ததில்லை.
தொடர்ந்து நாட்கள் சென்றன. பதினான்காம் நாள் நான், ‘நாளையோடு என் பயிற்சி முடிகிறது’ என்று சொன்னேன். இரண்டாம் நாள் நான் பள்ளிக்குள் நுழைகிற போதே, வாசலில் இரு மாணவிகள் நின்று கொண்டு, ”உங்கள் பையைக்கொடுங்கள்” என்று வாங்கிப்போய் வைத்தார்கள். பதினைந்தாம் நாள் காலை வகுப்பே ஒன்றுகூடி பள்ளியின் வாசலுக்கு வந்து என்னை அழைத்துப் போனது.

அவர்கள், ‘இன்றைக்கு கடைசி நாள் பாடம் வேண்டாம் சார். எங்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். நான் சில அறிவுரைகளைச் சொல்லி விட்டு, ‘ஆசிரியர்களை நீங்கள் மதிப்பதில்லை. எனவே, உங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் அறையில் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறார்கள். அவர்களைப் பழிவாங்க வேண்டாமா?’ என்று கேட்டேன்.

ஏற்கனவே அந்த மனநிலையோடு இருக்கிறவர்களிடம், ‘அப்படியென்றால், நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து பத்தாம் வகுப்பிற்கு தேர்ச்சியடைந்து ஆசிரியர்களின் முகத்தில் கரியைப் பூசுங்கள்’ என்று சொன்னேன். பிறகு விடைபெற்றேன். தலைமையாசிரியரைச் சந்தித்தபோது, ‘எங்கள் பள்ளியிலேயே நீங்கள் பணிக்கு சேர்ந்து கொள்ளலாம்’ என்றார்.

‘ஸாரி சார்! நான் ஏற்கனவே திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் பணிபுரிகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன்’ என்று வந்து விட்டேன்.

ஒரு மாதம் கழித்து, பயிற்சிக்கல்லூரியில் இருந்து ஒரு கடிதம் வந்தது. ‘நன்றி திரு. சந்திரசேகரன் என்று தொடங்கி, இப்போது 9 பி தான் பள்ளியில் சிறந்த வகுப்பு. அந்த வகுப்பிற்கு போகிறேன் என்று ஆசிரியர்கள் கேட்கிறார்கள். அந்தப் பெண்கள் நன்றாகப்படிக்கிறார்கள். நல்ல மரியாதை தருகிறார்கள். அவர்கள் நிச்சயம் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பிற்கு சென்று விடுவார்கள்’ என்று அந்தக்கடிதம் இருந்தது.
நடப்பது நடக்கட்டும் என்று நான் நினைத்திருந்தால் பதினைந்து நாளும் ஒரு பபூன் போல வகுப்பில் இருந்திருப்பேன். அவ்வளவு கேவலமாக நடத்தியிருப்பார்கள். அது பற்றி எனக்கு கவலையில்லை. கொஞ்சம் வருத்தமாக இருந்திருக்கும். பதினைந்து நாள் கழித்து, நான் பயிற்சி முடித்து என் ஊருக்கு வந்திருப்பேன். இவையெல்லாம் நடத்திருக்கும். ஆனால், அந்தப்பெண்கள் வாழ்க்கை என்னவாகி இருக்கும்?

அந்தப்பள்ளியில் நான் வேலை செய்யவில்லை. பதவியில்லை. சம்பளமில்லை. பயிற்சிக்குப் போன ஆள், அங்கே ஏதோ ஒன்று சரியில்லை என்றவுடன் மாற்ற வேண்டுமென்று தோன்றியது. அது தெரிந்தோ, தெரியாமலேயோ செய்திருக்கலாம். தற்காப்புக்காகக்கூட, நான் அதைச் செய்திருக்கலாம். அது எனக்கு இன்னும் விளங்கவில்லை.

நாம் எங்கே சென்றாலும், சூழ்நிலை சரியில்லை என்றால், அதை மாற்றுவதற்காகத் தான் கடவுள் நம்மை அனுப்பியிருக்கிறார். அதற்காக வந்திருக்கிறோம் என்கிற எண்ணம் வந்தால் நான் ஏன் இங்கே வந்தேன் என்கிற கேள்விக்கு விடை கிடைக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான லட்சியமிருக்கிறது.

எவரெஸ்ட்டில் முதன்முதலில் யார் கால் பதித்தது என்று கேட்டால், பலருக்குத் தெரிவதில்லை. சமீபத்தில் ஒரு தமிழர் கால் பதித்திருக்கிறார் என்ற செய்தியைப் படித்தேன்.

எவரெஸ்ட்டில் முதன்முதலில் கால்பதித்த டென்சிங், சின்னவயதில் நேபாளத்தின் சாலைகளில் ஓடும்போதும், நிமிரும்போதும் எவரெஸ்ட்தான் கண்ணில் படும். அப்போது, அவனுடைய நெஞ்சில், ‘எவரெஸ்ட் மீது ஏறி நிற்க வேண்டும்’ என்ற விதை ஆழமாக விழுந்தது. ஆனால், வீட்டில் சாப்பாட்டிற்கே வழியில்லை. சாதாரண உடையணிந்து எவரெஸ்ட் ஏற முடியாது. அதற்கென்று ஆடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை.

மலையேறும் பயிற்சி தரும் நிறுவனத்தில் கேட்டால், மாதம் 15 ரூபாய் பயிற்சிக் கட்டணம் செலுத்தவேண்டும் என்கிறார்கள். அது கூட கட்ட முடியாது. ஆனால் ஆசை விடவில்லை. யாரோ,” எவரெஸ்ட் மீது ஏறவேண்டுமென்றால், நிறைய மூட்டை தூக்குகிற சக்தி இருக்க வேண்டும். மலையேறுகிற வீரர்களுக்கு நிறைய கூலிஆட்கள் தேவைப்படுகிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘உனக்கு மூட்டை தூக்குகிற சக்தியிருந்தால், யாராவது எவரெஸ்ட் ஏறும்போது உடன் சென்று விடலாம்’ என்றும் சொன்னார்கள்.

எப்போது பார்த்தாலும் முதுகில் ஒரு மூட்டையைக் கட்டிக்கொண்டு சாலையில் நடந்து கொண்டிருப்பான் டென்சிங். நிறைய கிண்டல்கள், ‘மூட்டை தூக்கி போகிறது பார்’ என்ற கேலிகள். எங்கு சென்றாலும் மூட்டையோடுதான் போவான். இந்நிலையில் திருமணமாயிற்று. பிள்ளைகள் பிறந்தன. அப்போதும் விடவில்லை. மனைவியால் பிறரின் கிண்டல்களை தாங்கமுடியவில்லை.

மூட்டையின் எடை 65 கிலோவாயிற்று. மனைவி அவமானம் தாங்கவில்லை என்று புலம்புகிறாள். ஒருநாள் இரவு மூட்டையைக் கட்டிக்கொண்டே தூங்கிக்கொண்டிருந்தான். அந்த மூட்டையை எடுத்து வெளியில் வீசி விடலாம் என்று மனைவி எடுக்க முயன்றாள். அவளால் அசைக்கக்கூட முடியவில்லை.

மூட்டை தூக்கிய ஆரம்பநிலையில் அப்பகுதிக்கு தலாய்லாமா வந்தார். அவரிடம் சென்று டென்சிங், ‘எவரெஸ்ட் ஏறுவதற்கு மூட்டை தூக்கவேண்டுமென்று சொல்கிறார்கள். பளுவாக இருக்குமா?’ என்று கேட்டார்.

அதற்கு தலாய்லாமா, ”எந்த வேலையையும் வேலை என்று நினைக்காமல் சந்தோஷமாகச் செய்தால் பளு இருக்காது. போ” என்றார்.

65 கிலோ மற்றவர்களால் அசைக்கக்கூட முடியாது. ஆனால் டென்சிங்கிற்கு அது பளு கிடையாது.

ஒருவழியாக எட்மெண்ட் ஹிலாரியுடன் இணைந்து ஆறுமுறை தோற்று, ஏழாவது முறை எவரெஸ்ட்டுக்குப் போய் கால்பதிக்கிறார்கள். ஹிலாரி தன்னுடைய ஆஸ்திரேலியக் கொடியை நட்டார். டென்சிங்கிற்கு அவமானமாக இருந்தது. அப்போது நேபாளத்திற்கு கொடியே இல்லை. அப்படி இருந்தாலும் அவர் எடுத்துக் கொண்டு போகவில்லை. எதைப்பதிப்பது என்று தெரியவில்லை.

அவருடைய மகள், ‘அப்பா! நீ எப்போதாவது எவரெஸ்ட்டுக்குப் போனால், என் நினைவாக இந்தப் பென்சிலை வைத்துவிடு” என்று சொல்லி, தந்த பென்சில், சட்டைப்பையில் இருந்தது. ஆனந்தக் கண்ணீரோடு பென்சிலை நட்டு விட்டு, கீழே வந்ததாய்ச் சொல்கிறார்.

வாழ்க்கையில் இன்னும் ஜெயிக்க வேண்டுமென்றால், நிறைய புதுமைகளுக்குத் தயாராக இருக்கவேண்டும். உலகம் மிகமிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

”முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் என்ன பாடத்திட்டங்கள் இருந்தனவோ, அதுதான் இப்போது இந்தியாவில் இருக்கிறது” என்று ஒரு கல்வியாளர் சொல்கிறார். நாம் அவ்வளவு பின்தங்கியிருக்கிறோம். இன்றைக்குப் புதியதாக எதையாவது செய்தால் தான் ஜெயிக்கமுடியும்.

செய்ததையே செய்தால் உருப்படமுடியாது. ஏதேனும் கொஞ்சம் வித்யாசமாக செய்யமுடியுமா என்று பார்க்கவேண்டும். அப்படி செய்யவிடாமல் எது தடுக்கிறதென்றால் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம்தான்.

தஞ்சாவூருக்கு அருகில் ஒரு ஜமீன்தார் தினசரி வெற்றிலை வாங்கிப்போடுவார். அதில் பழுத்த, ஓட்டை விழுந்த வெற்றிலைகள் இருக்கும்.

அதை ஓரத்தில் கிழித்து நல்லதை மட்டும் வாயில் போடுவார். நல்ல வெற்றிலையை நாளைக்குப் போடலாம் என்று விட்டுவிடுவார். இப்படியே நாள்தோறும் நடக்கும். ஆறுநாள் சென்றபிறகு, நல்ல வெற்றிலைகளெல்லாம் பழுத்து, ஓட்டை விழுந்திருக்கும். கடைசி வரையில் அவர் நல்ல வெற்றிலை போட்டதாய், வரலாறே இல்லை என்பார்கள்.

எனவே, மாற நினைப்பவர்கள், நாளைக்கு மாறலாம். இன்னொரு நாளைக்கு மாறலாம் என்று எண்ணாமல், இன்றைக்கு இருக்கிற காலச்சூழலுக்கு ஏற்ப உடனடியாக மாறினால், உடனடியாக மாறுவதென்பது, நன்றாக வழிவகைகளை யோசித்து மாறினால் வெற்றியடைய முடியும்.

சிலபேருக்கு தள்ளிப்போடுகிற பழக்கம் இருக்கிறது. இது வாழ்க்கையில் வெற்றி பெற உதவாது.

என் நண்பன், ‘ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து புகை பிடிப்பதை நிறுத்தப் போகிறேன்’ என்பான். ஆனால் இதை அவன் சொன்ன தேதி ஜனவரி இரண்டாம் தேதி. இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இப்போது இங்கு மாற வேண்டும். அப்படி எண்ணிப் பார்க்கும்போது நாம் அந்தக்கேள்விகளுக்கு திரும்ப வந்து சேரலாம்.

வாழ்க்கை என்பது பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான். வெற்றி என்கிற இலக்கை அடையப் போகிறபோது, நிறைய தடைகள் வருகின்றன. அதைத் தீர்க்கக்கூடிய வல்லமை நம்மிடம் இருக்கிறதா?

அப்துல் கலாம்,”கடவுளே! எனக்குப் பிரச்சனைகளைக் கொடு. கூடவே அதைத் தீர்க்கிற வலிமையையும் கொடு” என்று சொன்னது வல்லமை தாராயோ என்பதற்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

மிர்தாத், ‘பூட்டை உன்னிடம் கொடுத்தவன் தான் சாவியையும் கொடுத்தான். சாவியைத் தொலைத்துவிட்டு மீண்டும் கேட்டால் அவன் எத்தனை சாவிகளைத் தருவான்?’ என்று கேட்கிறார்.

சிக்கல்களைக் கொடுத்த கடவுள்தான். அதைத் தீர்க்கிற வழிகளை சாவியாக நம்மிடம் கொடுத்து இருக்கிறார்.

சாவிதான் என்னிடம் இருக்கிறதே. பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய வலிமை என்னிடம்தான் இருக்கிறது. ஏன் இதை வைத்துக் கொண்டு சிக்கல்களைத் தீர்க்கக் கூடாது என்றெண்ணி சங்கடங்களை எல்லாம் சந்தர்ப்பங் களாக மாற்றி, சந்தர்ப்பங்களையெல்லாம் சாதனைகளாக மாற்ற ஆரம்பித்தால் வாழ்வதற்கு ஒரு பயனிருக்கிறது.

நாம் இந்த உலகிற்கு வந்துவிட்டோம். நாம் யார் என்பதைக் கண்டுபிடித்தால், அந்த இரண்டாவது ‘நான்’ வெளிவரும்போது நமக்குள்ளே இருக்கிற ஆற்றல் வெளிப்பட்டு அது வெற்றியாக மாறும். வாழ்வில் வல்லமை சேரும்.

3 Responses

  1. keerthana

    sir unga essay romba super. konjamkuda bore adikave illa. kalakitinga

  2. SIVA

    ஆசிரியரின் இறுதி கட்டுரை என நினைகின்றேன் எம் ஆசான் ஆத்மா சந்தியடைய இறைவன் துணை இருப்பான் இருப்பினும் அவரால் விதைகள் விருச்சங்கள் ஆகும் நிச்சயம்

  3. SIVA

    ஆசிரியரின் இறுதி கட்டுரை என நினைகின்றேன் எம் ஆசான் ஆத்மா சந்தியடைய இறைவன் துணை இருப்பான் இருப்பினும் விதைகள் விருச்சங்கள் ஆகும் நிச்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *