– மரபின் மைந்தன் முத்தையா
தங்களுக்குக் கீழே இருப்பவர்களை திறமையான ஊழியர்களாக மட்டுமல்லாமல் தரம் வாய்ந்த மனிதர்களாகவும் செதுக்குவதில் யாருக்கு அக்கறையும் ஆர்வமும் இருக்கிறதோ, அவர்களே வல்லமை மிக்க வழிகாட்டிகளாய் வளர்கிறார்கள்.
உங்கள் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு பகுதியாய், நீண்ட பயணமொன்றை மேற் கொண்டார்கள் சீடர்கள். குருநாதரிடம் ஆசி பெறும்போது, மூத்த சீடர் ஒருவர், “குருவே! உங்கள் ஆசி எங்களுடன் வருகிறது என்பதற்கு அடையாளமாய் எதையேனும் எங்களுக்குக் கொடுங்கள்” என்றார்.
ஆசிரம வாசலில் கிடந்த மரக்கட்டை களைக் காட்டிய குரு, ஆளுக்கொன்றாய் சுமந்து செல்லுங்கள் என்றார். பத்து சீடர்கள் இருந்தார்கள். பத்து மரக்கட்டைகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஐந்தடி நீளம். நல்ல கனம்.
கிளம்பும் முன் குரு சொன்னார், “அவரவர் தங்கள் கையில் உள்ள மரக்கட்டையைத் தவிர அடுத்தவரின் மரக்கட்டையை மறந்தும் தொடக் கூடாது.” சீடர்களுக்கு சிரிப்பு வந்தது. சொந்த மரக் கட்டையை சுமப்பதே பெரிது. இதில் அடுத்தவர் மரக்கட்டையைத் தொடுவதாவது!
ஒரு சீடருக்கு, மரக்கட்டையை சுமப்பதில் அலுப்பு. “குருவின் ஆசிக்கு அடையாளம்தானே இது. இவ்வளவு பெரிய மரக்கட்டை எதற்கு” என்று போகிற வழியில் ஒரு மரக்கடையில் மரக் கட்டையை மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொண்டார்.
ஒன்றைப் பையிலும் இரண்டைக் கைகளிலும் பிடித்துக் கொண்டு கம்பீரமாக நடந்து போனார். மற்றவர்கள் முழுக் கட்டையையும் சுமந்து வந்தார்கள். வழியில் ஒரு பெரிய அகழி குறுக்கிட்டது. ஐந்தடி நீளத்திற்குப் பள்ளம் இருந்தது. மற்ற சீடர்கள் தங்கள் மரக் கட்டையைக் குறுக்கே வைத்து, அதன் மேல் நடந்து பள்ளத்தைக் கடந்தார்கள். கட்டையை வெட்டி வைத்திருந்த சீடர், பள்ளத்தைக் கடக்க முடியாமல் பின் தங்கி விட்டார்.
நிகழ்கால சிரமங்களைப் பொருட்படுத்து பவர்களால் எதிர்கால வெற்றிகளை உருவாக்க முடியாது என்பது இந்தக் கதையில் கிடைக்கிற கருப்பொருள்.
ஒரு மலையைக் கடப்பது சிரமம் என்று மலைத்து நிற்பவர்கள், ஒரு பள்ளத்தைத் தாண்டமுடியாது என்று பயந்து நிற்பவர்கள், எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர முடியாதோ, அதுபோலத்தான் ஒரு பிரச்சினையைக் கையாளத் தயங்குபவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதேயில்லை.
சீடர்களுக்கு வழிகாட்டிய குரு போலவே எல்லாத்துறைகளிலும் எல்லோருக்கும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. நிறுவனங்களில் இருக்கும் மேலதிகாரிகள் மூத்த அதிகாரிகள் எல்லோரும் எல்லோருக்கும் வழிகாட்டியாகி விடுவதில்லை. மிகச்சிலர்தான் நிறுவனங்களிலே கூட குரு நிலையிலோ, வழிகாட்டி என்ற நிலையிலோ வைத்துப் போற்றத் தகுந்தவர்கள் ஆகிறார்கள்.
நிறுவனங்களில் இருக்கிற மேலாளர்களில் யார் வழிகாட்டிகளாக உயர்கிறார்கள் என்பது பற்றி நிர்வாகவியல் நிபுணர் ஒருவர் அழகாக விளக்கினார்.
நிறுவனத்தின் உற்பத்தி இலக்கு, அதை எட்டுவதற்கான கால அவகாசம், அதற்கான திட்டமிடுதல் ஆகியவற்றை செய்கிற ஒருவர், நிறுவனத்தின் இலக்கை கண்டிப்பாக எட்டிக் காட்டுகிறார். கூட்டு முயற்சியின் நுட்பத்தை உணர்ந்திருக்கிறார். ஆனால், அவர் நிறுவன மேலாளர் என்றஅளவிலேயே நின்று விடுகிறார்.
மாறாக, நிறுவனத்தில் பணி புரிகிறவர்களின் தனித்திறமைகள், ஆற்றல்கள் போன்றவற்றைப் பட்டியலிட்டு, அவர்களை ஊக்குவித்து, அவர்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, அவற்றைக் களைவதற்கும் சொல்லிக் கொடுப்பவர், நிறுவனத்தின் இலக்கையும் எட்டுகிறார். நிறுவன ஊழியர்களின் செயல் திறமையையும் செதுக்குகிறார்.
நினைத்ததை அடையத் தடைகள் இருக்கும். தடைகளை உடைப்பதே திறமை. நிறுவன மேலாளர்கள் நிகழ்த்த முடியாததைக் கூட வழிகாட்டும் மனோபாவம் உள்ளவர்களால் வெற்றிகரமாக நிகழ்த்த முடியும்.
தவறு நடக்கிறபோது, யார் காரணம் என்பதற்குள் இந்த வழிகாட்டிகள் போவதில்லை. மாறாக, அடுத்த கட்டத்துக்குள் நகர்வதுபற்றியே ஆழ்ந்து சிந்திக்கிறார்கள்.
“இவரால் இது முடியாது” என்று யாரையும் புண்படுத்தி, பாதியில் ஒதுக்குவதில்லை. யாருக்கு எது சாத்தியம் என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு அந்த வேலையை மட்டுமே தருகிறார்கள்.
ஒரு திட்டம் நடைமுறைக்கு உகந்ததா இல்லையா என்பதை பாதியில் ஆராய்ச்சி செய்வதில்லை. மண்குதிரையை நம்பி அவர்கள் ஆற்றில் இறங்குவதில்லை. தவறு நேர்ந்தால் சரி செய்வதற்கான சின்னச் சின்ன வழிகளை முன் கூட்டியே யோசித்துவிடுகிறார்கள்.
தோல்விகளை தனிப்பட்ட அவமானமாய் அவர்கள் கருதுவதில்லை. ஒரு சூழல்தான் தோல்வியடைகிறதே தவிர மனிதர்கள் ஒரு போதும் தோற்பதில்லை என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
தோல்வி ஏற்படும்போது அடுத்தவர்களின் பரிதாபத்தையும் அனுதாபத்தையும் பெற முயற்சிப்பது, தங்களுக்குத் தாங்களே இழைத்துக் கொள்கிற அவமானம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். மிகவும் இயல்பாக, மலர்ந்த முகத்தோடு அவர்கள் அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறார்கள்.
உடைந்த எலும்புகள் கூடும்போது முன்னைவிட உறுதியாகின்றன என்பது மருத்துவக் கோட்பாடு. ஏற்கெனவே உடைந்த கை என்று எச்சரிக்கையாக இருப்பதுதான் சராசரி மனிதர்களின் இயல்பு. ஆனால் பெரும்பாலான மருத்துவர்களின் கருத்துப்படி உடைந்த எலும்பு மேலும் உறுதியாக வாய்ப்பிருக்கிறது. (அதற்காக ஒவ்வோர் எலும்பாய் உடைத்துக் கொண்டிருக்க வேண்டாம்).
எலும்புகளுக்கு அப்படி நேர்கிறதோ இல்லையோ, எண்ணங்கள் தோல்விக்குப்பின் உறுதியாவது மிகவும் அவசியம். ஆசை ஆசையாய் மேற்கொண்ட முயற்சியில் விழும்போது, எங்கே தவறு நடந்தது என்பதை அனுபவம் நமக்கு அறிவிக்கின்றது. அந்த அனுபவம், நிகழ்ந்த தவறு மீண்டும் நிகழாமல் கொண்டு செலுத்துகிறது.
பலரும் தோல்வி என்பதை படுகுழி என்றும் பாதாளம் என்றும் நினைக்கிறார்கள். உண்மையில் தோல்வி, படுகுழியல்ல. பறக்கும் கம்பளம். முன்னர் விழுந்த இடத்தை முன்னெச்சரிக்கையுடன் கடக்கும்போது, பழைய தடையைத் தாண்டிப் பார்க்க முடிகிறது உங்களால். முட்டுக்கட்டை விழுந்த இடமே முன்னேற்றப்பாதையாய் மலர்கிறது.
தங்களுக்குக் கீழே இருப்பவர்களை திறமையான ஊழியர்களாக மட்டுமல்லாமல், தரம் வாய்ந்த மனிதர்களாகவும் செதுக்குவதில் யாருக்கு அக்கறையும் ஆர்வமும் இருக்கிறதோ, அவர்களே வல்லமை மிக்க வழிகாட்டிகளாய் வளர்கிறார்கள்.
தேவையானதை செய்யத் தொடங்கி, செய்து கொண்டே வருகிறபோதுதான், முடியாது என்று நினைத்ததையெல்லாம் மிகவேகமாக செய்து கொண்டிருப்பதை உணர்வீர்கள் என்றார் செயின்ட் பிரான்சிஸ்.
களத்தில் இறங்கிக் காரியமாற்றும்போது, மனதில் வெளிப்படும் சக்தி மலைகளையும் நகர்த்தும் என்பது மலைப்பூட்டுகிற உண்மை.
P.SHANMUGAPRIYA
Thank you. useful message for me.